Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஆத்மநாதர்
  அம்மன்/தாயார்: யோகாம்பாள்
  தல விருட்சம்: குருந்த மரம்
  தீர்த்தம்: அக்னிதீர்த்தம்
  புராண பெயர்: திருப்பெருந்துறை, சதுர்வேதிமங்கலம்,சிவபுரம்
  ஊர்: ஆவுடையார்கோயில்
  மாவட்டம்: புதுக்கோட்டை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆனித் திருமஞ்சனம் - 10 நாட்கள் - 50 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். மார்கழி திருவாதிரை (திருவெம்பாவை உற்சவம் - 10 நாள் - 50 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். இந்த இரண்டு திருவிழாக்கள்தான் மிக முக்கியமானவை.இவற்றுள் ஆனிமாத உற்சவம் மகத்தானது.மாணிக்கவாசகரை முதன்மைப்படுத்தி இத்திருவிழாக்கள் நடைபெறும்.சுவாமிக்கு உற்சவமில்லாதபடி மாணிக்கவாசகருக்கு நடப்பதால் இதனைப் பக்தோத்சவம் என்று நினைக்க கூடாது.மாணிக்கவாசகர் சிவமாகவே விளங்குவதால் இதனை பிரம்மோற்சவமாகவே கூறவேண்டும்.திருவிழாக்காலங்களில் இடபம், திருத்தேர் முதலான வாகனங்களில் மாணிக்கவாசகர் திருவுலா வருகிறார். கார்த்திகை கடைசி சோம வாரம்(திங்கள் கிழமை) மிக மிக விஷேசம் ஆடிவெள்ளி விஷேசம் - தை வெள்ளி - ஆனி மகம் தேரோட்டம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, நவராத்திரி, ஆவணிமூலம் முதலான நாட்களில் சுவாமிக்கு விசேச பூஜைகள் நடைபெறும்.  
     
 தல சிறப்பு:
     
  மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட மிகச் சிறப்புவாய்ந்த சிவதலம். இக்கோயிலின் மண்டபங்களில் முறுக்கு கம்பிகளால் வேயப்பட்டது போல கொடுங்கைகள் (தாழ்வாரம்) அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து கம்பிகள் இணைக்கப்பட்டு, அதில் ஆணி அடிக்கப்பட்டது போல இவை இருக்கிறது. இதுதவிர தியாகராஜர் மண்டபத்தில் உள்ள கல்சங்கிலி, பஞ்சாட்சர மண்டபத்திலுள்ள சப்தஸ்வர தூண்கள் காணத்தக்கது. பெரிய மண்டபத்தில் உள்ள இரண்டு தூண்களில், ஆயிரம் சிறிய தூண்கள் பொறிக்கப்பட்டுள்ளது  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில், ஆவுடையார் கோயில் - 614 618, புதுக்கோட்டை மாவட்டம்.  
   
போன்:
   
  +91 4371 233301 
    
 பொது தகவல்:
     
  ஆத்மநாதர் கோயில் சிற்பக்கலைக்கு சான்றாக சிறப்புற கட்டப்பட்டுள்ளது. இங்கு இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தில்லை மண்டபத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்த சிவன், அம்பாள் சிற்பமும், புலையன், புலத்தி வேடத்தில் வந்த சிற்பமும் உள்ளது.

இதில் அம்பாள் கழுத்தில் சங்கிலி, கையில் சுருள் வளையல் அணிந்து, பையுடன் இருக்கிறாள். இதுதவிர, நிவர்த்திகலை, பிரதிபாகலை, வித்யாகலை, காந்திகலை, சாந்திதீதாகலை ஆகிய பஞ்சகலைகளையும் பஞ்சாட்சர மண்டபத்தின் மேல் பகுதியில் சிற்ப வடிவில் காணலாம்.

இத்தலவிநாயகர் வெயிலுவந்த விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
 
     
 
பிரார்த்தனை
    
  இந்த சிவதலத்தில் வழிபடுவோர்க்கு குருபலன் கூடும். மாணிக்கவாசகருக்கு ஈசனே குருவாய் வந்து உபதேசித்த தலம் என்பதால் இந்த தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு சிறந்த ஞானம் பெற்றவராகத் திகழ்வர்.

தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு திருமணவரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தித்துக் கொள்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  புழுங்கல் அரிசி சாதம் வடித்து ஆவியுடன் சுவாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.அதை குழத்தேங்குழல், அதிரசம், அப்பம், வடை முதலானவற்றை வைத்து நிவேதனம் செய்து தீபாராதனைகள் முறைப்படி செய்யப்படும். இவை தவிர சுவாமி அம்பாளுக்கு வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்யலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி வழங்கலாம். 
    
 தலபெருமை:
     
  அரூப சிவன் : ரூபம் (வடிவம்), அரூபம் (வடிவம் இல்லாமை), அருவுருவம் (லிங்க வடிவம்) ஆகிய மூன்று வடிவங்களில் அருளும் சிவன் இத்தலத்தில் மூலஸ்தானத்தில் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர (ஸ்தல விருட்சம்) வடிவிலும், உருவமாக மாணிக்கவாசகராகவும் அருளுகிறார். இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால் குருந்தமரத்தையும் சிவனாகக் கருதுவதால், கார்த்திகை சோமவாரத்தில் இந்த மரத்தின் முன்பாகவே, 108 சங்காபிஷேகம் நடக்கிறது. மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறது. அதன்மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது. குவளை உடலாகவும், அதனுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாகவும், ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதாலும் சுவாமிக்கு "ஆத்மநாதர்' என்று பெயர் ஏற்பட்டது. ஆறு கால பூஜையின் போதும், இவருக்கு 108 மூலிகைகள் கலந்த தைல அபிஷேகம் நடப்பது விசேஷம்.

தீபாராதனை தட்டை தொட்டு வணங்க முடியாது :
கோயில்களில் தீபாராதனை செய்யும் போது, பக்தர்கள் அதை கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். ஆனால், ஆவுடையார் கோயில் மூலவருக்கு, தீபாராதனை செய்யும் தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை. இங்கு சிவனே ஜோதி வடிவமாக இருக்கிறார். அவரை வணங்குவதே தீபத்தை வணங்கியதற்கு ஒப்பானது தான். எனவே, தீபாராதனையை கண்ணில் ஒற்றிக் கொள்ள வெளியில் கொண்டு வருவதில்லை.

முக்கண் தீபம் : ஆவுடையார்கோயில் மூலஸ்தானத்தில் சிவனுக்கு பின்புறத்தில் வெள்ளை, சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் சூரியன், சிவப்பு அக்னி, பச்சை நிறம் சந்திரனாக கருதப்படுகின்றன. சுவாமிக்கு இங்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றியுள்ளனர்.

குதிரைச்சாமி : பெயரே வித்தியாசமாக இருக்கிறதா? ஆம்! ஆவுடையார்கோயிலிலுள்ள ஒரு சிவனைத்தான் இப்பெயரில் அழைக்கிறார்கள். மாணிக்கவாசகருக்காக, சிவன், குதிரைகளுடன் மதுரைக்கு சென்று அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் ஒப்படைத்தார். குதிரை மீது சென்ற சிவன், இக்கோயிலில் பஞ்சாட்சர மண்டபத்தில் இருக்கிறார். இவரை, "குதிரைச்சாமி' என்று அழைக்கிறார்கள். தலையில் கொண்டை, குதிரை வீரர் அணியும் ஆடை, கையில் சவுக்குடன் வித்தியாசமான வடிவில் காட்சி தருகிறார். குதிரைக்குகீழே நரிகளும் உள்ளன. இவருக்கு "அசுவநாதர்' என்றும் பெயர் உண்டு.

