Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சுவாமிநாத சுவாமி
  ஊர்: ராமகிருஷ்ணபுரம், புது டெல்லி
  மாவட்டம்: புதுடில்லி
  மாநிலம்: டெல்லி
 
 திருவிழா:
     
  கிருத்திகை, சஷ்டி, சதுர்த்தி பிரதோஷம் ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது. மாத விழாக்களில் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாள், வைகாசி விசாகம் ஆனி மகத்தன்று ஆண்டு விழா, ஆடிபூரம் விநாயகசதுர்த்தி, கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம் ஐப்பசியில் சுந்தரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவாரம் ஆருத்ரா தரிசனம், பொங்கல் விழா, தைப் பூசம், மஹா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் வெகு விமர்சையாக அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்று வருகின்றன. பங்குனி உத்திரதன்று முருகன் வள்ளி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் நிகழ்வில் ஏராளமானோர் பங்கு பெற்று தரிசனம் செய்வது தமிழகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு வரும். ஆண்டுவிழா அன்று சுப்ரமணியருக்கு 108 சங்காபிஷேகமும் கடைசி சோமவாரத்தில் ஈசனுக்கு 108 சங்காபிஷேகமும் நடைபெறும் பூஜைகள் மனதைவிட்டு அகலாத ஒன்றாகும்.  
     
 தல சிறப்பு:
     
  கோயில் கிழக்குநோக்கி அமைந்துள்ளது. மார்ச் மாதம் 19 ம் தேதி முதல் 23ம் தேதிவரை காலை 6.15 மணியளவில் சூரியனின் தங்க நிற கதிர்கள் சுவாமியின் மேல் விழுவதைக் காணலாம். இந்நிகழ்வை ‘சூர்ய பூஜை’ என அனுஷ்டிக்கப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.00 முதல் 12.00 வரை. மாலை 5.00 முதல் இரவு 9:00 வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் ராமகிருஷ்ணபுரம், 110022 புது டெல்லி.  
   
போன்:
   
  +91 11 26175104 
 
பிரார்த்தனை
    
   நமக்கு தேவையானதை எல்லாம் அள்ளி வழங்கும் வள்ளல் முருகன். 
    
நேர்த்திக்கடன்:
    
  முருகனுக்கு அபிேஷகம் செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  இத்தலத்தில் கற்பக விநாயகப்பெருமான், சுந்தரேஸ்வரர், தேவி மீனாட்சி, விஷ்ணு துர்க்கை, இடும்பன் மற்றும் நவகிரஹ சன்னதிகள் உள்ளன. இச் சன்னதிகளில் காலை 8.15 முதல் 10.30 மணி வரை தனித்தனியே அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
 
     
  தல வரலாறு:
     
 
பல அற்புதங்களும், அதிசயங்களும் நடைபெற்ற ஸ்தலம். டெல்லியில் ராம கிருஷ்ணபுரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய குன்றை முருக பக்தர்கள் கண்டனர். குறிப்பிட்ட காலத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியோ முன்னேற்றமோ அப்பகுதியில் இல்லை. அதே நேரத்தில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியாகிய சரோஜினி நகரில் “விநாயகர்” கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தன்று, பக்தர் ஒருவர் கனவில் ஒரு முதியவர் தோன்றி, அருகில் உள்ள குன்றுக்கு  என்னை அழைத்துச் செல்ல முடியுமா? என வினவினார். பக்தர் அம் முதியவரை கையைப் பிடித்து குன்றின் மீது அழைத்துச் சென்றார். அம் முதியவர் என்னை அழைத்து வந்து உதவியதற்கு நன்றி எனக் கூறியவுடன் மறைந்து விட்டார்.

அடுத்த நாள் காலை, குன்றின் மீது கோவில் கட்டும் எண்ணத்துடன் இருந்த சக பக்தர்கள் சிலரை அழைத்துக் கொண்டு அக் குன்றின் மீது ஏறிச் சென்றனர். என்ன ஆச்சரியம்! கனவில் வந்த முதியவரை கூட்டி வந்த அதே குன்று கனவில் கண்ட அதே அமைப்புடன் இருந்தது. கனவில் வந்த முதியவர் சுவாமிநாத சுவாமியாகத் தான் இருக்க வேண்டும். முதியவர் வடிவில் வந்து கோவில் எழுப்ப வேண்டிய இடத்தை அடையாளம் காட்டி உள்ளார்.

