பிரதி மாதம் ஒரு திருவோணம், இரண்டு ஏகாதசி ஆகிய தினங்களில் பெருமாளுக்கும், ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஆஞ்சநேயசுவாமிக்கும் சிறப்பு திருமஞ்சனமும் (அபிஷேகம்) ஆராதனைகளும், அன்னதானமும் நடைபெறுகிறது.
தல சிறப்பு:
தமிழ்வருடப்பிறப்பு அன்று ராஜகோபுரத்தின் இரண்டாம் நிலை மாடத்தின் வழியாக காலை சூரிய உதயத்தின் போது ஒளிக்கதிர்கள் பெருமாளின் பாதத்தில் விழுகின்ற காட்சியை காணலாம். சூரிய பகவான் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பெருமாளின் பாதத்தில் விழுகின்ற காட்சியினை பக்தர்கள் கண்டு வணங்கிவருகின்றனர்.
திருக்கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்து பொதுமக்கள் தினசரி வழிபட உதவி செய்யும்படி, திருப்பணிக் கமிட்டியினர் பரனூர் மஹாத்மா ஸ்ரீஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகளை அணுகி விண்ணப்பம் செய்து கொண்டனர். ஸ்வாமிகள் நியமனப்படி சைதன்ய மஹாப்பிரபு நாம பிட்ஷா கேந்திர அவர்கள் பெரிய திட்டத்தில் அஸ்திவாரத்திலிருந்தே மிக வலிமையாக புதுப்பித்து, எட்டு அழகிய சிற்ப பொம்மைகளுடன் கூடிய மிக அழகான விமானம் அடங்கிய கர்பகிரகமும், அழகிய அர்த்த மண்டபமும், பெரிய அழகிய மகா மண்டபமும் கட்டி முடித்துள்ளார்கள். மேலும் புதிதாக தாயார் ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆஞ்சநேயர் சிலைகமும், கருங்கல்லில் புதிய வாசல் நிலைபடிகளும் மற்றும் புதிய கோமுகமும் செய்து வைத்துள்ளார்கள். பொதுமக்கள் நிதி உதவியுடன் இராஜகோபுரத்தை புதுப்பித்து கோபுர வேலை மதில்சுவர் 1.3.2013ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பிரார்த்தனை
பலவிதமான பிரார்த்தனைகளை பெருமாளிடம் பக்தர்கள் வேண்டுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தல வரலாறு:
அச்சுதமங்கலம் கிராமம், கும்பகோணம்-நன்னிலம் மெயின்ரோட்டில் இப்பெருமாள் கோயில் பன்னெடுங்காலமாக மக்களால் பூஜிக்கப்பட்டு வருகிறது. இவ்வூரில் உள்ள அ/மி.சவுந்தநாயகி உடனுரை சோமநாதசுவாமி கோயிலில் சேக்கிழார் பெருமான் சிலை உள்ளது. ஆதலால் இந்த கோயிலையும் அவரே கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இக்கோயில் மிகவும் பழுதடைந்து இருந்த காலத்தில் அச்சுதமங்கலத்தைச் சார்ந்த பெருநிலக்கிழார் திரு. அ.கோவிந்த உடையார் அவர்கள் 1935-ல் திருப்பணி தொடங்கி, தினமும் பூஜை செய்வதற்கு தன்னுடைய பூர்வீக நஞ்சை நிலத்தை எழுதி வைத்துள்ளார்கள்.
திருப்பணி வேலைகள் நடைபெற்று வரும்போதே வயது முதிர்வின் காரணமாக காலமாகிவிட்டார்கள். அவர்களுடைய வாரிசான திரு.கோ. வேணுகோபால்சாமி உடையார் அவர்கள் தொடர்ந்து திருப்பணி செய்து 1936-ல் கும்பாபிஷேகம் செய்ததற்கான பதிவுகள் உள்ளன. ஆதிமூலப்பெருமாள் கோயிலின் பின்புறம் உள்ள தாமரை குளத்தில் இருந்து கஜேந்திரன் எனும் யானை தாமரை பூவை பறித்து வந்து தினமும் பெருமாளுக்கு பாதபூஜை செய்து வந்துள்ளது. வழக்கம்போல் பூஜை செய்யப் பூப்பறிக்க சென்றபோது அந்த யானையின் காலை அக்குளத்தில் இருந்த முதலையானது பிடித்துக்கொள்ளவே அந்த யானை அச்சுதா! அச்சுதா! என்று குரல் கொடுக்க ஆதிமூலப்பெருமாள் அந்த யானையை காப்பாற்ற சக்கராயுதத்தை ஏவி யானையைக் காப்பாற்றி உள்ளார். அச்சுதா! அச்சுதா!! என்று யானை அலறியதால் இவ்வூருக்கு அச்சுதமங்கலம் என பெயர் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:தமிழ்வருடப்பிறப்பு அன்று ராஜகோபுரத்தின் இரண்டாம் நிலை மாடத்தின் வழியாக காலை சூரிய உதயத்தின் போது ஒளிக்கதிர்கள் பெருமாளின் பாதத்தில் விழுகின்ற காட்சியை காணலாம். சூரிய பகவான் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பெருமாளின் பாதத்தில் விழுகின்ற காட்சியினை பக்தர்கள் கண்டு வணங்கிவருகின்றனர்.