தீப தத்துவம் :
ஆத்மநாதர் கோயிலில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை குறிக்கின்றன. சிவனை சுற்றி திருவாசியில் உள்ள 27 தீபங்கள் நட்சத்திரங்களையும், அருகிலுள்ள 2 தீபங்கள் ஜீவாத்மா, பரமாத்மாவையும் குறிக்கின்றன. சன்னதியிலிருந்து வெளியே வரும் அடுத்தடுத்த வாசல் நிலைகளில் பஞ்சகலைகளை குறிக்க 5 தீபம், 36 தத்துவங்கள், 51 அட்சரங்கள், 11 மந்திரங்கள், 224 உலகங்கள் இவற்றை குறிக்கும் விதமாக அந்தந்த எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. கிரக தோஷம் உள்ளவர்கள், சிவனின் திருவாசியில் நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

புழுங்கல் அரிசி நைவேத்யம் சிவன்:
இத்தலத்தில் குருவாக இருந்து மாணவர்களுக்கு உபதேசம் செய்தபோது, சீடர்கள் அவருக்கு படைத்த உணவை ஏற்றுக்கொண்டார். அவரிடம் பயின்றவர்கள் வீட்டிலிருந்து புழுங்கல் அரிசி சாதம், கீரை, பாகற்காய் என எளிய பொருட்களை அவருக்கு கொடுத்தனர். அதனை சிவனும் விரும்பி வாங்கி சாப்பிட்டார். இதன் அடிப்படையில், ஆத்மநாதருக்கு புழுங்கல் அரிசி சாதம்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது. அடுப்பில் இருந்து இறக்கப்பட்ட சாதத்தை அப்படியே சுவாமி சன்னதிக்கு கொண்டு சென்று, படைக்கல்லில் ஆவி பறக்க கொட்டி விடுகின்றனர். அப்போது சன்னதி கதவுகள் சாத்தப்பட்டு, சிறிதுநேரம் கழித்து திறக்கப்படும். சுவாமி அரூப வடிவானவர் என்பதால், அரூபமாகி விடும் ஆவியுடன் நைவேத்யம் படைக்கப்படுகிறது. மூன்றாம்கால (காலை 11 மணி) பூஜையின் போது மட்டும் தேன்குழல், அதிரசம், வடை, பிட்டு, தோசை, பாயாசம் படைக்கப்படுகிறது. பொங்கலன்று வாழை இலை போட்டு, 16 வகை காய்கறிகளுடன், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் மற்றும் கரும்பு படைக்கின்றனர்.

"எனக்கே தண்ணி காட்டுறியா?' : யாராவது ஒருவரை ஏமாற்றினால், "என்ன தண்ணி காட்டுறீயா?' என்பர். இந்த "வழக்கு' எப்படி வந்தது என தெரிந்து கொள்ளுங்கள். ஆவுடையார் கோயில் பகுதி மக்களின் நிலத்தை குறுநில மன்னன் ஒருவன், பறித்துக் கொண்டான். அவர்கள் பேரரசரிடம் முறையிட்டனர். மன்னனோ, அந்த நிலம் தன்னுடையது என்று வாதாடினான். அது மக்களுடையது என்பதற்கு ஏதாவது சாட்சி இருக்கிறதா என்று கேட்டான்.

மன்னனின் செல்வாக்கிற்கு முன்னால், எதுவும் செய்ய முடியாத மக்கள் சிவபெருமானை நாடினர். உண்மையை வெளிக்கொணர உன்னைத் தவிர வேறு சாட்சியில்லை என மனமுருகி வணங்கினர். சிவன் பேரரசரிடம் மாறுவேடத்தில் சென்றார். குறுநில மன்னனை அழைத்து, ""மன்னா! உன் நிலம் எப்படிப்பட்ட தன்மையுடையது?'' என்று கேட்டார். அதற்கு மன்னன், ""அது வறண்ட பூமி'' என்றான். சிவன் மறுத்தார். ""பேரரசரே! அது செழிப்பான நிலம் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு. நிலத்தை தோண்டுங்கள். தண்ணீர் வரும்,'' என்றார். அதன்படியே நிலத்தை தோண்ட நீர் வெளிப்பட்டது. குறுநிலமன்னன் தலை குனிந்தான். மக்களிடமே நிலத்தை ஒப்படைத்தார் பேரரசர். சிவன் தண்ணீர் காட்டிய அந்த இடம், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் இருக்கிறது. அப்பகுதியை, "கீழ்நீர்காட்டி' என்று சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை, பஞ்சாட்சர மண்டபத்தின், மேல் விதானத்தில் ஓவியமாக வரைந்துள்ளனர்.இப்போ தெரிஞ்சுதா? நம்ம சிவன் தான் முதன் முதலில் "தண்ணி காட்டியவர்' என்று.

அரூப அம்பாள் : தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத் தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது.

இந்த பாதத்தை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும். இவளது அபிஷேக தீர்த்தம் மற்றும் குங்குமத்தை பிரசாதமாக தருகின்றனர். இவளது சன்னதி முன்பாக தொட்டில், வளையல் கட்டி வழிபட்டால் புத்திரப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை.

கிரஹணத்தில் பூஜை :
சூரிய, சந்திர கிரகணங்களின்போது கோயில்களின் பூஜை செய்யமாட்டர். ஆனால், ஆவுடையார் கோயிலில் கிரகணநாளிலும் ஆறு கால பூஜை நடக்கிறது. ஆதியந்தம் அல்லாத அருவ வடிவ சிவனுக்கு சிவபூஜை எந்த காரணத்தாலும், தடைபடக்கூடாது என்பதற்காக பூஜை நடக்கிறது.

நிற்கும் தெய்வங்கள் : குரு இருக்குமிடத்தில் சிஷ்யர்கள், மரியாதை கொடுப்பதற்காக அவர்முன்பு அமராமல் நின்று கொண்டிருப்பார்கள். இக்கோயிலில் ஆத்மநாதருக்கு மரியாதை செய்யும் விதத்தில், மாணிக்கவாசகர், சொக்க விநாயகர், முருகன், வீரபத்திரர் ஆகியோர் நின்ற கோலத்திலேயே இருக்கின்றனர்.

தூண்களில் நவக்கிரகம் :ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால்,நவக்கிரக தூண்கள் வைக்கப் பட்டுள்ளன. முதல் தூணில் ராகு, கேது, 2வது தூணில் சனி, வியாழன், சுக்கிரன், செவ்வாய், மூன்றாவது தூணில் உஷா, பிரத்யூஷா, சூரியன், புதன், நான்காம் தூணில் சந்திரனும் இருக்கின்றனர். அருகிலுள்ள 2 தூண்களில் காளத்தீஸ்வரர், கங்காதேவி உள்ளனர்.

அன்னபூரணி விநாயகர் : ஆத்மநாதர் கருவறையை சுற்றிலும் இரண்டாம் பிரகாரத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு விநாயகர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஒரு விநாயகர், அன்னபூரணி அம்பாளுடன் வடக்கு நோக்கியபடி இருக்கிறார். இவரிடம் வேண்டிக் கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை. மற்றோரிடத்தில் தெற்கு நோக்கியிருக்கும் விநாயகர், நர்த்தன கோலத்தில் இருக்கிறார். இவருக்கு கீழே இரண்டு பேர் ஆடுவது போல சிற்பம் இருக்கிறது.

சச்சிதானந்தம் :
முக்தியை அடைவதற்கான பிரதான மூன்று நிலைகளான சச்சிதானந்த நிலை அமைப்பில் இக்கோயில் உள்ளது. "சத்' அம்சமாக கோயில் மகா மண்டபமும், "சித்' அம்சமாக அர்த்தமண்டபமும், "ஆனந்த' மயமாக கருவறையும் இருப்பது விசேஷம்.

தெற்கு பார்த்த சிவத்தலம் : சிவன் கோயில்கள் பொதுவாக கிழக்கு நோக்கித்தான் இருக்கும். அரிதாக சில தலங்கள் மேற்கு பார்த்திருக்கும். ஆனால், ஆவுடையார் கோயில் தெற்கு நோக்கியபடி இருக்கிறது. சிவன், குருவாக இருந்து, தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும் நிலையை "தெட்சிணாமூர்த்தி' என்பர். இங்கு அவர் மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்த தலம் என்பதால் தெற்கு நோக்கி அமைந்தது என்கிறார்கள். ஆவுடையார் கோயிலும், கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவன நாதர் கோயிலும் தெற்கு நோக்கியவை ஆகும்.

மாணிக்கவாசகர் : இத்தலத்தில் சோமாஸ்கந்தர் ஸ்தானத்தில் விளங்குகிறவர் மாணிக்கவாசகர். இவருக்குத்தான் உற்சவம் நடைபெறுகிறது.இந்த உற்சவத்தை பக்தோர்ச்சவம்(அடியார்க்குச் செய்யும் உற்சவம்) என்று சிலர் கூறுவர்.மாணிக்க வாசகர் இறைவனோடு இரண்டறக் கலந்து சாயுச்சிய முத்தி பெற்றவர் ஆகையாலும், அவர் அறிவாற்சிவமே என்று ஞானிகளால் பேசப்படுவதாலும், இறைவன் வேறு மாணிக்கவாசகர் வேறு என்று எண்ணுவது சிவாபராதம் ஆகையாலும் அவர்க்கு எடுக்கும் விழா பிரம்மோற்சவமே ஆகும். ஆன்மநாதரின் பரிகலச் சேடம் நிர்மாலிய புஷ்பம் முதலியன இவர்க்குச் சேர்ப்பிக்கப்பெறுகின்றன.

தலவிருட்சம் :
தியாகராஜ மண்டபத்துக்கு அப்பால் வடமேற்கு மூலையில் வெளிமதிலை ஒட்டினாற்போல் அமைந்த திருமாளிகைப்பத்தியில் தலவிருட்சமான குருந்த மரங்கள் இரண்டு உள்ளன.இவ்விருட்சங்களை வலம் வருவதற்கு மேடையில் இடைவெளி இருக்கிறது. இப்பிரகாரத்தின் மூலையில் மடைப்பள்ளி இருக்கிறது.

இத்தலத்தில் காணவேண்டிய அபூர்வ சிற்பங்கள் (உலகப்புகழ்பெற்றவை)

1 டுண்டி விநாயகர் சிற்ப உருவம்

2. உடும்பும் குரங்கும்

3. கற்சங்கிலிகள் - சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது

4. இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள்

5. 1008 சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவியர் திருவுருவங்கள்

6. பலநாட்டுக் குதிரைச் சிற்பங்கள்

7. 27 நட்சத்திர உருவச் சிற்பங்கள்

8. நடனக்கலை முத்திரை பேதங்கள்

9. சப்தஸ்வரக் கற்தூண்கள்

10. கூடல்வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போன்று காணப்படுதல்.

நந்தி, பலி பீடம் இல்லாத சிவன் கோயில், சுவாமி, அம்பாளுக்கு உருவம் கிடையாது.லிங்கம் கிடையாது. அடிப்பகுதியான ஆவுடை மட்டுமே உண்டு.அம்பாளுக்கு திருப்பாதங்கள் மட்டுமே உண்டு. திருவிளையாடற் புராணத்தில் சிவபெருமான் நரியை பரியாக்கிய கதை நடந்த தலம். மாணிக்க வாசகருக்கு சிவபெருமானே குருவாக வந்து உபதேசம் செய்த சிவதலம். பிரதோஷம் நடைபெறாத சிவதலம். மாணிக்க வாசகருக்கு மட்டுமே இங்கு திருவிழா, உற்சவர் மாணிக்க வாசகரே. திருவாசகம் பிறக்க காரணமான தலம்,மாணிக்க வாசகர் தமது கைப்பட எழுதிய ஓலைச்சுவடி, எழுத்தாணி ஆகியவை சன்னதியில் இன்னும் உள்ளது. கல்வெட்டுக்கள், கருங்கல் தாழ்வாரங்கள்,அதி அற்புத சிற்பங்கள் நிறைந்த மிக சிறப்பான கோயில்.