1961 வருடம் பெரியவாள் இங்கு கோவில் கட்ட ஆசி வழங்கி உள்ளார். தமிழகத்தில் கும்பகோணம் அருகே அமைந்துள்ள மலை தட்சிண சுவாமிமலை. டெல்லியில் அமையவிருக்கும் கோவில் உத்தர சுவாமிமலை என அழைக்கப் பெறும்.

இதில் இன்னொரு அதிசயமும் நடந்தது. தொல்லியற்துறைச் சேர்ந்த இயக்குநர் ஒருவர் வரைபடத்தை சோதித்த போது இம்மலை உள்ள இடம் ஆர் பி எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் ஆர் பி என்றால் (கீஞுடூடிஞ்டிணிணண் கடூச்ஞிஞு) ரிலிஜியஸ் பிளேஸ் எனக் குறிப்பிடுகின்றார்.

கோவில் கட்டவேண்டும் என மனமொத்த பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து “ஸ்ரீ சுவாமிநாத சேவா சமாஜம்” என்ற அமைப்பை உருவாக்கி ஒவ்வொருவரும் ரூ. 25000/- பங்குத் தொகையாகச் செலுத்தினர். அவ்வமைப்பை முறையாக 1961 ம் வருடம் விஜயதசமி நன்னாளில் பதிவு செய்தனர். முதல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் கர்நாடக சங்கீத வித்வானாகவும் இருந்த ஒருவர் (டி.எல். வெங்கட்ராம ஐயர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் (ஓ.வி. அழகேசன்) தேர்வு செய்யப்பட்டார். அப்போதைய தமிழக முதலமைச்சரிடம் (பக்தவச்சலம்) நிதிதேவைக்காக கோரிக்கை வைக்க ஒரு கணிசமான தொகை வசூல் ஆனது.

கோவில் கட்டுமான பணியைத் துவங்கும் முன் சமாஜ் உறுப்பினர்கள் பரமாச்சாரியரிடமும் திருப்பனந்தாள் மடம் தம்பிரான் சுவாமிகளிடமும் ஆசிபெற வேண்டி தமிழகத்திற்கு வந்தனர். சுவாமிகள் ஆசி நல்கியதுடன் ரூ. 1.5 லட்சம் உதவினார். இத்தொகை கோவில் கட்டுமான தொடங்க பேருதவியாக இருந்தது. தமிழக கோவில்களும் நிதியை வழங்கின. தலைநகர் டெல்லியில் அமையவிருக்கும் சுவாமிநாத சுவாமி கோயில் சிற்பகலை மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் அமைவதாக இருக்கும்.

இந்நிலையில் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி தமிழகம் திரும்பிவிட்டார். அப்போது முன்னால் மத்திய அமைச்சரும் ஜனாதிபதியாக இருந்த ஆர். வெங்கட்ராமன் அவர்களை சமாஜத்தின் தலைவர் பொறுப்பை ஏற்குமாறு பரமாச்சாரியர் கேட்டுக் கொண்டார். சுவாமிநாத சுவாமியே பரமாச்சாரியார் மூலமாக ஆணையிட்டதாகக் கருதி அத்தெய்வீக பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

கோவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள மகாபலிபுரத்திலுள்ள தலை சிறந்த தமிழக சிற்பி கணபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. அரக்கோணம் -காட்பாடி இடையேயுள்ள பத்துமலை குப்பத்தில் உயர்ந்த தரத்தில் உள்ள கிரானைட் கற்கள் கிடைக்கின்றன. எனவே அருகில் உள்ள வாலாஜா பேட்டையில் சிலை மற்றும் கட்டுமான பணிகளுக்கு தேவையான கற்களைத் தயார் செய்ய ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டது போதிய நிதி ஆதாரம் இருந்ததால் தொய்வு இன்றி பணிகள் விரைவுபெற்றது.

மூலவர் செய்ய வேண்டிய தருணம் வந்தது. பரமாச்சாரியர் மற்றும் காசி மடத்தைச் சார்ந்த தம்புரான் சுவாமிகளும் திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணியில் குறுக்குத்துறை என்னும் இடத்திலிருந்து சிலை செய்ய கற்பாறையை எடுக்குமாறு அறிவுரை நல்கினர். திருச்செந்தூர் முருகன் சிலை செய்ய தேவையான கல்லை அங்கிருந்து தான் எடுத்ததாகவும், மீதமுள்ள அக்கல்லை இச்சிலை செய்ய பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர். 1965 ம் ஆண்டு ஜூன் 2ம் நாள் அக்கல்லை எடுக்க நேரம் குறித்தனர்.

சமாஜத்தின் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு திருநெல்வேலியை அடைந்து குறுக்குத்துறைக்குச் சென்றனர். அவ்விடத்தை அடைந்த பின்பு தான் அப்பாறையைத் தேர்வு செய்வது எளிதான காரியம் இல்லை என்பதை உணர்ந்தனர். ஏனெனில் சுமார் 1 மைல் நீளமும் 1/2 மைல் அகலமும் கொண்ட பகுதியில் நீரில் மூழ்கி பாறையைக் கண்டு பிடிப்பது எத்தனை கடினம். சுற்று வட்டாரத்தில் இருக்கும் பெரியவர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்ததில் எந்தப் பலனும் கிட்டவில்லை. மிகுந்த ஆர்வத்துடன் வந்த சமாஜ் உறுப்பினர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

நெல்லையப்பர் கோயிலையடைந்து ஈசனை சரணடைந்து பூஜித்தனர். பிரசாதம் வழங்கிய குருக்கள் இவர்கள் முகத்தைப் பார்த்து குழப்பம் அடைந்தார். என்ன விபரம் என குருக்கள் வினவ நடந்தவற்றை விளக்கமாக தெரிவித்தனர். குருக்கள் சிறிது யோசித்து விட்டு “நீங்கள் கவலைகொள்ள வேண்டாம். தெற்குரத வீதியில் 85 வயதுடைய சுந்தர தீட்சிதர் என்பவரை சந்தித்து, நடந்தவற்றை விபரமாகக் கூறுங்கள். அவர் நிச்சயம் உங்களுக்கு உதவக் கூடும்” என்றார் மேலும், “திருச்செந்தூர் முருகன் சிலைக்கு கல் எடுக்கும் போது அவர்தான் உடனிருந்தார்” என்றார்.

அடுத்த நாள் காலை சுந்தர தீட்சிதரின் வீட்டிற்குச் சென்று சந்தித்தனர் விபரங்கள் அனைத்தையும் தெரிவித்தனர். விபரங்களைக் கேட்ட தீட்சிதர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். “நான் இதுவரை பாதி வேலையத்தான் முடித்திருக்கிறேன். மறுபாதியையும் செய்து முடிப்பதற்காகவே முருகன் எனக்கு நீண்ட ஆயுளைத் தந்துள்ளான். தற்போது மீதியுள்ள பணியையும் வெற்றிகரமாக முடிப்பேன் என உறுதிபடக் கூறினார்.

சமாஜ் உறுப்பினர்கள் மிகவும் ஜாக்கிரதையாக தீட்சிதரை அழைத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தனர் தீட்சிதர் முன்பு கல் எடுத்த குறிப்பிட்ட இடத்தைக் காட்டினார். சுமார் 30 ஆட்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நீண்ட காலம் ஆனதால் மணல் 10 அடி உயரத்திற்குமேல் நிரம்பி இருந்தது. மணலை அகற்றி பின் பெரிய பாறையை வெளியே எடுத்தனர். முன்பு முக்கோண வடிவத்தில் வெட்டி எடுத்த மீதி பகுதியை சிலை செய்வதற்காக மகாபலிபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிற்ப சாஸ்திரபடி சிலைசெய்யும் கற்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. ஆண் தெய்வங்களுக்கானது
2. பெண் தெய்வங்களுக்கானது
3. மத்திமம்

மத்திம கல்லை சிலை செய்ய பயன் படுத்த மாட்டார்கள். கட்டிட பணிக்கு மட்டுமே பயன்படும்.

சிலைசெய்யக் கொண்டுவந்த கல்லில் சிலை செய்யும் பணியைத் துவக்கினர். பாதி முடிந்த நிலையில் உளியால் செதுக்கும் போது எந்த சத்தமும் வரவில்லை. பல இடங்களில் சோதித்தும் எந்த விதமான சத்தமும் எழுவில்லை. இது ஸ்தபதியின மனதை அதிகம் பாதித்தது.

மனதை ஒருநிலைப்படுத்தி மேற்கொண்டு பணியைத் தொடரமுடியவில்லை. பரமாச்சா ரியாரும் தம்பிரான் சுவாமிகளும் தேர்வு செய்து கொடுத்த கல்லில் சிலை செய்வதை நிறுத்தினால் அவர்களை அவமதித்தது போலாகுமே? என எண்ணி சிலைசெய்யும் பணியைத் தொடர்ந்தார்.

இதைப்பற்றி தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு பரமாச்சாரியார் அவர்களை சந்திக்க வரிசையில் காத்திருந்தார். பெரியவா ஸ்தபதியை கவனித்தார். அருகில் அழைத்து, “சிலை செய்யும் போது சத்தம் வரவில்லை என்று தானே கவலைப்படுகிறாய்? கவலை வேண்டாம் தொடர்ந்து செய்து வா. சத்தம் தானாகவே வரும்” என்றார். தான் எதற்காக பெரியவாளைக் காண வந்திருக்கிறோம் என்பதைக் கணித்து கூறியதைக் கேட்டு பெரிய ஆச்சரியமாய் போய்விட்டது ஸ்பதிக்கு. மத்திமம் வகையைச் சார்ந்த கல், எப்படி ஆண்டவன் சிலைசெய்ய மாறியதையும் கோவில் மணி ஓசையை ஒத்த சப்தம் வந்ததையும் எண்ணி ஒரு கணம் திகைத்தார். தன் வாழ்வில் எண்ணற்ற சிலைகளைச் செய்திருக்கின்றார். இப்படி ஓர் அதிசயம் நிகழ்ந்த தில்லை இது இறைவனின் திருவிளையாடலன்றி வேறு என்னவாக இருக்க முடியும்.

சிலைசெய்யும் பணி முற்றிலும் நிறைவடைந்த நிலையில் பரமாச்சாரியிடம் காட்டுவதற்காக காஞ்சிபுரத்துக்கு கொண்டு வந்தனர். பெரியவா சிலையை தலைமுதல் பாதம்வரை தடவிப்பார்த்தார். பின் கழுத்தில் அமைத்திருந்த ருத்ராட்ச மாலையைப்பார்த்து ஸ்தபதியிடம், “திருச்செந்தூர் முருகனுக்கு வெள்ளியிலான ருத்ராட்ச மாலை அணிவிக்கப்பட்டிருக்கும் அதை வேறுபடுத்தி காட்டவே இவ்வாறு சிலையிலேயே அமைத்து விட்டீர்களா? என்றார். ஸ்தபதி பெரியவாளின் நினைவாற்றலை எண்ணி வியந்தார். ஒரு நாள் முழுதும் அறையில் வைத்து விபூதி அபிஷேகம் செய்து ஆராதனைகளைச் செய்தார். தெய்வீகத் தன்மையுடன் அற்புதமாக சிலையை வடித்த சிற்பியை மனதாரப் பாராட்டினார். பின் சிலையை அனுப்பி வைத்தார்.

8-9-1965 அன்று கால்கோள் விழா நடந்த நாள் குறிக்கப்பட்டது. அப்போதைய பிரதமரும் (லால்பகதூர் சாஸ்திரி) தமிழக முதலமைச்சரும் (பக்தவச்சலம்) கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் பாக்கிஸ்தான் விமானப்படை டெல்லியை குண்டு வீசி தாக்க இருப்பதாக 7ம் தேதி இரவு 10.30 மணிக்கு உளவுத்துறை மூலம் வானொலியில் அவசர செய்தியாக ஒலிபரப்பினர். உடனே இருட்டடிப்பு செய்யப்பட்டது. சமாஜ் உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். நாடு தற்போதுள்ள நிலையில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என பிரதம மந்திரி அலுவலகத்திலிருந்து தகவல் வந்தது.

ஆனால் காலை 4.30 மணிக்கு நமது விமானப்படை விமானம் பாக்கிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதை கோவிலிருந்து பக்தர்கள் பார்த்துள்ளனர். 5 மணியளவில் நிலைமை சீராகிவிட்டதை அறிவிக்கும் வகையில் சங்கொலி எழுப்பப்பட்டது. பக்தர்கள் விழா நடக்கும் இடத்தில் கூடினார்கள்.

வேத கோஷங்கள் முழங்க விழா இனிதே நடைபெற்றது அன்றிரவு ஒலிப்பரப்பாகிய அகில இந்திய வானொலி செய்தியில் கோவில் நிகழ்வு முக்கிய இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

வாலாஜாபாத் தொழிற்சாலையில் செய்து முடிக்கப்பட்ட சிலைகள், கற்கள் தூண்கள் போன்றவற்றை ரயில் மூலமாக டெல்லிக்கு அனுப்பப்பட்டது. கல்கார பணிகளை மேற்கொள்ள 52 சிற்பிகளை ஈடுபடுத்தி இருந்தனர் கோவில் கட்டுமானப்பணி முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தது. தீடிரென பணம் பற்றாக்குறை ஏற்பட்டது. பெரியவாளைத் தொடர்பு கொண்ட போது, அவர் ஹைதராபாத்தில் முகாமிட்டிருந்தார். ஆந்திர முதல்வர் (பிரமானந்த ரெட்டி - பிவி. நரசிம்மராவ்) மூலம் நிதிக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். அதன்பின் சமாஜத்திற்கு நிதி தட்டுபாடே இல்லை.

1970ம் ஆண்டு சிருங்கேரி அபினவ வித்யா தீர்த்த பாரதி சுவாமிகள் கோவிலுக்கு வருகை புரிந்து கட்டிட வேலைகளைப் பார்வையிட்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

கருவறை கட்டிட பணிகள் நிறைவடைந்த நிலையில் மூலவர் திருமேனி பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு 25 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட உலோகத்தினலான பெட்டி தயார் செய்யப்பட்டது. அத்துடன் சிலையின் பீடத்தில் வைக்கப்படும் ‘யந்திரம்’ தயாரிக்கப்பட்டு பரமாச்சாரியரால் ஆசீர்வதிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது.

சிலையின் கண் திறப்பு வைபவம் நடத்த 5.6.1973 அன்று என முடிவெடுக்கப்பட்டது. அதற்குமுன் பல மாதங்கள்  பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் நிரம்பிய தொட்டியில் சிலை ஜலவாசத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பல்வேறு மடாதிபதிகள் கலந்து கொண்டது சிறப்பு. சுவாமிக்கு கண்திறந்தவுடன் அவர்பார்வையில் படும்படி கன்றுடன் பசுமாடு, தங்க ஆபரணங்கள், வயது முதிர்ந்த சுமங்கலிபெண் நிலைக்கண்ணாடி, சாமரம், பொங்கல் இனிப்புடன் கூடிய பால் முதலியவற்றை ஏற்பாடு செய்திருந்தனர். பாலாயத்தின் போது பூஜையில் இருந்த மரச்சிலையை ஜெயேந்திர சுவாமிகளின் அறிவுரைப்படி சுவாமியின் பீடத்தின் கீழே வைத்து அதன் மேல் மூலவர் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

கும்பாபிஷேகத்திற்கான நாள் 7.6.73 எனக் குறித்தனர். கும்பாபிஷேகத்தை நடத்திக் கொடுக்க பரமாச்சாரிய சுவாமிகளை அழைத்தனர். வயது முதிர்ந்த நிலையில் டெல்லி வரை பயணிக்க முடியாத சூழலில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை தன் சார்பில் கும்பாபிஷேகத்தை நடத்திதர அறிவுறுத்தினர். இதில் ஒரு சிறப்பு என்னவெனில் ஜெயேந்திரர் பாத யாத்திரையாக சுமார் 2500 கி.மீ. பயணித்து கும்பாபிஷேகத்திற்கு ஒரு வாரம் முன்னதாக டெல்லியை அடைந்தார்.

உத்திர சுவாமிமலை அடிவாரத்தில் 33 யாக குண்டங்கள் நிறுவப்பட்டு ஆகம சாஸ்திரத்தில் வல்லுனர்கள் 60 பேர் பங்கு பெற மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அற்புதமாக கும்பாபிஷேக விழா நிறைவேறியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் நாட்டின் முன்னணி தலைவர்கள், முதல்வர்கள் மத்தியரசு அமைச்சர்கள் என பெருமளவில் கலந்து கொண்டனர்.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம்
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மார்ச் மாதம் 19 ம் தேதி முதல் 23ம் தேதிவரை காலை 6.15 மணியளவில் சூரியனின் தங்க நிற கதிர்கள் சுவாமியின் மேல் விழுவதைக் காணலாம். இந்நிகழ்வை ‘சூர்ய பூஜை’ என அனுஷ்டிக்கப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar