அளவில் சிறிய கோயில் இது. ராஜகோபுரம், கொடிமரம் கிடையாது. பிரகாரத்தில் சிவலிங்கத்தை வணங்கியபடி பராசர மகரிஷி காட்சி தருகிறார். கோஷ்டத்திலுள்ள துர்க்கையம்மன், எட்டு கரங்களுடன் காட்சி தருவது விசேஷம். பிரகாரத்தில் விஸ்வநாதர், அகிலாண்டேஸ்வரி அம்பாளுடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார்.
வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியருக்கு சன்னதி உள்ளது. இங்கிருந்து 6 கி.மீ., தூரத்தில் நவக்கிரக தலங்களில் புதன் தலமான திருவெண்காடு தலம் இருக்கிறது. இத்தலவிநாயகர் செல்வசித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை
நோய்கள் நீங்க, முன்வினைப் பயன்களால் அனுபவிக்கும் பாவத்தின் பலன் குறைய இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:
மூன்று விநாயகர்: சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. ""இத்தலத்து ஈசனை வழிபட்டால் வினை, நோய் நீங்கி, செல்வம் பெருகும்,'' என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.
பிரகாரத்தில் வில்வவனநாதர் சன்னதியும் உள்ளது. "கலி' (துன்பம்) நீக்கும் சிவன் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இவ்வூர், "திருக்கலிக்காமூர்' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். அரிதாக சில சிவன் கோயில்களில் ஒரே சன்னதியில் இரண்டு அல்லது மூன்று விநாயகர்கள் அருகருகில் சேர்ந்து இருப்பர். ஆனால், இங்கு விநாயகர் சன்னதிக்கு முன்புறம் துவாரபாலர்கர் போல இரண்டு விநாயகர் இருக்கின்றனர். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.
தீர்த்த நீராடும் அம்பிகை: கடற்கரை, நதிக்கரைகளில் உள்ள சிவன் கோயில்களில் விழாவின்போது சிவன், தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தநீராடுவார். ஆனால், இத்தலத்தில் மாசி மகத்தன்று நடக்கும் தீர்த்தவாரியின் போது அம்பாள் மட்டும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுகிறாள். இதற்கு ஒரு காரணமும் சொல்கிறார்கள். முற்காலத்தில் இக்கோயிலில் சிவன் சன்னதி மட்டுமே இருந்தது. ஒருசமயம் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் இந்த அம்பிகையின் சிலை கிடைத்தது. சிலையை அவர் எடுத்தவுடனேயே வயிற்று வலி வந்துவிட்டது.
சிலையை தூக்கி வந்த அவர், இத்தலம் அருகில் வந்தபோது வலி நின்றுவிட்டது. அதன்பின்பு இவ்விடத்தில் சிவலிங்கம் இருந்ததைக்கண்ட அவர், அம்பிகையையும் இங்கேயே பிரதிஷ்டை செய்தார். இந்த அம்பிகை கடலில் கிடைக்கப்பெற்றவள் என்பதால், வருடத்தில் ஒருமுறை இவளை பிறப்பிடமான கடலுக்கு கொண்டு சென்று தீர்த்த நீராட்டி வருகிறார்கள். நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும் வாகனமின்றி நின்ற கோலத்தில் இருக்கின்றன.
தல வரலாறு:
சத்தி என்னும் முனிவர் தீவிர சிவபக்தர். இவர் திரசந்தி என்பவளை மணந்து கொண்டார். திரசந்தி கர்ப்பமுற்றபோது, சத்தி முனிவரை உதிரன் என்னும் அசுரன் கொன்றுவிட்டான். திரசந்திக்கு ஒரு மகன் பிறந்தான். தாயின் மடியில் தவழ்ந்த குழந்தை தனது தாய், அமங்கலையாக (கணவனை இழந்த பெண்) இருந்ததைக் கண்டு வருந்தியது. பராசரர் என்று அழைக்கப்பட்ட இக்குழந்தை, வேதத்தில் புலமை பெற்று மகரிஷியானார். தன் தந்தையை கொன்ற அசுரன் உதிரனை அழிக்க பெரிய யாகம் ஒன்றை நடத்தினார். இந்த யாகத்தின் பலனைக்கொண்டு உதிரனை அழித்தார்.
அசுரனாக இருந்தாலும் உயிரைக் கொலை செய்ததால் இவருக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க அவர் பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவன் காட்சி தந்து, விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் எழுந்தருளினார். பராசர மகரிஷிக்கு அழகு பொருந்தியவராக காட்சி தந்ததால் இவர், "சுந்தரேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். வில்வ வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் இவருக்கு "வில்வவன நாதர்' என்றும் பெயருண்டு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இருப்பிடம் : சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை செல்லும் பஸ்களில் (16 கி.மீ.,) அன்னப்பன்பேட்டைக்கு செல்லலாம்.
பஸ் வசதி அதிகமில்லை. கார்களில் செல்வது நல்லது. திருவெண்காட்டில் இருந்து 6 கி.மீ.,