ஆத்ம ஒளியைத் தூண்ட உதவும் திருவாசகத்தை அருளியவர் மாணிக்கவாசகர். அவரை திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஈசனே குருவாக வந்து ஆட்கொண்டார். திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலில் ஆத்ம தத்துவங்களை விளக்கும் வகையில் தீபங்கள் அமைத்துள்ளனர். கருவறையில் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களை உணர்த்தும் விதமாக 27 தீபங்கள் ஏற்றியுள்ளனர். உலகைப் படைத்து, காத்து, அழித்து நடத்தும் மும்மூர்த்திகளை உணர்த்துவதற்காக, கருவறையில் கண்ணாடிச் சட்டமிட்ட பெட்டியில் மூன்று விளக்குகளை ஏற்றிவைத்துள்ளனர். 36 தத்துவங்களைக் குறிக்கும் தீப மாலையை தேவசபையில் விளக்காக வைத்துள்ளனர். ஐந்துவகை கலைகளைக் குறிக்க ஒன்றின்கீழ் ஒன்றாக ஐந்து விளக்குகளை கருவறையில் ஏற்றியுள்ளனர். 51 எழுத்துக்களைக் கொண்டது வர்ணம். இதனைக் குறிக்கும் வகையில் கருவறை முன் உள்ள அர்த்தமண்டபத்தில் 51 தீபங்களை ஏற்றி வைத்துள்ளனர். உலகங்கள் 87 என்பதை குறிக்கும் வகையில் கனக சபையில் குதிரைச் சாமிக்குப் பின் 87 விளக்குகள் உள்ளன. நடன சபையில் 11 மந்திரங்களைக் குறிக்க 11 விளக்கேற்றி வைத்துள்ளனர்.
 
     
  தல வரலாறு:
     
  மதுரை பாண்டிய மன்னனின் சபையில் அமைச்சராக இருந்த மாணிக்க வாசகர் மன்னன் உத்தரவுப்படி குதிரை வாங்க இப்பகுதிக்கு (திருப்பெருந்துறை) வருகிறார்.அப்போது இங்கு சிவாகமங்கள் ஒலிக்கும் ஒலி கேட்க அங்கு சென்று பார்க்கையில் ஞானகுருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார். தன்னை ஏற்றுக்கொண்டு உபதேசமளிக்கும்படி மாணிக்கவாசகர் கேட்டுக் கொள்ள, குருவும் ஒப்புக் கொண்டார். உபதேசம் கேட்டு சிவநிஷ்டையிலிருந்து கலைந்த மாணிக்க வாசகர் குரு இல்லாதது கண்டு சிவபெருமான்தான் குருவாக வந்தது என்று தெரிந்து கொண்டார்.உள்ளம் உருகி பாடினார்.குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தில் (இப்போதுள்ள)கோயில் கட்டினார். சிவதொண்டில் ஈடுபடலானார். குதிரை வராத செய்தி கேட்டு மன்னன் மாணிக்கவாசகரை பிடித்து சிறையில் அடைத்தார். சிவபெருமான் நரிகளை பரிகளாக்கி(குதிரை) அவரே ஓட்டிக் கொண்டு மதுரை வந்து மன்னனிடம் ஒப்படைத்தார்.ஆனால் இரவிலேயே குதிரைகள் எல்லாம் நரிகளாகிப் போக மன்னன் மாணிக்க வாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தி தண்டிக்க வைகையில் வெள்ளம் வந்தது.கரையை அடைக்க சிவபெருமான் கூலியாளாக வந்து பிட்டு வாங்கி தின்று விட்டு வேலை செய்யாததால் பிரம்படி வாங்க அந்த அடி எல்லோர் முதுகிலும் விழ, வந்தது இறைவன் என்பதைத் தெரிந்து கொண்ட பாண்டிய மன்னன் மாணிக்க வாசகரின் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டான். இந்த சிறப்பு வாய்ந்த திருவிளையாடற் புராண கதை நிகழ காரணமானது இக்கோயில் ஆகும்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கூடல்வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போன்று காணப்படும்.
விஞ்ஞானம் அடிப்படையில்: தியாகராஜர் மண்டபத்தில் உள்ள கல்சங்கிலி, பஞ்சாட்சர மண்டபத்திலுள்ள சப்தஸ்வர தூண்கள் காணத்தக்கது. பெரிய மண்டபத்தில் உள்ள இரண்டு தூண்களில், ஆயிரம் சிறிய தூண்கள் பொறிக்கப்பட்டுள்ளது. கற்சங்கிலிகள் - சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar