Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவமகா புராணம் தர்ம ஸம்ஹிதை(பகுதி-2) சிவமகா புராணம் கைலாய ஸம்ஹிதை சிவமகா புராணம் கைலாய ஸம்ஹிதை
முதல் பக்கம் » சிவமகா புராணம்
சிவமகா புராணம் தர்ம ஸம்ஹிதை(பகுதி-3)
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 மே
2012
03:05

31. நரகலோக வர்ணனை

வியாசரே! பாதாள லோகத்திற்கு மேலே இருக்கும் நரக லோகத்தையும் அதில் பாவிகள்கிடந்து அனுபவிக்கும் துன்பங்களையும் சொல்லுகிறேன். ரவுரவம், சூகரம், ரோதம், தாலம், திவசனம் மகரஜ்வாலை தய்தகும்பம்; தப்தலவணம், விலோஹிதம் வைதரிணி; பூபவாதி; கிரமிலம்; கிருமி போஜனம்; அசிபத்ரவனம், லாலாபக்ஷம், அபாயம் வன்னிஜ்வாலை அதசிரசு, ஸந்தம்சம், காலசூத்ரம், தமசு, விசிரோ தனம், ஸ்வபோஜனம், அதிர்ஷ்டம், மஹாரவுரவம், சான்மலி முதலிய நகரங்களில் பாவிகள் சமைக்கப் படுவார்கள், வேதியர் முதலியோருக்கு விரோதமாகப் பொய் சாட்சி சொன்னவன் ரவுரவம் என்னும் நரகத்தையும் சிசுஹத்தி செய்தவனும் விசுவாசகாதகனும் சுராபானஞ் செய்தவனும் பிரமஹத்தி செய்தவனும் பொன் திருடியவனும் இப்பாவிகளோடு சிநேகஞ் செய்தவனும் சூகரம் என்னும் நரகத்தையும் ஆசாரியனைக் கொன்றவனும் உடன் பிறந்தாளோடு கூடிக் குலாவியவனும் தாயைக் கூடியனுபவித்தவனும் தப்தகும்பம் என்னும் நரகத்தையும் பதிவிரதைகளைப் பலாத்காரமாகப் புணர்ந்தவனும் தன் நாயகியைப் பிறனிடம் சேர்ப்பித்தவனும் தப்தலோஹம் என்னும் நரகத்தையும் ஆசிரியனை அவமதித்தவனும் தன் தாய் தந்தையர் குழந்தைகள்முதலானோரை வஞ்சித்துப் புசித்தவனும் தெய்வ நிந்தை செய்தவனும் வேதவிக்கிரயஞ் செய்தவனும் சேரத்தகாதப் பெண்களைச் சேர்ந்தவனும் தப்தகலம் என்னும் நரகத்தையும் தர்ம சாஸ்திர விரோதமாக நடந்தவன் அவிசிரோதம் என்னும் நரகத்தையும் தேவர், பிதுரர், முதலானோரைத் துவேஷித்தவனும், இரத்தினங்களைக் குறைத்து மதித்தவனும் புனிதமான இரத்தினங்களுக்குத் தோஷஞ் சொன்னவனும், தேவர், பிதுரர் முதலானோருக்கு நிவேதியாமல் தின்றவனும், லாலாபக்ஷம் என்னும் நரகத்தையும் அன்னபானங்களில் விஷம் கலந்து கொடுத்தவன் விச்சனம் என்னும் நரகத்தையும் அசத்தியவான்களோடு சிநேகித்தவனும் புசிக்கத் தகாதவற்றைப் புசித்தவனும் யாகஞ் செய்ய அருகதை அல்லாதாருக்கு யாகஞ் செய்வித்தவனும் யாகத்தில் செய்யும் ஸோம விக்ரயணம் என்னும் தானத்தை வாங்கியவனும் ருதிராந்தம் என்னும் நரகத்தையும் நண்பனைக் கொன்றவனும், மதுவைக் காரணமின்றி விரும்பியபோதெல்லாம் பருகியவனும், வாலிபத்தால் மத்தனாகித் தர்மசாஸ்திர விரோதமாக நடந்தவனும், தன் ஜீவன மார்க்கத்தை விட்டுக் கபடமார்க்கமாக ஜீவித்தவனும் வைதரிணி நரகத்தையும் மிருகங்களை இம்சிப்பவனும் வீடு முதலியவற்றைத் தீயிட்டுக் கொளுத்தியவனும் வன்னி ஜ்வாலை என்னும் நரகத்தையும் தனது ஆஸ்ரம தருமத்தை விடுத்தவனும் பிறருடைய விரதங்களைக் கொடுத்தவனும் சந்தம்ஸம் என்னும் நரகத்தையும் பகற்காலத்தில் ரேதஸ்கவனஞ் செய்தவன் ஸ்வபோஜனம் என்னும் நரகத்தையும் அடைந்து பற்பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள்.

இத்தகைய நரகங்கள் அநேகம் உள்ளன. வர்ணாசிரமங்களுக்கும் தர்ம சாஸ்திரத்திற்கும் விரோதமாய் மனவாக்கு காயங்களால் பாவஞ்செய்தவர்கள் யாவரும் தலைகீழாகக் கஷ்டத்தை அனுபவிப்பார்கள். அந்த நரகவாசிகள் ஒரு காலத்திலும் தேவர்களைப் பார்ப்பதில்லை. அத்தகைய நரகங்களை அனுபவித்த பிறகு மரம் பறவை, மிருகங்களாகப் பிறப்பார்கள். தர்ம சாஸ்திரத்தில் கூறியபடி நடந்தவர்கள் சுவர்க்க போகத்தை அனுபவித்து நல்ல பிறவியை அடைந்து முறையாக முக்திநிலை அடைவார்கள். எவ்வளவு புண்ணியர்கள் சுவர்க்கத்தில் இருக்கிறார்ளோ அவ்வளவு பாவிகள் நரகத்தில் இருக்கிறார்கள். எந்தப் பாவத்தை புத்தியில்லாமல் செய்து விட்ட போதிலும் அந்தப் பாவத்திற்குத் தக்கபடி  சுலபமாகவும் கஷ்டமாகவும் பிராய்ச்சித்தங்கள் மநுவாதி பெரியோரால் கூறப்பட்ட ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருப்பினும் அவற்றைச் செய்து தங்கள் பாவத்தை விலக்கிக் கொள்ளாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இவ்வாறு நரகலோகத்தை அடைந்து கஷ்டங்களை அனுபவிப்பார்கள். பிராயச்சித்தங்களைச் செய்து கொள்ளச் சக்தியில்லாவிட்டால். நாம் பாவஞ் செய்தோமே என்னும் உணர்வுடன் சிவபெருமானை நோக்கித் தன் பாவங்களைப் போக்குமாறு காலை, உச்சி மாலைகளில் சிவஸ்மரணை செய்து கொண்டிருந்தால் அவை ஒழியும் என்னும் பாவ நீக்கத்தினாலும் புண்ணியப் பிராப்தியினாலும் சுவர்க்கத்தை அடைவார்கள் என்னும் வேதங்கள் கூறுகின்றன. ஜபம், ஹோமம், தியானம், முதலியவற்றால் சிவபெருமானையே தோத்திரஞ் செய்பவன் சர்வகர்ம பந்தங்களையும் ஒழித்து, தேவேந்திராதி போகங்களை அனுபவித்துச் சிவஞானத்தை அடைவான். சிவபக்தி உள்ளவனுக்கு ஒரு காலத்திலும் நரகம் என்பது சித்திக்க மாட்டாது.

வியாச முனிவரே சுகத்திற்கும் துக்கத்திற்கும் காரணமாக இருப்பது மனம். ஆகையால் அதைச் சிவபெருமானிடமே நிறுத்தித் தியானித்தால் பிரமஞானம் உண்டாகும். அந்த ஞானமே பிரப்பிரமம்! ஞானமே தத்துவ சொரூபம் ஞானமே சராசராத்மகமான ஜகத்ரூபம் ஆகையால்  ஞானத்தைவிடச் சிறந்தது வேறொன்றில்லை சிவ ஞானத்தை அடைந்து முக்தி நிலை எய்துவதற்கு இதுவே வழியாகும். பாதாளத்தின் மேலுள்ள நரகலோகம் இத்தகையதாகும். அதற்கும் மேலுள்ள பூவுலகத்தின் விபரத்தைச் சொல்லுகிறேன் கேளும்.

32. பூமண்டல வர்ணனை

வியாச முனிவரே பூ மண்டலத்தின் விஸ்தீரணத்தைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன். அது ஜம்புத்தீவு பலக்ஷத்தீவு சான்மலித் தீவு சூசைத்தீவு, கிரவுஞ்சத்தீவு, புஷ்கரத்தீவு சாகத்தீவு என்ற ஏழு தீவுகளாய் உவர்நீர்க்கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், தேன்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், சுத்த நீர்க்கடல் என்னும் ஏழு சமுத்திரங்களால் சூழப்பட்டுள்ளன. அவற்றில் ஜம்புத்தீவு எல்லாத் தீவுகளுக்கும் நடுவில் உள்ளது. அதன் மத்தியில் பொன்மயமான மேருபர்வதம் பூமியில் பதினாயிரம் யோசனை வேரூன்றியும் எண்பத்து நான்காயிரம் யோசனை உயர்ந்தும் உள்ளது. மேருமலையானது பூமியான தாமரை மலருக்கு ஒரு மொட்டுப் போல விளங்கும் இமாசலம் ஹேமகூடம் நிஷதம் என்னும் மூன்று மலைகளும் மேருவின் தென் திசையிலும், நீலம் ஸ்வேதம், சிருங்கி என்னும் மூன்று பர்வதங்களும் மேருவின்வட திசையிலும் பதினாயிரம் யோசனை அகலமும் இருபதினாயிரம் யோசனை உயரமும் நவரத்தினமயமான சாரலும் பதுமராக மணியைப் போன்ற செந்நிறமும் அக்னிஜ்வாலையைப் போன்ற பிரகாசமும் கொண்டு விளங்குகின்றன. மேருவின் தெற்குப் பக்கத்தில் பாரதம். கிம்புருஷம்

ஹரிவர்ஷம் என்னும் மூன்று நாடுகள் உண்டு வடக்குப் பக்கத்தில் ரம்யகம், ஹிரண்மயம் உத்தரகுரு என்னும் மூன்று நாடுகள் உண்டு இவ்வர்ஷங்கள் ஒவ்வொன்றும் ஒன்பதாயிரம் யோசனை பரப்பளவு உள்ளவை நடுவிலுள்ள இளாவிரத கண்டத்தின் மத்தியில் மேருமலை மிகவும் உன்னதமாக இருக்கும். மேருவின் கிழக்கில் மந்திரமும் தெற்கில் கந்தமாதனமும் மேற்கில் விபுலமும் வடக்கில் சுபார்ஸ்வமும் ஆக நான்கு மலைகள் நான்கு புறங்களிலும் நின்று பதினாயிரம் யோசனை அகலமும் ஒன்பதாயிரம் யோசனை உயரமுங் கொண்டு அம்மேருவுக்கு உறுதியாக கவிட்கம் பசைலங்களாக நிற்கின்றன. இம்மலைகளும் மந்திரகிரியில்கடப்பமரமும் கந்தமாதனகிரியில் ஜம்பு விருக்ஷமும் விபுலகிரியில் அரச விருக்ஷமும் சுபார்சுவகிரியில் ஆல மரமும் விளங்கும். இம் மரங்கள் ஆயிரம் யோசனை விஸ்தீரண முடையன். நாவல் மரத்தினாலேயே இத்தீபத்திற்கு ஜம்புத்தீவு(நாவலந்தீவு) என்று பெயர் அம்மரத்தின் பழங்கள் ஒவ்வொன்றும் யானையைப் போன்ற உருவமுடையனவாய்ப் பழுத்து நிலத்தின் மீது விழுந்து, அப் பழச்சாற்றிலிருந்து பெருகும் ஆறாகிய ஜம்புநதியாகிறது அதன் சாரத்தை அருந்துவோர் எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருப்பார்கள். அந்த நதி தீரத்தில் உள்ள மண் பொன் மயமாக வல்லது மேருவுக்குக்கிழக்கே பத்ராசுவமும் மேற்கே கதுமாலமும் உள்ளன. அவற்றிற்கு இடையிலேதான் இளாவிரத கண்டம் உள்ளது. கிழக்கில் மந்தர மலையின் அடியில் அருணமும் தெற்கில் கந்தமாதனத்தின் அடியில் மானதசரசும் மேற்கில் விபுலகிரியின் அடியில் சீதோதமும் வடக்கில் சுபார் சுவகிரியினடியில் மகாமடுவும் என நான்கும் மடுக்கள் உண்டு இந்த மடுக்களில் முறையே சுமித்திரக்கா விசித்திரை, வைப்பிரசை, திருதாக்கியம் என்னும் நான்கு நந்தன வனங்கள் உண்டு. இந்த நந்தன வனங்களின் நடுவில் முறையே தாமரை மலருடன் கூடிய தடாகமும் குமுதங்களுடன் கூடிய மானதசரசும் செந்தாமரையுடன் கூடிய விமலோதகமும் நீலோற்பலத்துடன் கூடிய மனோரதமும் என நான்கு ஓடைகளுண்டு நீதரஞ்சனம் குமுத குரர ஹாமால்யவான் என்ற மலைகள்(பர்வதங்கள்) பூர்வ பாகத்திலும் கேசர பர்வதம் தக்ஷிணபாகத்திலும், திரிகூடம், சிரம், பதகம், ரஜதம், நிஷதம் என்பவை தக்ஷிணபாகத்திலும் இருக்கின்றன. மேற்புறத்தில் சிசிவாசசு வைதூரியம் கபிலம், கந்தமாதனம், ஜாருதி, என்னும் பர்வதங்களும் வடபாகத்தில் சங்க சூடம், ரிஷபம், ஹம்சம் காலஞ்சரம் என்னும் பர்வதகேசரங்கள் உள்ளன.

இந்த மேருமலையின் உச்சியில் பதினாலாயிரம் யோசனை பரப்போடு விளங்குவது பிரமலோகம் உள்ளன. இதைச்சுற்றிலும் அஷ்டதிக்குப் பாலகர்களின் உலகங்கள் அந்தப் பிரமலோகத்தின் எட்டுத் திக்குகளிலும் சந்திர மண்டலம் பிரகாசிக்கிறது. திருமாலின் திருவடியில் தோன்றிய கங்கை நதியானது அவ்விடத்தில் சீதை என்றும் அலகநந்தா என்றும் சுசுக்ஷõசு என்றும் பத்ரா என்றும் நான்கு திக்குகளிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. சீதை என்னும் நதி கிழக்கிலும், அலக நந்தாநதி தென் திசையிலும் சுசுக்ஷõசு என்னும் நதிமேற்கிலும் பத்ரா நதி வடதிக்கிலும், பிரவாகித்து மலைகளை அதிக்கிரமித்து, கடலை அடைகின்றன. சுநீலம் நிஷதம் மாலியவான் கந்தமா தனம் என்ற நான்கு மலைகள், தாமரை மொட்டுப் போன்ற மேருமலையின் நாற்புறத்திலும் உள்ளன. பரதம், கேதுமாலம், பத்ராசுவம் குரு என்னும் நான்கு வர்ஷங்கள் மேருவாகிய தாமரைக்கு இதழ்கள் போலுள்ளன. இதன் நடுவில் தேவகூடமும் தென்னண்டை கந்தமாதனமும் வடவண்டைகைலாயமும் முறையே கீழ்மேல் பாகங்களில் நிஷத நீல பர்வதங்களும் மேருவின் நான்குபுறத்துச் சிகரங்களின் ஒவ்வொரு பாகத்திலும் இரண்டு கேசர பர்வதங்களும் இருக்கின்றன. அதில் சைலத்துரோணி என்ற ஓர் ஓடையுண்டு, அதைச் சுற்றிலும் மனரம்மியமான மலர்கள் பூத்திருக்கும். நந்தவனங்களும் காடுகளும் மற்றவையுமுள்ளன. அக்காடுகளில் எப்போதும் யக்ஷர்களும் கின்னரர்களும் கந்தர்வர்களும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பூலோகச் சுவர்க்கம் என்ற பெயருண்டு தர்மஞ் செய்தவர்கள் அந்த லோகத்தில் சுகத்தை அனுபவிப்பார்கள் அதைப் பாவிகளோ பார்க்கவும் அடையவும் இயலாது. கிம்புருஷாதி எட்டு வர்ஷங்களில் வசிப்பவர்களுக்கு கோபம், துக்கம், அயர்வு, துவேஷம், பசி, தாகம், பயம்; சோம்பல் முதலியன கிடையாது. எப்போதும் நோயற்ற உடலும் துக்கமில்லாமையும் இருபத்திரண்டாயிரம் ஆயுளும் அடைவார்கள். கிருதம் திரேதம் என்னும் இரண்டு நதிகள் அந்த பூமியில் பாய்ந்து கொண்டிருப்பதால் மழை பெய்வதில்லை. அப்பூமியில் போகம் அளவிடப்பட்டுள்ளது. அதிகமாக அனுபவிக்க முயன்றாலும் பயன்படாது. அப்பூமியின் நதிதீரத்திலுள்ள மணற்பாகங்கள் பொன்னிறமாகவும் மலர்கள் பொன்னிறமாகவும் கரைப்புறம் இரத்தின மயமாகவும் வைடூரியமயமான பசும்புல்லும் உள்ள திட்டுக்களுமாக விளங்குவதால் அங்குள்ளவர்கள் விளையாடிப்பொழுது போக்குவார்கள்.

33. பாரத வர்ஷம்

வியாசரே! இனி, இமயமலையின் தென்பாகத்திலுள்ள பாரத வர்ஷத்தின் பரப்பைச் சொல்கிறேன். பாரத வர்ஷம் ஒன்பதாயிரம் யோசனை பரப்பளவுடையது. இதற்குக் கர்மபூமி என்று மற்றொரு பெயரும் உண்டு. இங்கு புண்ணியம் செய்தவர்கள் புண்ணியபூமியான தேவ லோகத்தையும் பாவஞ் செய்தவர்கள் நரகத்தையும் ஞானிகள் மோட்சத்தையும் அடைவார்கள். இப்பாரத வர்ஷமானது நவகண்டங்களாகப் பிரிக்கப்பட்டு இந்திரத்திம்னம்  சுசேரு, தாமிரபர்ணம், சுபஸ்திமான், நாகத்வீபம், சவுமியத்தீபம், காந்தர்வம், வாருணம், பரதம், என்னும் பெயர்களால் வழங்கப்படுகின்றன. ஒன்பதாவதான பரதக்கண்டமானது. நான்கு சமுத்திரங்களால் சூழப்பட்டும், வடக்குத் தெற்கில் ஆயிரம் யோசனை விஸ்தீரணத்தோடு கூடியதாகவும் இருக்கும். இக்கண்டத்தின் கிழக்கே, கிராதர்களும் மேற்கில் யவனர்களும் தக்ஷிணபாகத்தில் ஆந்திரரும் வடக்கில் துருஷ்கரும் வசிக்கிறார்கள். இக்கண்டத்தின் நடுவில் பிராமண க்ஷத்திரிய, வைசிய சூத்திரர் என்னும் நான்கு வர்ணத்தோர்கள் கோடானு கோடியாக வசிக்கிறார்கள். இவர்கள் அஸ்வமேதாதி யாகங்களாலும் புண்யத் தீர்த்த ஸ்நானங்களாலும் தேவதாப் பிரதிஷ்டைகளாலும் கோதானம் முதலிய தானங்களாலும் நற்கதி அடைகிறார்கள். இந்தப் பூமியில் மஹோந்திரம், மலயம் சஹ்யம் சுக்திமான். ரிஷம், விந்தியம் பாரியாத்திரம் என்ற ஏழு குல பர்வதங்கள் (மலைகள்) இருக்கின்றன. வேதஸ்மிருதி நர்மதை சுரஸங் என்ற நதிகள் பாரியாத்திரம் என்னும் மலையில் உற்பத்தியாகி, நான்கு புறத்தினும் பரவி, இப்பூமியைப் பரிசுத்தம் செய்கிறது. விந்திய மலையிலிருந்து கோதாவரி, பீமாதி தாபி முதலிய மகாநதிகள் தோன்றி, தங்களிடம் ஸ்நானபானம் செய்பவர்களின் பாவங்களைப் போக்கித் தூய்மைப் படுத்துகின்றன கிருஷ்ணவேணி காவேரி முதலான நதிகள் சஹ்ய பர்வதத்தில் தோன்றி, தென்னாட்டைத் தூய்மை பெறச் செய்கின்றன. கிருதமாலா தாம்பிரபர்ணி முதலியநதிகள் மலயமலையில் தோன்றி அவ்விடங்களைச் சுத்தம் செய்கின்றன. குமாரி என்னும் நதி சுத்திமான் என்னும் பர்வதத்தில் உண்டாகிறது.

இப்பூமியில் நான்கு வருணத்தாகும் ஸ்நானபானங்களைச் செய்து சுகத்தையும் பரிசுத்தத்தையும் அடைகிறார்கள். இந்தக் கண்டத்தில் நான்கு யுகங்கள் உண்டு. மற்ற தீபங்களில் இத்தகைய யுகங்கள் இல்லை. இந்தப் பரத கண்டத்திலுள்ள ஜம்புத்வீபமானது. கரும பூமியாகையால் இதிலுள்ள ஜனங்கள் கோதானம் முதலிய தானங்களையும் அக்னிஹோத்திரம் முதலிய சத்கர்மங்களையும் தவம் முதலான யோகங்களையும் செய்து நற்கதியடைகிறார்கள். ஒன்பது வகை வருஷங்களுள் பாரத வருஷமே சிறந்தது. மற்றவைகள் யாவும் போகபூமிகளேயன்றிப் புண்ணியஞ்செய்து நற்கதி அடையத் தக்கவையல்ல. ஆகையால் பிறவிகள் பலவாகத் தோன்றினாலும் இப்பரத கண்டத்தில் ஒரு பிறவி எடுப்பது அருமையிலும் அருமையாகும். சுவர்க்க மோக்ஷங்களையடையக் காரணமாக இருப்பது இந்தப் பரத கண்டமாகையால் தன்னியர்களாக இருக்கும் தேவர்களும் இந்தப் புண்ணிய பூமியில் தோன்றினால் மறுபடியும் தேவாம்சமடையலாம் என்று விரும்புகிறார்கள். இவர்கள் இந்தப் பூமியில் தோன்றிச் சிவபெருமானைத் தியானித்து உயர்பதவி அடைகிறார்கள். ஆகையால் இப்பரத கண்டத்தில் தோன்றி ஈசனைத் தியானித்துப் பதவியடைவதை விட உன்னதமானது வேறின்மையால் இதுவே மேலானது. இப்பரதகண்டம் முப்பத்து நாலாயிரம் யோசனை விஸ்தீரணம் உடையதாய் உவர்நீர்க்கடல் இலட்சம் யோசனை விஸ்தீரண முடையதாய் ஜம்புத்தீபத்தை சூழ்ந்திருக்கும். இதற்கு இரட்டிப்பாக இருப்பது பலலட்சத்தீபம் அதில் கோமேதகம் சந்தரம் நாரதம் துந்துபி சோமகம் கமனஸ் விப்பிரராஜம் என்னும் வர்ஷமலைகளுள்ளன அப்பர்வதங்களில் எப்போதும் தேவர், கந்தர்வர் மகிழ்ச்சியுடன் வசிப்பார்கள். அங்குதப்தாசிகா கந்தர்வர் மகிழ்ச்சியுடன் வசிப்பவர்கள். அங்குப்தாசிகா பாபக்னி த்ருதிவா, கிருபா அமிருதா சுகிர்தா என்னும் ஏழு நதிகள் பாயும் அநேகம் சிறு நதிகளும் உள்ளன. அங்குள்ளவருக்கு மனோவியாதி தேகபீடை முதலியன இல்லை. அந்த நதிகளில் நீராடி அதன் நீரைப் பருகினோர் பதினாயிரம் ஆண்டு காலம் ஜீவித்திருப்பார்கள். அவ்விடத்தில் ஜம்புத்தீவைப் போல யுகாவஸ்தை இல்லை எப்போதும் திரேதாயுகத்திற்குச் சமமாகவே இருக்கும். அந்தணர் முதலான நான்கு வர்ணத்தாரும் இருக்கின்றனர் பிலக்ஷத்தீவு என்னும் பெயர் அவ்விருக்ஷணத்தினாலேயே உண்டாயிற்று. அவ்விடத்தில் சங்கரரையும் திருமாலையும் பிரமதேவரையும் வேதமந்திரங்களால் பூஜிக்கிறார்கள். இது கருப்பஞ்சாற்றுக் கடலால் சூழப்பட்டிருக்கும்.

அதற்குப்பின் சான்மலித்தீபத்தில் ஸ்வேதம் ஹரிதம், கீமுதம் ரோஹிதம் வைத்யுதம் மானவம் சுப்பிரபம் என்னும் ஏழு வர்ஷ பர்வதங்கள் இருக்கின்றன. சான்மலி என்னும் பெயர் அங்குள்ள அந்த மரத்தினாலேயே உண்டாயிற்று. அதற்கு இரட்டிப்பாக சுறாக்கடல் சூழ்ந்திருக்கும் சுக்லா, ரக்தா, ஹிரண்யா , சுந்த்ரா, சுக்ரா, விமோசனா நிவர்த்தி என்னும் ஏழு நதிகள் அவ்வர்ஷங்களில் உண்டாகின்றன. அப்பூமியில் நான்கு வர்ணத்தாரும் இருக்கிறார்கள். அவர்கள் யக்ஞம் முதலியவற்றால் விஷ்ணுவை வணங்குவார்கள். அங்கு தேவர்கள் உல்லாசமாக வசிப்பார்கள் அதற்கு இரட்டிப்பாகிய குசத் வீபத்தில் நான்கு வர்ணத்தார்களும் வாழ்வார்கள். ஆசார அனுஷ்டானங்களில் தவறமாட்டார்கள். சிவபெருமானையும் திருமாலையும் வழிபடுவார்கள் குசேசயம், ஹரிஜுதிமான் புஷ்பவான பர்வதம் மணித்ருமம் மஹாசைலம் மந்திராசலம் என்னும் ஏழு மலைகளும் தூதபாவை சிவை பவித்ரை சம்மதிவித்யை தம்பா, மஹி என்னும் ஏழுநதிகளும் மேலும் பல ஆறுகளும் இருக்கின்றன. அங்குள்ள குசையினாலே இது அப்பெயர் பெற்றது. இதை நெய்க்கடல் சூழ்ந்திருக்கும். அதற்கு இரட்டிப்பாகித் தயிர்க்கடலால் சூழப்பட்ட கிரவுஞ்சதீபமோ, கிரவுஞ்சம், வாமனம், அந்தகாரம் திவாவிருத்யம் புண்டரீகம் துந்துபி, கமனனம் என்னும் ஏழுமலைகளும் பலவிதமான மரங்களும் மலர்வனங்களும் தேவகந்தர்வர்களும் நான்கு வர்ணாத்தார்களும் நோயில்லாத வாழ்க்கையும் கொண்டதாக விளங்கும் கவுரி, குமுதவதி சந்தியா ராதரீ மனோஜலா, கியாதி, புண்டரீகா என்னும் ஏழு நதிகள் உண்டு. இங்குள்ளவர்கள் சிவபெருமானை யோக மார்க்கத்தால் தியானிக்கிறார்கள்.

அதற்கு இரட்டிப்பாகிய க்ஷீரசமுத்திரத்தால் சூழப்பட்ட சாகத்தீவானது உதயகிரி, ஜலதராம், பரேதா, சாமம் அஸ்தகிரி, அம்பிகாகிரி, கேசரி என்னும் ஏழுமலைகளைக் கொண்டது. நான்கு வர்ணத்தாரும் அங்குள்ளனர். சுகுமாரி, குமாரி, நளினா, வேணுகா, இக்ஷú, ரேணுகா, கபஸ்தி என்னும் ஏழுநதிகளும் அநேக மலைகளும் நதிகளும் உள்ளன. அங்குள்ளவர்கள் தர்மவான்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்கள் சூரியனையே எப்போதும் யாகாதி கர்மங்களால் வழிபடுவார்கள். அதற்கு இரட்டிப்பாகிய புஷ்கரத்தீவானது மானதசரசு என்ற ஆயிரம் யோசனை விஸ்தீரணமுள்ளத் தடாகத்தையும் அதில் தாமரை மலர்கள் ஐந்து யோசனை உயர்ந்தும் இருக்கும். அங்குள்ளோர் இராகத்வேஷாதிகளும் உத்தமோத்தம் பேதமும் இன்றிச் சத்தியவான்களாய் பொன்மயமான அலங்காரத்தோடு ஜுரம் முதலான ரோகங்களின்றி பதினாயிரம் வருஷம் வாழ்வார்கள். அது சுகமான இடம் புஷ்கரம் தாதகி கண்டம் மகாவீதம் நியக்ரோதம் என்னும் இடங்களில் தேவர்களால் பூசிக்கப்பட்டவராய் பிரமதேவர் எழுந்தருளியிருப்பார். அது சுத்த நீர்க்கடலால் சூழப்பட்டிருக்கும். இவ்வாறு சப்த சமுத்திரங்களால் (ஏழுகடல்களால்) சூழப்பட்டிருப்பவை சப்த தீவுகளாகும். கடல் நீர் சந்திரன் விருத்தியாகையால் விருத்தியாகி சந்திரன் குறையும்போது குறைந்து விடும். சமுத்திரத்திலுள்ள வடமுகாக்கினி அந்த ஜலப்பெருக்கை பருகிவிடும் புஷ்கரத் தீவில் உள்ளவர்கள் அறுசுவையுடன் கூடிய அன்னபானம் முதலானவற்றையே அருந்துவார்கள். சுத்த நீர்க் கடலுக்குப் புறம்பே. உலகங்கள் இல்லை பிராணிகளுமில்லை ஆயினும் பொன்னிறமான பூமி அதற்கு இரட்டிப்பு விரிவாக ஆயிரம் யோசனை உயரமாக இருக்கும் அதற்கு அப்பால் அண்டச்சுவர் உள்ளது. அதுவரையிலுந்தான் பூமி இந்த ஏழு தீவுகளும் ஐம்பது கோடி யோசனை விஸ்தீரணமாம். இதுவே எல்லாப் பிரணாகிகளுக்கும் ஆதார காரணமாக விளங்கும்.

34. மிருத்யுஞ்சய மந்திரம்

வியாச முனிவரே! சூரிய சந்திரரின் கிரணங்கள் செல்லும் எல்லையும் பூலோகம் என்று வழங்கப்படும். சந்திர மண்டலமானது பூமியிலிருந்து லக்ஷயோசனை உயரத்திலும் சூரிய மண்டலமானது  அதன் மேல் லக்ஷயோசனை உயரத்திலும் அதன் மேல் கிரஹ மண்டலமும் நக்ஷத்திர மண்டலமும் புதனும், சுக்கிரனும் அங்காரகனும் பிரகஸ்பதியும் சனியும் அதன்மேல் சப்த ரிஷிகளின் மண்டலமும், அதன் மேல் லக்ஷயோசனை தொலைவில் ஜோதி சக்கரமுள்ள துருவ மண்டலமும் உள்ளன. இதுவரை மூன்று உலகங்களும் கோடி யோசனையுமாயின. அதன்மேல் மஹாலோகம் அதில் சநகர், சநந்தனர், சநாதனர்கபிலர் ஆசரி, ஓட வஞ்சசிக என்னும் வேதியர் எழுவர். அநேகசத்புருஷர்கள் பணி செய்ய வாழ்ந்திருப்பார்கள். அதன்மேல் ஜனலோகம்! அங்கே வைராஜர் என்னும் தேவர்கள் பசிதாகமின்றி வாழ்வார்கள். அதன்மேல் தபோலோகம் அங்கே தேவர்களும் தவவேதியர்களும் வசிப்பார்கள் அதன்பேரில் பிரமலோகம், அங்குள்ளவர்கள் நிர்மலமான மனமும் தர்மத்தில் விருப்பமும் ஞானமும் புலனடக்கமும் சத்தியமே நித்தியம் என்னும் சிந்தையும் உடையவர்கள். இவ்வகையாக மேல் ஏழு உலகங்களையும் கீழ் ஏழு உலகங்களையும் உமக்குச் சொன்னேன். இதுவே இந்த அண்டத்தின் விஸ்தீரணம் இவ்வண்டகடாகத்தில் பத்துப் பங்கு தண்ணீரும் பத்துப் பங்கு அக்கினியும்(நெருப்பும்) பத்துப் பங்கு வாயுவும்(காற்றும்) பத்துப் பங்கு ஆகாயமும் பத்துப் பங்கு பிராணிகளாயும் இருக்கும். இவ்வண்டத்திற்கு முதன்மையான புருஷர் சிவபெருமான்! அவர் ஆதியந்தமற்றவராகவும் அளவிடப்படாத பிரபாவத்தையுமுடைய அநந்தராகவும் எல்லாவற்றிற்கும் ஆதார பூதராகவும் விளங்குவார் அவரிடத்தினின்றும் அநேக கோடி அண்டங்கள் உண்டாயின. விறகில் நெருப்பும், பாலில் நெய்யும், எள்ளில் எண்ணையும் விளங்குவது போல எல்லா உயிர்களிலும் சிவபெருமானே உள்ளுறைப்பூதமாக விளங்குவார். சராசராத்மகம் என்ற விருக்ஷங்களுக்கு விதையாக இருக்கின்றனர். அந்த இறைவனிடமிருந்தே, மனம், புத்தி சித்தம் அகங்காரம் முதலியன தோன்றும். அவருடைய இச்சையில் மூலப்ரகிருதி தோன்றி, சிவபெருமானிடமிருந்து ஜகத்து உண்டாகிறது. சிவசக்தி சிவங்களின் ஐக்கியத்தில் எல்லாத் தேவமானுடகதி பேதங்களும் கர்மங்களும் உண்டாகும். சிவபெருமானே, திரிமூர்த்தி ஸ்வரூபமாக இருந்து சிருஷ்டி முதலான காரியங்களை நடத்துகிறார். எவரிடத்திலிருந்து உலகங்களனைத்தும் தோன்றி எவரிடத்தில் லயமடையுமோ எவர் சர்வத்துக்கும் காரணரோ அவரே சிவபெருமான்!

இவ்வாறு ஸநத்குமாரர் கூறியதாகச் சூதமுனிவர் சொன்னார். அவரை நோக்கி நைமிசாரண்ய முனிவர்கள் சூதமுனிவரே சிவபெருமானுக்கு அத்யந்தப் பிரியமாகவும் சகல சாஸ்திர இரகசியமாகவும் தர்மார்த்த காமமோக்ஷம் ஆகிய புருஷார்த்தங்கள்(அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பேறுகள்) ஆகிய புருஷார்த்தங்கள், நான்கையும் கொடுக்கவல்லதுமான ஷடாட்க்ஷர மந்திரத்தைப் பூர்வத்தில் கேட்டு மகிழ்ந்தோம். இன்னும் சிவத்திற்குப் பிரியமாயும் அஷ்டமாசித்திகளை அளிக்கத் தக்கதாயும் உள்ள எந்த மந்திரத்தால் மாண்டவ்யர் முதலான மாபெரும் முனிவர்களெல்லாம் தேவத்வத்தை அடைந்தார்களோ, அந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு சூதபுராணிகர் கூறலானார்.

நைமிசாரணிய முனிவர்களே! முன்பொரு சமயம் பரமசிவனார், குமாரக் கடவுளுக்கு உபதேசித்த மந்திரத்தையும் அதன் மான்மியத்தையும் சொல்லுகிறேன் கேளுங்கள். அந்த மந்திரத்துவக்கத்தில் பிரணவத்தை உச்சரிக்க வேண்டும். அகாராதி கணங்களில் மூன்றாவதாகிய சகணத்தன் மூன்றாவது அக்ஷரமாகிய ஜ என்னும் எழுத்தைப் பஞ்சம சுரமாகிய உகாரத்தோடு கூட்டி இறுதியில் பிந்துவாகிய பூர்ணானுசுவரம் (மகாரம்) சேர்த்தும், எட்டாவது ஸவர்க்கத்தில் மூன்றாவது அக்ஷரமாகிய ஸ என்னும் எழுத்தை, இரண்டு பிந்துக்களுடன் கூட்டி இவ்விரண்டு எழுத்துக்களுக்கும் பிரணவத்திற்கும் மத்தியல் ஹவும் என்னும் பீஜாக்ஷரத்தைக் கூட்டி ஜபிக்க வேண்டும். இதுவே மிருத்யுஞ்சய மந்திரம். இது சிவபெருமானுக்கு ப்ரீதியானதும் சர்வசித்தியையும் கொடுக்கவல்லதுமாகும் பிரமஹத்தி, பிறன்மகளிர் கல்வி சுராபானஞ் செய்தல் பொன் திருடல், சிசுஹத்தி, குருபத்தினியைக் கலத்தல், நம்பிக்கைத் துரோகம், ஆசிரியரைக் கொல்லுதல், தாய் தந்தை, மாதர் முதலியோரைக் கொல்லுதல், முதலான் பாதங்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்க அக்கினியில் அகப்பட்ட இலவம் பஞ்சு போலச் சாம்பலாகிவிடும் ஒருவன் இந்த மந்திரத்தைப் பக்தி பூர்வமாக நூறுமுறை ஜபித்துச் சிவபெருமானின் சிரசில் ஒரு மலரையாவது சமர்ப்பித்தால் கோடி முறை இந்த மந்திர ஜபஞ் செய்த பயனை அடைவான். இம்மந்திரத்தை நாள்தோறும் முக்காலங்களிலும் நூறு தடவைக்குக் குறையாமல் ஜபித்தால் ஜபிப்பவனுக்கு ஒருகாலமும் அபமிருத்யு (துர்மரணம்) அடைகிறதில்லை. இந்த மந்திரத்தை ஜபிக்கும் காலத்தில் அங்க நியாச கரநியாச நியமத்தோடு ஜபித்தால் கோடி ஜன்மங்களில் செய்த பாவங்களைப் போக்கிச் சிவசாயுஜ்யத்தை அடையலாம். அன்றியும் புலி திருடர் குஷ்டநோய், பேய்கள் ஜ்வரம் முதலியவற்றால் தொந்தரவடையும் காலத்திலும் இதை உச்சரித்தால், அப்பயங்கள் நீங்குவதோடு போர்முனைகளிலும் பகைவரை அழித்து வெற்றி பெறுவார்கள். பலவிதமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் இதை இரவு பகலாக இடைவிடாது மானசீகமாக ஜபித்தவர்கள் அத்துன்பங்களிலிருந்து நீங்கித் தங்கள் இஷ்ட சித்திகளை யெல்லாம் அடைவார்கள். தம் மனைவியுடன் கூடி உலக நடையில் இருப்பவனாயினும் இதற்குரிய மிருத்யுஞ்சய மந்திரத்தினால் இந்த மந்திர ஜபஞ் செய்வானாயின் எல்லாக் கோரிக்கைகளும் ஈடேறப் பெறுவான் இம்மந்திர ஜபம் செய்வோன் பிரமசரியம், உபவாசம், மவுனவிரதம் முதலியவற்றை அனுஷ்டிக்க வேண்டியதில்லை. கும்பமுத்திரை காட்டி சுகாசனத்திலிருந்து தன் இதயமாகிய சஹஸ்ர தள கமலத்தில் எழுந்தருளியுள்ள சர்வேஸ்வரனாகிய சிவபெருமானை இந்த மந்திரத்தால் தியானித்து மானசீகமாக ஒரு வருஷகாலம் தியான யோகத்திலிருந்தவன் அஷ்டமாசித்திகளையும் திவ்விய தேகத்தையும் சர்வக்ஞத்துவத்தையும் நீங்காத ஆனந்தத்தையும் ஆகாயமார்க்கத்தில் சஞ்சரிக்கும் படியான யோக்யத்தையும், பரமசிவத்தைக் பிரத்யக்ஷமாகத் தரிசிக்கும் சித்தியையும் அடைகிறான். இதை ஆதியில் பரமசிவன் உமாமகேஸ்வரிக்கும் சுப்பிரமணியருக்கும் சுப்பிரமண்யர், நந்திக்கும் அவர் ஸநத்குமார முனிவருக்கும் அவர் வியாச முனிவருக்கும் சொன்னதை நான் உங்களுக்கச் சொன்னேன் இந்த மந்திரத்தை அகஸ்தியர் முதலிய முனிவர்களெல்லாம் தியானித்து, பிணி மூப்பு முதலிய நீங்கியிருந்தார்கள்!

35. மிருத்யுஞ்சய பிரபாவம்

நைமிசாரணிய வாசிகளே! மந்திர ராஜமான மிருத்யுஞ்சய மந்திரப் பிரபாவத்தைச் சொல்லுகிறேன். முன்பு ஒரு காலத்தில் இந்த விஷயத்தைப் பற்றி அனைத்துலக அன்னையான உமாதேவி சிவபெருமானிடம் கேட்கச் சிவபெருமான் பார்வதிதேவியை நோக்கிக் கூறியதாவது.  உமையே! ஸத்யோஜாதாதி ஐந்து திருமுகங்களுடன் கூடிய என்னைச் சிருஷ்டிக் கிரமத்தாலாவது சங்காரக்கிரமத்தாலாவது மிருத்யுஞ்சய மந்திரத்தால் இதயத்தில் தியானிப்பவன் எனக்குச் சமமானவன், அவன் எல்லாப் பாவங்களும் நீங்கி, அஷ்டமா சித்திகளையும் அடைவான்! என்று கூறினார். நாதா! அபமிருத்யுவை ஒழிக்கத்தக்க மிருத்யுஞ்சயமந்திரத்தைக் கேட்டேன் துராத்மாக்கன் ஒரு காலத்திலும் அடையாத தாயும் பரிசுத்த மனமுடைய ஞானியர்களாலேயே அடையத் தக்கதாயும் வெப்பதட்பம் முதலான சுகதுக்கங்களால் வருந்தும் ஜகத்தை சுகமடையச் செய்யவல்லதாயும் இருக்கிற முக்தி நிலையை அடையும் மார்க்கத்தை எனக்காகவும் உலகினருக்கு இதம் உண்டாவதற்காகவுஞ் சொல்லவேண்டும் என்று உமாதேவி கேட்டாள். பிரியையே! இந்தப் பஞ்ச பூதாத்மகமான தேகத்தில் சர்வ வியாபியான என்னைச் சிவோஹம் என்ற ஞானத்தால் அறிந்து கொள்பவன், தன் ஜனன மரண பந்தத்திலிருந்து விடுபடுவான். நான் எனது என்று கருதுவதே பந்தமும் துக்ககரமானதுமாம் நான் அல்லன், என்னுடையதல்ல என்று பற்றுதலை விடுத்தலே சுகம். உடன்பற்றை விட்டவனை மனைவிமக்கள் உற்றார் உறவினர் முதலான பந்தங்கள் பாதிக்கப்படமாட்டா. இதுதான் பாசுபத யோகம்! என்றார் பிறை சூடிய பெம்மாள்.

நாதா! இந்திரிய நிக்கிரகம் (புலன் ஒடுக்கம்) செய்வது மிகவுங் கடினமானதாயிற்றே! நான் எனது என்னும் தற்போதம் ஒழிவதும் துர்லபம் ஆயிற்றே! இதைக் காட்டிலும் சுலபமான வழியை உபதேசிக்க வேண்டும் என்ற பார்வதி தேவி கேட்டாள். பெண்ணே! இராகத் துவேஷாதிகளை ஒழிப்பது கிரேத யுக திரேதாயுக, துவாபரயுகங்களில் கஷ்டமான இருக்கும் போது கலியுகத்தில் அதைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? என்றார் உமையொரு பாங்கர் அதற்கு உமாதேவி சுவாமி! மனிதர்கள் யாவரும் பாவயுக்தர்களாக இருப்பதால், அவர்கள் பிறவிக்கடலைச் சாமானியமாகக் கடக்கக்கூடிய வழியைச் சொல்லவேண்டும்! என்று கேட்கச் சிவபெருமான் கூறலானார். தேவீ! உனக்குக் கிரியாயோகத்தைச் சொல்கிறேன். அதுவே மனிதரின் அதத்திற்கான முக்தி நெறி அது கவலைகளை ஒழிக்கத் தக்கதும் நல்லோரின் சித்தத்தினாலே கடைப் பிடிக்கத் தக்கதும் ஆகும். மூர்த்திகளில் ஆவாகனம் முதலானவற்றைச் செய்து, என்னைப் பூஜிப்பது கிரியாயோகம், ஞானயோகம் என்னும் இரண்டின் இந்திரிய நிக்கிரகமில்லாமல் (புலனொடுக்கம் இல்லாமல்) ஞானயோகம் கைகூடாது, ஆகையால் கிரியாயோகத்தைக் கடைப்பிடித்தவன் முறையே ஞானத்தையும் முக்தியையும் அடைகிறான். கிரியாயோக்தினால் தேவத்வம் உண்டாகிப் பின்னர் சிறந்த பிறவிகளை எடுத்து முக்தியை அடையாலம். அக்கினியானது காற்றுடன் சேர்ந்து திருணகாஷ்டங்களை நாசஞ் செய்வது போல, சிவலிங்க அர்ச்சனையாவது பாபங்கள் அனைத்தையும் நாசஞ்செய்து விடும் என்னுடைய நாமத்தைவீணாக உச்சரித்த போதிலும் அவர்கள் கர்ம நீக்கம் பெறுவார்கள். கர்ம பூமியில் பிறந்து, என்னை ஆராதிக்காதவனின் பிறவிபயனற்றது இரத்தினம், புஷ்பம், சந்தனம முதலியவற்றால் பூஜித்தாலும் பக்தியில்லாவிட்டால் எனக்குத் திருப்தியில்லை. அவை குறைந்திருப்பினும் பக்தி மட்டுமே இருக்குமானால் எனக்குத் திருப்தி உண்டாகும். எத்தகையோ கோடி ஜன்மங்களின் ஒரு ஜனனம் இந்தக் கர்ம பூமியில் கிடைப்பது அருமை அதிலும் மனிதஉடல் கிடைப்பது துர்லபம், அப்படிக்கிடைத்த அரிய உடலால் சிவலிங்க அர்ச்சனை செய்யாதிருப்பது என்ன துக்ககரமானது! என்றார் பரம சிவன்.

பார்வதிதேவி பரமனை நோக்கி, நாதா! நான்கு வருணத்தார்களும் என்ன மந்திரங்களால் லிங்கார்ச்சனை செய்யத்தகும்? என்று கேட்டாள். பிராமணர்கள் வேத மந்திரங்களாலேயும் புரானோக்தத்தாலேயும் பூஜித்து, பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சந்திரன் சூரியன், யஞ்வா, ஆகஎட்டும் சிவமூர்த்தம் என்று கருத வேண்டும் எல்லாத் தேவர்களும் மந்திரத்தை ஆஸ்ரயித்திருக்கிறார்கள் மந்திரமோ பிந்துவையும் பிந்து நாதத்தையும் நாதம் பரமாத்மாவையும், ஆஸ்ரயித்திருத்தலால் அப்பரமாத்மாவை முன்பு கூறிய மிருத்யுஞ்சய மந்திரத்தால் தியானிக்க வேண்டும். யகாரத்துக்கு எட்டாவது எழுத்தாகிய ஹ என்னும் எழுத்தைத் தீர்க்கமாக்கி (ஹா) அதன் பின்னர் பிந்து (ம்) சேர்த்து அங்கந்நியாச கரந்நியாசமாக ஜபிக்க வேண்டும் இவ்வாறு முறையாகப் பூஜிப்பவர்களுக்கு எல்லா விருப்பங்களும் கைகூடும் என்று பெரியோர்கள் எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். இகத்திலும் பரத்திலும் சிவபூஜையே, எல்லாச் சித்திகளையும் கொடுக்கவல்லது, உலகத்தில் என்னைப்பூஜித்து எல்லாப் பயனையும் அடைய பஞ்சபிரஸ்வரூபத்தை உணர்ந்து நான் தோறும் என்னுடைய சாரூப்யத்தை அடைவான். அந்தப் பஞ்சப்பிரம மந்திரத்தைச் சொல்லுகிறேன் என்று கூறியருளினார். இது எல்லா மந்திரங்களிலும் உன்னதமானது, இதைப் பயின்று பூஜை செய்வதால் கிடைத்தற்கரிய தேவத்துவம், கந்தர்வத்வம் முதலான தன்மையும் அஷ்டமாசித்தியும் அடைவார்கள். மிருத்யு பயம்( மரண பயம்) கிரக பயம் முதலியன இந்த மந்திர ஸ்மரணையினாலேயே நீங்கிவிடும். இதைச் செபிப்பவர்களுக்கு இடி மழை காற்று முதலான ஐம்பெரும் பூதங்களால் உண்டாகும். ஆபத்துக்களும் ஒரு போதும் சம்பவிக்க மாட்டாது. இந்த மந்திரத்தை நூறு முறை ஜெபித்தவன் நூறு பிறவிகளில் செய்த எல்லாப் பாவங்களையும் ஒழிப்பான்! என்று சிவபெருமான் கூறியருளினார். இவ்வாறு ஸநத்குமார முனிவர் கூறியருளினார்.

36. பஞ்சப் பிரம மந்திரம்

வியாச முனிவரே! பஞ்சப் பிரம மந்திரத்தின் பிரபாவத்தை விளக்கமாகச் சொல்கிறேன். கேளும் அந்தரங்கமான, பரிசுத்தமான இடத்தில், தான் பரிசுத்தனாகவும் ஒருமுக மனமுடையவனாகவும் இருந்து, இந்தப் பஞ்சப் பிரம மந்திரத்தைப் பிரித்து அங்கந்நியாஸ கரந்நியாசங்களைச் செய்யவேண்டும் எப்படியென்றால்.

ஓம் ஹரம் ஹ்ருதயாய நம
ஓம் ஹ்ரீம் அகோரேப்ய சிரசே ஸ்வாஹா
ஓம் ஹ்ரூம்கோர கோரதரேப்ய சிகாய வஷட்
ஓம் ஹ்ரைம் ஸர்வ தஸ்ஸர்வேப்ய; கவசாய நம
ஓம் ஹ்ரௌம் நமஸ்தே ருத்ரரூபேப்ய
ஓம் ஹ்ர; அஸ்த்ராயபட் நேத்ராப்யாம்வஷட் பூர்புவஸூவரோமித திக்பந்த

என்னும் அங்கந்நியாசமும் அதுபோலவே கரந்நியாசமும் செய்ய வேண்டும். இவ்விதம் அகோர மூர்த்தியை நாத பிந்து கலைகளுடன் தன் இதயத்தில் பூஜிக்க வேண்டும். அதன் நடுவில் தண்டம் இளஞ்சந்திரன் அங்குசம், கொடி இவற்றையுடைய அகோரேஸ்வர் என்னும் தேவியைப் பூஜிக்க வேண்டும் ஓம் அகோரேசி ஹ்ரீம் ஹூம்பட் என்ற மூலமந்திரத்தால் ஜெபிக்க வேண்டும். இப்படி ஏகமனத்துடன் பூஜித்தால் விரும்பினவெல்லாம் கைகூடும் தியானம்.

மகா பாபியாக இருப்பினும் இந்தத் தியானத்தால் ஈஸ்வரனைப் பூஜித்து லக்ஷம் வில்வங்களால் சிவலிங்க அர்ச்சனை செய்பவன் எல்லாப் பாபங்களும் நீங்கப் பரிசுத்தனாவான். இந்த மந்திரத்தினாலே இலக்ஷம் தாமரைகளால் அர்ச்சனை செய்து ஹோமம் செய்தவன் அணிமா முதலான சித்திகளை அடைவான். பயற்றினால் பூஜித்து அதனாலேயே ஹோமம் செய்தவன் ஜராமரணங்களில்லாத உலகத்தை அடைவான். எள்ளினால் ஹோமம் செய்தால் கிரக பீடைகள் நசிக்கும் நெய்யோடும் சர்க்கரையோடும் பூஜித்த பாலுள்ள மரத்தின் சமித்துக்களால் ஹோமம் செய்தவனுக்கு ஆயுள் விருத்தி அடையும் அகோரேஸ்வரி சமேதராகிய அகோர மூர்த்தியின் பூஜையை இவ்வாறு செய்தவன் மூவுலகங்களிலும் துர்லபமான பதவியை அடைவான். இந்தப் பூஜையை செய்யும் போது அகோர மூர்த்திக்கு ப்ரீதியாக அகோரேஸ்வரி முத்திரையைக் காட்டி மனப்பூர்வமாகத் தியானித்தால் பூதப்ரேத பைசாசங்கள் கிரகவேதாளங்கள் சாகினி டாகினிகளால் சிறிதும் துன்பமுமின்றி தேவாசுர மனுஷர் சுவாதீனமாவார்கள் இந்தப் பூஜையைச் செய்தே மாமுனிவர்கள் எல்லோரும் மோக்ஷ சித்தியை அடைந்தார்கள். ஸத்யோஜாதக்கிரமத்தால் பூஜிப்போர் மோக்ஷத்தையும் ஈசான கிரமத்தால் பூஜிப்போர் சுவர்க்காதி போகத்தையும் அடைவார்கள். எந்தவகையிலாவது சிவபெருமானைப் பூஜித்தவன் இஷ்டசித்தியையும் மோக்ஷத்தையும் அடைவான் என்பதில் சிறிதும் சந்தேகமுமில்லை!

37. ஈஸான கல்பம்

வியாச முனிவர் ஸனத்குமார முனிவரை நோக்கி சிவநேசச் செல்வரே! ஆன்ம கோடிகளுக்குப் புத்தி முக்திகளைக் கொடுக்கவல்லவர் சிவபெருமானே! அவர் தம்மை மந்திரோக்தமாகப் பூஜிக்காவிட்டாலும் பக்தியுடையவர்களுக்கும் அவரவர்களுடைய இஷ்ட காமியங்களைக் கொடுக்கும் போது மந்திர பூர்வமாக அர்ச்சனை செய்பவர்கள் அடையும் பயனை எடுத்துச் சொல்லவும் வேண்டுமா? உலகங்கள் அனைத்திற்கும் உள்ளுறை இறைவனும் மோக்ஷத்தைக் கொடுக்கத் தக்கவரும் அந்த மகா தேவனேயன்றி வேறு இல்லை என்று சந்தேக மறத்தெரிந்திருந்தும் விழித்துக் கொண்டிருந்தும் தூங்குவது போல் உழலும் மாந்தர்கள் விஷ்ணுவின் மாயையால் அகப்பட்டு மோக்ஷமார்க்கத்தையுடைய வழியறியாமல் உழலுவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு ஸனத்குமாரர் கூறினார்.

தாவரஜங்கமங்களான பிராணிகள் யாவும் தத்தமது வினைக் கீடாகத் தநுகரணபுவன போகங்களை அனுபவிக்கிறார்கள். மனிதர்களுக்கு உணவு உறக்கம் பயம் கல்வி முதலியன பொதுவாக இருப்பினும் ஞானிகளுக்கே மனிதர்கள் என்னும் பெயர் தகுதியுடையதும் ஞானிகளல்லாருக்கு மிருகங்கள் என்னும் பெயர்தகுதியுடையதுமாகும். அந்தணர் முதலான நான்கு வர்ணத்தோராக இந்த மாநிலத்தில் பிறந்தவர்கள் எவ்வித முயற்சி செய்தேனும் சிவ ஞானத்தை அடைய வேண்டுவது அவசியமாகும். அப்படியில்லாமல் மானுடர் சமுசாரமாகிய காட்டில் நெடுங்காலம் உழன்று பெருந்துன்பங்களை அனுபவித்தும் அதனை வெறுத்தும் சிவபெருமானின் திருவருளை நாடி அவ்வெம்பெருமானின் திருவடியை அடையாது நரகத்தை அடைகிறார்கள். அங்கு கஷ்டங்களை அனுபவித்து இறந்த பிறகு புல்பூண்டு முதலிய தாவரங்களாகத் தோன்றி மீண்டும் திரியக்கு (பறவை) யோனியற் பலமுறை பிறந்தும், பிறகு மானுடரில் இழிந்தோராகப் பிறந்து சர்வலோக காரணபூதரான சிவபெருமானையடையாது மீண்டும் மீண்டும் சம்சார துக்கத்தில் வருந்தி அழுந்துவார்கள். இனி முன்பு நீர் கேட்ட பஞ்சப் பிரம விதானத்தைப் பற்றி பார்வதி தேவியாருக்கும் பரமசிவனாருக்கும் நடந்த உரையாடலைச் சொல்லுகிறேன் கேளும்.

வியாசமுனிவரே! பஞ்சப் பிரமஸ்வரூபியான சிவபெருமானை காராம் பசுவின் பஞ்ச கவுவியங்களால் அபிஷேகம் செய்து, எள்ளினால் ஆயிரத்து எட்டுமுறைகள் ஹோமம் செய்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் நீங்குவர் அவ்விதமாகவே ஒவ்வொருதினமும் நூற்றெட்டுக்கும்பங்களில் மகாநதி தீர்த்தங்களை லக்ஷ்மி நீங்காமல் வசித்திருப்பாள். அவன் பிறவிகள் தோறும் புத்திரபாக்கிய முடையவனாக இருப்பான். ஒருநாள் முழுவதும் உபவாசமிருந்து அஸ்தமித்த பிறகு தக்ஷிணாமூர்த்தி சன்னிதானத்தில் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து முத்தம் என்ற பயற்றினால் ஆயிரத்தெட்டு முறை ஹோமஞ் செய்தவர்கள் யக்ஷராக்ஷசபைசாசங்களைச் சுவாதீனப்படுத்திக் கொண்டு யுத்தகளத்தில் வெற்றியையடைகிறார்கள். மேலும் தக்ஷிணமூர்த்தி சன்னிதானத்திலேயே மூன்று தினங்களில் ஆயிரத்தெட்டுத் தடவைக்குங் குறையாமல் காராம்பசுவின் நெய்யோடு சமித்தினால் ஹோமஞ் செய்தும் அதன் தயிர் கலந்த அன்னத்தைக் கொண்டு ஹோமஞ் செய்தால் மனோரம்மியமான புத்திர பாக்கியங் கிடைக்கும். தாமரை மலர்களால் ஆயிரத்தெட்டுமுறை பூஜித்தவர்கள் பிரமஹத்தி முதலிய பாவங்கள் நீங்கி சிவ சாயுஜ்ஜியமடைவார்கள். பிச்சை எடுத்துண்ணும் ஏழையேயாயினும் தீர்த்ததால் அபிஷேகம் செய்து வில்வத்தைக் கொண்டு பூஜித்தவன் அஸ்வமேத யாகஞ் செய்த பயனை அடைவான் பஞ்ச கவுவியங்களால் அபிஷேகித்து பவித்ரபாணியாய் பரிமள சந்தனத்தால் அலங்காரஞ் செய்தவன் அபயப்பிரதானஞ் செய்த பலத்தை அடைவான், நெய்யோடு ஹோமஞ் செய்தவன் தரித்திரம் நீங்கச் செல்வத்தை எப்போதும் அனுபவிப்பான். இந்த ஈசான மந்திரத்தைத் தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று, கைகளை மேலே உயர்த்தி ஜபிப்போன், சர்வ பாபங்களிலிருந்தும் சந்தேகமின்றி நீங்குவான். இந்த மந்திரத்தை ஜலபானம் மட்டும் செய்து கொண்டு ஜலத்திலிருந்து ஏழு நாள் ஜெபம் செய்வோன் மது பானம், மலமூத்ராதி பக்ஷணம், தங்கத்தைத் திருடல், குரு மனைவியைக் கூடுதல், முதலான மகாபாவங்களிலிருந்தும் நீங்கித் தூய்மை பெறுவான். அரசர்களிடம் வாங்கத் தகாத தானத்தைப் பெறுதல். சூத்திரனுடைய அன்னத்தை எப்போதும் உண்ணல் முதலியன செய்திருக்கும் ஒருவன் முக்காலங்களிலும் இந்த மந்திரத்தை மனதினால் ஜபித்தால் அவனுக்கு யானை, சிங்கம், பகைவர் முதலியவைகளால் ஒருக்காலும் தீங்குண்டாகாது. இந்த ஈசான மந்திரத்தை மனத்தால் தியானிப்போன் இத்தேகத்துடனேயே சிவசாரூப்யத்தை(சிவனுருவை) அடைகிறான்.

38. நற்புருஷ கல்பம்

வியாச முனிவரே! இனித் தற்புருஷமூர்த்தியின் பூஜாபயனை விளக்கமாகச் சொல்லுகிறேன் கேளும், வில்வம், அத்தி ஆகியவற்றின் சமித்துக்களால் தற்புருஷ மந்திர ஜபம் ஜபித்து ஆயிரத்தெட்டு முறை ஹோமஞ் செய்தால் பிரமஹத்தி முதலிய பாவங்கள் நீங்கும். தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில் இந்த மந்திரத்தை ஒரு மாதகாலம் ஜபித்தால் யக்ஷிணி பிரசன்னமாகி வேண்டியவைகளை அளிப்பாள். தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில் கரவீர புஷ்பத்தால் அர்ச்சனை செய்தால் வசிய சித்தியாகும். ஆறுமாத காலம் கரணீகரபுஷ்பத்தால் அர்ச்சிப்பவன் விரும்பிய பொருளைத் தேவ கந்தர்வர் பூர்த்தி செய்வார்கள். நாள்தோறும் சிவலிங்கத்தைப் பூஜிப்போர். மனிதவுடம் போடு முக்தியை அடைவார்கள். இந்த மந்திரத்தால் உப்போடு திலகத்தைக் கட்டிப் பூசிப்போன் பகைவர்களையும் வயப்படுத்துவான். கீர்த்தியை விரும்பியவன் நெய்யினாலும் ஆயுள் விருத்தியை விரும்பியவன். அறுகம் புல்லினாலும் ஹோமம் செய்ய வேண்டும். சின சன்னிதானத்தை மெழுகிச் சுத்தஞ்செய்து கோலமிட்டவன் எல்லா வியாதிகளிலிருந்தும் விடுபடுவான் கடுகினால் ஹோமஞ் செய்தோன் சர்வஜன ரக்ஷகனாவான். சந்திர சூரிய கிரஹண புண்ணிய காலங்களில் இந்த மந்திரத்தை விஷ்ணு தக்ஷிணாமூர்த்தி சன்னிதானத்தில் ஆயிரத்தெட்டு முறை ஜபிப்போன் மனோபீஷ்டத்தை அடைவான். ஓராண்டுக் காலம் தியானிப்பவனுக்குப் பரமசிவனே பிரசன்னமாகி வேண்டுவனவற்றை உவந்தளிப்பார். பஞ்சகவுவியத்தை உட்கொண்டு இந்த மந்திரத்தை ஜபிப்பவன் மோக்ஷத்தையடைவான். பர்வ காலத்தில் ஜபிப்பவன் சர்வ யாகங்களையுஞ் செய்தபலனை அடைவான் மயானத்தில் ஜபம் செய்பவனுக்கு எல்லாப் பிராணிகளும் வசவசியஞ் செய்ய விரும்பியவன் வெண்கடுகினாலும் வசியஞ் செய்ய விரும்பியவன் மேகநிற மலராலும் ஹோமஞ் செய்ய வேண்டும் சகல சித்தியையும் கொடுக்கக் கூடியதான இந்த மந்திரத்தை ஜபிப்பவன் அறம், பொருள். இன்பங்களை இங்கும் அனுபவித்து, மறுவுலகிலும் முக்திநிலை அடைவான்.

39. அகோர, வாமதேவ, ஸத்யோஜாத கல்பங்கள்

வியாச முனிவரே! அகோர மூர்த்தியில் பிரபாவத்தைச் சொல்கிறேன் அகோர மூர்த்தியை ஸ்மரிப்பதற்குத் திதி, வாரம் நக்ஷத்திரங்களைக் கவனிக்க வேண்டியதில்லை. அவரை எந்தச் சமயத்தில், ஸ்மரித்த போதிலும் அப்போதே எல்லாப் பாவங்களிலிருந்தும் நீங்கலாம். தூய நீராடி அன்றாடக் கர்மங்களை முடித்து, அகோர மூர்த்தியைப் பஞ்ச கவுவியத்தால் அபிஷேகஞ் செய்து அகோர  மந்திரத்தைப் பதினாயிரம் தரம் ஜபித்துப் பசு நெய்யினால் ஆயிரம் முறை ஓமம் செய்தவன் மூவுலகங்களையும் சுவாதீனம் செய்து கொள்ளுவான். சதுர்த்தசியிலாவது அஷ்டமியிலாவது தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் எட்டாயிரம் ஜபித்து மண்டூகத்தின் கொழுப்பினால் ஆயிரம் ஹோமஞ் செய்தவனும், மனிதக் கபாலத்தில் தவளை நெய்யினால் தாமரை நூல் சேர்த்துத் தீபம் ஏற்றி அதில் தோன்றியமையை எடுத்து திகலமிட்டவனும் பிறர் கண்களுக்குப் புலப்படாதவனாகிறான் இவ்வாறே எருக்கு நூலினால் விளக்கெரிக்கத் திலகம் இட்டவன் அதிரிசயவித்தையும் பிரமலோகாதி கோலகங்களுக்குச் செல்லும் ஆற்றலும் எல்லாப் பொருள்களையும் ஊடுருவிப் பார்க்கும் வல்லமையும் பெறுவான். கார் எள்ளினால் பதினாயிரம் ஹோமம் செய்து பஞ்சுத்திரி சேர்த்து நெய் தீபத்தின் மையை திலகஞ் செய்தவன் பிறர் கண்களுக்குப் புலப்படாமல் சஞ்சரிப்பான். கோரோசனத்தால் ஆயிரம் ஹோமஞ் செய்தவனுக்கு பூதப் பிரேத பைசாசங்கள் எல்லாம் தன் வசமாகி, டாகினி, சாகினி ஜ்வரம் முதலிய பீடைகள் ஒழியும் ஹரிதாளத்தால் எண்ணாயிரம் ஹோமஞ் செய்து ஐயாயிரம் ஜபித்தவன் அஷ்டசித்திகளை அடைவான். தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில் லக்ஷம் வில்வங்களால் அர்ச்சித்து இலக்ஷம் ஜபஞ் செய்து பதினாயிரம் ஹோமம் செய்தவன் மூவுலகச் சித்தியும் ஜ்வரம் முதலான ரோகங்களின் நீக்கவும் அடைவான். அம்மந்திரத்தையே எப்போதும் ஜபிப்பவன் அடையக் கூடாத சித்தி ஒன்றுமில்லை, பிரமச்சரிய நிலையில் இருந்து பஞ்ச கவுவியங்களையே புசித்து, ஒருமாத காலம் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் இந்த மந்திரத்தை ஸ்பரித்துக் கொண்டிருந்தவன் சுவர்க்கத்தையும் பாதாள லோகத்தையும் இந்தத் தேகத்துடனேயே அடையும் வல்லமையைப் பெறுவான். காய்கனிகளையே உணவாக உட்கொண்டு ஏகலிங்கார்ச்சனை செய்தவன் பிரமஹத்தி முதலான பாவங்களிலிருந்து நீங்குவான் கரபிøக்ஷ ஏற்றுச் சாப்பிட்டு ஆறுமாதகாலம் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் சிவபூஜை செய்து இந்த மந்திரத்தை ஜபித்தவன் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விலகுவான். நாள் ஒன்றுக்கு நூறுமுறை இந்த மந்திரம் ஜபிப்பவன் எல்லாப் பாவங்களையும் ஒழிப்பான். இது அகோரமூர்த்தியின் பிரபாவமாகும்.

வியாச முனிவரே! இனி வாமதேவ மூர்த்தியின் வல்லபத்தைச் சொல்லுகிறேன். தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் பஞ்ச கவுவியங்களால் அபிஷேகம் செய்வித்து, வெண்மையான மலர்களால் அர்ச்சனை செய்து, வாமதேவ மந்திரத்தை எண்ணாயிரம் ஜபித்து, வெண்மை, செம்மை, மஞ்சள் நிறமுள்ள பதினாயிரம் மலர்களால் ஓமஞ்செய்தவனுக்கு, மனோரத சித்தி ஏற்படும். மூன்று நாட்கள் உபவாசமிருந்து வாமதேவ மந்திரத்தை நாள் ஒன்றுக்குப் பதினாயிரம் ஜபித்து ஹாஸபக்ஷியின் (பருந்து) எலும்பைக் கையில் கட்டிக்கொண்டவன் பூதப் பிரதே ராக்ஷஸமானுட, மிருக பக்ஷியாதிகள் வசியமாகப் பெறுவான். காராம் பசுவின் நெய்யினால் எண்ணாயிரம் ஹோமம் செய்து வாமதேவ மந்திரத்தை எண்ணாயிரம் ஜபம் செய்தவனுக்கு யக்ஷணியானவள் சுவாதீனமாகிச் சம்பத்து முதலியவற்றைக் கொடுப்பாள். பரிமள மிகுந்த எண்ணாயிரம் மலர்களை வாமதேவ மந்திரம் ஜபித்து தக்ஷிணாமூர்த்திக்குச் சமர்ப்பித்தால் விரும்பியவனவெல்லாம் சித்தியாகும். யவையினாலாவது நெல்லினலாவது வாமதேவ சந்திரஞ் சொல்லி லக்ஷம் அர்ச்சனை செய்தவன் குபேர சம்பத்தை அடைவான். நாகபுஷ்பம், புன்னாகமலர் அசோகமலர், கர்ணிகாரம் பாதிரிமுதலிய மலர்களை வாமதேவ மந்திரஞ் சொல்லி தேன், நெய் கூட்டி ஆயிரம் ஹோமஞ் செய்தால் ஐஸ்வரிய விருத்தி அடைவான். கடுகினால் ஹோமஞ் செய்தவனுக்கு கிரக பாதைகள் நீங்கும் பெருங் கடுகினால் ஹோமஞ் செய்தவன் கிரகபந்தனம் செய்யும் வல்லமையை அடைவான் பலவிதமான மலர்களைக்கொண்டு வாமதேவ மந்திரத்தால் அர்ச்சனை செய்தவன் வறுமை நீங்கிச் சுகமடைவான். தகரம் மல்லிகை, செந்தாமரை முதலிய மலர்களால் பூஜித்தவன் நஷ்டராஜ்யலாபம் அடைவான். சுக்லபக்ஷ பிரதமை முதல் பூரணை வரையில் தினந்தோறும் எண்ணயிரம் மலர்களுக்கு குறையாமல் அர்ச்சனை செய்தவன். சிவ சாரூப்யத்தை( சிவனுருவை) அடைவான். திவ்ய சந்தனத்தினால் அபிஷேகித்துப் பரிமளமலர்களால் எண்ணாயிரம் ஹோமம் செய்தவன் சம்பத்துள்ளவனாகவும் தீர்க்காயுஷ்மானாகவும் பிறரால் வெல்ல முடியாதவனாகவும் ஆகிறான் இந்த வாமதேவமூர்த்தியே சூரியனாகப் பிரகாசித்தும் பர்ஜன்ய ரூபமாக வர்ஷித்தும் எல்லாப் பூதங்களையும் சிருஷ்டி முதலான காரிங்களைச் செய்வித்தும் எல்லா விருப்பங்களைக் கொடுத்தும் விளங்குவார். இது வாமதேவ மூர்த்தியின் பிரபாவமாகும்.

வியாசரே! இனி ஸத்தியோஜாத மூர்த்தியின் பிரபாவத்தைச் சொல்லுகிறேன். ஸத்தியோஜாத மூர்த்தியைக் கிருஷ்ணயஜூஸ் ஸம்ஹிதையில் கூறியுள்ளபடி, எண்ணாயிரம் முறை ஸத்தியோஜாத மந்திர ஜபம் செய்து, ஆத்மார்த்தமாக எட்டாயிரம் ஹோமம் செய்தவன் தன் மனோவிருப்பம் எல்லாவற்றையும் அப்போதே அடைவான். தேன், நெய், கூட்டிய எண்ணாயிரம் மலர்களைக் கொண்டு ஹோமம் செய்தவன் யக்ஷராக்ஷச பைசாசம் முதலானவை  வசியமாகப் பெறுவான். இரசாயன சித்தியையும் அடைவான். காமக் குரோதங்களைப் போக்கி நிராகாரனாய் மவுனவிரதத்தோடு சுக்ல வஸ்திரமணிந்து இந்திரிய நிக்கிரகம் செய்து பயிற்றினால் எண்ணாயிரம் ஹோமஞ் செய்து ஸத்தியோஜாத மூர்த்தியைப் பூஜித்தவன் அஷ்டமாசித்தியும் பகைவரை நலிவுறச் செய்யும் ஆற்றலும் அடைவான். தேன் பால் ஆகியவற்றால் எண்ணாயிரம் ஹோமம் செய்தவன் நஷ்டராஜ்ய லாபத்தை அடைவான். வில்வம் எருக்கு அத்தி, அரசு முதலிய சமிதைகளால் எண்ணாயிரம் முறை சிவசந்நிதியில் ஸத்தியோஜாத மூர்த்திக்கு ப்ரீதியாக ஹோமம் செய்தவன். அளவற்ற ராஜ்யபோகத்தை அடைவாள். இந்த ஸத்தியோஜ மந்திரத்தை நாள்தோறும் ஆயிரம் முறை அன்போடு ஜபித்தவன் நோயின்றி கோடி மன்மதாகாரமான அதிசுந்தர தேகத்தை அடைவான். ஆடை ஆயிரம் மலர்மாலை முதலியவற்றால் அர்ச்சனை செய்தவன். சவுபாக்கியத்தை அடைவான். இதை வடவால விருக்ஷத்தின் கீழேயிருந்து இலட்சம் முறைகள் ஜபித்தவனுக்கு யக்ஷிணி சித்தி உண்டாகும் தண்ணீரின் நடுவேயிருந்து ஐயாயிரம் ஜபித்தவன் பிரமஹத்தி முதலான பாபங்களை ஒழிப்பான். ஐம்பதினாயிரம் ஜபித்தால் மகாபாதகங்களும் இருபத்தையாயிரம் ஜபித்தால் உபபாதகங்களும் ஒழியும். ஏகலிங்கார்ச்சனம் சய்து இலட்சம் முறை இந்த மந்திரஞ் ஜபித்தவன் சிவதரிசனம் அடையப்பெறுவான். இவையெல்லாம் இகலோககத்தை விரும்பியவர்கள் பெறுகிற பயன்களாகும். நிஷ்காமியனாய் இந்த மந்திரஞ் ஜபத்தைச் செய்தவன் ஞானமடைந்து சிவசாயுஜ்ஜிய மடைவான். இது ஸத்தியோஜாத மூர்த்தியின் பிரபாவம்.

வியாச முனிவரே! இனி சிவலிங்கமூர்த்தியின் பேதங்களையும் சாத்வீத பூஜாவிதியையும் அதனாலடையும் சாதனங்களையும் உமக்குச் சொல்லுகிறேன் கேளும்.
ஸ்வயம்புலிங்கம் பாணலிங்கம், ஜோதிர்லிங்கம் என்று பலனளிக்கவல்ல மூர்த்திகள் மூன்று இவையே வணங்கத்தக்கன பரிசுத்த மனத்துடன் நித்திய நியமங்களை முடித்து பக்தி நிறைந்த உள்ளத்தோடு ஆசாரமுடையவனாய் மிக உணவு கொண்டு சர்வ பூதங்களிடம் இதமுடையவனாய் மவுன விரதம் பூமியில் படுத்தல் இந்திரிய நிக்கிரகமுடையவனாய் முதியோரான சமயாசாரியிடம் சிவபூஜா விதானத்தைத் தெரிந்து கொண்டு பிரதட்சணை நமஸ்கார ஜப தியான யோகாப்பியாசம் முதலியவற்றால் சிவபெருமானைப் பூஜிக்க வேண்டும். யாவற்றுக்கும் பக்தியே காரணம்! மஹேஸ்வரனைப் பக்தியிலேயே அடைய வேண்டும்; எல்லா வருணாசிரமிகளும் பாலவிருத்தர்களும் ஆஸ்திக புத்தியோடும் சிரத்தையோடும் நாள்தோறும் சர்வபூத அந்தர்யாமியான பரமசிவனைத் தியானிப்பார்களானால் சர்வசித்திகளையும் அடைவார்கள் உலகம் முழுவதும் சிவஸ்வரூபமே என்று உணர்ந்து தியானிப்பவன் ஆறுமாதகாலத்தில் யோகியாவான். சிவபெருமானிடமே மனம் பதிந்துள்ள சமாதியும் யோகாப்பியாச சாமர்த்தியமும் கொண்டவனாய்த் தியானம், ஜபம், மனனம் முதலியவற்றைச் செய்தவன். ஜீவன் முக்தனாவான். இனி மந்திர பலன்களைச் சொல்லுகிறேன்.

கங்கை, முதலிய நதிகள் நர்மதை முதலிய நதிகள் பாற்கடல் முதலிய சமுத்திரங்கள், மகேந்திரம் முதலான மலைகள் சிவாலயங்கள் முதலியபரிசுத்தமான இடங்களிலும் மேற்றிசை நோக்கிய ஸ்வயம்பு லிங்கமுள்ள இடங்களிலும் காராம் பசுவின் சாணத்தினால் சுத்தம் செய்து, அவ்விடத்தில் சிவபெருமானைப் பஞ்சகவுவியங்களால் ஸத்யோஜாத மந்திரத்தால் அபிஷேகம் செய்து, வாமதேவ மந்திரத்தால் பிரதிஷ்டை செய்து தத்புருஷ மந்திரத்தால் பஞ்சாமிர்தம், சுத்தஜலம் ஆகியவற்றை அபிஷேகித்து ஈசானமந்திரத்தால் அர்ச்சனை செய்யவேண்டும் சிவலிங்கமானது ஸ்வயம்பு லிங்கமாயினும் பாணலிங்கமாயினும் தேவாசுரர்களால் பிரதிஷ்டிக்கப் பட்டதாயினும் லக்ஷணக் குறையாக இருப்பினும் உடைந்திந்தாலும் அசைவுற்று இருந்தாலும் இது சித்திகளையெல்லாம் கொடுக்கவல்லது என்று பூஜிக்க வேண்டும் சாமானியமாக கருதக்கூடாது. இவ்வாறு சிவலிங்கப் பெருமானை ஆறுமாதகாலம் அர்ச்சனை செய்தவன் சர்வசித்தியையும் அடைவான். சிவபூஜாக்ஷரத்தை எண்ணாயிரம் ஜபஞ்செய்து சிவபெருமானைத் தன் இதயத்தில் பிராணாயாமம் முதலானவற்றால் தியானித்தவன் எல்லாத் துயரங்களையும் ஒழித்து நிர்ப்பயமாக வாழ்வான் மலையின் உச்சியிலிருந்து இதை ஜபித்தவன் இத்தேகத்துடன் சிவதரிசனம் செய்வான். உண்ணத்தக்காத அன்ன பானங்களையும், பகல் நித்திரையும், ஸ்வப்பனத்தில் ரேதஸ்ஸ்கலிதமும் பிராமண நிந்தையும், கோநிந்தையும் தேவநிந்தையும், பதிவிரதாநிந்தையும், தர்ம சாஸ்திர விரோதமான நடத்தையும் கொள்வதால் வரும் பாவங்கள் அனைத்தும் ஈசான மந்திர ஜபத்தால் பஸ்மமாகி விடும். இதுவரை பஞ்சப பிரம விதானத்தைச் சொன்னேன் இனி சிவபக்தர்களின் பிரபாவத்தை முன்பு பரமசிவன் பார்வதிக்குச் சொன்னபடியே சொல்லுகிறேன்.

வியாச முனிவரே! தூய்மையான பக்தி சிரத்தையோடு சிவபெருமானை இடைவிடாமல் அர்ச்சனை செய்தும் தியானித்தும் யோகஞ் செய்தும் காலங்கழிப்பவர்களைச் சிவபெருமானாகவே பாவிக்க வேண்டும். நாசரகிதமான சிவலோகத்தைத் தவஞ் செய்யாதவர்கள் ஒருபோதும், அடைவதில்லை, தவத்தாலேயே தேவர்கள் தங்களது உயர் பதவிகளை அடைந்து வாழ்கிறார்கள். முனிவர்கள் தவத்தால் பிரமானந்தத்தை அடைகிறார்கள். இதைச் சத்தியம் என்று எண்ணவேண்டும். தன்னால் அடையக் கூடாத ஒவ்வொன்றையும் தவத்தாலேயே அடையலாம். ஆயினும் தவம் ஒன்றே கடினமானது. அந்தத் தவத்தை மும்மூர்த்திகளும் இன்னமும் கடைப்பிடிக்கிறார்கள். சிவபெருமானை யாது கருதிப் பூசிக்கிறார்களோ அவர்கள் அந்தப் பயனை அடைவது சத்தியம். அந்தத் தவம் சாத்வீகம், ராஜஸம், தாமஸம் என்று மூவகைப்படும் தேவர்கள் தேவ பதவியை அடையச் செய்வதும், ஊர்த்துவ ரேதசுகளாகிய முனிவர்கள் செய்வதும் சாத்வீகமான தவமாகும் உலகத்திள்ளவர்கள் பலவிதமான போக பாக்கியங்களைக் கருதிச் செய்யும் தவம் ராஜஸதவமாகும் அசுரர்கள் ராக்ஷசர் முதலியோர் உடலைவருத்திப் பிடிவாதத்தால் செய்யும் தவம் தாமஸமாகும் இவற்றில் சாத்வீகமே சிறந்தது. அது ஜபம் தியானம் முதலானவற்றால் பக்தியோடு தேவர்களையும் சிவபெருமானையும் பூஜிப்பதாகும் அவ்வாறு சாத்வீகத் தவஞ் செய்வோர் இகத்தில் எல்லா சுகங்களையும் அனுபவித்துப் பரலோகத்தில் மோக்ஷத்தை அடைவார்கள். உத்தமமான தர்மத்திலேயே மனம் நாள் தோறும் நீராடல் சிவபூஜை காயத்ரீ முதலான ஜபங்ள் அவுபாசனாதி ஹோமம், ஆசாரம், அஹிம்சை. சிவ விரதங்கள் மவுன விரதங்கள் புலனடக்கம், மனதை வித்தியா விஷயத்தில் செலுத்துதல். சத்தியம், குரோதமின்மை கோதானம் முதலிய தானங்களைச் செய்தல் பொறுமை அந்தக் கரணங்கள் ஒடுக்கம் தயை வாவி கூபங்களை எடுத்தல் தேவாலய நிர்மாணஞ் செய்தல் சத்திரம் மடம் தோப்பு ஆசிரமம் முதலியனறியமித்தல் தீர்த்த யாத்திரை பிரஜாபத்தியம் முதலிய கிரச்சிரங்களை அனுஷ்டித்தல் சாந்திராயணஞ் செய்தல் மாதப்பிறப்பில் தர்ப்பணம் செய்தல் கிரகணம் முதலிய புண்ணிய காலங்களில் ஸ்நானாதானாதிகளைச் செய்தல் முதலியவை இகத்தில் சவுக்கியத்தை அனுபவித்து இந்திராதி லோகங்களிலும் இஷ்ட காமியங்களை அனுபவிக்கச் செய்வனவாகும் அந்தியகாலத்தில் பரமசிவனைத் தியானித்து, அவருடைய ஸ்வரூபத்தைமனத்தில் தியானித்தலும் ரேசக பூரககும் பகங்களால் பிராண வாயுவை நிறுத்திச் சிவத் தியானம் செய்தலும் பிராணாயாமம் முதலியவற்றால் சர்வேஸ்வரனைத் தியானிப்பதுமாகிய இவை ஞானத்தால் அடையத்தக்கவை மோக்ஷத்தைக் கொடுக்கவல்லவை. பெண் தூக்கம் ஆசனம் வஸ்திரம் வாசனைத் திரவியம் தூபம் தாம்பூல பூஷணம், இராஜ்ய போகம் சுவர்ணம் தாமிரம் முதலியவை வீடு குதிரைகள் பசுக்கள், வித்வத் தன்மை வேத சாஸ்திரங்கள் ஆடல் பாடல், வீணா மிருதங்கத்தொனிகள் யானை குடை சாமரம் முதலியன டோக வடிவமாதலால் இவற்றை விரும்பியவன். யோக மார்க்கத்தை அடையமாட்டான் எள்ளுக்குள் தைலரசமிருந்து அந்த எள்ளைச் செக்கிலிட்டு ஆட்டச் செய்வது போல, மேற்கூறிய போகங்களின் இச்சையானவை, ஒருவனது மனத்தில் இருக்குமானால் அவனை அவை நல்ல யோகமார்க்கத்தில் செல்ல வொட்டாமல் உலக வியாபாரமாகிய செக்கிலிட்டு ஆட்டுவிக்கும் ஜராமரண பீடையுடைய பிராணிகள் ஏற்றத்தின் துலாக்கோலைப் போல பல பிறவிகளில் உயர்வும் இழிவும் அடைந்து துன்புறுகிறார்கள். எண்ணற்றப் பிறவிகளை அடைந்த பின்னர் மனித தேகம் ஒன்று கிடைப்பதும் துர்லபம். புண்ணிய கர்மச் சிறப்பினாலேயே மனித தேகம் கைகூடும், ஆகையால் கர்மாதிகள் விசேஷமானவை.

சுவர்க்க மோட்சங்களுக்குச் செல்லத் தக்க அரிய மானுட தேகத்தை அடைந்தும் உயிர்க்கு உறுதி தேடிக் கொள்ளாதவன் இறந்த பிறகு நெடுங்காலம் பெருந்துக்கத்தை அனுபவிக்கிறான். தேவாசுரப் பிறவிகளைவிட மனிதப் பிறவிச் சிறந்ததாக இருக்க அத்தகைய மானுடத்தை அடைந்தும் நரக வாதையை அடையாத வழியை ஏன் தேடிக் கொள்ளாதிருக்கிறார்கள்? தர்மத்திற்கு மூலமாக இருக்கும் மனித தேகம் எடுத்தும் மோட்சத்தைத் தேடாவிட்டாலும் நரகத்தையாவது தாவரப் பிறவியையாவது சம்பாதித்துக் கொள்ளாமல் இருப்பது உசிதம் இலாபத்தைக் கருதியே வியாபாரஞ் செய்பவன் இலாபங் கைகூடாவிட்டாலும் நஷ்டம் அடையாமல் இருக்கவும் மூலதனத்தையாவது காத்துக் கொள்வதும் சிறப்பான செயல் அல்லவா? அதுபோலவே தன் மூலதனமாகிய மனித தேகத்தை இழந்து போகாமல் இருப்பது சிறப்பு மானிடதேகத்திலும் அந்தணத்துவத்தைப் பெறுவது மிகவும் அருமை அத்தகைய அந்தணத்துவத்தை அடைந்தும், ஆத்மாட்சணம் செய்து கொள்ளாதவனை விட இழிந்த ஜந்து எது இருக்கிறது? புண்ணிய பூமியான ஜம்புத்தீவில் கிடைப்பது நிச்சயம் என்று கருதப்படாத மானுட யோனியில் ஜனித்தும் ஆன்மாவுக்கு நல்ல கதியைத் தேடிக் கொள்ளாதவன் ஆத்மத் துரோகியாவான். இதுவே கர்மபூமியாகையால், இவ்விடத்தில் தேடியவற்றை இவ்விடத்திலேயே அனுபவிக்க வேண்டுமேயன்றி அங்கு ஒன்றும் தேடமுடியாது. ஐம்புலன்களும் நல்ல நிலையில் இருக்கும் போதே ஆத்மாவிற்குச் சத்கதியைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். நித்தியமில்லாத இந்தத் தேகத்தை அடைந்தவன், நித்தியமான மோக்ஷத்தை அடைய முயற்சி செய்யாவிட்டால், தேகநஷ்டமும் மோக்ஷ நஷ்டமும் அடைந்து உபயப் பிரஷ்டனாவான். மனிதனுக்கு ஆயுள் குறைவு அதுவும் இரவில் நித்திரை பாதியைக் கொண்டு போகும், மற்றப் பாதியில் இளமையும் மூப்பும் பாதியைக் கொண்டு போகும். அதிலும் நோய் முதலிய பீடைகள் மனக்கவலைகள் அரைப் பங்கை கொண்டுபோகும் எப்போது தான் மாண்டு போவான் என்பதை ஒருவனும் அறியான் வருங்காலமறியாத மரணத்திற்கு அஞ்சிப்புண்ணிய கருமங்களைச் செய்யாமல் தைரியமாக இருப்பது தக்கது தானா? தருமமே பரலோக யாத்திரைக்குக் கட்டுச்சோறாரும் தானம் செய்திருப்பானாகில் அவன் சொர்க்க லோகம் செல்லும்போது அங்கு உதவிஉண்டாகும் தனத்தை வீட்டில் வைத்துவிட்டு இறந்தால் அது அவனோடு வரமாட்டாது. அவனும் சாப்பாடு கொண்டு போகாதவன் வழியிலே கஷ்டப்படுவதைப் போல பல துன்பங்களை அனுபவிப்பான் அதிதிகளை எதிர் கொண்டழைத்து, அர்க்கிய பாத்தியாதிகளால் பூஜித்தோர் அன்னபானங்களையும் யமமார்க்கத்தில் பெறுவார்கள் என்று நம்பிப் புண்ணியத்தைச் செய்து பாவத்தைத் தவிர்க்க வேண்டும். புண்ணியத்தால் சுவர்க்கம் முதலான உலகங்களையும், பாவத்தினால் நரக வாதனையையும் அடைகிறார்கள். ஒரு முறையாவது சிவபெருமானையே சரணாகதியென்று நம்பியவன் கோரமான நரகத்தையும் யமனையும் காணமாட்டான். அவன் சிவகாலம் மனித தேகத்தை அடைந்து கிரமப்படி புண்ணிய மிகுதியால் மோக்ஷத்தை அடைவான், சிவபெருமானையே கதியென்று எப்போதும் மனத்தில் திடங்கொண்டுள்ளவன் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாததுபோல, பாவத்தில் தோயாதவனாகி மோக்ஷமடைவான், சிவ சிவ ஹரஹர என்று சிவநாமங்களை ஸ்மரித்துக் கொண்டிருப்பவன். நரக வேதனையையும் யம பாதையையும் அடைவதில்லை. ஆகையால் மானிடதேகம் எடுத்த புத்திமான். சிவபெருமானிடம் இடையறாத பக்தி செலுத்த வேண்டும். இவ்வாறு ஸனத்குமார முனிவர் வியாசருக்குச் சொன்னார்.

40. க்ஷத்திரிய தர்மம் (அரசினர் அறம்)

வியாச முனிவர் ஸனத்குமார முனிவரை நோக்கி, சுவாமி பிரமதேவனின் முகத்திலிருந்துத் தோன்றிய அந்தணர்களும் தோள்களிலிருந்து தோன்றிய க்ஷத்திரியர்களும் தொடைகளிலிருந்து தோன்றி வைசியரும் பாதத்திலிருந்துத் தோன்றிய சூத்திரருமாக உலகத்திலுள்ள மக்கள் நான்கு வர்ணத்தவர்களாக இருக்க அவர்களில் உயர் குலத்தோர் இழிகுலத்தாராகவும் இழிந்தோர் உயர்குலத்தோராகவும் பிறவி மாறுவதற்கு நியாயம் என்ன? அதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார்.
ஸனத்குமாரர் கூறலானார்: வியாசரே! உயர்ந்த பிறவியை அடைந்தும் அந்தப் பிறவியைக் காத்துக் கொள்ளும் பகையை அறியாமல் இழிந்த பிறவியை அடைகிறார்கள் ஆகையால் புத்திமான், தன் பிறவியைக் காத்துக் கொள்ள முயலவேண்டும் அந்தணன் க்ஷத்திரிய மங்கையிடம் பிள்ளையை உண்டாக்குவானாகில், அவன் பிராமணத்துவம் நீங்கி க்ஷத்திரியனாகிறான். இவ்வாறு தன்னிலும் குறைந்த குலத்தாருடன் சங்கமம் செய்வதால் பல சாதிகள் உண்டாகின்றன. அவுபாசன அக்னி ஹோத்திரங்களைச் செய்தவனும் வேதசாஸ்திரங்களை உணர்ந்தவனுமாகிய வேதியன், சூத்திரச் சோற்றை உண்டு, அது வயிற்றில் இருக்கையிலேயே இறப்பானாயின் சூத்திரப் பிறவியை அடைவான். சுபகரமான அந்தணனாகப் பிறந்தும் உண்ணத் தகாத பதார்த்தங்கள் அதாவது இறைச்சியை உண்டவன் க்ஷத்திரியனாகப் பிறப்பான். சூத்திரனாக இருப்பவனும் புத்திமானாகி நற்கர்மங்களைச் செய்வானாகில் வைசியப் பிறவியை அடைவான். சூத்திரன் தன் குல தர்மத்தை அனுசரித்து தன் மேல் குலத்தார் மூவருக்கும் பணி புரிவானேயாகில் வைசியனாகப் பிறப்பான். வைசியன் அறநூல்களை உணர்ந்து அவற்றின் படி நடந்து அதிதிகளைப் பூஜித்து. அதன் மிகுதியைச் சாப்பிடுவானேயாகில் க்ஷத்திரியனாகப் பிறப்பான் க்ஷத்திரியனாகப் பிறந்தவன் நல்வழியில் சம்பாதித்த திரவியத்தால் யாகங்களைச் செய்து. தேவர்கள் திருப்தி செய்வித்து, வேத சாஸ்திரங்களைப் பயின்று காரூகாபத்யம், ஆகவனீயம் தக்ஷிணாக்கினி ஆகியவற்றைப் பூஜித்து எப்போதும் தானம் கொடுப்பதால் நனைந்தகையனாய்ப் பூமியைப் பரிபாலிந்து தன் பத்தினி ருது காலத்தில் கூடிக்கலந்து அறம், பொருள், இன்பம் என்பனவற்றை அனுபவிக்க விரும்பி கோப் பிரமணர்களைக் காத்து புறமுதுகு காட்டாமல் போர் செய்து தேகத்தைக் கழிப்பானாயின் அவன் அந்தணப் பிறவியெடுத்து வேத சாஸ்திரங்களை உணர்ந்து யாகாதி காரியங்களைச் செய்து வேத பதவியை அடைவான். ஆகையால் பிராமணத்துவம் பெரு முயற்சியுடன் அடைய வேண்டியதாகி இருக்க, அதை அடைந்தும் காத்துக் கொள்ளாமல் கைவிடுதல் உசிதமல்ல இவ்வாறு ஸனத்குமாரர் கூறினார். அப்போது வியாச முனிவர் அவரை நோக்கி, மகாஞானியே போர்களத்தில் மடிந்துபோன க்ஷத்திரியன் பிராமணனாகப் பிறப்பான் என்று கூறினீர்களே, அந்த யுத்தத்தின் மகிமை என்ன? அதைக் கேட்க விரும்புகிறேன் என்றார்.

ஸனத்குமாரர் கூறலானார் வியாசரே! யாக காலத்தில் பெருந்தக்ஷிணை கொடுத்தால் வருகின்ற பயனும் யுத்தபூமியில் உயிரை விட்டவன் பெறும் பயனுக்கு ஈடாக மாட்டாது என்று பெரியோர்கள் கூறுவார்கள். ஆகையால் க்ஷத்திரியர்கள் தங்கள் ஆயுதத்தால் அடையும் பயன்களைச் சொல்லுகிறேன் கேளும் பகைவர்களின் படைகளை அழித்து வீர வெற்றியடையும் குரனுக்கு அறம் பொருள் இன்பம் எனப்படும் மூன்று விதப் புருஷார்த்தங்களும் கை கூடும், மேலும் பெரும் புகழையும் யாகஞ் செய்த பயனையும் அவன் அடைவான் பகைவனை வென்று அவனது வாகனத்தில் ஏறிக் கொண்டவன், விஷ்ணு பதவியை அடைவான் போர்க்களத்தில் பகைவர்களை ஆயுதத்தினால் அடித்து, பகைவரது ஆயுதத்தால் அடிப்பட்டு உயிர் துறப்பவன் அஸ்வமேதஞ் செய்த பயனை அடைவான். அரசன், அமைச்சன், தளபதி யுத்த வீரன் முதலியவர்களில் யாராவது விடப்பட்ட ஆயுதங்களால் உடலுள்ள உரோமங்கள் எத்தனை அழிகின்றனவோ அத்தனைக்காலம் புண்ணிய லோகத்தையும் வீர சொர்க்கத்தையும் அடைவான், பசு வதைச் செய்தவனாயினும் பிரமஹத்தி செய்தவனாயினும் பசுவின் நிமித்தமாகவும் பிராமணன் நிமித்தமாகவும் தன் தலைவனை முன்னிட்டுப் போர்க்களத்தில் உயிர் நீத்தவன் சுவர்க்கத்தை அடைவான். போர்க் களத்தில் பயமின்றி தன் படைகளை காத்துப் போராடியவனும் தன்னால் சாத்தியமின்றி உயிர் விட்டவனும் மேற்கூறிய பயனையே அடைவான். யுத்தகளத்தில் உயிர் நீங்கித்தன்தேகத்தைப் பூதப்பிரேத பைசாசங்களுக்கும் கழுகு கூளி பருந்து முதலிய பிராணிகளுக்கும் விநியோகஞ் செய்தவன் குறைவற்றப் பதவியை அடைவான். தானம், தர்மம், யாகம் முதலியயாவுஞ் செய்யக்கூடும் பிராணனை விடுதற்கு மட்டும் ஒருவனும் மனந்துணியாதலால் அதை வெறுத்துத் தைரியத்துடன் யுத்தம் செய்தவன் எல்லாத் தானங்களையுஞ் செய்த பயனை அடைவான். இனிக் கொல்லத் தக்கவர்களையும் கொல்லாமல் விடத்தக்கவர்களையும் சொல்கிறேன். வீட்டைத் தீயிட்டு விஷ மூட்டுபவன் அஸ்திரத்தால் அடிப்பவன். சமயம் அறிந்து மோசஞ் செய்யக் கருதியவன் முதலியவர்கள் வேதியராகவே இருந்தாலும் அவர்களைக் கொல்லலாம்! அவர்களைக் கொல்வதால் பிரமஹத்தி தோஷம் சம்பவிக்காது சிறிது தோஷமிருந்தாலும் அது சொற்பப்பிராயச் சித்தத்தால் ஒழியும் தன்னைக்  கொல்லத்தக்கப் பகைவராக இருந்தாலும் யுத்த பூமியில் தாகத்திற்குத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டவனும் நோயாளியும் பலவீனனும் வாலிபனும் பெண்களும் வில் ஒடிந்தவனும், நிராயுதபாணியும் நாணறுந்தவனும் ஆகிய இவர்களைக் கொன்றவன் பிரமஹத்தித் தோஷத்தை அடைவான். குடுமியவிழ்ந்தவனும் வெறிப் பிடித்தவனும் சருகைக்கையால் பற்றியவனும் பூமியை வாயால் கவுவியவனும் உன் ஊழியன் என்று சொன்னவனும் என்னைக் காக்க வேண்டும் என்றவனும் கிழவனும் யுத்தப் பயிற்சியில்லாதவனும் நபும்சகனுமாகிய இவர்களைக் கொன்றவனும் பிரமஹத்தி தோஷத்தைச் சந்தேகமின்றி அடைவான். வியாசமுனிவரே! பெரிய யாகங்களால் கஷ்டப்பட்டு அடையத் தக்க உயர்பதவியை யுத்தகளத்தில் தன் தேகத்தை விடுப்பதனால் சுலபமாக அடையலாம். ரிக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என்னும் வேதங்களையும் சிøக்ஷ! வியாகரணம் சந்தஸ் நிருத்தம் சோதிடம் என்ற ஷடங்கங்களோடு அத்தியயனஞ் செய்து வனத்தை அடைந்து வானப்பிரஸ்தாசிரமத்தை ஏற்று யோகத்தைப் பயின்றவர்கள் அடையக் கூடிய கதியை(சங்கிரமயாகத்தை) யுத்தமாகிய யாகத்தில் தன் உடலான அவிசைக் கொடுத்தவன் சந்தேகமின்றி அடைவான்! இவ்வாறு ஸனத்குமாரர் உரைத்தார்.

41. கர்ப்ப வாசம்

வியாச முனிவர் ஸனத்குமார முனிவரை நோக்கி, மாதவரே கர்ப்பவசத்தில் ஜீவன்கள் அடையும் துன்பங்களை விவரமாகச் சொல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஸனத்குமாரர் கூறலானார். வியாச முனிவரே! நரக வேதனையிலிருந்த பிராணிகள் கர்ப்ப வாசத்தை அடைகிறார்கள். அதில் அவரவர்களுடைய புண்ணிய பாவங்களின் விளைவாக நால்வகை யோனிகளில் பிறக்கிறார்கள். அவை செடி முதலிய உத்பீஜமும், கிருமி, கீடம் முதலிய வேதஜமும் முதலை, ஆமை, பறவைகள் முதலிய அண்டஜமும் சதுஷ்பாத ஜந்துக்களாகிய மிருகங்களும் மானுடராகிய சாரயுசமும் ஆகும். பூமியானது ஜலத்தால் நனைந்தும் சூரியன் முதலிய தேஜஸால் தபிக்கப்பட்டும் வாயுவினால் வீசப்பட்டும், ஆகாச சம்பந்தமாக ஒரு விதை உண்டாக்கப் பெற்றுச் சரியான ருதுவில் பரிபக்குவப் பட்டு மீண்டும் மழையினால் நனைக்கப்பட்டு அதிலிருந்து முளையுண்டாகி அந்த முளையிலிருந்து இலைகள் வெடித்து, இலைகளிலிருந்து காம்புகளுண்டாகி அதிலிருந்தும் கிளைகளுண்டாகி, அவற்றிலிருந்து மலர், காய் கனி முதலியன உண்டாகின்றனயவை முதலியவை. பதினேழு வகைப்பட்ட திருணங்களிலிருந்து தோன்றும் ஓஷதிகளெல்லாம் பலனையே முக்கியமாகக் கொண்டவை. இவற்றை அறுத்தல், இடித்தல், சமைத்தல், முதலியவற்றைச் செய்த அறுசுவையோடு உண்டு ஆன்மாக்கள் விருத்தியாகின்றன. இத்தகைய அன்னமானது தன்னைப்புசித்தவர்களின் பிராணனைப் பாதுகாக்கும் அவ்வாறு புசிக்கையில் பிராணவாயுவானது அன்னம் வேறு, ஜலம் வேறுமாகப் பிரிக்கின்றது. அதனால் ஜடராக்கினியின் மேலே ஜலமும் ஜலத்தின் மேலே, அன்னமுமாக நிற்கும். அபானவாயுவானது ஜடராக்கினியை எழுப்ப ஜடராக்கினி வயிற்றிலுள்ள ஜலத்தை அதியுஷ்ணமாக்கும் அந்த ஜலத்தின் உஷ்ணத்தினால் அன்னமானது மீண்டும் பசனஞ் செய்யப்பட்டு அன்னரசம் வேறாகவும் அதன் திப்பிவேறாகவும் பிரிக்கப்பட்டு, காதுகள், கண்கள், நாசி, கை, நாக்கு, தந்தம் சின்னம் குய்யம், நகம், கபம், வெயர்வு என்னும் பன்னிரு மூலங்களால் மலமூத்திரங்கள் வெளிப்படும் அன்னரசமோ, இதயத் தாமரையில் எல்லா நாடிகளும், சொந்த முற்றிருத்தலால் பிராணவாயு அந்த இதயகமலத்தில் சந்தித்துள்ள நாடிகளின் முகத்திற் செலுத்த அந்நாடிகள் நன்றாக இரசமயமாகித் தம் மூலமாக அதனை உடல் முழுவதும் பரவச் செய்யும் இதயத்தில் வந்தபொழுதும் நாடிகளின் நடுவிலுள்ள பொழுதும் அந்த அன்னரசத்தை உடலின் அக்கினியானது இரண்டாகப் பிரித்து ஒரு பாகம் துவக்கு (மெய்) அகவும் ஒருபாகம் உதிரமாகவும் மாற்றும் உதிரத்தால் இறைச்சியும் உரோமங்களும் உண்டாகும், மாமிசத்திலிருந்து நரம்புகளும் தலைமயிரும் உண்டாகும் நரம்புகளிலிருந்து எலும்புகளும் நகங்களும் உண்டாகும் எலும்புகளிலிருந்து கொழுப்பு உண்டாகும். கொழுப்பிலிருந்து சுக்கிலம் உண்டாகும். இது தான் பிரசவத்திற்கு காரணமாகும்; சுக்கிலமானது பெண்ணின் ருதுகாலத்தில் அவளுடைய குறியில் சுரோணிதத்தோடு கலந்து அந்தப் பெண்ணின் இரத்த சம்பந்தத்தால் ஜீவன் தன் கர்மத்தினால் செலுத்தப் பட்டுப் பிண்டமாகும்.

சுக்கில சுரோணிதங்கள் கட்டிய பொழுது ஒரு தினத்திலேயே சிறிது கடினமாய், ஐந்து தினங்கள் வரையில் அப்படியே இருந்து அதன் மேல் புற்பதம் போலாகி ஏழு தினங்களுக்கு மேல் பதினான்கு தினங்களில் ரத்த மாமிசங்கள் நிரம்பிய மாமிசப் பையாகி இருபத்தைந்து தினங்களுக்குள் அந்தப் பீஜத்தின் மூளை தோன்றுவதாகி, ஒரு மாதத்தில் பஞ்ச பூத சம்பந்தமடையும், இரண்டு மாதத்தில் அது ஸ்தூல பிண்டமாகி மூன்று மாதத்தில் எல்லா அவயவங்களில் ஆரம்பம் அடைந்து நான்கு மாசத்தில் கைவிரல்கள் உண்டாகி ஐந்து மாதத்தில் முகம், நாசி, காதுகள், உண்டாகி ஆறுமாதத்தில் பல்வரிசை குய்யம், நகம், காதுத்துவாரம்உண்டாகும் ஏழு மாதத்தில் தொப்பூழ் குறியில் பிற அங்கங்களில் முழுத்தோற்றமும் உண்டாகி எட்டு மாதத்தில் தலைமயிர் முதலியவற்றுடன் பூரணமாகி. பரிபக்குவமடைந்து தாய் உண்ணும், அன்னரசத்தை கொப்பூழ் வழியாக உட்கொள்ளும், பிறகு ஜன்மாந்தர உணர்ச்சி உண்டாகித்தான் அனுபவித்த சுகதுக்கங்களையும் பிறவிகளையும் கருதி; தான் பலவித யோனிகளில் ஜனித்திருந்து அனுபவித்த கஷ்டங்களையெல்லாம் அறிந்து இனி பூவுலகில் பிறவி எடுக்காமலிருக்கும் படியான வழியை யோசிக்கிறான். பிறவியெடுத்தவுடனே சிவஞானத்தை அடையவேண்டும் என்ற எண்ணத்தோடு ஜீவனானவன் கருமத்திற்கேற்ப துக்கங்களை அனுபவித்து முக்திக்குரிய உபாயத்தை நாடி எண்ணமிட்டுக் கொண்டு, வழிப்போக்கன் மலை செடி கொடி முதலியவைகளால் தடைப்படுவது போலக் கர்ப்பாசயப் பையால் கட்டப்பட்டுத் துன்புற்றும் கடலில் வீழ்ந்தான் துன்புறுவது போலவும் கர்ப்பத்தில் பூரித்த ஜலத்தால் வருந்தியும் இருப்புக் கொப்பரையில் ஜலத்தோடிட்டுச் சமைத்தாற்போல உதிராக்கினியால் வருந்தியும் காய்ச்சிய இரும்பூசியில் குத்தப்படுவான் போலத்தாயின் கர்ப்பத்திலுள்ள கரம்புகளால் குத்தப்பட்டும் வருந்துகிறான். துக்கங்களில் எல்லாம் கர்ப்பத்தில் அனுபவிக்கிற துக்கத்தைவிட அதிகமானது வேறொன்றில்லை! இந்த வேதனைகளெல்லாம் ஏழு மாதத்திற்கு மேல் ஜீவனுக்கும் புலப்படும் ஆலையிலிடப்பட்ட கரும்பைப் போலவும் செக்கிலிட்ட எள்ளைப்போலவும் பாபமாகிய இரும்பு உலக்கையால் அடிக்கப்பட்டும் கருவடிவமான ஜீவன் துன்பமடைகிறான். இரத்த மாமிசங்களால் நிரம்பப் பெற்று மலமூத்திரங்கள் பொதிந்து தலைமயிரால் மூடப்பட்டு ரோகங்களுக்கெல்லாம் வாசஸ்தானமாகவும் வாயே பெருந்துவாரமாகவும் உதடுகளில் கொள்ளும் ஈழை நீரும் சொரியவும் போகத்தில் அத்யந்தமான மோகத்தோடும் இராகத் துவேஷாதிகளால் நிரம்பப் பெற்றும் திரும்புவதற்கும் இடமின்றி இருக்கையில் பிரசூத வாயு முறித்துத்தள்ள யோனிவழியில் நெருக்குண்டு வெளிப்படுத்தப்பட்டு ஸ்மரணையில்லாமல் நிலமிசை தோன்றிப்பூமியை ஸ்பரிசித்தவுடன், தன் கர்ப்பகால வாசத்தின் எண்ணங்களையெல்லாம் மறந்து விடுகிறான். அஞ்ஞானம் மூடப்பட்டும் மீண்டும் பிறவியைத் தரத்தக்க உலக இன்பத்தையே விரும்புகிறான் மலமூத்திரத்தால் நனைந்து நிலத்தில் வீழ்ந்த ஜீவனுக்கு எலும்பின் கூடான உடம்பில் மூன்றரைக்கோடி உரோமங்களும் மூனரரைக்  கோடி நாடிகளும் முப்பத்திரண்டு பற்களும் இருபது நகங்களும் ஒருபடி பித்தமும் குருணி கபமும் இருபது பலம் நிணமும் பத்துப் பலம் கபிலரத்தமும் பன்னிரண்டரை பலம் மேதையும் மூன்று பலம் அகாரக்தமும் பன்னிரண்டு பலம் மஞ்ஜையும் அரைப்படி வீரியமும் ஆயிரம் பலம் இறைச்சியும். நூறு நலம் இரக்தமும் தேகமானது அசுத்தமாக இருந்தாலும் பரிசுத்தராகிய பரமபதியால் அருளப்பட்டதாய் நித்தியமான ஆன்மாவுக்கு வாசஸ்தானமாக இருக்கிறது அந்தப் பரமபதியால் ஆன்மாக்களின் வினைக்கீடாக சுக்கில சுரோணிதங்களால் இந்தத்தேகம் ஆக்கப்பட்டது.

சதா மலமூத்திரங்களால் நிரம்பப் பெற்று அசுத்தமானதாய் பஞ்ச கவுவியம் முதலிய பரிசுத்த வஸ்துக்களால் பரிசுத்தஞ்செய்தாலும் சீக்கிரம் அசுத்தமாகக் கூடிய தாய், சுகந்த வாசனைத் திரவியங்களைப் பூசினாலும் துர்நாற்றம் வீசும் இந்த உடம்பைவிடத் துர்க்கந்தமானது பிறிதொன்றும் இல்லை மலையிலிருந்து அருவியாறுகள் பாய்வது போல இந்தத் தேகத்திலிருந்து கபம், மூத்திரம் மலம் புரீடாதிகள் நாள் தோறும் வெளியேறுகின்றன. தன் தேகமாக இருந்தும் மலமூத்திராதிகள் வரும் வழியை மண்கொண்டும் நீர் கொண்டும் தேய்த்து அலம்பி அருவருத்தும் மனிதர்கள் அந்தத் தேகத்திற்கே ஊழியஞ் செய்து கொண்டும் கந்த புஷ்ப வாசனாதிகளைச் சேர்த்து அழகு செய்தும் வருகிறார்கள் தன் உடலிலிருந்து வெளியாகும் புரேடங்களைக் கண்டும் அதனிடம் விரக்தியடையாதது ஏன்? இந்த உலகத்திலுள்ள மனிதர்கள் தங்கள் தேகத்திலிருந்து தோன்றும் அருவருப்புகளைக் கண்டும் அதன் மீதுள்ள பற்றுதலை விடாமல் மோகங்கொண்டு இருப்பவர்களைப் பற்றி என்ன வென்று சொல்வது? கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களினால் இடைவிடாமல் சுத்தஞ் செய்தாலும் மானிட தேகம் புனிதமாவது அல்ல. அது அவனுடைய மனத்தூய்மையினாலேயே புனிதமாக வேண்டும். நெருப்பிலிட்டுக் கொளுத்தினாலும் மனோசுத்தி இல்லாதவனுக்கு மோட்சம் உண்டாகாது. அது எப்படியென்றால் கங்கை முதலிய தீர்த்தங்களில் மீன் முதலிய நீர் வாழ்வனவும் சிவாலயங்களில் பறவைகள் முதலிய நிலமிசை வாழ்வனவும் சதா ஜீவத்திருந்தானும் புனிதமாகாததுபோல, சித்தி சுத்தியில்லாதவன் முக்தி அடையமாட்டான். ஆகையால் சகல விதமான பாவங்களைச் செய்தாலும் மோக்ஷம் அடைய மன சுத்தமே காரணமாக இருக்கிறது அது எப்படியென்றால் ஆண் பெண்கள் கட்டியணைத்துக் கலவி புரியும் சமயத்தில் வேறு எண்ணத்தோடு சம்பந்தப்படுவார்களானால் அதனால் உற்பத்தியாகும் குழந்தை தந்தை தாயைப்போல் இராமல் வேறு வடிவமாவதே சான்றாகும். தன் மனதிற்கு ரம்மியமில்லாத பெண்ணொருத்தி தன்னைப்பலவந்தமாக ஆலிங்கனம் செய்தாலும் தான் பிரியப்படுவதில்லை உண்பதற்கும் விளங்கும் பதார்த்தங்கள் யாவும் சமமாக இருந்தாலும் சிலர் ஒவ்வொன்றில் தன் மனத்தைச் செலுத்துவது போலக்காமக் குரோத லோபங்களில் ஈடுபடுவதும் இம்மனமேயாகும், அவற்றால் மனிதன் வசப்படுத்தப் படுகிறான். அப்படி வசப்பட்டதிலிருந்து விலகிப் பாவத்தை ஒழிப்பானாயின் மோக்ஷத்தை அடைவான். மனச்சுத்திக்காகவே (அகத்தூய்மைக்காகவே) தானம், யோகம் யாத்திரை முதலியவற்றைச் செய்கிறார்கள். ஞானம் என்னும் தூயநன்னீராலும் வைராக்கியம் என்னும் மண்ணினாலும் அஞ்ஞானம் என்னும் இராகத்துவேஷம் முதலானவற்றாலும் மலத்தைச் சுத்தி செய்து போக்குவானாயின் அவனே பிரமஞானியாகிறான்.

எவ்விதப் பிறவியை எடுத்தவர்களுக்கும் அஞ்ஞானத்தாலும் பலவித கர்மதோஷத்தினாலும் சம்சாரத்தைச் சுகமாக அனுபவிப்பவர்கள், சுலபமாக மோக்ஷமடைய அநேகம் கோடிக் கிரந்தங்களில் சொல்லியிருப்பதைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன். அதாவது நான் என்னும் தற்போதம் கொள்வதே பெருந்துக்கமாகும் அதை ஒழிப்பதே பெருஞ்சுகமுமாகும். பற்பல அரசர்கள் மோக்ஷமடைந்திருக்கிறார்கள். கர்ப்பவாசஞ் செய்யும்போது உண்டாகும் ஞானமும், பெண்கல்வியின் முடிவில் உண்டாகும் ஞானமும் மயான ஞானபுராணம் கேட்கும் சமயம் ஏற்படும் ஞானமும் ஒருவனுக்கு நீங்காதிருக்குமேயானால் அவன் உலகசுகத்தை வெறுத்து மோக்ஷ சுகத்தை அடைவதில் சந்தேகமில்லை. பிறவியை எடுத்தவன் பெரியோரால் ஞானோபதேசம் செய்யப்பெற்றும் வினை வசத்தால் அதைக் கடைப்பிடியாமல் நல்வழியில் செல்லும்போது அலறுவான் போல மோக்ஷவழியிலிருந்து நீங்கி உலக வியாபாரங்களில் உழல்கிறான், வாலிபத்தில் புலன்கள் எல்லாம் நிரம்பப் பெருமையினால்தான் விருப்பத்தைத் தெரிவிக்கவும் செய்து முடிக்கவும் சக்தியற்றவனாகி, பற்கள் முளைக்கும்போது துன்புற்று பாவக்கிரகங்களால் பீடிக்கப்பட்டு சாதாரண நோய்களையும் பெரியதாக அனுபவித்து, மலமூத்திராதிகளைப் புசித்து பசிதரகம் அடைந்த காலங்களில் அன்னபானாதிகளைப் பெறமுடியாமல் வருந்தி, பல வகையிலும் துன்புறுவான் குமாரப் பருவத்தில் காதுகுத்துதலால் வருந்தியும் வித்தியாப்பியாசத்தால் அடிபட்டு தன் மனம் போனபடி செல்லாமல் தன் தாய் தந்தையால் திருத்தப்பட்டும் துன்பம் அடைவான். யவுவன காலத்தில் பிறன் கல்வி செல்வம் உருவம் முதலியவற்றைக் கண்டு பொறாமை கொண்டும் ஒருவன் சொல்லிய அற்பவார்த்தைகளுக்கும் மானத்தால் கோபங் கொண்டும் பகற்காலத்தில் பொருள் தேட் கருதிவருந்தியும் இரவில் மன்மதாக் கினியால் தகிக்கப்பட்டும் மாதர்களிடம் மனதைச் செலுத்தி மெய் மறந்து இந்திரிய ஸ்கலிதம் செய்து கொண்டும், பலவீனனாகியும் மலமூத்திரங்களின் குழியாகியும், தான்பிறந்த இடமாகியும் மற்றும் அசங்கிதங்களெல்லாம் பொதிந்து கிடக்கும் இடத்தை உடையோராகிய மங்கையரிடம் விருப்பங்கொண்டு அதில் உழல்வதையே பரமசுகம் என்று எண்ணுகிறான். துன்பங்களுக்கெல்லாம் பிறப்பிடமாகவுள்ள மங்கையரிடம் அணுவளவும் சுகமில்லை என்று முன்புபஞ்சசூடை என்பவள் சொல்லியிருக்கிறாள் புருஷன் பெண்களிடம் வைத்த பிரியத்தால் அவர்கள் பிரியும் காலத்தில் மிகவும் வருந்தி யவுவன சுக்லத்தை அழித்து தேகம்குன்றி மயிர்நரைத்து, சந்நிபந்தங்கள் தளர்ந்து, பற்கள் உதிர்ந்து ஸ்திரீ புருஷர்களுக்கு பூர்வத்தில் ஆவலையுண்டாக்கிய அங்கங்கள் பிரியமற்றவனாகி கிழத்தன்மையால் பந்து மித்திரர்கள் ஊழியர்கள் முதலானோரால் அவமதிக்கப்பட்டு மனம் வருந்துகிறான். இத்தகையதுன்பங்களை அனுபவிக்கும் மனித தேகத்தைக் கண்டு வெறுக்காத வனைவிட அசேதனன் ஒருவனுமில்லை இளமைக் காலத்தில் தான் அறம், பொருள் இன்பங்களை நடத்தி, மோட்சத்திற்குரிய உபாயத்தை தேடிக் கொள்ள வேண்டுமேயன்றி வயோதிகத்தில் ஒன்றுஞ் செய்ய இயலாது.

42. பெண்களின் சுபாவமும், சுந்தரியின் சோதனைக் கதையும்

வியாச முனிவர் ஸனத்குமார முனிவரை நோக்கி, சுவாமி! பஞ்சசூடை என்பவள் பெண்களின் தோஷத்தைப்பற்றிச் சொல்லியிருக்கிறாள் என்று சொன்னீர்களே? அவள் சொன்னவற்றை விளக்கிக் கூற வேண்டுகிறேன்! என்றார். ஸனத்குமாரர் கூறலானார். வியாசரே! பெண்களே தோஷங்களுக்கு இருப்பிடமாகவும் அற்ப புத்தியைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். முன்பு ஒரு சமயம் நாரத முனிவருக்கும், விபசாரியான பஞ்சசூடை என்ற ஓர் அப்ஸரப் பெண்ணுக்கும் நடந்த உரையாடலைச் சொல்லுகிறேன் கேளும். நாரதர் உலக சஞ்சாரம் செய்து திரும்பும் போது பிரமனிடம் பிறந்த பெண்ணான பஞ்சசூடை என்பவளைச் சந்தித்து பஞ்ச சூடையே! என் மனத்தில் ஒருபெரிய சந்தேகம் உண்டு. அதை நீதான் தெளிவுபடுத்த வேண்டும்! என்றார். அதற்கு அவள், அது எனக்குத் தெரிந்த விஷயமானால் சொல்வதற்கு ஒரு தடையுமில்லை! என்றாள். பஞ்சசூடையே! உனக்குத் தெரியாத விஷயத்தைப் பற்றி நான் உன்னைக் கேட்கவில்லை. அழகியே! பெண்களின் சுபாவத்தைப் பற்றி நிச்சயமாக அறிய விரும்புகிறேன்! என்றார். பஞ்சசூடை நாரதரை நோக்கி. நாரதரே! பெண்களை ஒரு பெண்ணே நிந்திப்பது தர்மமல்ல இந்த விஷயம் தங்களுக்குத் தெரிந்தது தான். அதைப்பற்றி நீங்கள் என்னைக் கேட்பதும் தருமம் அல்ல! என்றாள். அதற்கு நாரதர் பெண்ணே! உண்மையைச் சொல்லுவது ஒரு போதும் தவறாகாது. பொய் சொன்னால் தான் தோஷம் உண்டாகும்! என்றார். பஞ்சசூடை சொன்னாள்.

நாரதரே! நற்குலத்தில் பிறந்தவர்களும் அழகிகளும் கணவர்களுடன் கூடியவர்களாக இருந்தாலும்கூட பெண்கள் உள்ளூறக் கட்டுப்பட்டு இருக்கமாட்டார்கள். இவ்வுலகத்தில் மங்கையரைக் காட்டிலும் பாவஜன்மங்கள் கிடையாது. என்பதை நீரும் அறிவீரன்றோ? கணவன் வேத சாஸ்திரங்களை உணர்ந்து செல்வந்தனாகவும் அழகியொருத்திக்கு சுவாதீனனாக இருந்தாலும் மங்கையர்கள் அவனை அன்பு பாராட்டி அணைக்காமல் சந்தர்ப்பம் வாய்க்கும்போது பரபுருஷரை விரும்பிக் கூடுவார்கள். மாதர்களான எங்களுக்கு, கணவனாக வாய்த்தவன் பேரழகனாக இருந்தாலும், வெட்கமின்றிப் பிற ஆடவரைக் கள்ளத்தனமாக கூடி மகிழ விரும்பும் பெருந்துர்க்குணம் உண்டு அருகிருந்தாலும் தன்னை அன்போடு நடத்தினாலும் கணவனை விட்டு விட்டுத் தான் விரும்பியவன் தொலைவில் இருந்தாலும் அவன் தன்மீது சிறிதும் அன்பு பாராட்டாமல் இருந்தாலும் அந்த அயலானிடத்திலேயே மனத்தைச் செலுத்தி மங்கையர்கள் மகிழ்வார்கள். மாதர்கள் ஒரு போதும் பதிபக்தியுடன் இருப்பதில்லை. ஆனால் தங்களை நாடிக் கொஞ்சும் ஆடவர் கிடைக்காமையாலும் பலர் கண்டு அவமதிப்பார்களே என்னும் பயத்தாலும் சந்தர்ப்பம் வாய்க்காமையாலும் பதிபக்தி செய்பவர்களாகத் தோற்றமளிப்பார்கள்! தக்கவன் என்றும் தகாதவன் என்றும் கிழவன் என்றும் வாலிபன் என்றும் அழகன் என்றும் அவலட்சணமானவன் என்றும் மங்கையர்கள் பார்க்கமாட்டார்கள், கணவனாவதை மட்டும் திருப்திகரமாகக் கொள்வார்கள். பயம் தயை செல்வம், உணவு தாய் தந்தையர், கணவன் இவர்களுக்குப் பயந்தும் கணவனுக்கு சுவாதீனப்பட மாட்டார்கள். நல்லகுல மங்கையரும் ஆடையாபரணங்களை அணிந்து தங்கள் மன விருப்பப்படியே திரியும் தாழ்ந்த குலப்பெண்களுக்குச் சமமாகவே நடக்க விரும்புகிறார்கள். கணவன், அதிக அன்போடு நடத்தி வருவானாயினும் கூனன், குருடன், நொண்டி குரூபி முதலிய அன்னிய ஆடவரையே ஆரணங்குகள் உள்ளூற விரும்புவதும் உண்டு மாதர்கள் மனம் விரும்பாத ஆடவனே உலகத்தில் இல்லை. பெண்கள் தங்களுக்கு ஆடவர்கள் நெருங்கி வராவிட்டால் கொள்ளப் பார்ப்பார்கள். தங்கள் மோக விருப்பத்திற்கேற்ற பிற ஆடவர் கிடைக்காததாலும் உற்றார் உறவினர்கள் உணர்ந்தால் தண்டிப்பார்களே என்ற பயத்தாலுமே அவர்கள் பயந்தவர்களாக இருப்பார்களேயன்றிச் சத்தியத்திற்குப் பயந்து நடப்பதில்லை. மங்கையர்கள் மரத்தின் இலைகளைப் போலவும் கடலின் அலைகளைப் போலவும் அலைகிற மனமும், கடலில் ஆழந்தைப்போலவும் கண்டறியப்படாத மன ஆழமும் கொண்டவர்கள் எத்தனை விறகுகளாலும் திருப்தியடையாத நெருப்பைப் போலவும் எத்தனை ஆற்று நீர்களாலும் திருப்தியடையாத பெருங்கடலைப் போலவும் எத்தனை உயிர்களாலும் பூர்த்தியடையாத யமபுரம் போலவும் எத்தனை ஆடவரை அடைந்தும் அவர்கள் திருப்தி அடையமாட்டார்கள். தேவ முனிவரே! மற்றொரு இரகசியமும் உண்டு. அதையும் உமக்குச் சொல்லுகிறேன். அழகான ஆடவனைக் கண்ட மங்கையிடம் மோகரசம் பெருக்கெடுக்கிறது. நீராடி. ஆடை அணிமணிகள் புனைந்து அலங்காரமாகக் கண்ணெதிரே செல்லும் விட புருஷனைக் கண்டதும் காரிகைக்கு காமரசம் தானே பிரவாகிக்கிறது. இச்சித்த பொருள்களை யெல்லாம் கொடுப்பவனாயினும் தன் கணவனிடம் மனம் விரும்பி நிலைநிற்க மாட்டார்கள் ஆடை, ஆபரணம், மலர், மணம், வாசனைத் திரவியம் முதலியவற்றை அளவில் அடங்காமல் கொடுத்தாலும் ஆசை அடங்கக் கொடுத்தாம் காமத்தில் திருப்தியடையமாட்டார்கள். அந்தகன், சமனன், மிருத்யு, பாதாளம் வடவாக்கினி, வானின் முனை விஷம் கிருஷ்ண சர்ப்பம். பிரளயாக்கினி இவற்றின் குரூரம் எல்லாம் மங்கையரின் குரூரத்திற்கு ஈடாகமாட்டா பிரம தேவர் ஐம்பெரும் பூதங்களைப் படைத்தபோது பாவங்கள் யாவையுஞ் சேர்த்தே பெண்களைப் படைத்திருக்கிறார்! என்று பஞ்சசூடை நாரதருக்குச் சொன்னாள்.

இவ்வாறு ஸனத்குமாரர் கூறியதும், வியாசர் அவரை நோக்கி, அறிஞரே! ஸனத்குமார முனிவரே! மங்கையர் மன்மதனால் பீடிக்கப்பட்டு மந்த புத்தியை உடையவர்களாய் நீங்கள் சொன்ன துர்நடத்தைகளையே இயற்கையாகக் கொண்டுள்ளார்கள். அத்தகைய மாதர்களிடம் எப்படி ரமிக்கிறார்கள்? ஆண் பெண்களில் மன்மதனை ஜெயித்தவர்கள் ஒருவரும் இல்லை என்றும் தெரியவருகிறது! மாதர்களைத் திருமணம் செய்து கொள்ளும்போது என்னோடு சேர்ந்து தர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும், என்று அக்கினி சாக்ஷியாகச்சத்தியஞ் செய்து கொள்வதுங்கூட வீணானதே என்று நினைக்கிறேன். பெண்கள் சபலபுத்தியுடையவர்கள் என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது திருமணத்தின் போது பதிவிரதா தர்மத்தை அனுசரிக்கும்படிச் சொல்லுகிற மந்திரங்கள்யாவுமே உபசாரமாகத் தோன்றுகின்றன வேயன்றி உண்மையென்று புலப்படவில்லை. இது விஷயத்தில் என்மனம் மிகவும் சந்தேகம் அடைந்திருப்பதால், தாங்கள் கேள்விப்பட்ட வகையிலேயே விபரமாக இன்னுஞ் சொல்ல வேண்டும் என்று கேட்டார், அதற்கு ஸனத்குமார முனிவர் சொன்னார்.

வியாச முனிவரே முன்பு அஷ்டாவக்ரர் என்ற முனிவருக்கும் திஸா என்ற பெண்ணுக்கும் நடந்த உரையாடலைச் சொல்லுகிறேன் கேளும். அஷ்டாவக்ர முனிவர், வதான்ய முனிவர் என்பவரை கண்டு அவருடைய மகளான பிரபா என்ற கன்னிப்பெண் குணவதியாகவும் பதிவிரதையாகவும் நல்ல நடத்தையுடையவளாகவும் ரூபவதியாகவும் இருந்ததால் அவளைத் தனக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு வதான்யுமுனிவர் அஷ்டவக்கிர முனிவரை நோக்கி, நீ வடதிசைக் கன்னியைக் கொண்டு வந்து மணஞ் செய்து கொள்ளும் என்றார். அதற்கு அஷ்டாவக்கிரா வடதிசையில் எங்கு சென்று யாரைக்காண வேண்டும்? என்று கேட்டார். அதற்கு வதான்யர் நீ இமயமலையை அடைந்து குபேரலோகத்தைக் கடந்து சித்த சாரணர் வசிக்கும் உருத்திர லோகத்தையும் கடந்து சென்றால் நீர் கொண்டமேகம் போலக் கருமையாகவும் பசும் புற்களையுடையதுமான ஒரு வனத்தைக் காண்பாய்! அந்த வனத்தில் பெருந்தவத்தினளாகவும் பேரழகியாகவும் தீøக்ஷயுடையவளாகவும் விளங்கும் ஒரு மங்கை இருப்பாள். அவளை நீ அவசியம் பார்க்கவேண்டுவும் நீ அவளைப் பார்த்து விட்டுத் திரும்பி வருவாயானால் என் பெண்ணை நான் உனக்கு திருமணம் செய்து கொடுக்கத் தடையில்லை நீ சத்தியம் தவறாமல் அவ்விடத்திற்குப்போய் வரவேண்டும் என்று கூறினார். அதற்கு அஷ்டாவக்கிரர் அப்படியே நீங்கள் சொன்ன இவத்திற்குப் போய் அந்தப் பெண்ணைக் கண்டு பேசி விட்டு வருகிறேன் நீங்கள் மட்டும் வாய்மை தவறாமல் உங்கள் பெண்ணை எனக்குத் திருமணஞ் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். சித்த சாரணர்கள் வசிக்கும் இமயமலையை அவர் தாண்டி எல்லாப் பாபங்களையும் ஒழிக்கும் பாஹுதா என்ற நதியைக்கண்டு விதிப்படி அதில் நீராடி அனுஷ்டானங்களை முடித்து அன்று அங்கு தங்கி மறுநாள் உதயத்தில் அங்கேயே நீராடி, உத்ருதிராணி கூபத்தில் மூழ்கி அங்கொரு நாள் இருந்து மறுநாள் கைலாயத்தை நோக்கிப் போனார். அப்போது யக்ஷர் வசிக்கும் தீரத்தையுடைய மந்தாகினியாற்றில் அவர் நீராடி அதன் கரையில் அனுஷ்டானஞ் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த யக்ஷர்கள் அவரை நோக்கி மாதவரே! எங்கள் தலைவனான குபேரன் உம்மைக் காண இங்கு வருவதால் நீங்கள் இங்கேயே சிறிது நேரம் இருக்க வேண்டும் என்று சொல்ல அவர் அவ்வாறே இருந்தார்.

குபேரன் அவ்விடம் வந்து அஷ்டாவக்கிர முனிவரைவிதிப் படிப் பூசித்து, சுவாமி! தங்கள் என் பட்டணத்திற்கு வந்து என்னால் செய்யப்படும் பூஜையை ஏற்க வேண்டும் என்று வேண்டினான். அதற்கு இணங்கிய அஷ்டாவக்கிரர் அவனோடு சென்று குபேரப் பட்டணமான அழகாபுரியை அடைந்தார். அங்கு குபேரன், அம்முனிவரை அர்க்ய பாத்யாங்களால் உபசரித்து, திவ்விய ஆசனம் முதலியன உதவி மதுவர்க்கங்களைக் கொடுத்து உபசரித்தான், பிறகு அவன் ஞானியே! என்னிடமிருக்கும் அப்ஸர மங்கையரை நாட்டியஞ் செய்ய உத்தரவு கொடுத்தால் நடிக்கச் செய்கிறேன். நீங்களும் மகிழ்ச்சியடையலாம் என்றான். முனிவரும் இணங்கினார். அதனால் கிருதாசி, மிஸ்ரகேசி, ஊர்வசி, ரம்பை. முதலாக அப்சரமங்கையர் வீணா வேணு மிருதங்கம் முதலிய வாத்தியங்களோடும் பாடல்களோடும் நடனமாடினார்கள். அந்த ஆனந்தத்திலேயே தேவவருஷம் ஒன்று கழிந்தது. அதை உணர்ந்ததும் குபேரன் கும்பிட்டவனாய் எவ்வளவு காலங் கழிந்தது? இனி நான் என்ன செய்யத்தகும்? என்று கேட்டான். அஷ்டாவக்கிர முனிவர் குபேரனை நோக்கி நான் உன்னால் சிறப்பாகப் பூஜிக்கப் பெற்று பெரும் மகிழ்ச்சி அடைந்தேன் இனி என் விருப்பப்படி நான் செல்ல விடையளிக்க வேண்டும் என்று கூறி விடைபெற்று அங்கிருந்து வடதிசை நோக்கிப் புறப்பட்டு கைலாயம், மந்தரம் ஹேமம் ஹரபர்வதம் முதலான புனித மலைகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து சாஷ்டாங்கமாக வணங்கி விட்டு மேலும் சென்று சம்மாயும் மனோரம்மியமாகவும் புண்ணிய பூமியாகவும் விளங்கும் ஒரு வனத்தைக்கண்டார்.

இயற்கை வளங்கொழிக்கும் அந்த வனத்தில் அவர் ஓர் ஆசிரமத்தையும் கண்டார். அந்த ஆசிரமத்தில் சந்திரமண்டலத்தைப் போலப் பிரகாசமாயும் வைரத்தால், தூண்களும் வைடூரியத்தால் திண்ணைகளும் சந்திரகாந்தத்தால் இழைத்த சுவர்களும் நிலைக்கண்ணாடிகள் பதிக்கப் பெற்ற அறைகளும் பொற்கலசங்களும் ஸ்படிகச் சாளரங்களும் முத்துச்சரத்திரைகளும் தேவர்கள் சஞ்சரிக்கும் விமானங்களும் முத்துத்தோரணங்களும் கொண்ட ஒரு வீடு தென்பட்டது. அதன் வாசற் படியை அஷ்டாவக்கிர முனிவர் அடைந்து நான் எப்படி அதனுள்ளே நுழைவேன்? என்னை அதிதி என்று உபசரிப்பவர்கள் யார்? என்று எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது பல வித ஆபரணங்களால் அலங்கரிப்பட்ட ஏழு கன்னியர்கள் உள்ளேயிருந்து வெளியே வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருத்தியும் சமமான அழகும் ஆபரணங்களும் இளமையும் ரதிதேவி போன்ற வடிவம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் முனிவரை கைகூப்பி வணங்கி சுவாமி! தாங்கள் எங்கள் இல்லத்திற்கு வரவேண்டும் என்று வேண்டினார்கள். பொற்கொடி போன்ற அப்பேரழகிகளின் வீணாகானம் போன்ற குரல் ஒலியை முனிவர் கேட்டு மனங்குளிர்ந்து அவர்கள் தம்மை அழைத்ததற்காக மகிழ்ந்து ஆச்சரியத்துடன் உள்ளே சென்றார். அங்கு ஒரு சப்ரகூட மஞ்சத்தின் மீது ஒரு கன்னிகை உட்கார்ந்திருந்தாள். அவள் மாசுமருவற்ற ஆடை புனைந்து அணிமணிகள் அனைத்தும் பூண்டு திவ்வியமான பேரழகுடன் மின்னற்கொடி போல விளங்கினாள். அவள் முனிவரைக் கண்டதும் எழுந்து வந்து வணங்கினாள், அவளை முனிவர் வாழ்த்தினார். அந்தக் கன்னிகை அவருக்குத் திவ்விய இருக்கை தந்து அமர்ந்திருக்கச் செய்தாள்.

அப்போது அஷ்டாவக்கிரர் அந்த எட்டு கன்னிகைகளையும் பார்த்து, பெண்களே! நான் சிரமபரிகாரம் செய்து கொள்ள வேண்டும். ஆகையால் உங்களில் மனஞ்சலியாதவள் யாரோ அத்தகைய ஒருத்தி மட்டும் சிறிது நேரம் என்னிடம் பணிவிடை செய்வதற்காக இங்கு இருக்கலாம். மற்றவர்கள் அந்தப்புரத்திற்குச் செல்லலாம்! என்றார். அதைக் கேட்டதும் வனிதையர்களில் எழுவர் அஷ்டாவக்கிரரை கும்பிட்டு விட்டு அந்தப்புரத்திற்குச் சென்றார்கள். முனிவர் அங்கு ஒரு பஞ்சணையில் படுத்துக் கொண்டார். அருகிருந்த கன்னிகை மனஞ்சலிப்பில்லாமல் பலவிதமாகவும் அவரை உபசரித்தாள். அப்போது முனிவர் தமக்குப் பணிவிடை செய்பவளை நோக்கி, பெண்ணே! இராக்காலம் வந்து விட்டது. இனி நானும் தூங்க வேண்டும். ஆகையால் நீ வேறு ஒரு படுக்கையில் படுத்து உறங்கு! என்றார். கன்னிகையும் அப்படியே ஆகட்டும்! என்று சொல்லிவிட்டு சென்று மற்றொரு படுக்கையில் படுத்தாள். சிறிது நேரமேபடுத்த அம்மங்கைக்கு தூக்கம் வரவில்லை. குளிர்கிறதே என்ற பொய்க் காரணங்காட்டி அஷ்டாவக்கிரரின் படுக்கையை அடைந்து ஒரு பக்கமாகப் படுத்துக் கொண்டு, சுவாமி என் அருகில் வாரும் எனக்குக் குளிர்கிறது! என்று சொல்லி அவரைத் தன் இருகைகளாலும் இறுகத் தழுவி ஆலிங்கனம் செய்து கொண்டாள். முனிவரோ மரம் போலவும் கல்லைப்போலவும் சலனமற்ற மனமுடையவராக இருந்தார். அந்தக் கட்டிளம் பெண்ணோ அவர் மனங்கலங்காமையால் துக்கப்பட்டு பாணங்களால் காமாவஸ்தைப் பட்டு அந்தணோத்தமரே! ஆண்களை விடப்பெண்களே காம விஷயத்தில் தைரியசாலிகள் என்பார்கள். நீங்கள் என் விஷயத்தில் தயவு செய்யாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? நானாகவே உம்மிடம் வந்தேனாகையால் என்னை மனவிருப்பத்தோடுக் கட்டியணைத்து மகிழ்ந்து என்னையும் மகிழ்விக்க வேண்டும்! பற்பல ஆண்டுகள் உடல் வருந்தித் தவஞ் செய்து அடைய வேண்டிய சுவர்க்கலோக சுகத்தையெல்லாம் நான் இப்போதே உமக்குத் தருவேன்! இதனால் உம்முடைய தவக்குறைய மாட்டாது என்னைத் திருப்தி செய்வீரானால் எல்லா விதமான சுகங்ளையும் தங்கு தடையில்லாமல் நீர் அடையலாம். என் வீட்டையும் செல்வவளத்தையும் பாரும் நீரே இவற்றுக்கெல்லாம் எஜமானராவீர்! இங்குள்ள மரங்களின் அமிர்தமயமான பழங்களைச் சாப்பிட்டு ரமணீயமான வாவி கூப தடாகங்களில் விளையாடி நானும் என் தோழிகளுஞ் செய்யும் வீணாகானத்தால் களித்திருக்கலாம்! மங்கையர் மன்மதவாதையடைந்து, அதனால் தாங்களாகவே வலிய வந்து ஆடவரை வேண்டிக் கூடி மகிழ்ந்தால் ஆசைப்பட்டு வந்த மங்கை ஒருத்தி தரும் சுகத்தை விடச் சிறந்த சுகம் வேறு எதுவுமே இல்லை! இகை நீர் இழந்து விட வேண்டாம்! என்று பலவாறும் ஆசை மொழிகள் கொட்டினாள். ஆனால் அஷ்டாவக்கிர முனிவரோ, சுந்தரியே பிறன் மனைவியரை நான் கையாலும் தொட மாட்டேன் மேலும் நான் திருமணஞ் செய்து கொள்ள விரும்பியிருக்கிறேன்.. புத்திரப் பேற்றைக் கருதியே பெண் கலவி செய்யத்தகும் என்று அற நூல்கள் கூறுகின்றன ஆகையால் நான் திருமணஞ் செய்து கொண்டு நல்ல பிள்ளைகளைப் பெற்று உயர் பதவியை அடையப் போகிறேன். இந்த நியாயத்தைச் சத்தியம் என்று உணர்ந்து உனக்கு என்னிடம் உண்டான ஆசையை விட்டுவிடு! என்றார்.

ஓ! மாமுனிவரே வாயு, வருணன் அக்கினி என்ற மூவருமே ஒன்றாகத் திரண்டு வந்து பதிவிரதா தர்மத்தைப் பாராட்ட வேண்டும் என்று சொன்ன போதிலுங் கூட மாதர்கள் மன்மதா வஸ்தையை விட்டுவிட மாட்டார்கள். அவர்கள் என்றும் காம போகத்திலேயே விருப்பங் கொண்டவர்கள். பெண்களில் பதிவிரதையாகக் காணப்படுபவள் ஆயிரத்தில் ஒருத்தியும் உண்மையில் மனம் மொழி மெய்களாலும் பிறபுருஷரைக் கலவாத உத்தமியோ லக்ஷத்தில் ஒருத்தியும் கிடைப்பது அபூர்வம். பெண்கள் காம இச்சை கொள்ளும்போது, தங்கள் தாய்வழி, தந்தைவழி பெற்றோரின் கவுரவம் சகோதரனுடைய கண்ணியம் கணவனுடைய நல்லொழுக்கம், ஆசாரம் இவற்றை மதிக்க வேண்டும் என்று கூடப் பொருட்படுத்தாமல் ஆற்று வெள்ளம் ஓடும்போது கரையே இடித்துச் செல்வதைப் போலத் தங்கள் குலாசாரம் முதலானவற்றையெல்லாம் கெடுத்து விடுவார்கள். உலகத்திலுள்ள தோஷங்களையெல்லாம் சேர்த்துப் பெண் உருவமாகச் செய்த பிரமதேவர் அவர்களுக்குரிய தோஷத்தைச் சாமானியமாகச் சொல்லியிருக்கிறார்! என்றாள் கட்டழகி. பெண்ணே! நான் செய்ய வேண்டுவது என்ன? நீ எதை விரும்புகிறாய்? என்று அஷ்டாவக்கிர முனிவர் கேட்டார் அதற்கு அந்தச் சுந்தரி நீங்கள் என்னோடு கூடிச் சிறிது காலம் சுகம் அனுபவிக்க வேண்டும்! என்றாள்.

அப்படியே ஆகுக! என்ற அந்த முனிவர், அவளைத் தம் ஞானக் கண்களால் கண்டு, விருத்தையாகி ஒவ்வோரவயவங்களும் கண்களுக்கு ரமிக்காதனவாகி விளங்குவதால் இவள் இந்த வீட்டிற்குத் தலைவியாகவும், சாபத்தினால் இத்தகைய உருவத்தையும் பெற்றிருக்கிறாள்! என்று கருதினார். எனவே அந்தச் சுந்தரிக்கு இத்தகைய சாபம் வந்த காரணத்தை அறியவேண்டும் என்று ஞான திருஷ்டினால் நோக்கினார். அப்போது சந்தியா காலம்நேரம் வந்தது உடனே கன்னிகை அவரை நோக்கி, முனிவரே! சந்தியா காலம் வந்துவிட்டது அனுஷ்டானத்திற்கு எழுந்திருக்க வேண்டும் என்று கூறினாள். அப்போது முனிவர் எனக்கு ஸ்நானஜலம் வேண்டும்! என்றார் உடனே சுந்தரி விரைந்து சென்று ஒரு துண்டு வஸ்திரமும் திவ்வியமான தைலமுங்கொண்டு வந்து, அவர் உத்திரவு பெற்று அவரது உடம்பு முழுவதையும் தொட்டு எண்ணைத் தேய்த்துக் தைலமிட்டாள். பிறகு அவரை குளியலறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கு உட்கார்ந்து நீராடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இரத்தின மயமான பீடத்தில் முனிவரை அவள் உட்கார வைத்து அவரைக் குளிப்பாட்டினாள். பிறகு சந்தியாவந்தனாதிக் கிரியைகள் முடிந்ததும் அவள் முனிவரைத் தன் சமையலறைக்கு அழைத்துச் சென்று அமிர்தமயமான அறுசுவையுணவைச் சாப்பிட வைத்தாள். உடல் முழுவதும் நன்றாக எண்ணெய் தேய்க்கப் பெற்று நன்றாக நீராடி அதன் பிறகு சூடான சோற்றைச் சாப்பிட்டதால் அசதிதட்டி முனிவர் பஞ்சணையில் படுத்தார். சந்திரகாந்தி வீசிக்கொண்டிருந்த அன்றிரவு முழுவதும் அவருக்குத் தெரியாமலே கழிந்தது. மறுநாள் விடியற்காலையில் விழித்துக் கொண்டு இரவு கழிந்ததற்காக வியப்புற்று அந்த மங்கையை நோக்கி, நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அவருக்கு சுந்தரி முறைப்படி அன்ன பானங்களை வழங்கினாள். முனிவர் உணவருந்தி பகற்பொழுதைக் கழித்தார். அஷ்டாவக்கிர முனிவர் அனுஷ்டானம் முதலானவற்றை முடித்துக்கொண்டதும் படுத்து உறங்கலாம் என்ற சுந்தரி சொன்னாள். அவ்வாறே அவர் படுக்கையில் படுத்திருக்கும் போது அவரருகே சுந்தரி தன் படுக்கையை வைத்துக் கொண்டாள். அப்படி அருகே படுத்தவளை நோக்கி, முனிவர் சுந்தரியே! நான் என் மனதால் பிறபெண்களை ஒருபோதும் சிந்திப்பதில்லை. ஆகையால் நீ வேறு இடத்தில் படுத்துக்கொள்! என்று சொல்லி, அவளை அங்கிருந்து அகலும்படிச் செய்தார். அவளோ என்னைப் பிற பெண் என்று கருத வேண்டாம். நான் யாருக்கும் சுதந்தரியல்ல! என்னைக்கூடி கலப்பதால் உமக்குத் தர்ம நாசம் விளைந்து விடாது! என்னை உமக்குச் சொந்தமாகவே கருதலாம் என்றாள். அதற்கு அவர், பெண்ணே! ஒருபோதும் பெண்ணானவள் சுதந்தரியாக இருக்க மாட்டாள் என்ற பிரம்மாவே சொல்லியிருக்கிறார்! என்றார்.

ஐயா! என்னை மன்மதனின் மோக நெருப்பு வாட்டுவதால் நான் உம்முடைய பத்தினியாக இருக்க விரும்புகிறேன்! அதற்காக உமது காலடியில் சரணாகதியடைகிறேன் என்னை பிறன் மகளிர் என்று கருதினால் என்னைக் கல்யாணம் செய்து கொண்டு கூடல் இன்பத்தை அனுபவிக்கலாம். இதனால் ஒருபோதும் தோஷம் விளைந்து விடாது சுதந்தரியாக நான் இருப்பதால் என்னைச் சேர்வதால் உண்டாகும் தோஷம் எனக்கே சாருமேயன்றி, உம்மை ஒருபோதும் சாராது, இப்படியெல்லாம் வேண்டிக் கெஞ்சும் என்னை ஆதரிக்காமல் விட்டு விட்டால் அதனால் உமக்குப் பெருந்தோஷம் சித்திக்கும்! என்றாள் சுந்தரி. பெண்ணே! நீ பிற ஆடவனைப் பலவந்தம் செய்து உன் காம இச்சைக்கு என்னை இணங்க வைப்பதால் மூளும் பாவம் என்னைச் சேருமேயன்றி உன்னைச் சாராது. ஆகையால் நான் உன்னோடு கூடி மகிழ மாட்டேன். மேலும் பெண்கள் குழந்தைப் பருவம், சிறுமி பருவம், இளமை முதுமை முதலான எந்தப் பருவங்களிலும் சுவாதீனமுடையவர்களல்ல, அப்படியிருக்க நீ சுவாதீனமுடையவள் என்று சொல்வது எப்படி? என்றார் அஷ்டாவக்கிர முனிவர் நான் கன்னிப் பருவத்தில் இருந்து பிரமசரிய விரதத்தை அனுஷ்டிக்கிறேன். ஆகையால் என்னைப் பிறன் மனைவி என்று கருதாமல் என்னைத் திருமணஞ் செய்து கொள்ளும் என்றாள் சுந்தரி. அதற்கு முனிவர் பெண்ணே! நான் கல்யாணஞ் செய்து கொள்ள முயன்றதால் ஏற்பட்ட தடையை நீக்கிக் கொள்ளவே இங்கு வந்தேன். இங்கோ நீ உன்னை மணந்து கொள்ளச் சொல்கிறாய் நானோ வேறொரு பெண்ணை விரும்பியிருக்கிறேன். அவள் தந்தையோ என்னை அனுப்பியதாலேயே நான் இங்கே வந்தேன் இதனால் நம் இருவர் மன விருப்பமும் நிறைவேறுவதாக இல்லை! என்று சொன்னார். பிறகு இவள் இவ்வளவு ரூபவதியாக இருந்தும் ஆபரணம் ஆடைகள், முதலியவற்றில் குறைவற்றிருந்தும் நீ இவள் உருவம். பங்கப்பட்டிருப்பதற்குக் காரணம் தெரியவில்லை. அப்படியே நான் இவளைக் கல்யாணஞ்செய்து கொண்டாலும் என் பிரமசரிய விரதத்திற்கு குறைவில்லாமல் சாதித்துக் கொள்ள வேண்டும்! என்று தமக்குள்ளேயே யோசித்து தீர்மானித்துக் கொண்டார்.

இவ்வாறு ஸனத்குமாரர் கதை சொல்லும்போது வியாச மகரிஷி அவரை நோக்கி மாதவரே! அஷ்டாவக்கிர முனிவர் கடுந்த பசியாகவும் சாபங்கொடுக்கச் சக்தியுள்ளவராகவும் இருந்தும் ஏன் சாபங் கொடுக்காமல் இருந்தார்? என்று கேட்டார் ஸனத்குமாரர் கூறலானார். அஷ்டாவக்கிர முனிவர் நெடுநேரம் யோசித்து விட்டு அந்தச் சுந்தரியை நோக்கி பெண்ணே! உன் தேகத்தில் இத்தகைய குரூரமான கிழத்தனம் வந்த காரணம் என்ன என்பதை சத்தியமாகச் சொல்! என்றார், அதற்கு அவள் கூறினாள்.

ஓ ஜிதேந்திரியா! இப்பூமிதேவியும் ஆகாயவாணியும் அறிய நான் உண்மையைச் சொல்லுகிறேன், சுவாமி! என்னை உத்திரதிக்கு ஸ்திரீ என்று அறிந்துகொள்ளும் மிருகங்கள் பறவைகள் முதலியவைகளுக்கே ஆடை உறவினர் பிரியமிருக்கும் போது மனித உடம்பு கொண்டவர்களுக்கு அந்த இச்சை இருப்பதில் சந்தேகம் ஏன்? ஸ்திரீயின் சாபல்யம் இத்தகையது! உம்முடைய பிரமசரிய உண்மையை சோதிக்கவே இவ்விதமாகச் செய்தேன். எங்களுடைய சிங்காரச் சேஷ்டைகள் காதற் குறும்புகளையெல்லாம் கண்டும் மனம் சலனப்படாத உம் புலனடக்கத்தைக் கண்டு இந்திராதி தேவர்கள், உவந்து எல்லா உலகங்களிலும் தடையின்றிப் போக்கு வரவு செய்யத்தக்கச் சுதந்தரத்தையும் ஆற்றலையும் உமக்கு கொடுக்கச் சித்தமாக இருக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ள கேட்டீரோ, அவரே பெண் சுபாவம் இத்தகையது என்று நீர் அறிந்து கொள்ளச் செய்வதற்காகவே வடதிக்குப் பெண்களான எங்களிடம் உம்மை அனுப்பி வைத்திருக்கிறார். எங்களால் சலனப்படுத்த முடியாத உம் மன வலிமையை கண்டு மகிழ்ந்தோம். நீர் நலமான வழியைக் கடந்து சென்று, அந்தக் கன்னிகையை மணந்து நல்லபுத்திரனைப் பெறப் போகிறீர்! நீர் சத்தியமாக வினவியதால் இத்தகைய இரகசியங்களை நான் உமக்குப் போதித்தேன். இன்னும் என்ன கேட்க வேண்டுமோ கேட்கலாம்! என்றாள் சுந்தரி.

அஷ்டாவக்கிரர் அவளை வணங்கி, உத்திரதிக்காகிய மங்கையே! இனி நான் உன்னைக் கேட்க வேண்டியது ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு அவளிடம் விடைபெற்றுக் கொண்டும் தம் சொந்த நாட்டிற்குத் திரும்பிவந்து இளைப்பாறித் தன் உற்றார் உறவினர்களை வழிபட்டு வதான்ய முனிவரிடம் சென்றார். அவரைக் கண்டதும் வதான்ய முனிவர் நான் சொன்ன இடத்திற்குப் போய் வந்தாயா? என்று கேட்டார். அதற்கு அஷ்டாவக்கிரர் வதான்யரே! நீ சொன்னவாறு கந்தமாதனம் கடந்து, உத்திரதிக்கிலுள்ள நந்தவனத்தில் வசிக்கும் நங்கையைக் கண்டு உரையாடி விட்டு அவள் உத்தரவைப் பெற்றே உம்மிடம் திரும்பி வந்திருக்கிறேன்! என்றார். வதான்யர் மகிழ்ந்து ஓ புலனடக்கம் மிகுந்த சத்தியவானே! நல்ல லக்கினத்தில் என் கன்னிகையை திருமணம் செய்து கொண்டு மகிழ்வாயாக! என்றார் அதிசுந்தரியான அவர் பெண்ணை அஷ்டாவக்கிரர் திருமணஞ் செய்து கொண்டு மகிழ்ந்திருந்தார். ஆகையால் வியாஸ முனிவரே பெண்களின் சுபாவமே இத்தகையது தான் இலட்சத்தில் ஒருத்தியே பதிவிரதையாக இருக்கக் கூடும். அத்தகைய ஒருத்தியின் பெயரை நினைத்தவுடனேயே எல்லாப் பாவங்களும் ஒழியும் அஷ்டாவக்கிரரைப் போன்ற ஆடவர்கள் அகப்படுவதும் துர்லபம் ஆகையால் இந்த மகாத்மியத்தைப் படித்தாலும் கேட்டாலும் எல்லாப் பாவங்களையும் ஒழித்து பெண்களாயின் பதிவிரதைகளாகவும் ஆண்களாயின் புலனடக்கம் மிகுந்தவர்களாகவும் வாழ்வார்கள்!

43. அருந்ததியின் கற்பியல்பு

வியாசரே! முன்பொரு சமயம் வசிஷ்ட முனிவரின் மனைவியான அருந்ததி பெண்களின் இயல்பைப் பற்றிக் கூறியதையும் நான் சொல்கிறேன். ஒரு காலத்தில் இந்திரன், சூரியன், அக்கினி, தேவன் ஆகிய மூவரும். நம்மைப் பூவுலகில் விசேஷமாகப் பூஜிப்பதற்கு நான்குவகை ஆசிரமங்களில் இல்லறமே (கிரகஸ்தாசிரமமே) சிறந்தது. இல்லறத்திற்கு மனைவியாவள் குணவதியாகவும் பதிவிரதையாகவும் இருக்க வேண்டும். அந்தணர் மற்ற மூன்று வருணத்தார்களால் பூஜிக்கப்படுவதுபோல நாம் மூவரும் இல்லறத்தோரால் பூஜிக்கப்படுகிறோம். நம்மைப் பூஜிப்பதால் மும்மூர்த்திகளையும் பூஜித்த பயனை இல்லறவாசிகள் பெறுவார்கள். அதனால் இகலோக சுகத்தையும் பரலோக சுகத்தையும் அடைவார்கள், பெண்களிடம் பொய், பாசாங்கு, சாகசம், மாயை, மூர்க்கத்தனம். உலோபம் ஆசாரக் குறைவு தயையின்மை முதலிய தீக்குணங்கள் இயல்பாகவே இருந்தாலும் அவற்றை ஒழித்த நல்ல பெண்மணிகளும் இல்லற தர்மத்தைச் சரியாக நடத்திய பிராமணர் முதலான நாற்குலத்தினரும் முறைப்படி அரசு செலுத்திய மன்னர்களும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்! என்று சிந்தித்தார்கள். பிறகு அம்மூவரும் மாதர்களின் பதிவிரதைத் தன்மையைப் பரிசோதிக்க எண்ணினார்கள். முதலாவதாக வசிட்ட முனிவரின் பத்தினியான அருந்ததி தேவியிடம் சென்றார்கள்.

கணவனையே தெய்வமாகப் பாவித்திருக்கும் அருந்ததி தண்ணீர் கொண்டுவர குடத்தை எடுத்துச் செல்லும் வழியில் அவளை எதிரில் கண்டு. அக்கினி, சூரியன், இந்திரன் ஆகிய மூவரும் நின்றார்கள். அவர்களைத் தேவர்கள் என்று அறிந்த அருந்ததி அவர்களுக்கு மரியாதை செய்து, நீங்கள் இங்கு என்னை நாடி வந்த காரணம் என்ன? என்று கேட்டாள். அதற்கு அவர்கள் மூவரும் நாங்கள் உன்னை ஒன்று கேட்கவே வந்திருக்கிறோம் என்றார்கள். அதற்கு அவள் தேவர்களே நீங்கள் கேட்குப்போகும் கேள்விக்குரிய பதிலையும் பெண்களின் இயல்பையும் என் வீட்டுக்கு ஜலம் கொண்டு வைத்த பிறகு நானே சொல்கிறேன், நீங்கள் எனது பர்ணகசாலையில் இருந்து வழிநடந்த களைப்பை அகற்றிக் கொள்ளுங்கள்! என்றாள். அதற்கு தேவர்கள், நீ ஜலமெடுக்கப் போகவேண்டாம். நாங்கள் அந்தக் குடத்தை இங்கேயே நிரப்பி விடுகிறோம். எங்கள் கேள்விக்குப் பதில் தந்து எங்களை விரைவில் அனுப்ப வேண்டும், என்றார்கள். அருந்ததியும் ஒப்புக்கொண்டாள். அவர்களில்,

இந்திரன் பிறவியினால் பிராமனனிடம் எனக்குப் பயமில்லாததும், தவம் பிரமசரியம் அக்னிஹோத்ர அனுஷ்டானங்களால்,  என் பதவியை ஒருவன் அடைவதும் சத்தியமாக இருந்தால் அந்தச் சத்தியத்தால் இந்தக் கும்பம் காற்பங்கு ஜலம் நிரம்பக் கடவது! என்றான். அக்கினியோ, யாகம் பிதுர்சிரர்த்தம் இவற்றைவிட அதிதியை வழிபட்டு அன்னமளிப்பதில் நான் திருப்தி அடைவது சத்தியமானால் அதனால் இந்தக்குடம் இன்னுமொரு காற்பங்கு ஜலம் நிரம்பக் கடவது! என்றான். சூரியனோ, நாள்தோறும் என் உதயத்தில் மந்தேஹர்ன என்று ராக்ஷதரை வேதியர் செய்யும் அர்க்யபிரதான்யமாகிய பிரமாஸ்திரம் நீக்குவது சத்தியமானால் இன்னும் காற்பங்கு ஜலம் நிரம்பக் கடவது என்றான். அவற்றைக் கண்ட அருந்ததியோ இரகசிய ஸ்தானமும் இதர புருஷ சம்பாஷணையும் கிடைக்கும் வரையில் தான் பெண்கள் பதிவிரதைகளாக இருக்கிறார்கள் ஆகையால் மங்கையரை அதிகக் கவனமாக காக்க வேண்டும். இது சத்தியமானால் இதனால் இன்னும் காற்பங்கு ஜலம் நிரம்பிப் பூர்ணகும்பமாகக் கடவது! என்றாள். அவர்கள் சொல்லியபடியே குடம் சிறிது சிறிதாக முழுவதும் நிரம்பியது. அதைக் கண்ட தேவர்கள் அருந்ததியை நோக்கி, பதிவிரதா சிரோன்மணியே! பெண்களின் மனோபாவம் எப்படி என்பதைப் பரிசோதிக்கவே நாங்கள் வந்தோம். இனி நாங்கள் செல்கிறோம் மங்கையரிலேயும் உத்தமர் மத்திமர் அதிமர் என மூவகையினராக இருக்கிறார்கள்! என்று சொல்லிவிட்டுத் தங்கள் இருக்கைகளுக்குச் சென்றார்கள்

வியாசரே! இனி அருந்ததியின் சரிதத்தையும் திருமண காலத்தில் அருந்ததி பார்க்கும் காரணத்தையும் அருந்ததியைப் பார்ப்பதால் வரும் பயனையும் உமக்குச் சொல்லுகிறேன். முன்பு ஒரு காலத்தில் அக்கனிதேவன் சப்தரிஷிகளின் மனைவியரின் மீது மோகங்கொண்டான். அந்த மோகத்தால் அம்மங்கையரை எப்படி அனுபவிப்பது என்று மோகாக்கினியால் தகிக்கப்பட்டு மிகவும் வாடினான். அதை உணர்ந்து கொண்ட அவன் மனைவி ஸ்வாஹாதேவி தன் கற்பின் சக்தியால், அம்முனிபத்தினிகளின் உருவங்களைப் போல் ஒவ்வொன்றாகத் தானே வடிவமெடுத்து தன் கணவனைக் கட்டித் தழுவி அவனுக்கு ஆனந்தம் கொடுத்து வந்தாள். அவ்வாறு அவள் செய்து வரும் போது அருந்ததியைத் தவிர, மற்ற ஆறு முனிபத்தினிகளின் உருவங்களாக எடுக்கவே அவளால் சாத்தியப்பட்டது. அருந்ததியின் வடிவம் தனக்கு அமையாததைக்கண்டு சுவாகாதேவி பெரிதும் வியப்படைந்தாள். உடனே அவள் அருந்ததியிடம் சென்று, கற்புக்கரசியே! உலகத்தில் பலமங்கையரை நான் பார்த்திருக்கிறேன். ஆயினும் உன்னைப் போன்ற பதிவிரதையை நான் கண்டதேயில்லை. நான் எல்லாதேவர்களுக்கும் முகமாக இருக்கும் அக்கினி தேவனுக்கு மனைவியாக இருந்தும், விதம் விதமான மோக உருவங்ளெடுக்கக் கூடிய ஆற்றல் மிகுந்தவளாக இருந்தும் உன்னுடைய வடிவத்தை மட்டும் எடுக்க எனக்கே சக்தியில்லையென்றால் மற்றவரால் சாத்தியப் படுமா? நீயே உத்தமி! ஆகையால் எந்தப் பெண்கள் கல்யாண காலத்தில் அக்கினி, அந்தணர், உற்றார் உறவினர் முன்னிலையில் அருந்ததியான உன்னைப்பார்த்து ஸ்மரிப்பார்களோ அவர்கள் சுகத்தையும் செல்வத்தையும் புத்திரப் பேற்றையும் பெற்றுப் பதிமதியாய் வைதவ்யமில்லாமல் பூவுலகில் தங்கள் வாழ்நாளை கழித்து உன்னைப்போல் புகழ் பெற்று புண்ணிய லோகத்தை அடைவார்கள் என்று கூறினாள். இதனாலேயே அருந்ததிதேவியின் பெருமையையும் மணமக்கள் அருந்ததி தரிசனம் செய்யும் காரணத்தையும் அறிந்து கொள்ளும் இந்தச் சரிதத்தைப் பக்தியோடு கேட்டவர்கள். பெண்களாயின் அருந்ததி போலப் பதிவிரதா தர்மத்தையும் புருஷர்களாயின் இந்திராதி தேவர் போன்ற புகழையையும் பெற்று இல்லற இன்பத்தை அனுபவித்து. இறுதியில் சிவபதவியை அடைவார்கள்!

44. சாவித்திரியின் சரிதம்

வியாச முனிவரே! கற்பின் சிறப்பைப் பற்றி மற்றொரு சரிதத்தையும் நான் உனக்குச் சொல்கிறேன் கேளும். பல வளங்களும் நிறைந்து ஓங்கிய மந்திர தேசத்தில் அஸ்வபதி என்ற மன்னன் மனுநீதி முறைப்படி செங்கோல் செலுத்தி வந்தான். நெடுங்காலம் புத்திரப்பேறு இன்றி அவன் வருந்தி சரஸ்வதி தேவியை உபாசித்து, அவளைப் பிரத்யட்சமாகத் தரிசித்து தாயே! எனக்குச் சந்ததி விருத்தி உண்டாகும்படி அனுக்கிரஞ் செய்ய வேண்டும்! என்று வேண்டினான். அதற்கு சரஸ்வதி தேவி மன்னா! உனக்கு ஒரு புதல்வி பிறப்பாள்! என்று வரமளித்தாள். அந்த வரத்தைப் பெற்ற மன்னன் மனம் மகிழாமல் மீண்டும் வேண்டினான். அப்போது நாமகள் அவனை நோக்கி மன்னா! நீ அப்புத்திரியால் பற்பல செல்வங்களையும் அடைவாய்! என்று கூறி மறைந்தாள். சிறிது காலத்தில் மன்னன் அஸ்வபதியின் மனைவி ஒரு பெண்ணைப் பெற்றாள் அஸ்வபதி அந்தக் குழந்தைக்குச் சாவித்திரி என்று பெயர்சூட்டி வளர்த்து வந்தான். சாவித்திரி மங்கைப் பருவமுற்றதும் அவளுக்கு மணவினை முடிக்கத்தக்க கணவனைத் தேடுவதில் மன்னன் கவலை கொண்டிருந்தான். அப்போது அவனது அரசவைக்கு நாரதமுனிவர் வந்தார். மன்னன் அவரைப் பூஜித்து தன் மாளிகைக்கு அழைத்துச் சென்று திவ்ய ஆசனத்தில் அமர்த்தி தன் புதல்வியை அழைத்து அவருக்குக் காட்டி, முனிவரே! என் தவப்புதல்வியான இந்தக் கன்னிகைக்குத் தக்க மணமகன் கிடைக்காமல் வருந்துகிறேன் என்றான். அதைக் கேட்டதும் நாரதர், புன்சிரிப்பு பூத்து, அரசனே! நீ பெற்ற அரும்புதல்வியை உன் மனக்கருத்தின்படி மணஞ்செய்து கொடுக்காமல் அவள் விரும்பிய வரனையே மண முடித்துக் கொடுக்க வேண்டும்! என்று கூறி விட்டு சாவித்திரியின் கருத்தைப் பற்றி விசாரித்தார்.

அவள் சாலவ தேச மன்னனான சத்தியவான் என்றவனையே திருமணஞ் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறினாள். அப்போது அஸ்வபதி மன்னன் நாரத முனிவரை நோக்கி, சுவாமி! அந்தச் சத்தியவானின்குணங்கள் எத்தகையன? என்று கேட்டான். எல்லாம் அறிந்த நாரத முனிவர் அவன் தூய்மையானவன். சொல் தவறாதவன் மன்மதனைப் போன்ற ஆணழகன். எல்லா வகையிலும் சிறந்தவன். ஆயினும் ஆயுட்காலம் ஓராண்டேயுள்ளவன்! என்று கூறினார். அதைக் கேட்டதும் அஸ்வபதி மன்னன் திடுக்கிட்டு தன் புத்திரியின் முகத்தைப் பார்த்து மகளே சாவித்திரி! ! திரிகால ஞானம் உணர்ந்த பிரம்ம புத்திரராகிய நாரதர் கூறிய வார்த்தைகளைக் கேட்டாயா? மேலும் அந்த சத்தியவானின் தந்தைத் தன் அரசைப் பகைவர்களிடம் பறி கொடுத்துவிட்டு மனைவியையும் புத்திரனையும். இவற்றையெல்லாம் யோசிக்காமல் நான் உன்னை அவனுக்குக் கொடுத்தாலும் அவன் ஒரு வருஷ காலமே உயிர் வாழ்வான் என்றால் அதை விடத் துன்பம் வேறு ஒன்றும்  உண்டோ? ஆகையால் நீ வேறொரு நாயகனை மணப்பதே உசிதம்! என்று கூறினான். ஆனால் சாவித்திரியோ தன் தந்தையை நோக்கி, எந்தையே! பலமாதர்களால் அந்த அரசகுமாரரின் சிறப்பைக் கேட்டு, அவர் மேல் காதல் கொண்டு விட்டேன். ஆகையால் பிறன் ஒருவனை நான் மணஞ்செய்து கொள்ள மாட்டேன்! என்றாள். அப்போது நாரதர் அஸ்வபதி மன்னனை நோக்கி, அரசே! உன் மகள் சாவித்திரி கற்பில் சிறந்தவளாக இருப்பவளாகையால் தன் கணவனின் ஆயுளைப் பெருக்கி விதியையும் வெல்வாள்! நீ அவளது கருத்துப்படியே திருமணஞ் செய்து கொடுக்கலாம் என்று கூறினார். அதனால் அஸ்வபதி மன்னன் தன் மனைவியான மாளவியோடும் மகளான சாவித்திரியோடும் இரதத்தில் ஏறிச்சென்று சத்தியவானின் குடும்பம் சஞ்சரிக்கும் நீரதவனத்தை அடைந்தான். அங்கிருந்த சாலவதேசத்தரசன் எதிர்கொண்டு வரவேற்றான். அரசர்கள் இருவரும் ஒருவரையொருவர் தழுவிக் குசலம் விசாரித்த பிறகு அஸ்வபதி மன்னனே என் மகள் சாவித்திரி உன் புதல்வனைத் தன் கணவனாக உள்ளத்தில் வரித்திருக்கிறாள். ஆகையால் நான் அவளையும் அழைத்துக் கொண்டு இங்கே வந்தேன் என்றான். உடனே சாலவமன்னன் பகைவரிடம் நாடிழந்த தீனனாக இருந்ததால் துக்கப்பட்டான். அஸ்வபதி மன்னன் அவனைத் தேற்றி பிராமணர்கள் ஏற்படுத்திய சுபமுகூர்த்தத்தில் சாவித்திரிக்கும் சத்தியவானனுக்கும் திருமணம் முடித்துத் தன் புத்திரிக்கு ஆடை, ஆபரணம் பொன்மணி, பணிப்பெண் முதலிய சிறப்புகளை வழங்கித் தன்னகரம் சேர்ந்தான். சாவித்திரியோ- கற்பில் அருந்ததியைப் போலத் தன் கணவனுக்குப் பணிவிடை செய்தும் மாமன் மாமியாரைச் சிறப்பாக உபசரித்தும் வந்தாள். இவ்வாறு இருக்கும்போது நாரத முனிவர் கூறியவாறு வருடம் ஒன்றும் நாட்கள் நான்கும் கழிந்தன. சத்தியவானுக்கு ஆயுட்முடிவுக் காலம் நெருங்கிவிட்டது.

வியாசரே! சாவித்திரி உள்ளம் துடித்து உமாதேவியை நோக்கி தன் கணவனின் ஆயுள் விருத்தியை வேண்டி விரதம் இருந்தாள். அந்தச் சமயத்தில் சத்தியவந்தன் வனத்திற்குப் போக விரும்பினான். ஆகையால் மாமன் மாமி உத்தரவு பெற்று சாவித்திரியும் தன் கணவனோடு சென்றாள். வனம் அடைந்த சத்தியவான் மரத்தில் ஏறி காய்கனிகள் கொய்தும் தருப்பைப் புற்களை அறுத்தும் சமிதையை ஒடித்தும் வந்தான். அவன் நிழலைப் போல அவனைப் பிரியாமல் சாவித்திரியும் பின் தொடர்ந்தாள். சத்தியவான் ஒரு மர நிழலை அடைந்ததும் தன் மனைவியை நோக்கி, கண்ணே கை கால்கள் நடுங்குகின்றன, கண்கள் சுழலுகின்றன என்று தன் தலையை அவள் மடியில் வைத்து நிலமிசைப்படுத்தான். அப்பொழுது வாடாத மலர் மாலையை மார்பிலணிந்து பாசமும் தண்டுங் கரத்தில் கொண்டு, யமதர்மராஜன் அங்கு வந்து சத்தியவானின் உயிரைக் கவர்ந்து செல்லமுயன்றான். அதைக் கண்டு சாவித்திரி தன் கணவன் தலையைத் தரையில் கிடத்தி மனம் வருந்தாமல் யமதர்மனை வணங்கி, என் கணவன் உயிரைப் பிரித்துக் கவர்வது ஏன்? என்றாள். அதற்கு தருமன் கற்புக்கு அரசியே! உன் கணவனின் வாழ்நாள் கழிந்ததாலும் அவன் நற்குணத்தனாதலாலும் நானே வந்து அவன் உயிரைக் கொண்டு செல்கிறேன். பிறப்பன எல்லாமே அழிவனவேயாகும், நீ கற்பிற் சிறந்தவளாகையால் என் உருவத்தை உன் மானுட தேகத்தோடு கண்டாய்! உன்புகழை நான் என்னவென்று சொல்லுவேன்! நான் போகின்றேன் நீ திரும்பிப் போகலாம்! என்று சொல்லி விட்டுப் புறப்பட்டுச் சென்றான். சாவித்திரி விடாமல் அவனைப் பின் தொடர்ந்தாள். யமதர்மன் வியப்புற்று சாவித்திரி சாவித்திரி! உடலோடு கணவனைப் பின் தொடர்ந்த  கற்பினள் உன்னைப்போல் வேறு ஒருத்தியுமில்லை! உன் கணவனின் உயிரைத் தவிர நீ வேறு என்ன வரம் கேட்டாலும் கொடுக்கிறேன்! என்றான். உடனே புத்திக் கூர்மையுள்ள சாவித்திரி கால தேவனே! குருடரான என் மாமனார் கண்பார்வை பெறுமாறு அருள் செய்யவேண்டும்! என்று ஒரு வரம் கேட்டாள். யமதர்மன் அவ்வாறே அனுக்கிரகித்துவிட்டுச் சென்றான். சாவித்திரி விடாமல் மேலும் பின் தொடர்ந்தாள் அதைக் கண்டு கூற்றுவன் பதிவிரதையே! உன் கணவனின் உயிரைத் தவிர இன்னும் ஒரு வரம் வேண்டுமானால் கேட்டுக்கொள்! என்றான். அதற்கு சாவித்திரி, என் தந்தைக்குப் புதல்வர்கள் பிறக்கவேண்டும்! என்றாள். உடனே யமதருமன் நூற்றுவர் புதல்வர்களாகப் பிறப்பார்கள்! என்று கூறிவிட்டுச் சென்றான்.

சாவித்திரியும் அவனை விடாமல் மேலும் பின் தொடர்ந்து சென்றார்கள். அதைக்கண்ட காலதேவன் அவள் கற்பின் ஆற்றலைப் புகழ்ந்து உன் கணவனை தவிர இன்னும் ஒரு வரம் கேட்டுக் கொள்! என்றான். என் மாமனார் இழந்த ராஜ்ஜியத்தை அடையுமாறு அருள் செய்ய வேண்டும்! என்று வரம் கேட்டாள் யமதர்மன் அவ்வாறே வரங் கொடுத்து விட்டுச் சென்றான். மீண்டும் சாவித்திரி அவனை விடாமல் பின் தொடர்ந்து சென்றாள். யமதர்மன் வியப்புற்று சாவித்திரியை நோக்கி பெண்ணாகிய நீ வனத்தில் தனித்து வருவது தகுதியல்ல உன் இருப்பிடத்திற்குத் திரும்பிப் போ! என்றான். ஆனால் சாவித்திரி விடாமல் தர்மதேவனே! நல்லோர் பெரியோரைக் கண்டதும் தம் துயரங்கள் எல்லாம் நீங்குவர் என்று மேலோர் கூறியிருக்க தரும நாயகரான உம்மை நான் தரிசித்துப் பணிந்து சரணமடைந்தும் இன்னும் மனக்குறையுடன் இருப்பது உமக்குத் தர்மமாகுமோ? உயிர் நீத்த உடல் ஆடையாபரண சுகந்த மலர் மாலைகளால் அலங்கரிப்பதைப் போல என் உடலை இனிப்பாதுகாத்து வருவதில் பயன் என்ன? என் கணவனைப் பிரிந்து நான் செல்லமாட்டேன்! என்று பலவாறாகவும் கூறித் துக்கப்பட்டாள். காலதேவனான யமதர்மன் அவளது பதிவிரதா தர்மத்திற்குப் பயந்தவனாகி நீ விரும்பும் இன்னொரு வரத்தைக் கேள்! என்றான். அதற்கு அவள் நான் கற்பில் தவறாது பல புதல்வர்களைப் பெற்று, என் மாமன் அவர்களோடு விளையாடிச் சந்தோஷப்படும்படி வரம் கொடுத்தருள வேண்டும்! என்று பிரார்த்தித்தாள். அதனால் மனமிளகிய யமதர்மராஜன் சற்றும் யோசிக்காமல் அவ்வாறே ஆகுக என்று வரம் கொடுத்து மறைந்துவிட்டான் சிறிது நேரத்தில் தன் கணவன் கிடக்கும் இடத்தை அடைந்து அவனை உபசரித்தாள். சாவித்திரி உடனே சத்தியவான் கண்விழித்தான். சாவித்திரி தன் கணவனைக் கட்டியணைத்து உபசரித்துத் தன் மாமன்மாமியாரிடம் அழைத்துக் கொண்டு போனாள். அங்கு அவளுடைய மாமன் தன்  கண் பெற்றிருப்பதையும் இழந்த அரசை மீண்டும் அடைந்திருப்பதையும் கண்டு மகிழ்ந்தாள். பிறகு பல புத்திரர்களைப் பெற்று அநேக காலம் இன்பமாக வாழ்ந்திருந்தான். ஆகையால் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆடவன் நல்ல சாமுத்திரிகா லட்சணமும் பரிசுத்த வழியில் தோன்றிய தாய் தந்தையாரால் பிறப்பும் வாய்ந்த சிறந்த கன்னிகையைத் திருமணஞ் செய்து கொள்வானேயாகில் அவன் தேவனுக்கு இணையாவான். பதிவிரதையான உத்தமி ஒருத்தியை மணந்து பிரமசரியம் முதலிய நான்குவகை ஆசிரமிகளுக்கு துணை நிற்பார்களேயானால் அத்தம்பதிகள் இறுதியில் சிவலோகத்திலும் ஆனந்தமாக வாழ்ந்திருப்பார்கள்!

45. மனிதன் தன் மரணகாலத்தை உணரும் குறிகள்

வியாசரே! முன்பொரு சமயம் பார்வதிதேவியும் பரமசிவனும் உரையாடும்போது பஞ்சப்பிரம விதானத்தைப் பற்றிச் சிவபெருமான் கூறிவந்தார். அப்போது பார்வதியார் விரும்பியபடி பிண்ட உற்பத்தி முதலிய கர்ப்ப அவஸ்தைகளை எடுத்துரைத்தார். பிறகு உமாதேவி அப்பெருமானை நோக்கி அழியக் கூடிய மனித உடலின் முடிவு காலத்தையும் முக்தி அடையும் விழியையும் விளக்கியருள வேண்டும். காலச் சக்கரத்தைப்பற்றி ஒரு சந்தேகம் இருக்கிறது. தங்கள் ஆயுட்கால முடிவை மனிதர்கள் முன்னரே அறிந்துணர்ந்து தங்கள் திருவடித் தாமரைக்குப் பக்தி செய்ய வேண்டுவதால் அதைத் தெரிந்து கொள்ளக்கூடிய வழியைச் சொல்லவேண்டும் என்று கேட்டாள். அதற்குச் சிவபெருமான் கூறலானார். தேவி! நிலம், நீர், நெருப்பு காற்று ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களில் அம்சமான உடலை எடுத்த மனிதர்கள் மரணக்குறிப்பை அறிந்து புகழைச் சம்பாதிக்கும்படியான வழிமுறைகளைச் சொல்லுகிறேன் கேள். சுந்தரியே! தேகம் எல்லாம் வெளுத்தும் காதுகள் கண்கள் மூக்கு முதலியன, ஓசை, ஒளி நாற்றங்களை அறியச் சக்தியற்றும் இருக்கும் மனிதன் ஆறு மாதத்தில் மரிப்பான் எந்தச்சப்தத்தைக் கேட்டாலும் அது மிருக சப்தத்தைப் போலக் கேட்டால் அவன் ஆறுமாதத்தில் மரணமடைவான். சூரிய சந்திரமண்டலங்கள் கருத்திருக்க கண்டவன் ஆறு மாதத்தில் இறப்பான். இடது கை ஏழுநாள் துடித்தாலும் சர்வாங்களும் துடித்து நாவு உலர்ந்தாலும் அவன் ஒரு மாதத்தில் உயிர் துறப்பான். நாவின் வழி வாதபித்த கபங்கள் ஒழுகப்பெற்றவன் ஒரு பக்ஷத்தில் மடிவான் நெஞ்சும் வாயும் உலரப் பெற்றவன். ஆறு மாதத்தில் உயிர் நீப்பான். நாத்தடித்தும் குளிர்ச்சியால் பல்லிறுகக் கட்டப் பெறுவானாயின் ஆறு மாதத்தில் இறப்பான்  தண்ணீர் நெய் எண்ணெய் கண்ணாடி முதலியவற்றால் தன் தேகச்சாயையைக் காணாமல் இருந்தாலும் அவன் ஆறு மாதத்தில் இறப்பான் தன் தேகச்சாயதலக் காணாமவிட்டாலும் சிரசில்லாத முண்டமாகக் காணப்படினும் ஒரு மாதத்தில் இறப்பான். இதுவரை அங்கத்தைப் பற்றிச் சொன்னேன்.

இனி வெளிக் குறியைப் பற்றி விவரிக்கிறேன்; சந்திர சூரிய மண்டலங்களைக் காந்தியின்றி ஆடையால் மூடப்பட்டதுபோல மங்கலாகக் காணும் மனிதன் பதினைந்து நாட்களில் உயிர்துறப்பான். அருந்ததியை ஆகாயத்தில் வாகனமில்லாமலும் சந்திரனிடம் களங்கமின்றியும் இரவில் நட்சத்திரங்கள் பிரகாசமின்றியும் மேகமின்றி மின்னவும் கண்டவன் ஆறு மாதத்தில் இறப்பான் திசைகளைக் கண்டு மயங்குவோன் ஆறு மாதத்தில் உயிர் துறப்பான். ஆகாயத்தில் இரவுக் காலத்தில் வானவில்லைக் கண்டவனும் பகற்காலத்தில் விண் வீழ்கொள்ளி விழக் காண்பவனும் ; காகம் கழுகு முதலியன தன் தலைக்கு மேல் வட்டமிடக் கண்டவனும் ஆறு மாதத்தில் இறப்பான். ஆகாய வழியில் சப்தருஷி மண்டலத்தையும் சுவர்க்கமாகிய ஸ்வாதி மார்க்கத்தையும் எவன் காணவில்லையோ, அவன் ஆறு மாதத்தில் இறப்பான். பருவம், அமாவாசையின்றியே சந்திர சூரியமண்டலத்தை இராகு மறைப்பது போலக் காண்பவனும் திக்குகள் சுழலக் காண்பவனும் ஆறு மாதத்தில் அழிவான். நீல வர்ணமான ஈக்கள் சாதாரண உடம்பை மொய்க்கக்கண்டவன் ஒரு மாதத்தில் மரணமடைவான். தன் சிரசில். கழுகு, காகம், மாடப் புறா முதலியன உட்கார கண்டவன் ஒரு மாதத்தில் உயிர் நீப்பான் ஆகாயத்தில் கரிய யானை காணப்பட்டால், ஆறுமாதத்தில் மரிப்பான். நிறம் ஐந்தும் சுவை ஆறும் பிறழ்வுற்றுக் காணப்படின் ஆறு மாதத்தில் இறப்பான். நாவின்முனையும் மூக்கின் முனையும் புருவ நடுவும் காணாவிடில் மூன்று மாதத்தில் இறப்பான். சேற்றிடையில் மிதித்த பாதச்சுவடு சிதைவுற்றுத் தோன்றுமானால் மரணஞ்சமீபத்தவனாவான். நான்கு புறத்திலும் வானவில் தோன்றினாலும் பகலில் கண் எதிரில் பேயாடினாலும் ஒரு மாதத்தில் உடல் துறப்பான். பூரித்த தேகமுடையோர் இளைத்தாலும் இளைத்த தேகமுடையவர் பூரித்தாலும் ஒருமாதத்தில் உடல் நீப்பார்கள் பேய், பூதம், நரி, கழுதை, அசுரர்; கருங்காக்கை புலி, செந்நாய், பருந்து குரங்கு முதலியன தன்மேல் ஏறவும் அவை தன்னைத் தின்னவும் அவற்றைத் தான் தின்னவுமாகிய இவற்றில் ஒன்றைக் கண்டவன் பதினைந்து நாட்களில் பூவுலகிலிருந்து அகல்வான். குரங்கின் மேலேறிக் கொண்டு கீழ்த்திசை நோக்கிச் செல்வதாகக் கனவு கண்டவன் ஒருபட்ச காலத்தில் இறப்பான்.

ஒருவன் தன் மரண தினத்தை அறிந்து கொள்ள விரும்புவானாயின் தூய நீராடி, புனிதமான ஆடையணிந்து நித்திய கர்மத்தை முடித்து சுக்கில பட்சமும் அமர பட்சமும் என்று முறையே சொல்லப்படுகிற வலது கையையும் இடது கையையும் தண்ணீரால் அலம்பி, சுத்தமான துணியால் துடைத்து, சுகந்தமான சந்தனத்தை இருகைகளிலும் எடுத்துக் கொண்டு, உள்ளங்கை இரண்டினாலும் சிறிது நேரம் குழைத்து கைகூப்பிக் கும்பிட்டவனாய் உமாபதியை ஒருமித்த மனத்துடன் தியானித்து நூற்றியெட்டுதரம் தேவி மந்திரத்தை ஜபித்து, கைகளைப் பிரித்து நோக்க விரல்களின் கணுக்கள் ஒன்றில் கருமை நிறமாகக் காணப்படும், சிறு விரல் முதல் பெருவிரல் இறுதியாக கணுக்கள் ஒவ்வொன்றிற்கும் மும்மூன்றாய் பதினைந்து துதிகள். ஆகையால் எந்தக் கையில் கருமை தோன்றுகிறதோ அந்தக் கைக்கு உரிய பக்ஷத்தில் அவன் இறப்பான் என்றும் கட்டை விரலின் அடிக்கணுமுதல் மேல் நோக்கிப் பிரதமையாதி திதிகளாக எண்ணிக்கொண்டு செல்கையில் எந்தத் திதியில் குறி காணப்படுகிறதோ அந்தத்திதியில் அவன் இறப்பான் என்று தெரிந்து கொள்ளலாம்.

இனி சுவாசத்தினால் (மூச்சுக் காற்றினால்) உணரத்தக்க மரணக் குறிகளாவன; க்ஷணம், துடி, வலம் நிமிஷம், காஷ்டைகலை, முகூர்த்தம், இரவு பகல், பக்ஷம், மாதம், ருது வருஷம் யுகம் கற்பம்மகா கற்பம் என்னும் சிரமத்துடன் இம்முறையாகச் சிவ பெருமான் சங்கரித்து வருகிறார். நாசி வழியில் ஓடும் சுவாசமானது பிங்கலை வழியாக ஐந்து தினங்கள் செல்லுமாயின் மூன்று ஆண்டுகளிலும் பத்து தினங்கள் ஓடுமாயின் இரண்டு வருஷத்திலும், பதினைந்து தினங்கள் ஓடுமாயின், ஒரு வருஷத்திலும் உடல் நீப்பான் இரண்டு நாசிகளிலும் இருபது நாள் சுவாசம் ஓடுமாயின் ஆறு மாதத்திலும் இருபத்தைந்து தினங்கள் ஓடுமாயின் மூன்று மாதத்திலும் இருபத்தேழு நாட்கள் ஓடுமாயின் ஒரு மாதத்திலும் உயிர்விடுவான் வலது நாசி வழியாக ஆறு தினங்கள் சுவாசம் சென்றால் இரண்டு வருஷம் ஏழு மாதம் பதினெட்டு நாள் ஜீவிப்பான் எட்டு தினங்கள் சென்றால் இரண்டு வருஷம் நான்கு மாதம் இருபத்து நான்கு நாட்கள் வாழ்வான். ஒன்பது தினங்கள் சென்றால் ஒருவருஷம் ஏழுமாதம் பன்னிரண்டு தினங்கள் பிழைத்திருப்பான். பதினோரு தினங்கள் சென்றால், ஒன்பது மாதம், எட்டு நாட்கள் உலகில் இருப்பான் பன்னிரு தினங்கள் சென்றால், ஏழு மாதம் பன்னிரண்டு தினங்கள் பிராணனோடு இருப்பான். இருபத்து மூன்று தினங்கள் சென்றால் நான்கு மாதம் ஆறுநாட்கள் வாழ்வான். முப்பது தினங்கள் சென்றால் ஒருமாதம் பத்துநாள் ஜீவித்திருப்பான் முப்பத் தொரு நாட்கள் அப்படியே சென்றால் ஐந்து தினங்கள் பிழைத்திருப்பான். வாய்வழியே சுவாசம் செல்லுமாயின் மூன்று தினங்களில் இறுதி மூச்சை விடுவான். இது தான் காலச்சக்கிர கிரமம். இதை நான் உனக்குச் சொல்லி விட்டேன்! இவ்வாறு சிவபெருமான் பார்வதிதேவிக்குத் திருவாய் மலர்ந்தருளியபடியே ஸனத்குமார முனிவர் வியாசருக்குக் கூறினார்.

46. மரணத்தை வெல்லும் யோக நிலைகள்

வியாசரே! பார்வதிதேவி சிவபெருமானை நோக்கி நாதா நீங்கள் கூறிய மரணகாலக்குறிகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன் உலகினர் உயிரை எமன் வஞ்சித்துக்கவர்ந்து கொண்டு போகிறான் என்று சொல்கிறார்களே அவன் அப்பிராணனை எவ்வாறு வஞ்சித்துப் பிடித்துக் கொண்டு போகிறான்? அதையும் விபரமாகச் சொல்ல வேண்டுகிறேன்! என்றாள். அதற்கு சிவபெருமான் கூறினார். உமையே! உலகினருக்கு இதம் உண்டாவதற்காக அதையும் சொல்கிறேன்! பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) என்னும் பஞ்ச பூதங்களும் சேர்ந்ததே மனித உடலாகும் அவற்றில் ஆகாயம் சர்வவியாபியாக இருக்கிறது. மற்ற பூதங்கள் எல்லாம் ஆகாயத்திலேயே ஒடுங்கி மீண்டும் அதிலிருந்தே தோன்றுகின்றன. இந்த பஞ்சபூத உடல் காரணத்துடன் கூடியதாகையால், ஞானிகளாக இருந்தாலும் அவர்களுடைய உடலுக்கும் ஓர் அழிவு உண்டாகும் அது ஒரு போதும் நிலையானதல்ல! என்றார். அவரை பார்வதி தேவி நோக்கி, நாயகரே! முன்பு காம தேவனான மன்மதனை நீங்கள் சுட்டெரித்துவிட்டு அவன் பத்தினி இரதி பலவாறு துக்கித்து தங்களைப் பிரார்த்திக்க அவளுக்கு இரங்கி மீண்டும் மன்மதனை உயிர்பெறச் செய்தீர்கள்! யமதர்மராஜனை தங்கள் காலால் உதைத்து அவனது உயிரைப் போக்கி பிறகு பூமி தேவியின் பிரார்த்தனைக்கு இரங்கி, மீண்டும் அவனுக்கு உயிர் தந்தருளினீர்கள். கால தேவனான யமனை வென்றவர் தங்களைத்தவிர எவரேனும் உண்டு என்றால் அவர் யார் என்று அடியாளுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டாள். அதற்கு சிவபெருமான் தேவர்கள் அசுரர்கள், யக்ஷர்கள், ராக்ஷசர்கள், உரகர்கள் மானுடர்கள் முதலியோர்களாலும் வெல்ல முடியாத யமதர்மனைத் தியானத்தால் யோகஞ்செய்யும் ஞானிகள் தங்கள் உடம்புடனேயே வென்று விடுவார்கள்! என்றார். அதைக் கேட்டதும் உமாதேவி வியந்து புன்னகை செய்து, சுவாமி! அத்தகைய ஞானிகளின் சரித்திரத்தை எனக்கு விபரமாகச் சொல்லவேண்டும் என்று கேட்டாள் சிவபெருமான் கூறினார்.

நிலா முகத்தவளே! பஞ்சபூதாத்மகமான தேகமானது பூத குணம் உள்ளது. பஞ்சபூதங்களில் ஆகாயத்திலிருந்து வாயுவும் (காற்றும்) வாயுவிலிருந்து தேயுவும் (நெருப்பும்) தேயுவிலிருந்து அப்பும் (நீரும்) அப்புவிலிருந்து பிருதிவியும் (நீலமும்) தோன்றும் இவ்வைந்தும் சேருவதால் உடலாக மாறுகிறது. பிருதிவிக்கு ஐந்து குணங்களும் தண்ணீரும் நான்கு குணங்களும் தேயுவுக்கு மூன்று குணங்களும் வாயுவுக்கு இரண்டு குணங்களும் ஆகாயத்துக்குச் சப்தம் என்னும் ஒரே குணமும் உண்டு. பூதங்கள் தத்தமது குணங்களை நீங்கிய காலத்தில் உடல் அழிவு அடைகிறது ஞானி ஓர் உடலை அடைய விரும்பியபோது, அந்தப் பஞ்சபூத குணங்கள் அவ்வற்றினின்று உண்டாகின்றன. யமனை வெல்ல வேண்டும் என்று விரும்பியவன் அவனது பூததேகத்தில் விளங்கும் ஆகாயத்தைத் தன் உள்ளே கண்டு அதினிடத்திலேயே எல்லாக் குணங்களும் இருப்பதாகத் தெரிந்து கொண்டு மனத்தைப் புறஞ்செல்லாமல் ஒடுக்கி, யோகத்தில் இருக்க வேண்டும்! என்றார் சிவபெருமான்.

நாதா! தியானம், யோகம் இவற்றால் யமனைவெல்லலாம் என்பதை விளக்கிச் சொல்லவேண்டும்! என்று தேவி கேட்க, சிவபெருமான் கூறலானார் தேவியே! அந்த யோகமார்க்கம் பக்தி சிரத்தையுடையவர்களுக்கன்றி நாஸ்திகனுக்கும் தூய்மை இல்லாதவனுக்கும் அதர்மிக்கும் கூறத்தகாதது அதைச் சாதுக்களான யோகிகளின் இதத்தைக் கருதி நான் உனக்குச் சொல்லுகிறேன் கேள்! சுகமான ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, யோகத்தைப் பயிலவேண்டும் நாள்தோறும் ஏகாந்தமான ஓர் இடத்தில் இருந்து தர்ஜனியால் இரண்டு நாழிகை காலம் காதுகளை மூடிக்கொண்டு பரமசிவத்தைத் தியானித்தால் வயிற்றிலுள்ள ஜடாராக்கினியிலிருந்து ஒரு சப்தம் உண்டாகி அவனுக்குக் கேட்கும் அன்றியும் அந்த ஓசை, ஊதுவது போலக் கேட்டு வயிற்றிலுள்ள ஆகாரத்தையெல்லாம் பசனம் செய்து விடும். ஜ்வராதி ரோகங்களைப் போக்கி உபத்திரவங்களை நீக்கிவிடும். இவ்வாறே நாள்தோறும் இரண்டு நாழிகை வரையில் பயின்று வந்தவன் மரணத்தை வென்று சுயேச்சையாகத் தரிசித்து எல்லாவற்றையும் கண்டு சர்வசித்தியை அடைகிறான். மழைக்காலத்தில் மேககர்ஜனையைப் போன்ற சப்தத்தைக் கேட்டு அப்யசித்தவன், யோகியாய் ஜனன மரணங்களை நீக்கச் சூக்ஷ்மத்திலும் சூக்ஷ்மமாகவுள்ள பிரமத்தைத் தரிசித்து பதரை நீக்கி மணியைக் கொள்பவன் போல, சம்சாரம் முதலான துக்கங்களை ஒழித்து, பரமஞானத்தை அடைகிறான். இது சப்த பிரம்ம யோகம் எனப்படும், இந்த யோகாபியாச முடையவர்கள், பசி தாகங்களைப் போக்கித் தாம் விரும்பியவற்றை அடைவார்கள். இதுவே முக்திக்குக் காரணம் இது யாவருக்கும் சொல்லக் கூடாதது. நாசரகிதமானது உபாதி வர்ஜிதமாகவுள்ளது; கால பாசத்தினால் மோகிக்கப் பட்டவர்களும் பாவிகளும் துர்ப் புத்திக்காரர்களும் சப்த பிரமத்தை அறியமாட்டார்கள். சப்தப் பிரமஞானம் உண்டாகும் வரையில் பிறவித்தளை விலகாது; சப்தப் பிரமத்தை அறிந்தவர்கள் ஜன்ம பந்தத்திலிருந்து நீங்குவார்கள். தன் உடம்பில் உண்டான உறக்கம் சோம்பல் தாமசம் காமக்குரோதாதிகள் முதலியவற்றை நீக்கிச் சுகமான ஆசனத்திலிருந்து நூறுவயது சென்ற கிழவனாக இருந்தாலும் இந்த யோகத்தைப் பயில்வானேயாகில் மிருத்யுஞ்சய சரீரத்தையும் ஆரோக்கியத்தையும் தீர்க்காயுளையும் அடைகிறான். இதைப் பயின்றவனுக்கு சர்வேஸ்வரனிடம் மிகவும் நம்பிக்கை உண்டாகும்;

இந்த யோகத்திற்கு ஓங்கார மந்திர பீஜாக்ஷரங்கள் வேண்டுவதில்லை, பயிற்சியினாலேயே இதை அடையலாம். இந்தச் சப்தத்தில் ஒன்பதுவகைப் பேதங்கள் உள்ளன அவற்றையும் சொல்லுகிறேன். அவை கோஷம், காம்ஸ்யம், ஸ்ருங்கம், கண்டா வீணை , புல்லாங்குழல், துந்துபி, சங்கம், மோகம் போன்ற சப்தங்களாலும் விவேகி இத்தகைய ஒலிகளைக் கேளாது விடுத்தால் ஓங்காரத்தின் ஓசை உண்டாகும். அதையே அவன் கேட்க வேண்டும். அதுவே சிறந்தது அந்த ஓங்கார சப்தத்தை யதோத்மாகப் பயிலும் ஒருவனை புண்ணிய பாவங்கள் அணுகாது ஆறு மாதத்திற்கு அந்தச் சப்தத்தை அப்யாசித்தவன் மகாயோகியாய் எல்லா உலகங்களிலும் சஞ்சரிப்பான், கோஷம் என்ற சப்தத்தைப் பயின்றவன் ஆத்ம சுத்தி எல்லா நோய் நீக்கம் வசீகரம் முதலான சித்திகளையும் அடைவான் காம்ஸ்யம் என்பதைப் பயில்பவன் எல்லா பிராணிகளின் கமனத்தையும் தடுக்கக் கூடியவனாவான். மேலும் விஷயங்களைத் தடுக்கவும் பூதம், பேய் முதலியவற்றை அடக்கவும் வல்லவனாவான். மூன்றாவதாகிய ஸ்ருங்கம் என்ற சப்தத்தைப் பயின்றவன் பகைவரை ஒழிக்கவும் தன் இஷ்டப் படி அவர்களை நடக்கச் செய்யவும் வல்லவனாவான். கண்டா என்னும் சப்தத்தைப் பயின்றவன் எல்லாத் தேவர்களையும் தன்னிடம் வரவழைக்கும் திறனுடையவனாவான், அல்லாமல் யக்ஷர், கின்னரர், கிம்புருடர், மானுடர் முதலானவர்களையும் வசப்படுத்த வல்லவனாவான். வீணை என்னும் சப்தத்தை அப்யாசஞ் செய்பவன் தூரதிருஷ்டியை அடைவான். புல்லாங்குழல் என்னும் சப்தத்தைப் பயின்றவன் எல்லாம் அறிந்தவனாவான் துந்துபி என்பதைப் பயின்றவன் நினைத்த உருவம் எடுக்க வல்லவனாவான். மோகநாகத்தை பயில்வோன் ஆகாயத்தில் சஞ்சரிக்க வல்லவனாவான். சர்வத்தையும், பார்க்கவும் வல்லமையும் பெற்று சர்வ சித்திமானுமாவான் இவ்வாறாக சப்தத்தின் விஷயத்தை விவரித்தேன், இனி எதைப் பற்றிக் கேட்க விரும்பினாலும் கேட்கலாம் என்றார் மங்கையொரு பாங்கரமான மகாதேவர். உமாதேவி சிவபெருமானை நோக்கி, நாதா! எல்லாவற்றிற்கும் பிறப்பிடமான ஆகாயத்திலிருந்து வாயு (காற்று) தோன்றுதலின் வாயுமயமான தேகத்தினால் ஆகாய சொரூபமான பிரமத்தை எப்படி அறியலாம்? என்று கேட்டாள் அதற்கு சிவபெருமான் கூறினார்.

தேவி! பூர்வத்தில் யோகிகளின் இதத்தின் பொருட்டு விவரித்துச் சொல்லிய அவ்விஷயத்தை உனக்குச் சொல்லுகிறேன் வாயுமயமான உடல் அழிந்து போகும் என்று கால ஞானத்தால் அறிந்துகொண்டு சரீரீயானவன் பிராணாயாமம் என்னும் யோகத்தைப் பயில்வானேயாகில் தனக்கு உண்டாகும் மரணத்தைப் பதினைந்து நாட்களில் விலக்க வல்லவனாவான். அவனது இதயத்திலிருக்கும் வாயுவானது சதா ஜடராக்கினியோடு கூடி, உள்ளும் புறமும் சஞ்சரிக்கிறது அந்த வாயு எங்கும் பரவியுள்ளது. அத்தகைய வாயுவைப் புறஞ்செல்லாது தன்னுள் அடக்கும் யோகி உலகத்தை ஜெயிக்கிறான். வாயுவானது துருத்தியிலிருந்து அதைப் பூரிக்கச் செய்வது போல பிராண வாயுவானது ஒருவனின் உள்ளடங்கியிருந்தால் அவனை யோகியாக்கும் ரேசக, பூரக, கும்பகங்களால் பிராண வாயுவைத் தன் வசப்படுத்திக் கொள்பவன் மகத்தாகிறான். அவன் பல்லாயிரம் தலைகளும், பல்லாயிரம் கைகளும், பல்லாயிரம் கால்களும் அமைந்த விராட்டின் சொரூபமாகிறான். இந்த வகைப் பிராணயாமமோ காயத்திரி மந்திரத்தை கிரசோடு கூட்டி வியாஹூதி பூர்வமாய் பிராணவாயுவை அடக்கி ரேசகாதி நிலையிலிருந்து மும்முறை சாவதானமாய் ஜபிப்பதே பிராணாயாமமாகும். அதைவிடச் சிறந்த யோக மில்லை. அதுவே சித்திகள் அனைத்தையும் கொடுக்கக் கூடியது. சந்திரன் சூரியன் முதலான கிரகங்கள் அழியும் என்றாலும் பிராணாயாமம் செய்வோர் ஒரு காலத்திலும் அழிய மாட்டார்கள். அவர்கள் மீண்டும் பிறப்பெய்தார். நூறு ஆண்டுக்காலம் வரையில் புண்ணிய தீரத்திலிருந்து தருப்பை நுனியின் ஜலத்தை அருந்தி, உயிர் காத்துக் கடுந்தவஞ் செய்தவன் பெறும் பயனை மேற்சொல்லியபடி ஒரு பிராணாயாமஞ் செய்தவன் பெறுவான் என்றால் அதன் பயனை என்ன வென்று சொல்வது? காலையில் எழுந்து ஒருதரமாவது விதிப்படி பிராணாயாமஞ் செய்த அந்தணர்கள் பிரமலோகத்தை அடைவார்கள். தனிமையாய்த் திவ்விய ஆசனத்திலிருந்து இந்தப் பிராணாயாமத்தை அப்யாசித்தால் ஜராமரணங்களை நீக்கி, வாயுவைப் போல ஆகாயத்தில் சஞ்சரிக்கும் வல்லபமும் சித்தனைப் போன்ற உருவமும் மின்னலைப் போன்ற தேககாந்தியும், அறிவின் விசேஷமாகிய ஆற்றலும் பராக்கிரமமும் வாயு வேகமும் ஆரோக்கியமும் தேவர்களுக்கும் கிட்டாத பதவியும் அடையச் செய்யும் இதுவே பிராணாயாமத்தின் பயன். இனி தேயுவினால் (நெருப்பினால்) அடையுஞ் சித்தியைச் சொல்லுகிறேன் புனித ஆசனத்தில் சுத்தனாக இருந்து, மனித நடமாட்டம் பனிகுளிர் முதலிய இடையூறுகள் இல்லாத தன்னந்தனிமையான இடத்தில் ஒரே மனதாய் மேல் நோக்குடன் அரை முகூர்த்த காலம் இருபுருவங்களின் மத்தியில் ஈஸ்வர சம்பந்தமான வெண்மை செம்மை கருமை பசுமை வானவில் போன்ற சித்திரம் என்ற நிறங்கள் அமைந்த ஜோதியை இளஞ்சூரியனைப் போல விளங்கத் தரிசித்தவன் புலனடக்கம் பிற உடலில் புகுதல்(கூடுவிட்டுக் கூடுபாய்தல்) அணிமாதி அஷ்ட சித்திகள் ஞானநோக்கம் தொலைவிலுள்ள ஒலியையும் உற்றுக் கேட்கும் ஆற்றல் பார்ப்பதற்கு அருமையானவற்றைப் பார்க்கும் வல்லமை முதலானவற்றை அடைவான். இதை எப்பொழுதும் பழகுபவன் ஆகாய சஞ்சாரம் செய்பவனாவான். வேதாத்தியயனஞ் செய்தவர்களாயினும் ஞானிகளாயினும் முன்கர்மவசத்தால் என்னுடைய உருவத்தைப் பார்க்க வல்லபமிருப்பினும் பார்க்க மாட்டார்கள். என் பிரபாவத்தைக் கேட்கச் சக்தியிருந்தாலும் செவிடர் போலக் கேட்கமாட்டார்கள். முடத்தன்மையால் குருடர்களைப் போல என்னை அறியமாட்டார்கள். அத்தகைய வஸ்துவையானே அறிந்தவன் அணுவுக்கு அணுவாயும் மகத்துக்கு மகத்தாயும் அஞ்ஞான இருளுக்கு அதிகரித்த ஜோதிமயமான தேஜஸைத் தரிசித்தவன் மரணத்தை வெல்கிறான். இதை விட ஆன்மாக்களைக் கடைத்தேற்றும் வழி பிரிதொன்றில்லை. தேஜஸினால் உண்டாகும் சித்தியை நான் உனக்குச் சொன்னேன்.

இனி அப்புவால் (நீரால்) உண்டாகும் சித்தியைச் சொல்லுகிறேன். நீராடல் முதலானவற்றை முடித்துக் கொண்டு பரிசுத்தனாய் நிர்மலமான ஸ்தானத்தில் ஏகாந்தமாக இருந்து, சுகமான ஆசனத்தில் உட்கார்ந்து மனத்தைப் புலன்வழி செலுத்தாமல் தன் உடலை நிமிர்த்திக் கைகளைக் கூப்பி, வாயைப் பறவையின் மூக்குப் போலக் குனித்து வாய்வழியாக வாயுவை உட்கொள்ளுவானேயாகில் தாடையின் உட்பிரதேசித்திலிருந்து ஒருவகையான நீர் உண்டாகும். அது குளுமையான அமிர்த நீர் அதை அருந்தியவன் திவ்விய உடலை அடையப் பெற்று மாபெரும் தேஜஸ்வாய்ந்தவனாய்ப் பசிதாகங்களைப் போக்கி வலிமையில் யானையையும் வேகத்தில் குதிரையையும் போன்று விளங்கி வெகுத்தொலைப் பார்வையும் வெகுதொலை ஒலிக் கேட்கும் ஆற்றலும் பெற்று கந்தர்வ வித்தியாதரர் முதலான கணங்களைப் போன்ற தேஜஸும் புத்தியில் பிரஹஸ் பதியையும் தேவ வருஷங்கள் நூறு வரையில் வாழ்வையும் அடைவான். இன்னும் ஓர் இரகசியத்தையும் சொல்லுகிறேன் அது தேவர்களுக்கும் அடைவதற்கு அசாத்தியமானது அதாவது நாவை வளைத்து அதன் முனையை உள் நாக்கில் வளைத்து உள் நாக்குடன் சேர்க்க அதினின்றும் அமிர்தமயமாகக் குளுமையான நீர் உண்டாகும். அந்த அமிர்தத்தை அருந்தியவன் அமரத்துவத்தை அடைகிறான். நாவினை (ஜே) ரேபம்போலவும் மணிநாக்கின் வளைவைப் போலவும் வளைந்து மூலாதார ஸ்தானத்தைப் பந்தித்தால் புனிதமான இதய தாமரையிலிருந்து ஓர் பித்து உண்டாகி நாவின் நுனியை அடையும், ஆனந்தகரமும் ஜகத்காரமும் சம்சார துன்ப நீக்கமும் நிர்மலமான பிரமஸ்வரூப உணர்ச்சியும் நியமனை வெல்லுதலும் அமரத்துவமும் பசிதாக நீக்கமும் செய்யவல்லது இந்த அமிர்தமேயாகும். இதை லம்பிகாயோகம் என்பார்கள் மேற்கூறியவைகளில் ஒன்றைப் பயில்வானேயாகில் அவனுடைய தைரியத்தினாலே காலதேவனான யமனையும் வென்று பிரம்மானத்தத்தை அடைகிறான். உலக இன்பம் முழுவதும் சொப்பனம் போலும் என்று உணர்ந்து அவற்றில் வெறுப்புற்று சுவர்க்காதி போகங்களைக் கருதாமல் நிலையான என் திருவடியில் மனதை நிலைநிறுத்தியவர்கள் என் சாயுஜ்யத்தை அடைந்து கற்ப கோடிகாலம் வாழ்ந்திருப்பார்கள்.
இவ்வாறு சிவபெருமான் பார்வதி தேவியாருக்குக் கூறியதை ஸனத்குமார முனிவர் வியாச முனிவருக்கு எடுத்துரைத்தார்.

47. சாயா புருஷ தரிசனமும் புராணம் கேட்டலும்

வியாசரே! உமாதேவி உலக நாதரை நோக்கி, நாதாதாங்கள் கூறிய காலஞானத்தையும் யோகசாதனத்தையும் உணர்ந்தேன் இன்னும் இது போன்ற விஷயங்களைச் சொல்லவேண்டும் என்று கேட்டாள். சிவபெருமான் கூறினார். தேவிஸ பாவங்கள் அனைத்தையும் ஒழிக்கத்தக்க சாயாப் புருஷ லக்ஷணத்தைச் சொல்லுகிறேன், கேள்! சுந்தரி பகலில் சூரியனையாவது இரவில் சந்திரனையாவது தனக்குப் பின்புறமாக்கி நீராடித் தூய ஆடை அணிந்துசந்தன புஷ்பங்களால் அலங்கரித்துக் கொண்டு என் பஞ்சாக்ஷர மந்திரத்தையும் தேவியான உனது நவாக்ஷரி மந்திரத்தையும் ஜபித்துத் தன் தேக சாயையை முதலில் பூமியில் பார்த்துப் பிறகு சிறிது நேரத்தில் ஆகாயத்தில் மீண்டும் அவ்வகையே பார்க்க வேண்டும் ஆகாயத்தில் தோன்றும் சாயை என்னுடையது அதை நிர்மலமான மனத்துடன் தரிசித்தால் பிரமஹத்தி முதலான பாவங்கள் எல்லாம் ஒழியும். கர்ம சீலர்களும் தவமுனிவர்களும் யாகஞ் செய்தவர்களும் அடையுங் கதியை அடைவதற்கு யோக சாஸ்திரத்தைப் பயிலவேண்டும். அந்த யோகத்திற்கு முக்கியமாக வேண்டுவது ஞானம். அந்த ஞானமோ முறையாக அடையத்தக்கது. அது முறையாக உண்டாவதற்குப் பாவ ஒழிய வேண்டும் பாவ ஒழிப்பிற்குப் புராணங்களைப் படிக்கக் கேட்க வேண்டும் புராணங்களைக் கேட்பதினாலேயே சம்சார பந்தத்தை(பிறவித்தளையை) நீக்கி ஞானத்தை எய்தலாம்.

அது அறம், பொருள், இன்பம் என்பனவற்றிற்குக் காரணமாயும் மோக்ஷத்துக்கு வழியாகவும் இருக்கிறது ஆகையால் மனிதப் பிறவி எடுத்தோர். அவசியம் புராணங்களை வாசித்தும் கேட்டும் தங்கள் ஜன்மசாபல்யத்தை அடையவேண்டும் யாகம், தானம், தவம், தீர்த்த யாத்திரை முதலியவற்றால் வரும் பயனைப் புராணம் கேட்பது ஒன்றினாலேயே பெறலாம், அறநெறியை விளக்கத்தக்கப் புராணங்கள் இல்லாவிட்டால் மனிதர்கள் இதத்திலோ, பரத்திலோ சுகமடையமாட்டார்கள். உலகத்தின் படைப்பு முதலான கிரமங்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் யாவருக்கும் அது விளங்காமையால் பல காலம் நீடித்து அறநூல் ஆராய்ச்சி செய்ய முடியாதவர்கள். சாமானியமாகப் புராணங்கள் கேட்பதாலேயே அவற்றையெல்லாம் உணரலாகும். புராணங்களில் ஆதிசிருஷ்டியும் சூரிய சந்திர வமிச விருத்தியும் மனுவந்தரக் கிரமமும் தானக்கிரமமும் ஆசாரமுறையும் கற்பங்களும் பிரமதேவரால் சுயம்புவாய்ச் சொல்லப்பட்டுள்ளன. இத்தகையப் புராணங்கள் முப்பத்தாறு உள்ளன. அவற்றுள் ஒரு புராணத்தையாவது பக்தியோடு முற்றிலும் கேட்டவன். வனத்திலிருந்து நான்கு வேதங்களையும் ஒருமுறை பாராயணம் செய்து முடித்த பயனை அடையலாம். யாகம், தானம், தவம் முதலியவற்றினால் உண்டாகும் பலனைத் தர்ம சாஸ்திரங்களை வாசித்து உணர வேண்டும். இவ்வாறு சிவபெருமான் பார்வதி தேவிக்குக் கூறிய படியே ஸனத்குமார வியாசருக்குக் கூறினார். அந்த வியாச பகவானிடம் கேட்டபடியே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இவ்வாறு சூதபுராணிகர் நைமிசாரணியமுனிவர்களுக்கு சொன்னார்.

48. மும்மூர்த்திகளின் தோற்றம்

நைமிசாரணியவாசிகள், சூத புராணிகரை நோக்கி, மகானே! சிவபெருமானை இலிங்கமூர்த்தத்திலும் பிறதேவர்களை விக்கிரவடிவிலும் உலகினர் பூஜை செய்வதற்குக் காரணம் என்ன என்பதை எங்களுக்கு விளக்கமாகச் சொல்ல வேண்டும்! என்று வேண்டிக் கொண்டார்கள் அதற்கு சூதமா முனிவர் கூறலானார். முன்பு இந்த விஷயத்தை வியாசர் ஸனத்குமாரமுனிவரிடம் கேட்டு, என்னிடமும் அதைச் சொல்லியிருக்கிறார் அவர் எனக்குக் கூறியவாறே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் கேளுங்கள். நைமிசாரணிய முனிவர்களே! முன்பு தாவர ஜங்கமங்களெல்லாம் நலிவுற்றுப்பூமி முழுவதும் தண்ணீரால் மூடப்பட்டிருந்தது பிருமா, விஷ்ணு, ருத்திரர் மூவரும் அந்த ஜலத்திலிருந்து தோன்றினார்கள். அவர்கள் தோன்றிய வழியைப் பண்டிதர்களும் அறிய மாட்டார்கள். தாவர ஜங்கமங்கள் நலிவுற்று ஒரே நீர் மயமாக இருக்கவே பெரியதான வாயு தோன்றி அதை உலர வைத்தது. அதோடு துவாதச ஆதித்தர்கள்  நான்கு திக்குகளில் நால்வரும் ஆகாயத்தில் எண்மருமாகப் பிரகாசித்து உலரச் செய்தார்கள். அப்போது பாதலலோகத்திலிருந்து காலக்கினி ருத்திரர் சர்வதேஜஸோடு, தோன்றினார். அவரும் சூரிய தேஜஸோடு நீரை உலர்த்தி யாருமறியாமல் பாதலத்தை அடைந்தார் இவ்வாறு நீர் உலர்த்தப் பட்டதும் ஏழு மேகங்கள் தோன்றி மழை பொழிந்து, முன்போல எங்கும் நீர் மயமாக்கின. இப்படியே மாறிமாறி உண்டாயிற்று. அதுவே இயற்கையாயிற்று. மும்மூர்த்திகளில் அதிதீக்ஷண்ய தேக காந்தியுடன் கூடிய ருத்திர மூர்த்தியை நோக்கி நான்முகனும் திருமாலும் வணங்கி உலகங்களைப் படைக்க வேண்டும் என்று இறைஞ்சினார்கள். அவ்வாறே ஆகுக என்று ருத்திரர் சொல்லி நீருக்குள் மறைந்தார். பிரம்மாவும் விஷ்ணுவும் அவர் திரும்பி வருவார் என்று எதிர்பார்த்த வண்ணம் ஓராயிரம் ஆண்டுகள் வரை தவமிருந்தும், அவர் திரும்பி வரவில்லை. எனவே பிருமதேவர் விஷ்ணுவை நோக்கி, சிருஷ்டி எவ்வாறாவது? என்று கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு என்வார்த்தையைக் கேள் காலதாமதம் வேண்டாம். உலகப் படைப்பில் நீ முயல்வாயானால் அதற்கு வேண்டிய ஆற்றலைக் கொடுக்கிறேன். என்றார். பிரமன் சிருஷ்டி செய்யத் துவங்கி அண்டஜம். ஸ்வேதஜம், உற்பீஜம். சாரயுஜம் என்னும் நால்வகை யோனிகளான கந்தர்வ யக்ஷ, ராக்ஷச, பைசாச மானுட, மிருக, பசு, பக்ஷி, தாவராதிகளைப் படைத்தார். இவ்வாறு படைத்த பிறகு நீரினுள் மூழ்கிய ருத்திரர் சிருஷ்டி செய்ய மீண்டும் எழுந்தபோது பிரபஞ்சம் படைக்கப்பட்டிருப்பதைக் கண்டு கோபங்கொண்டு தன் முகத்திலிருந்து ஒரு தேஜஸை விடுத்தார் அது காலாக்கினியாகிப் பிரமனது சிருஷ்டிகள் அனைத்தையும் அழித்தது. அதைக்கண்ட பிருமதேவன் குழம்பி ருத்திரர்மூர்த்தியை நோக்கி ஈசானமூர்த்தியை! காலரூபியே! முக்கண்ணரே! வரதனே! நீலகண்டனே! பைரவனே! சம்போ! கபர்தினே! பசுபதியே! திரிசூலதாரியே! கபாலமாலினே! தேவ தேவா! பிரைசூடிய பெம்மானே சங்கரா! சரணம் சரணம்! என்று ஸ்தோத்திரம் செய்தார். அதைக் கேட்டு மகிழ்ந்த இறைவன்; பிரமனே! உன் ஸ்தோத்திரத்தைக் கேட்டு மகிழ்ந்தேன் என்னை வேண்டியவர்களைக் காக்கிறேன். ஆகையால் உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்! என்றார். அதற்கு நான் படைத்த பிரபஞ்சம் முன்புபோலவே இருக்க வேண்டும்! என்றார்! நான்முகன்.

என் முகத்தில் உண்டான தேஜஸை எவ்விடத்தில் ஒடுக்கலாம்? என்று ருத்திரர் கேட்கவே பிரமதேவன் சற்று ஆலோசித்துவிட்டு நாதனே! பிரபஞ்சத்திற்கு அனுகூலமாயிருக்க சூரியனிடம் இந்தத் தேஜஸை வைத்து விட்டு நீரே சூரியனிடமிருந்து சிருஷ்டி முதலான தொழில்களைச் செய்து பிரபஞ்சத்தில் நான்கு வர்ணத்தினராலும் பூஜிக்கப்பெற்றுக் கற்பாந்தத்தில் நீரே நாசஞ் செய்யவும் வேண்டுகிறேன்! என்றார். அவ்வாறு கூறிய பிரமனைப் பார்த்து ருத்திரர் புன்னகை செய்து என்னை இலிங்க மூர்த்தத்தில் பூசித்தாலன்றி உனக்குச் சிருஷ்டியாற்றல் கை கூடாது என்று கூறித் தேஜோமயமான இலிங்கவடிவமானார். அந்த வடிவோ பாதளத்திற்கு அடியில் படிந்தும் அண்டாண்ட சராசரங்களுக்கு அப்பாலும் உயர்ந்தும் ஓங்கியது. இவ்வாறான தேஜோமயலிங்கத்தின் அடியையும் முடியையும் அறிவதற்குப் பிருமதேவனும் மகாவிஷ்ணுவும் ஆகாயத்திலிருந்து ஓர் அசரீரி ஒலித்தது. சர்வ மயமாகிய பரமேஸ்வரரின் தேஜோமயமான லிங்கமாகிய இதைப் பூஜிப்பவர்கள் அறம்,பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பேறுகளையும் அஷ்டமா சித்திகளையும் அனைத்துலகிலும் சஞ்சரிக்கும் ஆற்றலும், படைத்தல் காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களை செய்வதற்கான தகுதியையும் பெறுவார்கள், மேன்மையான பதவியை அடைய லிங்கபூஜையை தவிர வேறு கதியில்லை. ஆகையால் இந்த இலிங்கத்தை அர்ச்சித்து உங்கள் மனோரதங்களை அடைவீர்களாக! என்று அந்த வானொலி வாக்கு கூறியது. அதைக் கேட்டதும் அயனும் அரியும் அதன் அடிமுடியைத் தேடி விரும்பிதை விட்டு விட்டுப் பல காலம் அதையே பூஜிப்பாராயினர்.

49. நான்முகனும் மாலவனும் வரம்பெறுதல்

சவுனகாதி முனிவர்களே! இவ்விதமாகத் தோன்றிய இலிங்கத்தை விஷ்ணுமூர்த்தி எல்லா உபசாரங்களோடும் விதிவழுவாமல் பூஜை செய்து பலவாறாகவும் தோத்திரம் செய்து சதருத்திரிய நாமங்களால் அர்ச்சனை செய்து. திவ்விய நாமங்களால் பூஜித்தார். அவர் பூஜைக்கு மகிழ்ந்து இலங்கத்திலிருந்து மஹாதேவர் தோன்றி கருணைப்பார்வையோடு பிருமாவையும் திருமாலையும் நோக்கி, நீங்கள் சொல்லிய துதிகளைக் கேட்டு மகிழ்ந்தேன். விஷ்ணுவே! தேவர் அசுரர் மானுடர்களால் நீ பூஜிக்கப்பட்டவனாய் பகைவர் அனைவரையும் வென்றடக்க வல்லவனாய் ஒருவேளை என்னையுங் கூட வெல்ல வல்லவனாய் இருக்கும் வல்லமையை வரமாகக்கொடுத்தேன் பிருமதேவனே அழியாத சிருஷ்டி சக்தியையும் மனுவந்தராதிக்கிரமங்களைம் இந்திராதி பேதங்களையும் ஏக காலத்தில் நான்கு வேதங்களையும் நான்கு முகத்தாலும் உச்சரிக்கும் வல்லமையையும் உனக்குத் தந்தேன்! என்று சொல்லிமறைந்தார் ஆகையால் முனிவர்களே உலகத்தில் அறம் பொருள் முதலான புருஷார்த்தங்களைக் கொடுக்கவல்ல தவம் வேறு எதுவும் இல்லை இந்த உலகத்தில் புத்திர பவுத்திராதி இராஜ்ய சம்பத்துக்களையும் சுவர்க்க போகங்களையும் மோக்ஷ சாம்ராஜ்யாங்களைம் கொடுக்க வல்லது சிவலிங்க பூஜையேயன்றி வேறில்லை என்று எனது குருவான வியாச மகரிஷியால் நான் கேட்டறிந்ததை இப்போது உங்களுக்குச் சொன்னேன் இன்னும் கேட்க வேண்டியது இருந்தால் கேளுங்கள்! இவ்வாறு கூறினார் சூதமுனிவர்.

50. உலகப் படைப்பு

சுவனகர் முதலான முனிவர்கள், சூதபுராணிகரை நோக்கி மகாத்மாவே! இதுவரை நீங்கள் சொன்னவற்றைக் கேட்டு நாங்கள் மகிழ்ந்தோம். இனி இந்த உலகம் பிரமதேவனால் எவ்வாறு படைக்கப்பட்டதோ அதையும் விபரமாகச் சொல்ல வேண்டும்! என்று கேட்டார்கள். சூத முனிவர் சொல்லத் துவங்கினார். நைமிசாரணியவாசிகளே! அகண்டாகாரமானவராயும் சத்துமகத்துமானவராயும் மமதாதிகள் அற்றவராயும் விஷ்ணு பக்தியுடையவராயும் பெருந்தேஜஸையுடையவராயும் கற்பம், காலம் முதலியவற்றை வரையறுப்பவராயும் வேதங்களில் ஹிரண்யகர்ப்பர் என்று சொல்லப்படுபவராயும் விளங்கும் பிருமதேவருக்கு நமஸ்காரம்! முனிவர்களே! சிருஷ்டி கர்த்தா பிரமதேவன் என்றும் ஸ்திதிகர்த்தா விஷ்ணு என்றும் சங்கார கர்த்தா உருத்திரர் என்றும் இவர்கள் மூவரும் சுத்த சாக்ஷõத்கார பரமசிவத்தினின்றும் தோன்றியவர்களே என்றும் உணர்வீர்களாக. பிரமதேவர் பலவிதமான சிருஷ்டிகளையும் உருவாக்க வேண்டும் என்ற கருத்துடையவராக முதலில் ஜலத்தைப் படைத்து, அதில் தம் வீரியத்தை விடுத்தார் அது பொன்மயமான ஓர் அண்டமாயிற்று பிரமதேவர் முன்பு சிவபெருமானிடம் பெற்றுள்ள வரத்தினால் சிருஷ்டி செய்யும் வல்லமையையுடையவராய் அந்தப் பொன்னிறமான அண்டத்திலிருந்தே தோன்றிச் சுயம்புவானார். அவர் சிறிது காலம் அந்த ஜலத்தில் வசித்துக் கொண்டிருந்தார். பிறகு அந்த அண்டத்தை இரண்டாக்கி அதில் ஒன்றைச் சுவர்க்கமாகவும், ஒன்றைப் பூமியாகவும் பதினான்கு உலகங்களாகவும், பூமிக்கும் சுவர்க்கத்துக்கும் இடையே ஆகாயமாகவும் படைத்தார், இந்தப் பூமி பத்துத் திக்குகளுடன் கூடியதாய் ஜலத்தின்மீது மிதந்து கொண்டிருந்தது. இந்தப் பூமியில் காலம், மனம், வாக்கு, காமம், குரோதம் ஆசை ஆகியவற்றை உண்டாக்கினார் பிறகு மரீசி, அத்திரி, ஆங்கிரஸர், புலஸ்தியர், கிருது, வசிஷ்டர் என்னும் எழுவரைப் பிருமா தம் மானஸீகப்புத்திரர்களாகப் படைத்தார் அவர்கள் சப்த பிரமாக்கள் என்று வழங்க்படுகிறார்கள். அதன் பிறகு ஸனத்குமாரரை உண்டாக்கினார். அந்த ஸனத்குமாரர் அந்தச் சப்த பிரமாக்களிலும் சிறந்து விளங்கினார் அம்முனிகள் எழுவரிடம் பல வம்சங்கள் உதித்தன. மின்னல், இடி, மேகம், வானவில் பஜன்யன், முதலானவற்றைப் படைத்தார். இருக்கு, யஜுர், சாமம், அதர்வனம், என்னும் நான்கு வேதங்களையும் யாகத்தையும் படைத்தார் அவ்வேதங்களில் கூறிய முறைப்படி பலர் பலவிதமான யாகங்களைச் செய்து தேவர்களைத் திருப்தி செய்திருக்கிறார்கள். மீண்டும் பிருமதேவர் தம் முகத்திலிருந்து தேவர்களையும் மார்பிலிருந்து பிதுர் தேவர்களையும் புஷ்டத்திலிருந்து அசுரரையும் பிற அவயங்களிலிருந்து பலவிதமான பூதங்களையும் படைத்தார். இவ்வாறு தாம் படைத்த பிராணிகள் விருத்தியடையாமல் நலிவுறுவதைக் கண்ட பிருமதேவர் தம் தேகத்தை இரண்டாக்கி ஆண் பெண் வடிவங்களாய்த் தம் மகிமையால் மீண்டும் முன்போலப் படைத்து படைப்புத்தொழில் செய்ய மனுவைப் படைத்தார். அந்த வைரஜன் என்னும் மனுவோ பல்வகை ஜீவன்களையும் உண்டாக்கினார். இவ்வாறு ஆதியாகிய சிருஷ்டிக் கிரமத்தை வாசிப்பவரும் கேட்பவர்களும் கீர்த்தியும் தீர்க்காயுளும் புத்திர பாக்கியமும் அகண்ட ஐசுவரியமும் அடைந்து நல்வாழ்வு வாழ்ந்து. இறுதியில் சிவலோகத்தை அடைவார்கள்.

51. உலகவிருத்தி

நைமிசாரணிய முனிவர்களே! இவ்வாறு சிருஷ்டியிலே விருப்பங் கொண்ட பிருமதேவரின் மகிமையினால் சதரூபை என்ற பெண் ஒருத்தி உண்டானாள். தர்மத்தினால் அயானிஜையாகத் தோன்றிய அந்தச் சதருபை அநேக காலம் தவஞ்செய்து சுவாயம்புமனுவைத் திருமணஞ் செய்து கொண்டு பிரியவிரதன் உத்தானபாதன் என்னும் இரண்டு புதல்வர்களைப் பெற்றாள். இந்தச் சுவாயம்பு மனுவினால் தான் எழுபத்தோரு யுகங்கள் ஒரு மனுவின் காலம் என்று வரையறுக்கப் பட்டது. சுவாயம்பு மனுவுக்கும் சத்ரூபைக்கும் பல பெண்கள் பிறந்தார்கள். கர்த்தம பிரஜாபதிக்குக் காம்யை என்ற கன்னிகை தோன்றினாள். காம்யை என்பவளிடத்தில் சாம்ராட், அஷி, விராட், பிரபு என்ற நான்கு புதல்வர்கள் தோன்றினார்கள். உத்தான பாதன் இந்திரனுக்குச் சமமான குமாரர்களைப் பெற்றான். தர்மத்தின் கன்னிகை சுநீதியின் கர்ப்பத்தில் உத்தானபாதனுக்குப் புதல்வனாக துருவன் தோன்றினான். அந்த துருவன் இளமையிலேயே மூவாயிரம் ஆண்டுகள் தவஞ்செய்து அழியாது உயர் பதவியை அடைந்து சப்த ரிஷிகளின் மண்டலத்துக்கு மேலேயிருந்து, நவக்கிரங்களுக்கு ஆதாரமாய் ஜோதிஸ்சக்கரத்தின் சூத்திரத்தைக் கைப்பற்றிக் கொண்டு விளங்குகிறான், துருவனுக்குப் புஷ்டி என்னும் கன்னிகையும் தான்யன் என்னும் குமாரனும் பிறந்தார்கள். புஷ்டி என்பவளிடம் ரிபு ரிபுஞ்சயன் விப்பிரன்; விரகலன் விருகதேஜஸன் என்ற ஐந்து புத்திரர்கள் பிறந்தார்கள். ரிபு என்பவன் புஷ்கரிணி என்பவளை மணந்து சாக்ஷúஸன் என்ற மனுவைப் பெற்றான். வைராஜ மனுவினிடம் அநட்வலை என்பவருக்கு ருரு, பூரு, சதத்விம்னன், தபஸ்வி, ஸத்யஸித்து, கவி, அக்னிஷ், மோமன், அதிராத்திரன், அதிமன்யு, சுயேசசன் என்ற பதின்மர் பிறந்தனர். ருரு என்பவன் ஆகனேயி என்ற பெண்ணை மணந்து அங்கன், சுமனஸ், கியாதி, கிருதி, ஆங்கிரஸ், ஸ்ரஜி என்ற அறுவரைப் பெற்றான். அங்கன் ஸுநீதி என்பவனிடம் வேனராஜனைப் பெற்றான். அந்த வேனனுடைய அரசாட்சியில் ஏற்பட்ட குறையினால் சந்ததி விருத்தியில்லாமல் வருந்தும்போது வேதியர் அவனது கையை மதனஞ்செய்ய அவனது வலது கையிலிருந்து பிருகு சக்கரவர்த்தி வில்லும் அம்பும் ஸூர்ய தேஜஸும் சகல சாஸ்திரவுணர்ச்சியும் கொண்டு க்ஷத்திரிய முதல்வனுமாகப் பிறந்து உலகைச் சமமாகத் திருத்தி ஆட்சி புரிந்தான். பற்பல இராஜரூப அஸ்வமேத யாகங்களைச் செய்தான் பிருது என்பவனால் திருத்தப்பட்டதாலேயே இந்த உலகத்திற்குப் பிருதுவி என்ற பெயர் உண்டாயிற்று. தேவர் முனிவர் பிதுர்க்கள் கந்தர்வர்கள் முதலிய எல்லோருக்கும் உணவு உண்டாகும்படி பலவிதமான தானியங்கள் விளையத்தக்க பயிர்களும் செடிகளும் விருத்தி செய்து இந்தப் பூமி முழுமைக்கும் சக்கவர்த்தியாக பிருதுவிளங்கினான். அவனது கொடையினாலே தான் யாவரும் தங்கள் பசியைத் தணித்துக் கொள்ளும் வழியை அறிந்தார்கள். பிருதுவுக்கு ஸூதமாகதர் என்ற இரண்டு புதல்வர்கள் பிறந்தார்கள். அவர்களைத் தன் படைகளுக்குத் தலைவர்களாக்கிக் கொண்டான்.

52. பிருது வம்ச விருத்தி

முனிவர்களே! பிருது சக்கரவர்த்திக்கு ஹவிர்த்தானி, ஹவிர்த்தாமன் என்ற இரண்டு புதல்வர்கள் மீண்டும் பிறந்தார்கள். ஹவிர்த்தாமன் சிகண்டினியை மணந்து பிராசீனபர்ஹி என்ற கன்னிகையையும் பிரசேதஸ் என்ற பெயருடைய பத்துப் புதல்வர்களையும் பெற்றான். பிராசீனபர்ஹி சமுத்திர குமாரியாவள் அவளிடம் தோன்றிய பதின்மரும், வேதங்களில் வல்லவர்களாகவும் ஒரேவிதமான தர்மானுஷ்டானம் செய்வோருமாகப் பத்தாயிரம் ஆண்டுகள் கடலில் மூழ்கித் தவஞ்செய்தார்கள். அப்போது உலகம் ஆள்வோரின்றி உலகம் முழுவதும் செடிகளும் கொடிகளும் மரங்களுமாகிப் பிரஜைகள் குறைந்தன. இவ்விதமாகத் தாவரங்கள் வளர்ந்ததையறிந்த தசபிரசேதசுக்கள் தங்கள் கோபாக்கினியால் அவற்றையும் ஜனங்களையும் நாசஞ் செய்ய முயன்றனர். இதைக் கண்ட சோமராஜன் அவர்களை அவ்வாறு செய்யதவாறும் கோபந்தணியுமாறும் வேண்டினான். மீண்டும் அவன் நான் ஒரு கன்னிகையைத் தங்களுக்காகவே வைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் இவ்வாறு செய்வதாள் இந்தப்பிரபஞ்சமே அழிந்து விடுமே என்று எண்ணித்தான் அவளை கல்யாணம் செய்து கொண்டால் பிரபஞ்ச விருத்தியுண்டாகும். அவளிடம் என்னுடைய அரைப் பங்கு தேஜஸாலும் உங்களுடைய அரைப்பங்கு தேஜஸாலும் தக்ஷப்பிரஜாப்தி உற்பத்தியாகப் போகிறான். அவன் உக்கிரமான பிரமதேஜஸோடு பிரபஞ்ச சிருஷ்டியைச் செய்யப் போகிறான் என்று சொன்னான். அதற்கு இசைந்த பதின்மரும் அவளைத் தர்ம மார்க்கமாகத் திருமணஞ் செய்து கொண்டார்கள். அவளிடம் தக்ஷப்பிரஜாபதி சந்திரன் அம்சத்தாலும் இருவரம்சத்தாலும் உண்டானான். தக்ஷன் சராசரங்களையும் சதுர்ப்பாத ஜந்துக்களையும், திரியக்குகளையும் சிருஷ்டிக்க எண்ணி முதல் சில கன்னியரை உண்டாக்கி, அக்கன்னியரில் பதின்மரைத்தான் மணந்தும் பதின்மூவரைக் காசிபருக்கும் மற்றோரை நக்ஷத்திரங்களுக்கும் கொடுத்தான். அக்கன்னியரிடமிருந்து தேவ அசுரர்களும், பக்ஷிகளும் நாகங்களும் இன்னும் அநேகமானவைகளும் உண்டாயின. அது முதற்கொண்டே சம்போகஞ் செய்வதால் சிருஷ்டியாகிறதேயல்லாமல் அதற்கும் முன்பு மனசங்கற்பத்தினாலும் பார்வையாலும் ஸ்பரிசத்தாலுமே படைப்புகள் உண்டாயின.

இவ்வாறு சூத முனிவர் கூறி அவரை சவுனகாதி முனிவர்கள் நோக்கி, சூதமுனிவரே! முன்பு தக்ஷப்பரஜாபதி பிரமதேவரின் பெருவிரலிலிருந்து தோன்றினான் என்று கூறினீர்களே! இப்போது தசப்பிரசேதசுக்களுக்குப் புத்திரனாக அவதரித்தான் என்றும் தன் புத்திரியைச் சந்திரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான் என்றும் சொல்வது சந்தேகமாக இருப்பதால் இதை விளக்கவேண்டும் என்றார்கள் சூத முனிவர் கூறலானார். உற்பத்தி நாசம் என்பது பிருமதேவன் முதலானவர்களுக்கும் கற்பந்தோறும் உண்டாவதாலும் பூர்வத்தில் சிருஷ்டியானது மானசீகமாக இருந்ததாலும் ஜேஷ்ட கனிஷ்ட கிரமமும் பெண் புத்திரன் என்ற கிரமமும் முறையே அனுசரித்துக் கல்யாணஞ் செய்யவேண்டும் என்ற கிரமமும் இருக்கவில்லை. ஆண் பெண் கூடிய பிறகே இத்தகைய முறைகள் ஏற்பட்டன. இதைப்பற்றிப் பண்டிதராக இருப்பவர்கள் சந்தேகப்படுவது தவறு. தக்ஷப்பிரஜாபதியால் ஏற்பட்ட பிரபஞ்சசிருஷ்டியின் ஆரம்பத்தைப் பக்தியோடு கேட்பவர்களும் படிப்பவர்களும் புத்திரச் செல்வமும் தீர்க்காயுளும் சிவலோக சாம்ராஜ்யமும் அடைவார்கள். இவ்வாறு சூத புராணிகர் சொன்னார்.

53. காசிபர் முதலானோர் பரம்பரை

நைமிசாரணிய முனிவர்கள், சூத முனிவரைப் பார்த்து சுவாமி! தேவர், தானவர், கந்தர்வர், இராக்ஷசர் முதலியவர்களின் சிருஷ்டியை விவரமாகச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். சூதமுனிவர் சொல்லத் துவங்கினார். முனிவர்களே! பூர்வத்தில் தக்ஷப்பிரஜாபதி தன்மனதால் சிருஷ்டி செய்து, அது விருத்தியடையாததைக் கண்டு யோசித்தான். வீரணப் பிரஜாபதியின் கன்னிகையைக் கூடிக்கலந்து அவளிடம் ஐயாயிரம் புத்திரர்களை உண்டு செய்தான். அவர்கள் ஐயாயிர வரையும் முன்பே பிரமனிடம் தோன்றிய நாரத முனிவர் பார்த்து சிறுவர்களே! உங்களுக்குச் சிருஷ்டி விஷயத்தில் என்ன தெரியும்? காசிப முனிவர் தக்ஷப்பிரஜாபதியின் புதல்வியிடம் சிருஷ்டி செய்யப் போகிறார். பூமியில் திக்குகளையும் பிரதேசங்களையும் செவ்வகையாகத் தெரிந்து கொண்டு சிருஷ்டி செய்யத் துவங்குங்கள்! என்று சொன்னார். அவர்கள் அவர் கூறியவாறே பூமி முழுவதையும் பார்த்துவரச் சென்றார்கள். அவர்கள் அவ்வாறு சென்றதை அறிந்த தக்ஷப்பிரஜாபதி,  மீண்டும் ஹரியஸ்வர் என்னும் பெயரையுடைய ஐந்நூறு புதல்வரைப் பெற்று அவர்களைச் சிருஷ்டி செய்ய ஏவினான் அவர்களும் தங்கள் தந்தையரின் கட்டளைப்படி சிருஷ்டி செய்ய முயலும்போது நாரதர் அவர்களையும் சந்தித்து, மதியில்லாத சிறுவர்களே! பூமியின் பிரமாணத்தை அறியாமல் எவ்வாறு சிருஷ்டி செய்வீர்கள்? என்று கேட்டார் அவர்களும் பூமியின் பிரமாணத்தை உணரச்சென்று பல திசைகளிலும் அலைந்து அதன் பிரமாணத்தை உணராமல் கடலை நோக்கிச் சென்று திரும்பி வராதவர்களைப் போலச் சென்று விட்டார்கள். அப்புதல்வர்களும் திசைகளின் மேற்சொன்றதை அறிந்த தக்ஷப் பிரஜாபதி வீரணி என்னும் தன் மனைவியிடம் அறுபது கன்னிகைகளை உண்டாக்கி அவர்களில் பத்துப் பெண்களைத் தர்மப் பிரஜாபதிக்கும் பதின்மூன்று பெண்களைக் காசி பருக்கும் இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கும் நான்கு பெண்களை அரிஷ்டநேமிக்கும் இரண்டு பெண்களை பிரம்ம புத்திரருக்கும் இருவரை ஆக்கிரசுக்கும் இருவரை கிருகாசுவர்க்கும் மணஞ்செய்வித்தார்.

அவர்களில் அருந்ததி, வசு ஜாமி, லம்பை, பானு, ம்ருத்வதி, சங்கல்பா, முஹூர்த்தை, ஸாத்யை, விசுவை என்ற பதின்மர் தர்மப்பிரஜாபதியின் மனைவியர். அவர்களில் விசுவை என்பவள் விசுவே தேவர்களையும், ஸாத்யா என்பவள் ஸாத்தியாளையும், ம்ருத்வதி மருத்துக்களையும், வசு வசுக்களையும், பானு பானுக்களையும், முகூர்த்தை முகூர்த்தங்களையும், லம்பை என்பவள் கோக்ஷத்தையும், ஜாமி என்பவள் நாக வீதி என்னும் பெண்ணையும் அருந்ததி பூப்பிரதேசங்களையும்; சங்கல்பா சங்கற்பத்தையும் சத்தியத்தையும் பெற்றனர். வசு என்பவள் பெற்ற மக்கள் அயன், துருவன், சோமன், தரன், அநிலன், அநலன், பிரத்தியூஷன். பிரபாசன் எனப்படுவார்கள். அந்த வசுக்கள் எண்மரில் அயன் என்பவன் வேதண்டன், சிரமன், காந்தன், முனி என்ற நால்வரையும் துருவன் என்பவன் காலன், லோகப் பிரபாவம் என்ற இருவரையும் சோமன் என்பவன் வர்ச்சான் என்பவனையும் தரன் என்பவன் மனோஹரையிடம் திரவிணன் ஹூதஹவ்யவஹன். சிசிதஸ்பிராணன், ரமணன் என்பவர்களையும், அநிலன் என்பவன் சிவை என்னும் தன் மனைவியிடம் புரோஜவனையும் பெற்றார்கள். அநலன் என்பவன் கிருத்திகைப் பெண்கள் அறுவரையும் மணந்து அக்கினிப் புத்திரன், குமாரன் சரஸ்தம்பன், சாகன், விசாகன், கைகமேயன் என்ற அறுவரையும் பித்தியூஷன் என்பவன் தேவலன் என்னும் இருடியையும் உண்டு செய்தார்கள். தேவலவிருடி பிரஜாவான்களான இருவரைப் பெற்றனர். பிரஹஸ்பதியின் தங்கையை எட்டாவது வசுவான பிரபாசன் மணந்து தொஷ்டா என்பவனைப் பெற்றான். அவன் தேவதச்சனாய் சர்வாபரணங்களையும் விமானங்களையும் செய்யும் வல்லமையை அடைந்தான். தொஷ்டா விசுவரூபனைப் பெற்றான். இதுவே தர்மப் பிரஜாபதியின் வமிசம்.

முனிவர்களே, அதிதி, திதி தநு, அரிஷ்டை, சுரசை, இலை, சுரபி, விந்தை, தாம்சை, குரோதை சமை; கத்துரு சனி என்று பதின்மூவரும் காசிபருடைய மனைவியராவர். அவருள் அதிதி என்பவள் சாக்ஷúச மன்வந்தரத்தில் விஷ்ணு சக்ரன் அரிய மான் தாதா துவஷ்டா பூஷா, விவஸ்வான் சவிதா; மித்ரா வருணன் அம்சோபகன், அதிதேஜஸ் என்பவர்களைத் தூஷிதான் என்பவனால் பெற்றாள், இவர்களே ரைவதமன்வந்தரத்திலும் துவாத சாதித்தர்களாக இருந்தார்கள். சந்திரனின் மனைவியரான் அஸ்வினி முதலான இருபத்தேழு மாதர்களிடம் மிகவும் அழகு வாய்ந்த பல பிள்ளைகள் பிறந்தார்கள். அரிஷ்ட நேமி தன் மனைவியர் நால்வரிடம் பதினாறு பிள்ளைகளைப் பெற்றான். கிருதாசுவன் தேவர்களுடைய ஆயுதங்களாகிய அஸ்திர சாஸ்திரங்களைப் பிறப்பித்தான் சூரியன் நாள்தோறும் தோன்றி அஸ்தமனமாவது போல இவ்வாறு வான் முறையாகத் தோன்றி முப்பத்து முக்கோடிதேவர்களும் கற்பங்கள் தோறும் உண்டாகி லயமடைகிறார்கள். காசிபர் மனைவியரின் திதி என்பவளிடம் ஹிரண்யகசிபு என்பவன் அனுக்கிலாதன், ஹிலாதன் பிரஹலாதன் ஸம்ஹிலாதன் என்று நான்கு புதல்வர்களைப் பெற்றான் ஹிலாதனுக்கு ஹிலதனும் ஹிலதனுக்கு ஆயுஷ்மான், சிபிகாலன் என்ற மூவரும் தோன்றினர் பிரஹலாதனுக்கு விரோசனனும் விரோசனனுக்குப் பலியும் பலிக்குவாணா சுரன் முதலிய நூற்றுவரும் பிறந்தார்கள். ஹிரண்யாக்ஷஷக்கு குருகரன் சகுனி, பூதசந்தாபன் மகாநாதன், காலநாபன், என்ற ஐவர் பிறந்தார்கள் தனு என்பவள் காசிப முனிவரால் வீரிய பராக்கிரமத்தோடு கூடிய நூறு புதல்வரைப் பெற்றாள் அவர்களில் முக்கியமானவர்கள் தவிமூர்த்தன், சகுரன், பலிசிவன் பிரபு அயோமுகன், சம்பரன், கபிலன், வாமணன், விசுவாநரன் புலோமன் வித்திராவணன், மஹாசுரன், சுவர்ப்பானு என்பவன் பிரபாவை என்பவளையும், புலோமன், சசி என்பவனையும் பெற்றார்கள். விருஷபர்வா என்பவன் சர்மிஷ்டை என்ற பெண்ணை பெற்றாள். வைஸ்வானவனுக்குப் புலோமை காளிகை என்னும் இரு கன்னிகைகள் தோன்றினார்கள். மரீசியின் வமிசத்தில் அறுபதனாயிரம் தானவர்களும் பவுலோமர், காலகஞ்சர் ஆகிய பேதமுள்ளவர்களும் தோன்றினார்கள்.

மரீசியின் வமிசத்தில் தோன்றிய அவர்கள் பிருமதேவன் குறித்து வெகு காலந்தவஞ் செய்து, பொன்மயமான பட்டணங்களைச் சம்பாதித்து தேவர்களால் சாகாவரம் பெற்று வாழ்ந்தார்கள். விப்ரசித்து என்பவன் சிம்ஹிகையை மணந்து உக்கிர பராக்கிரமத்தோடு கூடி சைமிகேயளான இராகு சல்லியன் சுபலி பலன் மகாபலன் வாதாபி நமுச்சி வில்லவன் சிவசுகுபன் அரகன் நரகன் கால நாபன் சரமாணன் சரகற்பன் என்னும் பதினமூன்று பிள்ளைகள் உண்டாகி அவர்களால் அநேகம் புத்திரபவுத்திரர்களைப் பெற்றான். ஹிரணியகசிபன் குமாரனான சமக்கலாதனுக்கு நிவாதக வசிகளான அதிபராக்கிரமசாலிகள் பிறந்தார்கள். தாமரை என்னும் காசியபரின் மனைவிக்கு ஸ்வரத்தைச் சப்திக்கும் பக்ஷிகள் தோன்றின. அவரது மனைவியருள் காகி என்பவள் காக்கையையும், உலூகி என்பவள் கோட்டான் வகைகளையும், சேனி என்பவள் பெண் பருந்தையும், பாசி என்பவள் ஆண் பருந்தையும், கிருத்ரி என்பவள் சுகமான பக்ஷிகளையும், தாமரை என்பவள் குதிரை கழுதை முதலியவற்றையும் பெற்றாள். வினதை என்பவள் பறவையினத்தில் முதன்மையானவனும் வேகத்தில் வல்லவமான கருடனையும் அருணனையும் ஈன்றாள். கத்துரு என்பவள் பல தலைகளுடன் கூடியதாயும் ஆகாயத்தில் சஞ்சரிக்க வல்லதாயும் காமரூபியாயும் உள்ள சேஷன், வாசுகி, தக்ஷகன், ஐராவதன் மகாபத்மன், கம்பளன், அசுவதரன், ஏலாபுத்திரன், பத்மன், கார்க்கோடகன், தனஞ்சயன், மகாநீலன், மகாவர்ணன், திருதராஷ்டிரன், பலாக்கன், குகன், புஷ்பதந்தன், துர்முகன், சுமுகன் பகுசன் கரரோமன் பாணி முதலிய நாகர்களைப் பெற்றாள் வரை என்பவள் பலவான்களாகிய ஐம்பது புத்திரர்களையும் மரம் செடி கொடி முதலிவற்றையும் பெற்றாள். இலை என்பவள் புல்பூண்டு முதலியவற்றைப் பெற்றாள். சுவசை என்பவள் யக்ஷராக்ஷசர்களையும் முனி என்பவள் அப்சரஸ்களையும் அபிஷ்டா என்பவள் நானாவித ஜந்துக்களையும் பெற்றார்கள். காசிபரின் சந்ததியில் பற்பல புத்திரபவுத்திரர்கள் தோன்றி உலகத்தில் பரவினார்கள். இந்தச் சிருஷ்டிகள் யாவும் சுவாரேசிஷ மந்வந்தர சிருஷ்டி என்னும் பெயரையுடையன இனி வைவசுவத மன்வந்தர சிருஷ்டியின் வகையைச் சொல்கிறேன்.

முனிவர்களே! இந்த மன்வந்தர சிருஷ்டியின் துவக்கத்தில் பிருமதேவர் யாகங்களைச் செய்து முன்புபடைத்தது போலவே மானசீகமாக ஏழு புத்திரர்களை உண்டாக்கினார். முன்பு உண்டான தேவதானவர்களுக்குள் பெரிய கலகம் உண்டானதால் அசுரர்கள் நசித்துப் போனதைக் கண்ட திதி என்பவள் காசிபரைச் சரணடைந்து, தேவர் தலைவனான இந்திரனைக் கொல்லக் கூடிய புத்திரன் வேண்டும் என்று கெஞ்சினாள். காசிபர் அதற்கு இசைந்து நீ ஆயிரம் ஆண்டுகள் நியமத்துடன் புண்ணிய பூமியில் விரதத்தை அனுஷ்டிப்பாயானால் இந்திரனைக் கொல்ல வல்ல புத்திரன் உனக்குப் பிறப்பான். இவ்விரத நியமம் தவறினால் உன் மனோரதம் நிறைவேறாது என்று சொல்லிவிட்டுத் தவத்திற்குச் சென்றார். அவ்வாறே திதி என்பவள் பூலோகத்தில் தவஞ்செய்து கொண்டிருந்தாள். அப்போது இந்திரன் இவளுடைய கர்ப்பத்தில் தனக்கு பகைவன் வளர்கிறான் என்பதை அறிந்து அவள் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்தொடு தாயார் என்ற முறை பாராட்டி பணிவிடை செய்ய மாறுவேடங் கொண்டு வந்தான். திதியின் விரதத்தின் ஆயிரம் ஆண்டுகளில் நூறு வருஷம் குறைவாக இருக்கும்போது அவள் அதிகப் பிரயாசையினால் சோர்வடைந்து பகற்காலத்தில் கூந்தலைப் பாதத்தில் அவிழ்ந்து விட்டுத் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது இந்திரன் வஜ்ரபாணியாய் பெண்மைக்குறியின் வழியாகக் கர்ப்பத்தில் பிரவேசித்து, பிண்டத்தை தன் குலிசத்தால் வெட்டும்போது கருவிலுள்ள குழந்தை சப்தமிட்டு அலறியது. உடனே இந்திரன் மாரோதி! மாரோதி! (அழாதே அழாதே!) என்று சொல்லிக் கொண்டே ஏழுபிளவாக்கி பின்னரும் எவ்வேழு பிளவாக்கிவிட்டு வெளியே வந்தான். அவ்வாறு வந்த இந்திரனைக் கண்டு திதி துக்கப்பட்டாள். அதற்கு இந்திரன் தாயே! நீ நியமம் தவறி இருந்ததால் உன் கர்ப்பத்தில் இருந்த என் சத்துருவை நான் துண்டித்தேன் ஆகையால் என்மீது கோபிக்க வேண்டாம்! என்றான். அவனைக் கண்ட திதி, என்னுடைய குற்றத்தினாலேயே நாசமடைந்த கர்ப்பம் பலவாகும். ஆகையால் அவற்றை உன் உலகத்திலேயே வைத்திருக்க வேண்டும்! என்றாள். அவ்வாறே இந்திரன் ஏழு லோகத்திலும் எவ்வேழு பெயர்களாக மாருதாள் என்னும் பெயரோடு வசிக்கும்படி வரங்கொடுத்து விட்டுத் தன் உலகம் சென்றான். இவ்வாறு பிரபஞ்சத்தைப் படைத்து பிருது முதலான சக்கரவர்த்திகளையும் இந்திரன் பிரஜாபதிகள் பர்ச்சன்யன் குபேரன் முதலிய சுவர்க்க வாசிகளையும் உண்டாக்கினார். வேனனுடைய பிள்ளையாகிய பிருதுசக்கரவர்த்தியை அகண்ட பிரபஞ்சத்தைப் பல்வேறு பாகங்களாக்கும் படி காசிபர் கட்டளையிட்டார். இவ்வாறு சூத புராணிகர் கூறினார்.

54. உலக நாயகர்கள்

நைமிசாரணிய முனிவர்கள் சூத புராணிகரை நோக்கி ஞானியே! பிரபஞ்ச சிருஷ்டியைப் பற்றிச் சொன்னீர்களே, அவர்களில் எவ்வெவ்வகையாக எவ்வெவ்வருக்குத் தலைவர்களாக இருந்தார்களோ அதையும் நாங்கள் அறிய விரும்புகிறோம்! என்று கேட்டார்கள். சூதபுராணிகர் கூறலானார். முனிவர்களே! பிராமணர் நக்ஷத்திரம் நவக்கிரகம் ஓஷதிகள் யக்ஞம் தவம் முதலியவற்றிற்கு அதிபதியாகச் சந்திரனையும் ஜலத்திற்கு வருணனையும் அரசர்களுக்கு பேரனையும் ஆதித்தர்களுக்கு விஷ்ணுவையும், அஷ்ட வசுக்களுக்கு அக்னியையும் பிரஜாபதிகளுக்குத் தக்ஷனையும் மருத்துக்களுக்கு இந்திரனையும் தைத்தியதானவர்களுக்கு பிரகலாதனையும் பிதுர்க்களுக்கு பமதர்மனையும் விரதங்கள் மாதாக்கள் மந்திரம் பசு யக்ஷ ராக்ஷசர் அரசர்கள் சர்வ பூத பைசாசங்களுக்குச் சூலபாணியான பரமேசனையும், மலைகளுக்குச் சார்த்தூலத்தையும், பசுக்களுக்கு ரிஷபத்தையும் கொடி செடிகளுக்கு மரங்களையும் அதிபதிகளாகறியமித்தும் அஷ்ட திக்குகளுக்குள் கிழக்கில் சுதன்மனையும் தென் திசையில் நெய்வதன் என்பவனையும், மேற்கில் கேதுமானையும் வடக்கில் ஹிரண்ய ரோமனையும் அரசராக ஸ்தாபித்தார் இந்தச் சிருஷ்டியின் வைபவங்களைப் படிப்பவர்களும் கேட்பவர்களும் தீர்க்காயுள் பெற்றுப் புகழ்மிக்கவர்களாக இவ்வுலகில் வாழ்ந்து இறுதியில் சிவபதமடைவார்கள்.

55. பிருது சக்கரவர்த்தியின் பிரபாவம்

பூர்வத்தில் தர்மவானும் அத்திரி என்னும் பிரஜாபதிக்கு இணையான வல்லமையோடு கூடியவனுமான அங்கப் பிரஜாபதி என்பவன் தோன்றினான். அவனுக்கும் மிருத்யுவின் பெண்ணான சுநிதி என்பவளுக்கும் வேனன் என்னும் ஒரு புத்திரன் பிறந்தான். அவன் தருமஞ் செய்வதில் மனமில்லாமலிருந்தான். அவன் மிருத்யுவின் தவுஹித்திரன் (பெண் வயிற்றுப் பெயரன்) எனவே மிருத்யு தோஷத்தால் , சுதர்மத்தை விட்டுக் காமத்தில் பிரியமுள்ளவனாய்த் தர்ம சாஸ்திரத்திற்கு விரோதமான ஏற்பாடுகளை உண்டாக்கி வர்ணாசிரமங்களைச் சரிவர நடத்தச் செய்யாமல் அதர்மவானாக இருந்தான். அவன் அரசாட்சியில்  யாகாதி கிருத்தியங்கள் குறைந்தும், வேதசாஸ்திர பாராயணம் குன்றியும் தேவாலய பூஜைகள் நடவாமலும். யாகஞ் செய்ய முயலும் அந்தணர்களைச் சேவர்களால் தடுத்தும் தவஞ்செய்வோரின் தவநிலையைக் கெடுத்தும் ஆட்சி நடத்தி வந்தான். அவ்வேனனுடைய அக்கிரமத்தைக் கண்டு மரீசி முதலிய முனிவர்கள் அவனை நோக்கி நாங்கள் நீண்ட காலம் செய்து முடிக்க வேண்டிய யாகங்களைச் செய்து முடித்து உலகத்திற்கு நலம் பயக்கத் தீøக்ஷசெய்து கொண்டோம். இவ்விரதத்தைக் கூடாது என்று தடை செய்யாதே நீ இப்படிச் செய்வது முறையல்ல, நாங்கள் செய்வது புராதனமான தருமம், இவ்வித தருமத்தையும் குடிமக்களையும் காத்து இரக்ஷிக்கும் படியே நீ படைக்கப்பட்டிருக்கிறாய் குடிகளை இரக்ஷணை செய்வதில் இராஜாவென்னும் பெயர் கொடுக்கப் பட்டது. அந்தப் பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்! என்று எடுத்துரைத்தார்கள். ஆனால் வேனனோ சரித்துவிட்டு என்னை விடத் தர்மத்தை உண்டாக்க வல்லவன் யார்? நான் யாருடைய தர்மத்தைக் கேட்டு நடக்க வேண்டும்? எனக்கு மேலான அதிகாரி ஒருவருமில்லை! என்னை அதர்மன் என்று சொல்லிய உங்களுக்குத் தர்மம் தெரியாது.

நீங்கள் தான் மூடர்கள்! என்று பலவாறாகவும் இகழ்ந்துரைத்து மூவுலகங்களிலும் தன் அதர்மத்தைப் பரவச் செய்தான். முனிவர்கள் பலவகைகளில் முயன்றும் பயன்படாததால் அவர்கள் கோபங்கொண்டு அதிபலவானும் கொடியவனுமான வேன சக்கரவர்த்தியின் இடது தொடையில் பலாத்காரமாகத் தங்கள் தவவல்லமையால் கடைந்தார்கள். அந்தத் தொடையிலிருந்து குறுகிய வடிவமும். பருத்த உடலும் கரிய நிறமுமுள்ள ஒருவன் தோன்றிக் கும்பிட்டவனாக முனிவர்களை வணங்கி நின்றான். அத்திரி முனிவர் அவனை நோக்கி, சிறுவனே! உட்காருவாயாக! என்றார் அவன் மூலமாகவே புளினர் என்போர் தோன்றி வித்தியபர்வதத்தில் வசித்து அவனைப் போலவே அக்கிரமக்காரர்களாக இருந்தார்கள். மீண்டும் வேனனின் வலது கையில் முனிவர்கள் கடையவே அதனால் தாமரைபோன்ற அவனுடைய உள்ளங்கையில் கோடிச்சூரியப் பிரகாசமாகவும் அக்கினிக்கு ஒப்பான தேஜஸோடும் அஜசுவம் என்ற வில்லோடும் பற்பல அஸ்திரங்களோடும் பொன்மயமான கவசத்தோடும் பிருதுவென்னும் மன்னன் தோன்றினான். அவனது தோற்றத்தினால் திக்குகள் யாவும் பிரகாசித்துக் குடிகள் மகிழ்ந்தனர் இவ்வித புத்திரோற்பத்தியில் தகப்பனான வேனன் பெரும்பாவங்களைச் செய்திருந்த போதிலும் புத் என்னும் நரகத்தைப் போக்கி, சற்புத்திரனால் புண்ணிய லோகம் அடைந்தான். ஆகையால் மாதா பிதாக்கள் பாவஞ் செய்தவர்களாக இருப்பினும் நற்புத்திரனால் நற்கதி அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை இவ்விதம் உண்டாக்கிய பிருதுவைச் சக்கரவர்த்தியாக வேண்டும் என்று பிருமா முதலான தேவர்களும் ஏழுகடல்களும் மாபெரும் நதிகளும் தங்களிடமுள்ள இரத்தினங்களை வாரிக்கொண்டு புண்ணிய நதிகளில் வந்து எல்லாக் குடிமக்களையும் காத்து தருமத்தை நிலை நிறுத்த வேண்டும்! என்று கூறி அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்தார்கள், பிருது பூமண்டலங்களுக்கெல்லாம் அரசனாகி மகாதேஜஸோடும் புகழோடும் பிருது சக்கரவர்த்தி என்ற பெயரோடும் விளங்கித் தன் தந்தையால் புறக்கணிக்கப்பட்ட தர்மங்களையும் குடிகளையும் மிகவும் அன்போடு விருத்தி செய்து பாதுகாத்து, அரசன் என்ற சொல்லுக்கு இலக்கியமாக இருந்தான் அவனது ஆட்சிக் காலத்தில் குடிமக்கள் அடைந்த மகிழ்ச்சியை என்னென்று சொல்வேன்? அவன் ரதத்தில் ஏறிச் செல்லும்போது, நதிகள் நீர் விலகி வழி விடவும் மலைகள் தாழ்ந்து சமவழி காட்டவும் பசுக்கள் எல்லாவித ரசப்பொருட்களையும் சகலவித வஸ்திரங்களையும் கொடுக்கவும் அவன் மகிழ்ந்திருந்தான்.

இவ்வாறு பிருது சக்கரவர்த்தி செங்கோல் செலுத்திவரும் போது பிருமதேவர் ஒரு யாகஞ் செய்தார். அப்போது அப்பூரண குதியில் ஸுதன் மாகதன், என்று இருவர் தோன்றினார்கள். அருகேயிருந்த மாமுனிவர்கள் அவ்விருவரையும் நோக்கி; நீங்கள் பிருது சக்கரவர்த்தியின் புகழைப் போற்றித் துதி செய்யுங்கள்! என்று கூறினார்கள். ஸுதமாகதர்களே! மாமுனிவர்களே! நாங்கள் இப்பொழுது தான் தோன்றியவர்களாகையால் அந்த மாமன்னரின் பிரபாவங்களை எப்படி அறிவோம்? என்று கேட்டார்கள். அதற்கு அம்முனிவர்கள் இனி நடக்கவிருக்கும் விஷயங்களை எடுத்துத் துதி செய்யுங்கள் என்று சொல்ல, அவ்விருவரும் அவ்வாறே துதி செய்தார்கள். அதைக் கேட்ட பிருது சக்கரவர்த்தி பெரு மகிழ்ச்சியுடன் அவர்களில் ஸுதனுக்கு அனூபதேசம் என்ற இராஜ்ஜியத்தையும் மாகதனுக்கு மகத ராஜ்யத்தையும் கொடுத்தான். அப்போது அருகிலிருந்த தேவர்கள் அவ்விருவரையும் பார்த்து, இவ்வரசன் உங்கள் இருவருக்கும் இவ்வுலகத்தாருக்கும் விருத்தியுண்டு பண்ணப் போகிறான் என்று கூறினார்கள். அமரர் வார்த்தைகளைக் கேட்ட ஸுதமாகதரும் மற்றவர்களும் பிருது சக்கரவர்த்தியை அணுகி; எங்களுக்கு ஜீவனோ பாயத்தைக் கற்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதனால் பிருதுச் சக்கரவர்த்தி அதற்கு வழி செய்ய வேண்டும் என்ற கருத்துடன் வில்லையும் அம்பையும் எடுத்து பூமியிலிருந்து அவர்களுக்கு ஆகாரத்தை உண்டு செய்ய நினைத்தான். அப்போது பூமிதேவி பயமடைந்து பசுவின் வடிவமெடுத்து உலகமுழுவதும் திரியலானாள். பிருதுச் சக்கரவர்த்தியும் வில்லேந்தி அதைப்பின் தொடர்ந்து துரத்த, பூமி பயந்து இந்திராதி தேவர்களைச் சரண் அடைந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று கெஞ்சினாள். ஆனால் ஒருவரும் அபயம் கொடாமையால் அவள் மீண்டும் பிருதுசக்கரவர்த்தியையே சரணடைந்து அரசனே! நான் இல்லாமல் இவ்வுலகத்தை நீ எவ்வாறு பரிபாலனஞ் செய்வாய்? எல்லாக் குடிமக்களும் என்னிடமே வசிக்கிறார்கள். சர்வஜகத்துக்கும் நானே ஆதாரமாக இருக்கிறேன் என்னை முன்னிட்டு சண்டை செய்து  கற்பங்கள் தோறும் பற்பல மன்னர்கள் மாண்டு போகிறார்கள். நீ புகழ் பெற வேண்டும் என்றால் என்னை ஹிம்சிக்க வேண்டாம். நீ தந்திரத்தோடு முயற்சி செய்தால் உன் மனோரதங்கள் எல்லாம் சித்துக்கும் குடிமக்களை நீ பாதுகாப்பாய். நான் பெண் பிறவியாகையால் என் மீது கோபம் கொள்ள வேண்டாம். நீயோ பிருத்விபாலன் என்ற பெயரையடையப் போகிறாய். அதற்கு விரோதமாகத் தர்மத்தை அழிக்காதே? என்று பலவிதமான நல்வார்த்தைகளையும் சொன்னாள். அதைக்கேட்ட தர்மசீலனாகிய பிருது சக்கரவர்த்தி தன் கோபத்தை அடக்கி பூதேவியே! ஒருவனுக்காக பலரைக் கொல்வது தர்மம் அல்ல ஆனால் பலரின் நன்மைக்காக ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒருவரைக் கொல்வது தர்மமேயாகும். பிரஜைகளைக்காப்பதற்காக உன்னை நான் ஹிம்சிக்க விரும்புகிறேன். நீ என் சொல்லை இதமாகக் கொண்டு வசுந்தரை (வசு-சொத்து, தரா-தரித்தவள்) என்ற பெயரைப் பிரபலப்படுத்தி என் விருப்பத்தின் படிப் பிரஜைகளைக் காக்க வேண்டும்! என்றான்.

56. பூதேவி பசுவடிவங் கொண்ட கதை

பூமிதேவி கனிவோடு பிருது சக்கரவர்த்தியை நோக்கி அரசனே! நான் பசுவடிவில் நிற்பதால் எனக்கேற்ற கன்று ஒன்றைத் தேடி, பர்வதம் முதலிய மேடுபள்ளங்களைத் திருத்தினால் என் பாலை எல்லாவிடங்களிலும் பாயும்படிச் செய்கிறேன் என்றாள். பிருதுச் சக்கரவர்த்தி அதைக் கேட்டு மகிழ்ந்து தன் வில்லின் முனையால் மலைகளை உடைத்து வழிகள் உண்டாக்கிப் பூமியைச் சீர்திருத்தினான். முன் சிருஷ்டியில் இப்பூமியைச் சீர்திருத்தியவர்கள் ஒருவரும் இல்லாமலும் கிராமம். நகரம் அக்கிரஹாரம் தேசம் முதலிய பேதங்கள் இல்லாமலும், பயிர், பசு, கிருஷி, வர்த்தகம், கடை வீதி முதலியன இல்லாமலும் இருந்தன. பிருது சக்கரவர்த்தியால் திருத்தப் பட்ட சமபூமியிலே பிரஜைகள் வசித்திருந்தார்கள். ஆகாரங்கள், பல மூலங்கள் மரங்கள், மலர்கள், தேன் முதலிய பொருள்கள் தோன்றின. பிருது சக்கரவர்த்தியின் பிரார்த்தனைப் படி சுவாயம்பு மனு ஒரு கன்றுக்குட்டியாக வந்து பூமிதேவியான பசுவின் மடியைப் பருக, அதனின்றும் பால் பெருகிப் பூமியெல்லாம் நனைந்து அநேகமான பயிர்களும் இரச வஸ்துக்களும் உண்டாயின. அவ்வாறு தோன்றியவற்றை ஜனங்கள் ஆகாரமாக உண்டு வாழ்ந்து வந்தார்கள். அதன் பிறகு முனிவர்கள் சந்திரனை கன்றாகக் கொண்டு கறந்து வேதம் தவம் விரதம் முதலியவற்றை அதனால் உண்டு செய்தார்கள். தேவர்கள் இந்திரனைக் கன்றாக்கிக் கறந்து தங்களுக்கு வேண்டிய ஆகாரத்தையடைந்தார்கள். சூரியன் பொற்பாத்திரத்தில் பூமியைக் கறந்து தன் தேஜஸை உண்டாக்கினான். பிதுர் தேவர்கள் மயனைக் கன்றாக்கி அந்தக் கன்றால் வெள்ளிப் பார்த்திரத்தில் சுதா என்னும் பாலைக் கறந்து கொண்டார்கள். நாகர்கள் தக்ஷகன் என்பவனைக் கன்றாக்கிச் சுரைப் பாத்திரத்தில் ஐராவதனால் விஷ்தைக் கறந்து கொண்டார்கள். அது முதற் கொண்டே சர்ப்பங்கள் எல்லாம் காற்றைப் புசித்து வருகின்றன. அசுரர்கள் விரோசனனைக் கன்றாகச் செய்து இரும்புப் பாத்திரத்தில் மாயை ஆகிய பாலைமதுவென்னும் அசுரனைக் கொண்டு கறந்தார்கள். அதுமுதற்கொண்டே அசுரர்கள் மாயாவிகள் ஆனார்கள். யக்ஷர்கள் குபேரனைக் கன்றாக்கி, ஆமபாத்திரத்தில் மறைதலாகிய பாலைக் கறந்தார்கள். இராக்ஷசர்கள் தங்களரசனை சுமாலியைக் கொண்டு இரத்த மயமான பாலைக் கறந்தார்கள். அப்சரசுகளும் கந்தர்வர்களும் சித்ராதரனைக் கன்றாக்கி வசுர்ஜியைக் கொண்டு தாமரையிலையாகிய பாத்திரத்தில் தங்களுக்கு வேண்டிய பாலைக்கறந்து கொண்டார்கள். மலைகள் ஹிமவானைக் கன்றாக்கி மேருவைக் கொண்டு இரத்தினங்களையும் அவுஷதிகளையும் கறந்து கொண்டன பூர்வம் மதுகடவர்களை விஷ்ணு மூர்த்தி சங்கரித்தபோது அவர்களது மேதை(கொழுப்பு) எங்கும் பரவியதால் உலகிற்கு மேதினி என்றும், பிருது சக்கரவர்த்தியால் இந்த உலகம் பாகுபாடு செய்யப்பட்டதால் பிருத்வி என்ற பெயரும் வழங்கின. முனிவர்களே! குடிகளைக் காப்பதில் கருணையாளனாகவும் தேவமானுடரால் புகழத்தக்கவனாகவும், பிரம்ம, க்ஷத்திரிய வைசிய, சூத்திரர்களால் அரசனாக இருக்க விரும்பப்பட்டவனாகவும் மானுடருக்குள் முதல்வனாகவும் யுக்தத்தை முதலில் நியமித்தவனாகவும் மற்றெல்லாவிதப் பொருட்களையும் உணவை முன்னிட்டுக் கண்டு பிடித்தவனாகவும் விளங்கிய இந்தப் பிருது சக்கரவர்த்தியின் பிரபாவம் சிறப்பாக வேதங்களில் சொல்லப் பட்டிருக்கிறது. அத்தகைய சிறப்புடைய பிருது சக்கரவர்த்தியின் புகழை அரசினனாக க்ஷத்திரியன் போர்முனையில் ஸ்மரித்தால் பகைவர்களை வெல்வான். வைசியன் ஸ்மரித்தால் தனலாபம் அடைவான். சூத்திரன் ஸ்மரித்தால் புண்ணியம் அடைவான். கீர்த்தியை அடைய விரும்புவோர் யாராயினும் பவுர்ணமியில் சக்கரவர்த்தியைத் தியானித்துச் சரணடைய வேண்டும்

57. மனுவந்தரம்

இதுவரை வியாச மகரிஷி எனக்குக் கூறிய விஷயங்களைச் சொன்னேன்! இனி நீங்கள் கேட்க வேண்டியது எதுவாயிருப்பினும் கேட்கலாம் என்றார் சூத புராணிகர். அதற்கு நைமிசாரணிய முனிவர்கள் மந்வந்தரக்கிரமமும் மநுக்களின் பெயர்களையும் விவரமாக அறிய விரும்புகிறோம்! என்றார்கள். சுவாயம்பு வைவசுவதன், சாவர்னி, பவுத்தியன், ரவுச்சசியன், அசாவர்மூ முதலாகத் தோன்றிய மனுக்கள் பலராவார்கள், அவர்களில் சிலர் தங்கள் வாழ்நாளனைத்தும் இனி கழிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். இனி சப்தரிஷிகளையும் அவர்களது புத்திரவர்க்கங்களையும் கூறுகிறேன். மரீசி அத்திரி, ஆங்கிரஸ், புலகர், கிருது புலஸ்தியர் வசிஷ்டர் ஆகிய இவ்வெழுவரும் பிரம புத்திரர்கள் இவர்கள் வடக்கே சுவாயம்பு மந்வந்தரத்தில் இருந்தார்கள். ஆக்நிதரர், அக்னிவாகர், மேதசு, மாதா, திதி, வசு ஜோதிஷ்மான். துதிமான் அவ்யர், சவனர், கபுரு ஆகிய இவர்கள் துஷிதாள் என்னும் தேவர்களோடு சுவாரோசிஷ மந்வந்தரத்தில் இருந்தவர்கள் ஹரிக்நர், சுகிர்தி, ஜோதிரயன், மூர்த்திரயன், ஸ்மயன், பிரதிதன், மநஹ்யன், நபன், சூரியன் ஆகிய இவர்கள் வீரிய பராக்கிரமத்தோடு கூடிய சுவாரோசிஷ மநுவின் புத்திரர்களாக இருந்தார்கள். வசிஷ்டருக்கு வாசிஷ்டாள் என்றும் ஊர்ஜரன் என்றும் பெயருடைய இஷர், ஊர்ஜாதர், ஊர்ஜர். மதுமாதவர், சுசி, சுக்கிரவகர், நபசர், நபர், ஆகிய புதல்வர்கள் வைவசுவத மந்வந்தரத்திலிருந்து வந்தார்கள். சாவர்ணி மந்வந்தரத்தில் கார்க்யர், பிருது, அக்னி, ஜன்மியர், தாதா, சபீநகர், கபீவரன் என்ற ஏழு முனிவர்களும் சத்தியாள் என்னும் தேவர்களும் இருந்தார்கள். தாமாமனுவின் புத்திரரான துதி. போதன் சவதபசியன் தபசூலன் தாமன் தபோவதி அகல்மாஷன் தந்வி தந்விசூலன் மகரிஷி ஆகிய பதின்மரும் மோபரர் என்னும் தேவர்களோடு இருந்தார்கள். ரைப்பிய மந்வந்தரத்தில் வராப்பிய மநுவிற்கு திருதிமான், அவ்யயன் அவ்யந்தன். சத்தியதரீசி நிருச்சவன், அரண்யன், பிரகாசன், நிரத்துரோகன், சத்தியவாக்கு பிருதி என்னும் புத்திரர்கள் இருந்தார்கள். சாட்சுச மந்வந்தரத்தில் கிருகு நகர் விசுவர், சுதர்மா விரஜசு, ஜாதி நாமா அசிகிஷ்ணு ஆகிய ஸப்த ரிஷிகளும் ஆத்தியர் பிரசூதர், ரிபுக்கள், லேகர் என்ற தேவகணங்களும் ஆங்கிரஸ் மகாமுனிவரின் புத்திரராகிய நத்வலேயர் என்போர் சிலரும் இருந்தார்கள், அத்திரி, வசிஷ்டர், கசியபர், கவுதமர் பரத்வாஜர் விசுவாமித்திரர் ஜமதக்னி ஆகிய ஸப்தரிஷிகளும் ஆதித்தர்கள், மருத்துக்கள் உருத்திரர் அஸ்வினி தேவதைகள் பாஸ்கரர் வசு மகாராஜிகர் சாத்தியர் என்னும் தேவர்களும் இக்ஷ்வாகு முதலிய அரசர்களும் அவர்களுடைய புத்திரர்களும் வைவசுவத மந்வந்தரத்தில் தர்ம காரியங்களைச் சரிவரநடத்திக் கொண்டும் உலகைக் காத்தும் புண்ணிய பதவியை அடைந்தார்கள். பரமேஷ்டியின் புதல்வராகவும் தக்ஷப்பிரஜாபதிக்குத் தவுஹிதராகவும் பிரியா என்னும் பெண்ணிடம் தோன்றி மேருசாவர்னி என்னும் பெயரையடைந்த சிலர், மேருவின் உச்சியில் தவஞ்செய்து அங்கு வாழ்ந்தார்கள்.

ருசி என்னும் பிரஜாபதிக்கு ரவுச்சா என்னும் மனு தோன்றினார். பூதை என்பவளிடம் பவுத்தியன் என்னும் மனு உதித்தான் இவர்கள் பவுஷய கற்பத்தில் மனுவாவார்கள். பவுஷ்ய கற்பத்திலேயே இராமன், வியாஸன், ஆத்திரேன். தீப்திமான், சுபருஷ்டுதன், அசுவத்தாமா, கிருபன், சவுசிகன், காலவன் ருரு ஆகிய முனிவர்கள் இருந்தார்கள். மரீசி முனிவருக்கு வீரவான், வனிவான், சுமந்தன், திருதிமான், வசு, வரிஷ்ணு, ஆரியன், விஷ்ணு, இராஜா, சுதமதி என்ற புதல்வர்கள் இருந்தார்கள் சாவர்னி மனுவிற்கு மேருசாவர்னி என்பவள் முதல் மகன் மோததிதி, பவுவசியன், காசிபன் வசு, ஜோதிஷ்மான், பார்க்கவன் த்விதிமான். அங்கிரசு, சவனன். வசிஷ்டன். ஆத்திரேயன் அவ்வியயன் பவுலகன் என்னும் புதல்வர் பதின்மூவரில் மூவர்தேவகணங்களாக இருந்தார்கள். ரோகிதர் என்னும் பிரஜாபதிக்குத் தீøக்ஷ என்னும் மங்கையிடம் திருஷ்டகேது தீர்த்தகேது பஞ்சஹஸ்தன், நிராகிருதி, பிருது ஸ்தவசு பூர்த்திம்நன் ரசீகன் பிரகதன், கயன், என்போர் தோன்றினாரகள் இந்தப் பிரஜாபதிக்கே அவரது வம்சத்திலேயே இரண்டாவது மந்வந்தரத்தில் அவிஷ்மம்நன் புலகன், சுகிர்தி, பார்க்கவன் ஆயோமுக்தி, ஆத்திரேயன், வசிஷ்டன் அவ்யயன் பவுலஸ்தியன், பிரியதி, நாபாகன், காசிபன் அங்கிரசு, நபசன் சத்தியன் என்ற தேவகணங்களும் முனிவர்களும் உண்டானார்கள். அவர்களில் தேவர்களுக்கு த்விஷிவந்தாள் என்று பெயராக இருந்தது. மூன்றாவது மந்தவரத்தில் அக்ஷத்வான் உத்தமோஜன் பூரிஷேணன், சதா நீகன், நிரமித்திரன். விருடிசேனன், ஜயத்ரதன், பூரித்தம்நன் சுவர்ச்சா என்போரும் அவிஷ்மா, காசிபன், புஷ்வமான் வாருணன், அத்திரேயன், வசிஷ்டன், அநகன், அங்கீரசு, க்ஷராதீஷ்யன், பவுலஸ்யன், அக்னிசுவரன், அக்னிதேஜசு என்பவரில் மூவர் தேவகணங்களும் மற்றையோர் முனிவர்களாகவும் இருந்தார்கள். அதே மந்வந்தரத்தில் பிரமபுத்திரராகச் சர்வத்திரகன் சுசர்மா தேவாநீதன் ÷க்ஷமகன், திரடேக்ஷீ பண்டகன் தரிஷன்பாகு; ஊரு என்பவர்கள் இருந்தார்கள் நான்காவது மந்வந்தரத்தில் த்விதி, வசிஷ்ட புத்திரர் ஆத்திரேயர்; பவுலகர், தபோரதி, ஆர்க்கவர், என்பவர்களாகவும் ஐவர் தேவ கணங்களாகவும் மற்றையோர் முனிவர்களாகவும் இருந்தார்கள் ரவுச்சிய மந்வந்தரத்தில் அங்கரசு திருதிமான், பவுலஸ்த்யன், அவ்யவான், பவுலகஸ்தன், அதருஷி, பார்க்கவன். நிருச்சவன், நிஷ்பிரபஞ்சன், ஆத்திரேயன் நிர்மோகன், காசிபன். சுதபசு, வாசிஷ்டு என்பவருள் மூவர்தேவகணங்களாகவும் மற்றையோர் முனிவர்களாகவும் இருந்தார்கள், சுநேத்திரன் க்ஷத்திரவிருத்தகன், நிர்ப்பயன், சுதபசு, காடன் என்னும்புத்திரர்கள் உண்டானார்கள். ஆக்கிநிதன்காசிபன், பவுலஸ்தியன், மாகதன், பார்க்கவன், அதிபாகியன் சுசி ஆங்கிரசன், யுக்தன், ஆத்திரேயன், சக்ரன், வாசிஷ்டன், அஜிதன் என்பவர்களில் எழுவர் தேவகணத்தாராகவும் மற்றையோர் முனிவர்களாகவும் இருந்தார்கள். பவுத்திய மந்வந்தரத்தில் தாங்கனகபேரு பிரத்தன், தத்திரன், அநுவுக்கிரன், அதிமானி பிரவீணன், விஷ்ணு சங்கிரந்தனன் தேஜஸ்வி, சம்பவன் என்பவரில் ஐவர் தேவ கணங்களாகவும் மற்றவர்கள் ரிஷிகளுமாக இருந்தார்கள். இதுவரை சென்று போன மந்வந்தரங்களையும் செல்ல வேண்டிய மந்வந்தரங்களையும் வியாசமுனிவர் சொன்னபடி சொன்னேன். இவ்வாறே மீண்டும் மீண்டும் தோன்றி யழிவதை ஸ்மரணை செய்பவர்கள் தீர்க்காயுளையுடையோராய் புண்ணியலோகத்தை அடைவார்கள். தேவ வருஷத்தில் ஆயிர வருடம் ஆனகாலத்துச் சூரியன், தன் தீட்சண்யமான கிரணங்களால் பிரபஞ்சத்தைக் கொளுத்தி நாசஞ் செய்கிறான். உலகத்தில் உள்ளவர்கள் பிரமனைச் சரணடைய பிரமன் ஆதிநாராயணனை அடைவான். அந்தக் காலத்தில் பிரளயகாலருத்திரன் தோன்றி சம்ஹரிப்பான். இப்படியே அநேகம் மந்வந்தரங்களும் அநேகப் பிரளயங்களும் உண்டாகியும் ஜகம் விருத்தியாகாமல் கடைசியாக வைவசுவத மந்வந்திரத்தில் கொஞ்சம் விருத்தியடைந்தது. இந்தப் புண்ணிய சரிதத்தைக் கேட்பவர்களும் படிப்பவர்களும் கைலாய பதவியை அடைந்து களித்து வாழ்வார்கள். இவ்வாறு சூதபுராணிகர் சொன்னார்.

58. சஞ்ஞிகைதேவி சாயாதேவியின் சரிதங்கள்

நைமிசாரணிய வாசிகள் சூதமுனிவரை நோக்கி மகா ஞானியே, வைவசுவத மந்வந்தரத்தின் முறைமையை சொல்ல வேண்டும்! என்று கேட்டார்கள். சூத முனிவர் சொல்லத் துவங்கினார். முனிவர்களே! பூர்வத்தில் காசிப முனிவருக்குத் தக்ஷப்பிர ஜாபதியின் புதல்வியிடம் விவசுவான் என்ற ஆதித்தன்(சூரியன்) உண்டானான். அவன் துவஷ்டா என்னும் முனிவரின் புதல்வியான சஞ்ஞிகையை மணந்து வாழ்ந்து வந்தான். சஞ்ஞிகையால் ஆதித்தனின் தேஜஸைச் சகிக்க முடியாததால் அவன் நீங்காத துக்கத்தில் ஆழ்ந்தாள். அவளிடம் முதலில் மனுவென்னும் பிரஜாபதியும்; யமனும் யமுனை என்னும் பெண்ணும் இரட்டைப் பேறாகப் பிறந்தார்கள். சூரியனுடைய ரூபம் அதிக தேஜஸாக இருந்ததால் அவன் பத்தினி தன் ஆத்மசக்தியால் ஒரு பெண்ணைத் தன்னைப் போன்ற சாயலுடன் உண்டாக்கி அவளுக்குச் சாயை என்னும் பெயரிட்டழைத்தாள். அப்போது அந்தப் பெண், சஞ்ஞிகையைப் பார்த்து, என்னை உண்டாக்கிய காரணம் என்ன என்று கேட்டாள். அதற்கு அவள் நான் என் தந்தையின் இல்லத்திற்குப் போய்வரும் வரையில் நீ என் கணவருக்குச் சந்தேகம் இன்றிச் சுகத்தைக் கொடுத்துப் பணி செய்வதுந் தவிர இச்சிறுவர்களையும் பேதமின்றிப் பாதுகாத்துவா! என்றாள். அதற்கு சாயை என்னால் இயன்ற மட்டும் உண்மை வெளியாகும் வரை செய்கிறேன். என்னுடைய மாறுவேடம் வெளியாகும் காலத்தில் நான் உண்மையை வெளியிட்டுவிடுவேன்! என்றாள். அவ்வாறே செய்க, என்ற சஞ்ஞிகை. தன் தந்தை வீட்டுக்குச் சென்றாள். புத்திரியைக் கண்ட துவஷ்டா மிகவும் கோபித்து, உன் கணவனின் உத்தரவின்றி நீ என்னிடம் வந்ததால் நீ ஒரு பெண் குதிரையாகக் கடவாய்! என்று சபித்துவிட்டார், அவள் அந்தச் சாபத்தைப் பெற்று உத்தர குரு என்னுமிடத்தில் பெண் குதிரையாகச் சஞ்சரித்து வந்தாள். சஞ்ஞிகை தன் தந்தையிடம் சென்றதையுணராத சூரியன் அவளால் உண்டாக்கப்பட்ட சாயையின் மாறுபாடு அறியாதவனாக அவளோடுக் கூடிக்கலந்தான். அதனால் சாவர்னி மனு, சனி என்போரையும் பத்திரை என்னும் பெண்ணையும் சாயை ஈன்றாள். அவள் சஞ்ஞிகை கேட்டுக் கொண்டபடி புத்திர்களைச் சமமாக நடத்தாமல் தன் புத்திரரிடத்தில் அதிக வாஞ்சையோடும் மாற்றாள் புத்திரரிடம் வெறுப்போடும் வஞ்சனை செய்து வந்தாள். அந்த வஞ்சனையை சாயாபுத்திரனான யமன் சகிக்க முடியாமல் வாலிபம் முதற் கொண்டு பேதம் பாராட்டியதால் கோபித்து அவளைக் காலால் உதைக்க, அந்த உதையைப் பொறாத மாற்றாந்தாய் உன் கால் புழுக்கக் கடவது என்று சபித்தாள். அதற்காக யமன் மனம் வருந்திச் சாபத்திற்குப் பயந்து தன் தந்தையான சூரியனிடம் சென்று, எந்தையே எங்கள் தாய் மூத்தோர் மூவரையும் முனிந்து இளைய புத்திரரிடம் அன்புபாராட்டுவதைக் கண்டு மனந்தாளாமல் தாய் ஒருவழியாகப் புத்திரரிடம் சமநோக்கு செய்யாததால் உதைப்பதாகச் சொல்லி என் காலை எடுத்தது தவறுதான். ஆனால் பிள்ளையின் குற்றத்தைச் சகிக்காமல் தாய் சபிப்பது தர்மமா? அவ்வாறு தூக்கிய கால் புழுச் சொரிக என்று சபித்து விட்டாள்.

ஆகையால் அந்தச் சாபத்தை மாற்றி என் குற்றத்தையும் பொறுத்து அருள வேண்டும் என்று வேண்டினான். சூரியன் தன் புத்திரனை நோக்கி, மகனே! தாயின் சாபத்தை விலக்குவது அரிது சக்தியவானாகவுள்ள உன்னை இவ்வாறு சபிப்பதற்கு ஏதாகிலும் பெரிய காரணம் இருக்க வேண்டும் அதைவிசாரித்து அறிவேன். என்று கூறி, அவனைச் சமாதானம் செய்துவிட்டுச் சாயாதேவியிடம் சென்று அதிககோபத்தோடு, புத்திரர்களிடம் சமநோக்கம் இருக்க வேண்டுமே அதில்லாமல் யமனைக் கோபித்துச் சாபமிடலாமா? என்று கேட்டான். அதற்கு சாயை இனி என் மாறுகோலத்தைத் தெரிவிக்காமல் இருப்பது தவறு என்று எண்ணி, உண்மையைச் சொல்லி விட்டாள். அதைக் கேட்டதும் சூரியன் அதிக கோபத்துடன் தன் மாமனான துவஷ்டாவிடம் சென்று விண்ணப்பித்தான். துவஷ்டா நல்ல வார்த்தைகளால் அவன் கோபத்தை மாற்றி உன் மனைவி உன் தேஜஸின் வெப்பத்தைச் சகிக்கச் சக்தியற்றவளாய் தன் மேனி கெட்டு உத்திர குரு என்னும் பசுமையான காட்டில் ஆத்மபலத்தால் பெண் குதிரை வடிவு கொண்டு உன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு அவள் அங்கே சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாள் என்று கூறினார். அதனால் கோபம் நீங்கிய சூரியன் மீண்டும் அவர் நோக்கி, என் இஷ்டப்படி நடந்தால் உன் தேஜஸை யாரும் சகிக்கும்படியாகவும் பார்வைக்கு ரம்மியமாக இருக்கும்படியாகவும் நான் செய்கிறேன்! என்றார். அதற்குச் சூரியனும் ஒப்புக்கொண்டான். துவஷ்டா அவனைச் சாணையிலேற்றிச் சாணை செய்து அதனால் தீட்சண்யம் அடக்கி, பார்ப்போர் மகிழக்கூடிய உருவத்தை அவனுக்குக் கொடுத்தார். சூரியன் துவஷ்டாவிடம் விடைபெற்றுத்தன் மனைவியான சஞ்ஞிகையை அடைய வேண்டும் என்ற ஆவலால் தனது யோக பலத்தால் தன் உருவை மாற்றிக்கொண்டு ஆண் குதிரையின் வடிவங்கொண்டு கூடிக்கலக்கமுயன்றான். அப்போது அவனைப் பத்தினி பரபுருஷன் என்னும் சந்தேகத்தால் விலகினாள். அதைக் கண்ட சூரியனாகிய ஆண்குதிரை; நாசிவழியாகத் தன்வீரியத்தை விட, அந்த வீரியத்தினால் அஸ்வினி தேவதைகள், நாசத்தியர் என்றும் தசரர் என்றும் பெயரையடைந்து மிகவும் அழகிய உருவத்தோடுதோன்றித் தேவ வைத்தியர்களானார்கள். அவர்களைக் கண்டு சூரியன் மகிழவே அதைக் கண்ட பெண் குதிரையான சஞ்ஞிகை தன் கணவன் என்று உணர்ந்து, அவன் தேஜஸ் குறைந்து அணுகக் கூடியவிதமாக இருப்பதைக் கண்டுமகிழ்ந்தாள். யமன் தாயின் சாபத்தால் பீடிக்கப்பட்டு தர்மத்தால் பிரஜைகளை இரட்சித்துத் தன் நல்லொழுக்கம், தவம் முதலியவற்றால் தென்திசைக்கு அதிபதியாகவும் பிதுரர்களுக்குத் தலைவனாகவும் சாஸ்தா என்னும் பெயருடன் வாழ்ந்தான். முன்பு சாயாதேவியிடம் தோன்றிய சாவர்னிமனு மேருமலையின் உச்சியில் மறுபதவியை அடையவேண்டும் என்ற ஆசையால் தவஞ் செய்துவருகிறான். அவன் தம்பியாகிய, சனிபகவான் கோரமான தவஞ்செய்து நவக் கிரகங்களில் ஒருவனானான். யமனின் தங்கையான யமுனை, வெகுகாலம் தவஞ்செய்து பூமியில் உள்ளவர்களைச் சுத்தஞ்செய்ய யமுனை என்னும் நதியாகப் பிரவாகித்து யாவரையும் புனிதராக்கி சகலவித சவுக்கியங்களுக்கும் ஆதாரமாய்க் காளிந்தி என்னும் பெயரில் நதியாக பிரவாகித்து வருகிறாள். இந்தச் சரிதத்தைப் பக்தி சிரத்தையோடு பூசித்துப் படிப்பவர்களும் கேட்பவர்களும் சகல பாவங்களையும் போக்கிப் புனிதராய், இகபரலோக சாம்ராஜ்யங்களை அடைவார்கள்.

59. வைவசுவத மனுவின் மரபு

சூரிய புத்திரரான வைவசுவதமனுவிடம் வலியவர்களாயும் சூரிய தேஜஸிற்கு ஒப்பானவர்களாயும் அறநெறிப்படி நடப்பவர்களாயும் இக்ஷ்வாகு, சிபி, நாபாகன், திருஷ்ணாசையாதி நரிஷியந்தன் நாபாகன், கருஷன், பிரியவிரதன் என்ற நவபுத்திரர்கள் தோன்றினார்கள். இவர்கள் அல்லாமலும் வேறு புதல்வரையும் உண்டாக்கப் பலகாலம் யாகஞ் செய்து ஒருவரும் தோன்றாமல் கடைசியாக இடை என்னும் பெண் ஒருத்தி மின்னற்கொடி போன்ற சாயலும் சிறுத்த இடையும் பெருத்த தினமும் சந்திரனைப் போன்ற முகமும், மேகம் போன்ற கூந்தலும் ஒல்லிய தேகமும் கொண்டு, திவ்யாலங்கிருத பூஷிதையாய்த் தோன்றினாள். அவ்வாறு தோன்றியவளை மனு பார்த்து பெண்ணே! நீ என்னோடு கூடிப்புத்திரரை உண்டு செய்வாயாக! என்றார். ஆனால் இடை என்ற அந்தப் பெண்! சக்கரவர்த்தியே! நான் மித்திராவருணர்கள் என்பவர்களுக்காக உண்டாக்கப் பட்டவள் அவர்களைத் தான் நான் அடையவேண்டும். உம்மால் என்னை அதர்மம் அடைய வேண்டியதில்லை! என்று சொல்லி, மித்திராவருணர்களிடம் சென்று அவர்களை வணங்கி, நான் உங்களுக்காகவே மனுவின் யாகத்தில் உண்டாக்கப்பட்டேன். ஆகையால் என்னை ஆதரிக்க வேண்டும் என்றாள். அவர்கள் இடையைக் கண்டு, தர்மம் தெரிந்தவளே! உன் நடையாலும் ஒழுக்கத்தாலும் குணத்தாலும் அழகாலும் நாங்கள் மகிழ்ந்தோம் நீ மகத்தான கீர்த்தியைப் பெற்று மனுச்சக்கரவர்த்தியின் குலத்தை விருத்தி செய்யக்கூடிய சுத்தியும்நன் என்னும் பெயருடைய புத்திரன் ஆகப்போகிறாய்! என்றார் இதைக் கேட்டுக் கொண்டு இடை தன் தந்தையிடம் செல்லும் வழியில் சந்திரனின் புதல்வனாகிய புதன் அவளைச் சந்தித்து, அவளது உருவலா வண்ணியங்களைக் கண்; மோகங்கொண்டு தன்னைக்கூடி மகிழ வேண்டும் என்று வேண்டினான். அவளும் அவனது விருப்பத்திற்கு இயைந்து இருவரும் அங்கேயே கூடிச் சங்கமம் செய்தார்கள். அதனால் புரூரவச் சக்கரவர்த்தி பிறந்தான். உடனே தன் பெண்வடிவு மாறுபட்டு சுத்தியும்நன் என்னும் புருஷனாகவும் இடையென்னும் பெண்ணாகவும் தோன்றி இருவருங்கூடி உத்கலன் கயன். விநதாசுவன்; என்ற மூன்று புத்திரர்களைத் தந்தனர் அவர்களில் உத்கலன் என்பவனுக்கு உத்கலம் என்ற தென்திசையையும் விநதாசுவனுக்கு மேல்திக்கையும் கயனுக்கு சுயநாட்டையும் கொடுத்துப் பாதுகாக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

வைவசுவதமனு சூரியனின் விருப்பப்படி இந்தப் பிரபஞ்சத்தைப் பத்துப் பிரிவுகளாக்கித் தன் புதல்வருக்குக் கொடுத்தார். அவர்களில் மூத்தவனாகிய இக்ஷ்வாகு மத்திய நாட்டைப் பரிபாலித்து பிரதிஷ்டானம் என்ற ஒரு நகரத்தை உருவாக்கிப் புரூரவனை அதில் இருக்கச் செய்தான். மனுசக்கரவர்த்தியால் உண்டாக்கப்பட்ட ஆண் பெண் வடிவமான சுத்தியும் நன்நரசித்ரனுக்கு ஷகை என்னும் பெண்ணை விவாகஞ் செய்து புத்திரவிருத்தி செய்தான். அம்பரீஷனுக்குப் பாக்கிலீகன் என்னும்  புத்திரனும் சையாதிக்கு ஆகர்த்தர் என்னும் சில புத்திரர்களும் சுகன்யா என்னும் ஒரு பெண்ணும் பறந்தார்கள். சுகன்யா சவன மகரிஷியை மணந்து கொண்டாள். ஆநர்த்தனுக்கு ரேவன் என்னும் புதல்வன் பிறந்து, ஆநர்த்தராஜ்யத்தில் குசஸ்தலி என்ற நகரத்தை நியமித்து அதில் வாழ்ந்து, ஸாவஹன் ககுத்மா என இரு புதல்வரை ஈன்றனன். அவர்களில் மூத்தவன் குசஸ்தலி இராஜ்ஜியத்தை அடைந்து பிரமலோகம் முதலிய இடங்களுக்குச் செல்லும் வல்லமை பெற்று பலகாலம் பிருமலோகத்தில் வசித்து; இஷ்டமான உருவங்களை அடைந்து. ரேவதி என்னும் ஒரு கன்னிகையைப் பெற்று அவளைத் துவாரகையில் பலராமனுக்குத் திருமணம் செய்வித்து மேருமலையில் தவஞ்செய்கிறான். ககுத்மா என்பவன் குகஸ்தலியை அடைந்து சில காலம் ஆட்சி செய்து மூப்பு மரணமின்றி வாழக்கருதிப் பிரமலோகத்தையடைய அப்போது இராக்ஷசர்கள் அந்த ராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அந்தக் ககுத்மாதவச் செயலில் இருந்ததாலும் ஆட்சியை தானவர் கைக் கொண்டதாலும் அவன் புதல்வர் நூற்றுவரும் பல நாடுகளிலும் பரவினார்கள். இக்ஷ்வாகு புத்திரரில் அந்நூற்றுவருடைய வமிசங்கள் பலவிடங்களில் பரவின. நாபாகனுக்குக் காரூடன் என்பவன் தோன்றித் தன்பெயரால் ராஜ்யம் ஒன்றை உண்டாக்கி, பற்பல க்ஷத்திரியரைப் பெருக்கினான் அவர்களில் ஒருவனே வமிசலிருத்தி செய்தவன். அரிஷ்டனுக்கு பிரஷத்தவன் என்பவன் பிறந்து குருவின் பசுவைக் கொலைசெய்து, அதனால் சாபம் ஏற்றுச் சூத்திரத்துவத்தை அடைந்தான். வைவசுவதமனுவின் முதல் மகனாகிய இக்ஷ்வாகுக்கு சூரர்களான புதல்வர்கள் நூற்றுவர் உண்டு. அவர்களில் விகுக்ஷி என்பவன் மூத்தவன் அவன் அயோத்தியில் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து ஐம்பத்தாறு தேசங்களையும் ஆட்சி செய்தான் அவனுக்குச் சகுனி முதலிய பதினைந்து புதல்வர்கள் தோன்றி வடதேசங்களைக் காத்தனர்.

இக்ஷ்வாகு அரசு புரியும் போது, அவன் வீட்டில் சிரார்த்ததினத்தில் சமைக்கப்பட்டிருந்த முயலின் கறியை அவன் புத்திரனான விருக்ஷி என்பவன் சாப்பிட்டு சுவைத்தான். அதை தந்தையான இக்ஷ்வாகு உணர்ந்து மனம் வருத்திச் சினந்து ஆசிரியரை அதுபற்றி வினவினான், அதற்கு அவர் அவனை அரசுரிமைக்கு உடையவனாக்காமல் அனுப்பிவிடு என்றார். உடனே இஷ்வாகு குருமொழியைக் கேட்டு, தன் புதல்வனை அவ்வாறே அனுப்பி விட்டு, தானே அரசுரிமை ஏற்று ஆட்சி செய்து சில காலம் சென்றபிறகு, விருக்ஷி என்பவனுக்கு இளையவனான ஆயோதன் என்பவனை அரசனாக்கினான். ஆயோதனுக்கு காகுஸ்தனும் காகுஸ்தனுக்கு அரிநாபனும் அரிநாபனுக்குப் பிருதுவும் பிருதுவுக்கு விஷ்டாசுவனும் விஷ்டாராசுவனுக்கு இந்திரனும் இந்திரனுக்கு யுவாநாசுவனும் அவனுக்குச் சிராவனும் புதல்வராகத் தோன்றி வமிச விருத்தியாயிற்று சிராவன், தன் பெயரால் சிராவஸ்தி என்ற நகரத்தை அமைத்து, தர்மசீலனாய் ஆண்டு வந்தான் சிராவனுக்குப் பிரகத்சுவனும் அவனுக்கு குவலாசுவனும் உண்டாயினர். அவன் இராஜநீதி தவறாமல் அரசு செலுத்தும் போது அவனுக்கு வில்லாளிகளான நூறு புதல்வர்கள் தோன்ற அப்புத்திரர்களிடம் தன் இராஜ்ஜியத்தை ஒப்புவித்து வனஞ் சென்று தவஞ் செய்யவேண்டும் என்று அவன் கருதியிருந்தான். அப்போது அந்த குவலாசுவனிடம் உத்தங்க முனிவர் வந்து இக்ஷ்வாகு குலத்தரசனே! நீயே இந்தப் பூமியைக் காக்க வேண்டும் நீ வனஞ் செல்வது தகாது. என் ஆசிரமத்திற்கு அருகே மனிதவாடையில்லாத ஒரு மணற் பிரதேசத்தில் ஓர் அசுரன் பிரமதேவனிடம் பெற்ற வரத்தால் தேவர்களாலும் வெல்ல முடியாத பலவானாக பூமியில் வசிக்கிறான். அவன் பெயர் துந்து மதுவின் மைந்தனான துந்து என்னும் அவன் உலகத்தை நாசஞ் செய்யவேண்டும் என்று பூமியின் கீழேயிருந்து தவஞ் செய்து வருஷத்திற்கு ஒருமுறை சுவாசம் விடுகிறான். அப்போது பற்பல மலைகள் மரங்களோடு கூடிய பூமியானது ஏழு நாட்கள் வரையில் நடுங்குகிறது. கருந்தூள் செந்தூள் பரவிச் சூரிய மண்டலத்தை மறைக்கிறது. அவன் கண்களிலிருந்து தோன்றும் நெருப்புப் பொறிகள் பிரளயகாலாக்கினியைப் போல உலகம் முழுவதையும் எரிக்கின்றன. அவனது கொடுமைகளைச் சகிக்க என்னாலும் உலகினராலும் சாத்தியப்படாது நீயே அவனைக் கொல்லவேண்டும். நீ அவனைக் கொன்று விட்டால் உலகினர் யாவரும் சுகம் அடைவார்கள். பூர்வத்தில் அவனை அழிக்க வேண்டும் என்று நான் நெடுங்காலம் தவஞ்செய்ய, விஷ்ணுமூர்த்தி பிரசன்னமாகி, உத்தங்கரே! நீர் இந்தத் தந்துவை அழிக்க விரும்புவீராகில் உலகத்தில் க்ஷத்திரியர்களிலே சிறந்தவனாக விளங்கும் அக்குவலாசுவனுக்கு என் வல்லமையைக் கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இவ்வாறு செய்வதை விட தவஞ் செய்வது சிறந்தது அல்ல! என்று கூறினார். அதைக் கேட்டதும் குலவாசுவன் முனிவரே! நான் இனி மேல் ஆயுதங்களையே எடுப்பதில்லை என்று பிரதிக்ஞை செய்திருக்கிறேன். ஆகையால் என் புத்திரர்கள் அவனை வதஞ்செய்யத் தடையிராது என்று கூறித்தன் புதல்வர்களை அந்த முனிவருடன் அனுப்பினான். அவர் அவர்களைக் கொண்டு, அந்த அசுரனைக் கொல்ல இயலாது என்றார். அதன் பின் அரசன் தன் புதல்வர்களையும் தன்னோடு அழைத்துச் சென்று அந்த வனத்தை அடைந்து அசுரன் இருக்கும் இடம் வரையில் வெட்டும்போது துந்துவினுடைய சுவாசத்தினால் அவன் புதல்வரில் மூவர் நீங்கலாக மற்றவர்கள் உயிர் நீங்கினார்கள். அப்பொழுது உத்தங்க முனிவர் விஷ்ணுவைப் பிரார்த்திக்க அவர் குவலாசுவனுடலில் தன் அம்சத்தைச் செலுத்தினார். தேவர்கள் மலர்மாரி பொழிந்தது. இனி இவன் துந்துமாரன் என்ற பெயரை அடையப் போகிறான். என்று துந்துபிகளை முழங்கினார்கள். குலவாசுவன் துந்து என்பவனை நேரில் கண்டான். அப்போது அவன் தன் வாயிலிருந்து ஒரு ஜலவேகத்தை உண்டாக்கினான். அதைக் குலவாசுவன் அடக்கித் தன்னிடமிருந்த திவ்விய அஸ்திரங்களாலும் விஷ்ணுவின் கருணையினாலும் அவனைச் சம்ஹரித்து துந்துமாரன் என்னும் பெயரைப் பெற்றான். உத்தங்கமுனிவர் மனம் மகிழ்ந்து அவ்வரசனை நோக்கி, நீ செல்வம் முதலியவற்றில் குறைவின்றி வாழ்ந்து பகைவர்களை வென்று சிலகாலம் அரசு செய்து தவச் செயலை மேற்கொண்டு அழிவு இல்லாத உத்தமமான பதவியை அடைவாயாக! என்று வாழ்த்தினார். அவ்வாறே அவனும் சில காலம் அரசாண்டு பின்னர் தவச்செயலில் இருந்தான்.

துந்துவால் இறவாமல் தப்பிய புதல்வர்கள் மூவரில் திருடாசுவன் என்பவன் மூத்தவன் ஹம்சன், கபிலன், என்பவர்கள் இளையோர் அவர்களில் மூத்தவனான திருடாசுவனுக்கு ஹரிய சுவனும், ஹரியசுவனுக்கு நிகும்பனும் அவனுக்கு சங்கதாசுவனும் அவனுக்கு அக்ஷõசுவன் கிருதாசுவன் என்ற புத்திரர்களும் திருஷத்வதி என்ற பெண்ணும் பிறந்தார்கள். திருஷ்தவதிக்கு மூவுலகங்களிலும் புகழ் பெற்ற பிரசேனஜித் தோன்றினான். அவன் கவுரி என்னும் பெண்ணை மணந்து யுவனாசுவனைப் பெற்று வாழ்ந்து வரும்போது அவள் பேரில் கோபம் கொண்டு நதியுருவம் அடையும்படிச் சபித்தான். யுவனாசுவன் மகன் மாந்தாதா என்பவன் திரிலோகங்களிலும் ஏகசக்கராதிபத்தியஞ் செய்து சசிபிந்துவின் குமாரியான சைத்திராதை என்பவன் உருவப் பொலிவில் ரதியைப் போலவும், கற்பில் அருந்ததியைப் பேரலவும் விளங்கிப் பதினாயிரம் சகோதரர்களோடு விளங்கியதால் அவளை மணந்து தவசீலர்களான புருகுற்சன் முசுகுந்தன் என்ற இரண்டு புதல்வர்களைப் பெற்றான். புருகுற்சனுக்கு நர்மதை என்னும் பெண்மணியிடம் திரிசதசியு என்பவன் பிறந்தான். அவனுக்குச் சத்துரு நாசஞ்செய்யவல்ல திரிதன்வாவும் அவனுக்குத் திரையாருணியும் அவனுக்கு மஹாபலிஷ்டனான சத்தியவதனனும் பிறந்தார்கள். சத்தியவதனன் தன் ஆட்சியில் நூதன விவாகஞ் செய்து கொண்டவருடைய மனைவியரையும் இளமை மதப்புள்ளகன்னிகைகளையும் பலாத்காரமாகப் புணர்வதில் விருப்பமுடையவனாக இருந்தான். அவனுடைய துர்ச்செயல்களைக் கண்டு மனஞ் சகியாத அவன் தந்தையான திரையாருணி என்பவன் தன் மகனைக் கடிந்து தன் இராஜ்யத்தைவிட்டு வனத்தில் வேடருடன் வாழும்படி அனுப்பி விட்டான். சத்தியவதனன் தன் தந்தையின் கட்டளைப்படி அவ்வாறே வாழ்ந்து வந்தான். திரையாருணி தன் மைந்தன் செய்த அக்கிரமத்தைச் சகியாமல் விரத்தியுடன் வனஞ்சென்று தவஞ்செய்தான். அப்போது துவாதச வருஷப் பஞ்சம் சம்பவித்துப் பிரஜைகள் பெருங் கஷ்டத்தை அடைந்தார்கள். அப்போது அங்கு தவஞ்செய்து கொண்டிருந்த விசுவாமித்திரர் தன் புத்திரர்களை விட்டுவிட்டு கடற்கரையை அடைந்து அங்கே தவச் செயலில் இருந்தார். அதனால் அந்த முனிவரில் பத்தினி தன் புத்திரர்களைப் பராமரிக்கும் சக்தியற்று தன் புத்திரர்களில் ஒருவனைக் கழுத்தில் கட்டிக்கொண்டு போய்ச் சத்தியவதனனுக்கு விற்று அவன் தந்த பொருளைக் கொண்டு ஏனைய புதல்வரைக் காப்பாற்றி வந்தாள். சத்தியவதனன் விசுவாமித்திரரிடம் வைத்த அன்பினால், அப்பிள்ளையைப் பொருள் கொடுத்து வாங்கிக் காப்பாற்றி வந்தான். களமாகிய கழுத்தில் கட்டிக்கொண்டு வந்ததால் அவனுக்கு காவலன் என்ற பெயருண்டாயிற்று அந்தக் காலவன் என்பவன் மஹா தபஸ்வியாக விளங்கினான்.

60. சத்தியவதனன் சகரன் பரம்பரை

நைமிசாரணிய வாசிகளே! சத்தியவதனன் விசுவாமித்திரரின் புத்திரர்களையும் மனைவியையும் ஆதரித்து, மாமிசம் முதலான உணவு வகைகளை கொடுத்துதவி அவரது ஆசிரமத்தையும் அதிலுள்ள தீர்த்தங்களையும் காப்பாற்றி வந்தான் சத்திய விரதனைத் திரையாருணன் காட்டுக்கு ஓட்டியபோதும், வனத்திலே அவன் மிருகங்களை வதைக்கும் போதும், திரிகால நடப்புகளையும் அறிந்த வசிஷ்ட முனிவர் அருகிலே இருந்தும், மேல் நடக்க வேண்டியவற்றை அவர் அறிந்திருந்தும் அவர் சிறிதும் தடைசெய்யவில்லை. ஆயினும் சிறிது காலங்கழித்து அவர் சத்தியவதனனைச் சந்தித்து நீ தீச்செயல்கள் புரிவதை நிறுத்திக் கொள்வாயானால் நான் உன் தந்தையிடம் சொல்லி, உனக்கு ராஜ்யத்தை கொடுக்கச்செய்கிறேன் என்றார். அவன் அதைக்கேளாமல், தன் இச்சைப்படியே நடந்து வந்தான் அதைக் கண்ட அவன் தந்தை திரையாருணன், தன் குருவான வசிஷ்ட முனிவரை நோக்கி, சுவாமி! என் இராஜ்யத்தை ஆள எனக்குப் பிறகு சந்ததியில்லையே! இதற்கு என்ன செய்வது? என்று கேட்டாள். அதற்கு வசிஷ்டர் உன் குமாரனான சத்தியவதனன் மேலும் சிவ காலம் வனத்திலேயே இருந்தால் அவனது பாவங்கள் ஒழிந்து விடும் உன் ஆயுள் முடிவில் அவனுக்கே உன் ராஜ்ஜியத்தைக் கொடுத்துவிடலாம்! என்று கூறிவிட்டு சத்தியவதனனை அழைத்து நான் பன்னிரண்டு வருஷம் தீøக்ஷயாக இருப்பேன் நீ சிறிதும் அக்கிரமமில்லாமல் எனக்குப் பணிவிடை செய்துவா? என்றார், அதன் அதற்கிணங்கி அவருக்குத் தொண்டு செய்து வந்தான். அவரும் தவயோகத்தில் இருந்தார்.

அந்தச் சமயத்தில் விசுவாமித்திரரின் குடும்பத்தைக் காக்க, உணவு, ஒன்றும் கிடைக்காமல் இருந்ததால் அவன் வசிஷ்டரின் ஆசிரமத்திலிருந்த காமதேனுவின் வமிசத்தில் தோன்றிய இஷ்டகாமியங்களைக் கொடுக்கத்தக்க பசு ஒன்றைக் கொன்று தானும் புசித்து விசுவாமித்திரரின் மனைவி முதலியவர்களுக்கும் ஊட்டினான். அதையறிந்த வசிஷ்ட முனிவர் வெகுண்டு அவனைக் கோபித்து அடா கொடியவனே! உன் அபசாரத்திற்காக உன்னை இப்போதே கொன்று விடுவேன். ஆயினும் உன் தந்தையிடம் உன்னை அரசனாக்குவேன் என்று நான் கொடுத்தவாக்கும் நீ எனக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் பணிவிடை செய்வதாக ஒப்புக் கொண்டதும் என்னைத் தடை செய்கின்றன இந்த இரண்டு தடைகளும் இல்லாவிட்டால் உன்னை இப்பொழுதே சபித்துவிடுவேன் உனக்கு உரிமையில்லாத பிறன் மகளிரோடு நீ கூடிக் காமலீலை புரிவதும் வேடுவர்போல ஜீவஹிம்சை செய்து வாழ்வதும், பசுவைக் கொன்றதுமான மூன்று குற்றங்களைச் செய்து விட்டாய் உன் குற்றத்திற்காக முன்னதாக உன்சிரசில் சங்கினை அடிக்க வேண்டும். உன் தந்தையைக் கருதி நான் அவ்வாறு செய்யாது இருந்தேன். இப்போது அவை மூன்றையுஞ் சேர்த்து அடித்து விடுகிறேன்! என்று கூறி திரிசங்கு என்று கூப்பிட்டார். அது முதல் சத்தியவதனன் என்ற பெயர் நீங்கி அவன் திரிசங்கு என்னும் பெயரைப் பெற்றான். அது முதல் அவன் விசுவாமித்திர முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தான். அப்போது ஒரு சமயம் விசுவாமித்திரர் தன் தவத்தை நிறுத்தி விட்டு, புத்திரர் முதலானவர்களைப் பார்க்க விரும்பி விரைந்து வந்தார் தன் குடும்பத்தைச் சந்தியவதனன் பாதுகாத்து வருவதைக் கண்டு அவர் மகிழ்ந்து உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று  கேட்டார். அவரைச் சாஷ்டாங்கமாக திரிசங்கு வணங்கி சுவாமி! வசிஷ்டமகரிஷி எனக்கு இராஜ்ஜியமில்லாமல் செய்து என்னைப் பாவியாக்கி விட்டார். நான் என் ராஜ்யத்தை அடையத் தயை புரிய வேண்டும்! என்றான்.

அஞ்சாதே! உன் பாவங்களையெல்லாம் ஒழித்து உன்னை அரசனாகப் பட்டாபிஷேகம் செய்து வைப்பேன்! என்று விசுவாமித்திரர் கூறி அந்த ராஜ்ஜியத்திலிருந்த பஞ்சம் நீங்கும் படி மழை பெய்யச் செய்வித்து யாகம் முதலானவற்றையும் செய்து அவனுக்குப் பட்டம் கட்டி. அவனையே அரசனாகச் செய்து தன் விருப்பப்படிச் சென்றார். திரிசங்கு சிலகாலம் சென்ற பிறகு, கேகய வம்சத்தில் தோன்றியசத்தியரதை என்பவளிடம் அரிச்சந்திரனைப் புத்திரனாகப் பெற்று அவன் தக்க வயதடைந்ததும் அவனுக்கு இராஜ்யாபிஷேகம் செய்வித்து தவவனத்தை அடைந்தான். அங்கு அவன் வசிஷ்ட முனிவரை சந்தித்து, அவரையே தன் குருவாகக் கொண்டு நான் இந்தத் தேகத்துடனே சுவர்க்கத்தை அடையத்தயை செய்ய வேண்டும்! என்று இறைஞ்சினான். ஆனால் அது அசாத்தியம் என்று வசிஷ்டர் சொல்லிவிட்டார் எனவே திரிசங்கு வசிஷ்டரின் புத்திரர்களை அடைந்து அவர்களிடமும் அது போலவே கேட்டான். அவர்களும் அது அசாத்தியமே என்று சொல்லிவிட்டார்கள். அதனால் திரிசங்கு துணுக்குற்று. என் குருவும் குரு புத்திரருமாகிய உங்களால் முடியாது என்றால் அவ்வாறு செய்யவல்லவரையே நான் குருவாகக் கொள்வேன் என்றான். அவனை வசிஷ்ட புத்திரர்கள் நோக்கி நீ எங்களை அவமதித்ததால் நீசனாகுக என்று சபித்தார்கள். அந்தச் சாபத்தை அடைந்த பிறகு திரிசங்கு மீண்டும் விசுவாமித்திரரிடம் சரண் அடைந்து அவரைக் கண்ட கவுசிகரான விசுவாமித்திரர் தம் தவப்பயனால் திரிசங்கு சுவர்க்கம் என்னும் இடம் ஒன்றை நியமித்து, அவனை அங்கு தங்கச் செய்தார்.

முனிவர்களே! அரிச்சந்திரன் சக்கரவர்த்தியாக இருந்து பற்பல இராஜசூய அசுவமேதயாகங்களைச் செய்து, மூவுலகத்திலும் சத்தியவான் என்றப் பெயரைப் பெற்றான். அரிச்சந்திரனுக்கு லோகிதாகவனும் அவனுக்கு விருகனும் அவனுக்குப் பாகுவும் தோன்றினார். பாகு என்பவன் அரசாளும்போது, ஹைஹய வம்சத்தில் தோன்றியவர்களும் தாலஜங்க வம்சத்தில் தோன்றியவர்களும் அவனுடன் சண்டையிட்டு அவனைக் காட்டுக்குத் துரத்தினார்கள். பாகுமன்னன் தன் இராஜ்யத்தை இழந்து வனத்தில் பிருகு வமிசத்தில் உதித்த அவுரவர் ஆசிரமத்தில் புத்திர விருப்பத்தோடு தவஞ்செய்தான். அவுரவர் ஒரு பழத்தை அவனிடம் கொடுத்து உன் மனைவியை இதைச் சாப்பிடச் செய்! என்றார். அருகிலிருந்த அவ்வரசனது மற்றொரு மனைவி அந்தப் பழத்தில் நஞ்சைக்கலந்து வஞ்சனையாகக் கொடுத்தாள். சில நாட்கள் பாகு இறந்தான். அவன் மனைவியார் உடன் கட்டை ஏற முயலும் போது அவுரவமுனிவர் விஷத்தோடு கருவுற்றிருப்பவளைப் பார்த்து, ராணியே! கர்ப்பவதியான நீ உடன் கட்டை ஏறக்கூடாது! என்று தடுத்து அவள் வயிற்றிலிருந்த விஷம் அந்தச் சிசுவைத் துன்புறுத்தாதபடி தன் மந்திரத்தால் தடுத்தார். எனவே விஷத்துடனேயே அந்தக் குழந்தை பிறந்தது. அதன் காரணமாக சகரன்(கரம்-விஷம்: சகரன்-விஷத்தோடு தோன்றியவன்) என்று பெயரிட்டு அவனுக்கு வேத சாஸ்திரங்களைக் கற்பித்தார்கள். பிறகு அவன் தன் தந்தை பறிகொடுத்த நாட்டை மீண்டும் அடைந்து மிலேச்சர் முதலானவர்களை வென்றடக்கி, ஏகசக்கராதிபதியாக ஆட்சி செய்து வந்தான் அவன் அவுரவ முனிவரின் அருளால் அடைந்த ஆக்னேயாஸ்திரத்தால் பற்பல மன்னர்களை வெகு சுலபமாக வென்று வந்தான். அதனால் மற்ற அரசர்கள் மனஞ்சகியாமல் சகரனுடைய குருவான வசிஷ்டரிடம் சென்று அவரிடம் விண்ணப்பஞ் செய்தார்கள் ஆனால் குருசொல்லியும் சகரன் கேளாமல் அவன் பகைவர்களை வதைத்துக் குடிமக்களைப் பாதுகாத்து வந்தான். மிலேச்சர்களில் சதரள் என்பவர்களின் குடுமியைக் கத்தரித்து சங்கரிக்க வேண்டும் என்றும் யவனரை முழுத்தலையும் முண்டிதமாக இருக்க வேண்டும் என்றும் காமபோஜர்கள் மோவாயில் மயிர் வைத்திருக்கவேண்டும் என்றும் அக்கிரமக்காரர்கள் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமானத் தண்டம் விதித்து சகரன் ஆட்சிசெய்து வந்தான். சந்ததி விருத்தியை விரும்பிய சகர சக்கரவர்த்தி வனத்தை அடைந்து தவஞ்செய்து ஒரு முனிவரின் கருணையால் வரம் பெற்றான். அதனால் அவன் மனைவியர் இருவரில் மூத்தவளிடம் வம்ச உத்தாரகனும் அற்பாயுளுடையவனுமான அசமஞ்சனும் இளையவளிடம் அதிசூரரான அறுபதினாயிரம் புதல்வரும் தோன்றினார்கள்.

அசமஞ்சன், தன் இளமைப் பருவத்தில் அந்த நகரத்திலுள்ள குழந்தைகளை யெல்லாம் நதியில் போட்டுக் கொன்று வந்தான். அதையறிந்த சகரன், தன் குருவாகிய வசிஷ்டரிடம் தர்ம சாஸ்திரத்தை விசாரித்து அவனைக் காட்டிற்கு அனுப்பி விடுவது என்று உணர்ந்து அவனை அவ்வாறே வனத்திற்கு அனுப்பி வைத்தான் அப்போது அசமஞ்சனின் மனைவி கர்ப்பவதியாக இருந்தாள் சில தினங்களில் குழந்தை பிறக்கவே, அதற்கு அம்சமான் என்று பெயரிட்டாள் மிலேச்சர்களால் குறைவுற்ற தானம் யாகம் முதலியவற்றை முன்பு போலவே விருத்தியாக்கி நிலைநிறுத்தி அசுவமேதயாகஞ் செய்ய நிச்சயித்தான். அதற்காக இலக்கணம் அமைந்த ஒரு குதிரையை அலங்கரித்து பூமியைச் சுற்றிவரச் செய்தான். அந்தக் குதிரைகீழைக்கடற் கரையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அப்போது தேவேந்திரன் சகரசக்கரவர்த்தியிடம் பகை கொண்டு அந்தக் குதிரையை அபகரித்துக் கொண்டு பாதலத்தில் தவஞ் செய்து கொண்டிருந்த கபில முனிவரின் ஆசிரமத்தில் கட்டிவிட்டுப் போய்விட்டான். சகரசக்கரவர்த்தி தன் அசுவமேதப் புரவியைக் காணாமல் தன் புதல்வர் அறுபதினாயிரவரையும் அதைத்தேடும் படி அனுப்பினான். அவர்கள் உலகமெங்கும் தேடியும் காணாமல். பூமயை வெடிக்கொண்டு பாதலஞ்சென்று அங்குகபில முனிவரின் தவச் சாலையில் அந்தக் குதிரை இருப்பதைக்கண்டார்கள். இந்த முனிவனே குதிரையை அபகரித்தவன் என்று அவரைப் பலவாறு தூஷித்துக் கூவினார்கள். முனிவர்யோகம் நீங்கி ஹுங்காரஞ் செய்தார். அதனால் அவர்கள் அனைவரும் எரித்து சாம்பலானார்கள்.நெடுநாள் கழிந்த பிறகு, சகரன்தன் பேரனான அம்சுமானை நோக்கி, நான் தீøக்ஷ செய்து கொண்டிருக்கிறேன் என்புதல்வர்கள் இறந்தாலும் யாகத்தைவிடக்கூடாது நீ அந்தக்குதிரையைக் கொண்டுவா, என்றான்.

அவ்வாறே அம்சுமான் அந்தக் குதிரையைத் தேடிச்சென்று பாதலத்தை அடைந்து, முனிவரையும் குதிரையையும் சகரபுத்திரர் எரிந்தனால் உண்டான சாம்பல் மலையையும் கண்டு விஷயத்தை அறிந்து முனிவரைப் பிரார்த்தித்து குதிரையை அவருடைய அனுமதியோடு பெற்றுக்கொண்டு, தன் மூதாதையருக்கு ஈமக் கடன் முடிக்க முயன்றான். அப்போது மாதுலனாகிய கருடன் தோன்றி, நீ ஆகாய கங்கையை வரவழைத்தாலன்றி இவர்கள் நற்கதி அடையமாட்டார்கள். சாபத்தீயினால் நரகத்தீயை அடைந்திருக்கிறார்கள் என்று அறிவித்தான். அது தன்னால் முடியாது என்று அம்சுமான் கருதி குதிரையைக் கொண்டு வந்து தன் பட்டனாரிடம் சேர்த்து யாகத்தை முடித்தான். சகரன் சிறிது காலத்தில் அம்சுமானுக்கு முடிசூட்டி விட்டுக் காலகதியை அடைந்தான். அம்சுமான், அநேககாலம் அரசு செய்து தன் புதல்வன் திலீபனுக்குப் பட்டங்கட்டித் தேகம் நீங்கினான் திலீபன், தன் காலம் முழுவதும் சகர புத்திரரை நற்கதியேற்றிச் சாத்தியப்படாமல் பகீரதன் என்னும் தன் புதல்வனுக்கு அரசுரிமையைக் கொடுத்து நற்கதியடைந்தான்.

பகீரதன் தன் முன்னோர் கபிலமுனிவரின் கடுஞ்சாபத்தால் கடுநரகமடைந்திருப்பதை அறிந்து அவர்களை நற்கதியடைய செய்ய வேண்டும் என்று நினைத்து கோகர்ண ÷க்ஷத்திரத்தில் தவமிருந்து ஆகாய கங்கையை வரவழைத்து, அவர்களையெல்லாம் நற்கதி அடையச்செய்தான் பகீரதனுக்கு சுருதமுயனனும் சுருத சயனனுக்கு நாபாகனும் அவனுக்கு அம்பரீஷனும் அம்பரீஷனுக்கு சிந்து தீபனும் அவனுக்கு அயுதாஜியும் அவனுக்கும் ருதுபர்ணனும் புத்திரராகப் பிறந்தார்கள். ருதுபர்ணன் அக்ஷவிருதயம் என்ற மந்திரத்தை அறிந்து நளசக்கரவர்த்தியிடம் நட்பு கொண்டிருந்தான். ருது பர்ணனுக்கு அநுபர்ணனும் அநுபர்ணனுக்கு கல்மாஷபாதல் என்னும் காரணப் பெயர் பெற்ற மித்திர சகனும் கல்மாஷாபாதனுக்குச் சர்வகர்மாவும் அந்த சர்வ கர்மாவுனுக்குத் தன்னை வென்ற இராவணனை நோக்கித் தன் வம்சத்தில் தோன்றிய ஒருவனால் இறக்கக்கடவாய் எனச் சாபமிட்ட அநரண்ணியனும் அவனுக்கு முண்டித் துருவனும், அவனுக்கு நிஷதனும் அவனுக்குத் தீர்க்கபாஹுவும் அவனுக்கு ரகுவும், அவனுக்கு அஜனும் அஜனுக்குத் தசரதனும் தசரதனுக்குத் தர்மத்திற்கு இருப்பிடமாகவும் இராக்ஷஸ குலகாலனும் நூறு அஸ்வமேதஞ் செய்தவனுமாகிய ஸ்ரீராமனும் ஸ்ரீராமனுக்குக் குசனும் குசனுக்கு அதிதியும் அதிதிக்கு நிஷதனும் நிஷதனுக்கு நளனும் நளனுக்கு நபசும் நபசுக்கு புண்டரீகனும் புண்டரீகனுக்கு ÷க்ஷமதன்வாவும் ÷க்ஷமதன் வாவுக்குத் தேவாநீகனும் தேவாநீகனுக்கு அஹீநகுவும் அஹீநருவுக்குச் சகஸ்வானும் சகஸ்வானுக்கு வீரசேனனுமாகப் புத்திரர்களாக அநேக அரசர்கள் தோன்றினார்கள். இம்மன்னர்கள் வைவசுவதமநுமரபில் தோன்றிச் சிறப்புற்றவர்கள் இவர்கள் பரம்பரை முழுவதையும் சொல்லி முடிக்க எவராலும் முடியாது இந்த வைவசுவதமநு மரபைப் பற்றிக் கேட்டவர்கள், நீண்ட ஆயுளோடும் புத்திரப் பேற்றோடும் விளங்கி சூரிய மண்டலம் வழியாகச் சிவலோகத்தை அடைந்து நித்தியமான வாழ்வையடைவார்கள். இவ்வாறு சூதமுனிவர் கூறினார்.

61. பிதுர்தேவர் சிறப்பு

நைமிசாரணியவாசிகள், சூத முனிவரை நோக்கி, சுவாமி சூரிய பகவானின் பரம்பரையைக் கேட்டு மகிழ்ந்தோம் இனி சிரார்த்த தேவர்கள் யார்? பிதுர்க்கள் யாவர்? அவர்களை எவ்வாறு வழிபட வேண்டும்? அவர்கள் எத்தகைய பயன்களைத் தருவார்கள்? இவற்றையெல்லாம் விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்! என்று கேட்டார்கள். சூதபுராணிகர் கூறலானார். முனிவர்களே! நீங்கள் அருமையான விஷயத்தைக் கேட்டீர்கள் இந்த விஷயம் முன்பு ஸனத்குமார முனிவரால் மார்க்கண்டேய மகரிஷிக்கும் மார்க்கண்டேயரால் பீஷ்மருக்கும் பீஷ்மரால் தர்மராஜருக்கும் சொல்லப்பட்டன. அவ்விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பிதுர்க்கள் சிரார்த்தாதி  கர்மங்களினாலேயே மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களுக்கு வேண்டிய பொருள்களைக் கொடுத்துப் பூஜிக்க வேண்டும் அவ்வாறு சிரார்த்தங்களை முறைப்படி செய்தவர்கள் பிதுர்க்களால் விரும்பியனவற்றையெல்லாம் அடைவார்கள். சிலருடைய பிதுர்க்கள் புண்ணிய வசத்தால் சுவர்க்கலோகத்தையும் சில பிதுர்க்கள் பாவ வசத்தால் அதோ லோகத்தையும் அடைந்திருப்பார்கள். ஆகையால் ஒருவன் செய்யும் சிரார்த்தம் அவர்களை எவ்வாறு சென்று அடைகின்றன என்று கேட்பீர்களாயின், அதையுஞ் சொல்லுகிறேன்; கேளுங்கள்.

சுவர்க்க வாசிகளாகிய தேவர்களும் தங்கள் பிதுர்சிரார்த்தத்தைச் செய்து வருவதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். பூர்வத்தில் பீஷ்மர் தர்மராஜனிடம் சொன்னதாவது தர்மநந்தனா! நான் ஒரு காலத்தில் என் தந்தையான சந்தனு மாமன்னருக்குச் சிரார்த்தம் செய்தபோது பூமியைக் கீறிப் பிதூர் ஆவாஹனஞ் செய்த இடத்திலிருந்து என் தந்தை தோன்றி அந்தப் பிண்டத்தைக் கை நீட்டிக் கேட்டார். நான் அதை அவர் கையில் கொடுக்காமல் தர்ப்பையின் மேலேயே வைத்தேன். அவர் அதைக் கையில் கொண்டு பெரிதும் மகிழ்ச்சியோடு எனக்குச் சில தர்மங்களைச் சொன்னார். அவர் சொன்னவை நீ தர்மவான் உன்னாலேயே நான் புத்திரப்பேறுடையவனானேன். உன்னாலேயே நான்கடைத்தேறினேன். அரசன் செய்யும் காரியத்தையே குடிமக்களும் பிரமாணமாகக் கொண்டு நடக்கிறார்கள். நானே நேராக வந்து, உன் கைப்பிண்டத்தைக் கையில் கொடுக்காமல் வேத மார்க்கத்தை நம்பி தர்ப்பையின் மீது என்னை உத்தேசித்து வைத்தாய் அதனால் உலகத்தில் அறநெறி நிலையாக வளரப்போகிறது. என்று நான் மகிழ்ந்தேன். நீ விரும்பிய காலத்திலன்றி உன் உயிர் நீங்காது நீ வாழ்வாய்! என்று கூறினார். அன்னிய லோகத்தை அடைந்த பிதுர்க்கள் சிரார்த்தத்தால் எவ்வாறு திருப்தியடைகிறார்கள்? என்று நான் கேட்டேன் அதற்கு என் தந்தை மகனேல, ஆதிதேவனுடைய புத்திரர்களான பிதுரர்கள் தேவர் அசுரர்! மானுடர், யக்ஷர், ராக்ஷசர், கந்தர்வர், கின்னரர், உரகர்களாலேயும் பூஜிக்கத்தக்கவர்கள். எந்த வர்ணாசிரமத்தில் பிறந்தவர்களானாலும் பிதுர்பூஜை அவசியம் செய்யவேண்டியவர்களே. தங்கள் பிதுர்கோத்திர நாமங்களைக்கூறி சிரார்த்தங்களைச் செய்தால் பிரமதேவனால் படைக்கப்பட்ட சிரார்த்த தேவர்கள் அதை அடைந்து பிதுரர்களாகிய நாங்கள் சுவர்க்க நரகங்களில் எங்கு இருந்தாலும் எங்களை அவர்கள் திருப்தி செய்கிறார்கள். இன்னும் இது விஷயமாக உனக்குள்ள சந்தேகங்களை மார்க்கண்டேய முனிவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்க! என்று கூறிவிட்டு என் தந்தை மறைந்தார். அதற்குப் பிறகு சிலகாலம் சென்றது. நான் இந்த விஷயத்தைப் பற்றி மார்க்கண்டேய முனிவரிடம் சென்று கேட்டேன். அவர் பீஷ்மா! நானும் நீயும் பிறரும் பிதுரர்களின் அனுக்கிரகத்தினாலேயே புகழ் முதலானவற்றை அடைந்திருக்கிறோம் நான் பல யுகங்களுக்கு முன்பு மேருமலையில் உச்சியில் கடுந்தவஞ்செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடை தேஜஸால் சுவர்க்க லோகத்திலிருந்து திவ்வியமான விமானம் ஒன்று அங்கு வரக்கண்டேன் அந்த விமானத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அக்கினியைப் போலவும் சூரிய ஒளியையும் மழுங்கச் செய்யத் தக்க பேரொளியாகவும் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் ஓர் அங்குஷ்ட( பெருவிரல்) அளவே இருந்தார். அவரைச் சாஷ்டாங்கமாகப் பணிந்து, நீங்கள் யார்? நான் எப்படி உங்களை அறிவேன்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர் மார்க்கண்டேயனே! நீ என்னை அறியுஞ் சக்தியுடையவனே ஆயினும் நான் சொல்கிறேன். நானோ சகல லோக சிருஷ்டிகர்த்தாவான பிரமதேவரின் மானஸ புத்திரர்களுடைய வம்சந்தான் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது நான் சந்நியாஸ ஆசிரமத்தை மேற்கொண்டிருக்கிறேன். நெடுங்காலத்திற்கு முன்பு தோன்றி அது முதலாகவே குமாரனாக இருப்பதால் ஸனத்குமாரன் என்று அழைக்கப்படுகிறேன். நீ பெரும் பக்தியுடன் தவஞ்செய்தமையால் உனக்குத் தரிசனம் தந்தேன். நீ என்ன வரம் வேண்டுகிறாய்? என்று கேட்டார். அதற்கு நான் மாதவரே! பிதுர்க்களின் உற்பத்தியைப் பற்றி எனக்கு நன்றாகச் சொல்லவேண்டும்! என்று கேட்டேன் அதற்கு ஸனத்குமாரர் சொன்னார்.

முனிவனே! முன்பு பிரமதேவர் சில தேவர்களைச் சிருஷ்டி செய்து தன்னைப் பூஜிக்கும்படி உபதேசித்தார். அவர்கள் பிரமதேவரின் வாக்கை மீறித் தங்களைத் தாங்களே பூஜித்து கொண்டார்கள். தன்னைப் பூஜிக்காத அத்தேவர்களை பிரும்மா கோபித்து நீங்கள் ஞானவீனர்கள் ஆகுக! என்று சபித்தார். அவ்வாறே அமரர்கள் அறிவுகுன்றி நலிந்து போய் பிறகு பிரமதேவரைப் பணிந்து எங்களுக்கு ஞானம் உண்டாகும்படி அருள் புரிய வேண்டும்! என்று இறைஞ்சினார்கள். அதற்கு பிரமதேவர் தேவர்களே! என் புத்திரரைச் சந்தித்து அதற்குப் பரிகாரங் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார். அதன்படியே அவர்கள் பிரமபுத்திரரை வேண்டினார்கள். அதற்கு அவர்கள், தேவர்களே! உங்களை அந்தச் சாபம் பாதிக்காது உங்கள் விருப்பப்படியே செல்லுங்கள். புத்திரர்களே என்று அவர்களுடைய சாபத்தை விலக்கினார். அப்பொழுது பிரமதேவர் அவர்களை அழைத்து அமரர்களே! நீங்கள் புத்திரரால் புத்திரர்களே என்று அழைக்கப் பெற்றதால் அவர்கள் பிதுரர்களாகவும் நீங்கள் புத்திரர்களாகவும் விளங்குவீர்களாக என்று அனுக்கிரஹஞ் செய்தார். அத்தகைய பிதுர்க்களை குறித்துப் பிண்டதானம் சிரார்த்தாதிகளைச் செய்தால். அப்பிதுர்த் தேவர்கள் திருப்தியடைந்து செய்தவனுடைய இஷ்ட காமியங்களைக் கைகூடச் செய்வார்கள். ஆகையால் விசுவதேவர் முதலாயினோரைச் சிரார்த்த காலங்களில் பூஜித்து, விரும்பியனவற்றை அடைதல் வேண்டும் என்று ஸனத்குமார முனிவர் கூறினார்.

62. பிதுர் பக்தியின் பயன்

ஸனத்குமார முனிவர், பீஷ்மரை நோக்கி, இராஜ சிரேஷ்டரே! பிதுர்த் தேவர்கள் எழுவர்! கவ்வியவாஹன் அனலன் சோமன், யாமன், அரியமான், அக்நிஷ்வாத்தன். பர்ஹிஷிதன் என்ற அவர்கள் சுவர்க்கத்தில் இருக்கிறார்கள். அவர்களில் நால்வர் தேகத்தோடும் மூவர் தேகம் இல்லாமலும் விளங்குவார்கள் இவர்களில் மூவரைத் தேவர்களும் ஏனைய நால்வரை அந்தணர் முதலான நாற்குலத்தாரும் வழிபடுகிறார்கள். பிதுர்க்களுக்குச் சிரார்த்த காலத்தில் வெள்ளிப்பாத்திரத்தினால் சிரார்த்தஞ் செய்யவேண்டும் மனைவியோடு கூடிய அக்நிமானாயின் சுதா என்னும் சப்தத்தினால் ஹோமம் செய்ய வேண்டும் அல்லது ஜலத்திலோ அல்லது பிராமணனின் கையாலோ ஹோமஞ் செய்ய வேண்டும் அவ்வாறு செய்பவர்கள் இகலோக சவுக்கியத்தையும் பரலோகத்தில் சுவர்க்க லோகத்தையும் அடைவார்கள். தேவகாரியத்தைக் காட்டிலும் பிதுர்க் காரியஞ் சிறந்தது. அதை அதிக பக்தியுடன் செய்யவேண்டும் பிதுர்க்காரியத்தினால் அடையுங்கதியை யோக பலத்தினாலும் அடைய முடியாது! என்று கூறி திவ்வியமான ஞானத்தை உபதேசித்து விண்வழியே சென்றார். பீஷ்மரே இனி முன்பு நடந்த ஒரு சரிதத்தைச் சொல்லுகிறேன்.

பரத்வாஜ முனிவரின் மைந்தர்கள் யோக தர்மத்தை அடைந்தும் தம் துர்நடத்தையால் பிரஷ்டர்களானார்கள். வாக்துஷ்டன் குலோதனன், ஹிம்சிரன், பிசுனன்(கோனன்) கபி (குரங்கு) பிதுர்வர்த்தி என அவர்கள் நடத்தை காரணமாக அப்பெயர்களை பெற்றார்கள். ஸ்வஸ்ரூபன் (தங்கையைரட் சித்தவன்) என்று ஓர் புத்திரனும் இருந்தான். இவர்கள் எழுவரும் பிரஷ்டர்களாகவே இருந்து அப்பிறவிகளை ஒழித்து கவுசிக முனிவருக்கு புதல்வர்களாகத் தோன்றிகர்க்க முனிவரின் சீடர்களாகி குரு÷க்ஷத்திரத்தில் தங்கள் ஆசிரியருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது கர்க்கமுனிவர் அவர்களை நோக்கி வேறோர் ஆசிரமத்திலிருந்து பசுவுங்கன்றும் ஓட்டிக்கொண்டு வரும்படிச் சொன்னார். அவர்கள் எழுவரும் அவ்வாறே சென்று பசுவைக் கன்றுடன் பிடித்துக் கொண்டு வரும் போது அவர்களில் சிலருக்குப் பசியினாலும் அறியாமையானாலும் பாவத்தினாலும் அந்தப் பசுவைக் கொன்று புசிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அவர்கள் அதைக்கூறவே அப்போது கபி ஸ்வஸ்ரூபன் என்பவர்கள் அது பாபம் அவ்வாறு செய்யக் கூடாது! என்று தடுத்தார்கள். பிதுர்வர்த்தி என்பவர் பிதுர்பக்தியுடையவனாக இருந்ததனால் நீங்கள் இதைக் கொல்வதானால் பிதுர்ப் பிரீதி செய்து இதைக்கொன்று புசிக்கலாம் என்றான். அதையே யாவரும் ஆமோதித்து அந்தப் பசுவைக் கொன்று சிரார்த்தத்துக்கு உபயோகித்து எழுவருமாக அதைச் சாப்பிட்டு விட்டார்கள், பிறகு அவர்கள் கன்றை மட்டும் குருவிடம் கொண்டு சேர்த்து சுவாமீ! பசுவைப் புலியொன்று கொன்றுவிட்டது! என்று பொய் கூறினார்கள். முனிவர் கபடமின்றி அதை ஒப்புக் கொண்டார். அவர்கள் எழுவரும் குலாசார தர்மத்தை கைவிட்டு கோவதை செய்து அதைச் சாப்பிட்ட பாவத்தாலும் குருவினிடம் பொய் சொன்ன பாவத்தாலும் தசார்ணம் என்னும் இடத்தில் வேடுவகுலத்தில் சகோதரர்களாகப் பிறந்தார்கள்.

கீழ்க்குலத்தில் பிறந்தும் அந்தக் குலத்து ஆசாரப்படி நடந்தும் பிதுர்பக்தியுடையவர்களாக இருந்ததாலும் அவர்களுக்கு முற்பிறவியின் ஞானம் உண்டாக்கிச் சிலகாலம் மனவருத்தத்துடன் காலம் கழித்தார்கள். காலஞ்சரம் என்னும் மலையில் மிருகங்களாகப் பிறந்தார்கள் அப்பொழுது பூர்வஜன்ம நினைவுடன் இந்தப் பிறவியை ஒழித்துவிட வேண்டும் என்று நினைத்து சரத்தீபத்தில் சக்ரவாகப் பறவைகளாகப் பிறந்தார்கள். அப்போது ஜன்மாந்தர ஞானத்துடன் குருவிடம் பொய் கூறினும் பணிவிடையை முறைப்படி செய்ததால் கோவதை செய்த பாவத்தை ஒழிக்க வேண்டும் என்னும் கருத்துடையவர்களாக இருந்தார்கள். சுமனஸ் சுவாக் சுத்தன் பஞ்சாலன் சித்திரத்ரிசகன் சுநேத்திரன் சுதந்த்ரன் என்னும் பெயர் பெற்று அவர்கள் சக்கரவாகப் பறவைகளாகச் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது நீபதேசத்தரசன் வேட்டையாட வந்தான். சுதந்திரன் என்னும் பறவை அவனுடைய செல்வத்தைக் கண்டு பொறாமை கொண்டு நான் இவனைப் போல ராஜாவாகப் பிறக்கும்படிப்  பூர்வஜனன புண்ணியம் ஏதேனும் இருக்குமோ? என்று ஆசையுற்றுக் கூறியது அதைக் கேட்டுக் கொண்டு அருகிலிருந்த உடன் பிறப்பான இரண்டு பறவைகள் நீ அரசனாகப் பிறந்தால் நாங்கள் அமைச்சர்களாகிறோம் என்றன அப்போது சுவாக் என்னும் பறவை நீங்கள் ஞானத்தையடைய விரும்பாமல் இராஜ்ய செல்வத்தை விரும்பினீர்கள் ஆகையால் அவன் அரசனாகவும் நீங்கள் மந்திரிகளாகவும் சிவகாலத்தில் காம்பிலிய தேசத்தை அடைவீர்கள் என்று கூறியது அப்போது அம்மூன்று பறவைகளும் சுவாக் என்னும் சகோதரனை நோக்கி நாங்கள் போகத்தை அடைந்தால் எப்போது எங்களுக்கு ஞானம் தோன்றும்! அது எப்படி வரும்? என்று கேட்டான் அதற்கு சவாக், பிதுர் பக்தியுடையவர்களாகையால் மற்றொரு பிறவியில் நாம் எல்லோரும் ஒன்று கூடி மானிடப்பிறவியை அடைந்து ஞானவான்களாவோம்? என்று கூறியது.

63. கர்க்க முனிவரின் சீடர்கள்

ஏழு சக்கரவாகப் பறவைகளும், மானச சரஸில் அன்னப் பறவைகளாகப் பிறந்து நீரையும் காற்றையும் அருந்திக் கொண்டு தவத்தால் தங்கள் உடலை இளைக்கச் செய்து கொண்டிருந்தன. வனத்தையடைந்த நீபதேச்தரசன் வேட்டையாடித் தன் படைகளோடு நகரத்தையடைந்து சிலகாலம் கழித்துத் தன் புதல்வனான ஹநூஹன் என்பவனுக்குப் பட்டங்கட்டி விட்டு, வனத்தையடைந்து தவஞ்செய்து கொண்டிருந்தான். அவனது தவத்தினால் அந்த வனம் பிரகாசித்ததால் வைப்பிராஜம் என்ற பெயரைப் பெற்றது. அன்னங்களுள் நான்கு யோக நிலையாகிய தவத்திலேயே விருப்புடனும் மூன்று மோக விருப்பத்துடனும் அப்பிறவியை கழித்தான். சுதந்திரன் என்ற பறவை காம்பிலிய நகரத்தின் அரச குமாரனான ஹநூஹன் என்னும் பெயருடன் பிறந்தது. சித்ரத்ரிசகன் சுநேத்திரன் என்னும் பறவைகள் அந்த நகரத்தில் ஒரு வேதியனுக்குப் பிள்ளையாகப் பிறந்து வேதங்களை கற்றுணர்ந்து, சாஸ்திரவான்களாக விளங்கினார்கள். பஞ்சாலன் என்ற பறவை ருக்வேதியாகத் தோன்றி ஆசாரியனாக விளங்கினான். சுத்தன் என்போன் வேதியனாகத் தோன்றி இரண்டு வேதங்களை உணர்ந்து கொண்டான். சுவாக் என்பவன் சாமவேதமுணர்ந்த வேதியனானான் சுமனஸ் என்பவன் யாகஞ் செய்விக்கும் தகுதியுடைய ஆசிரியனாகப் பிறந்தான். இவ்வாறு சிலகாலம் சென்ற பிறகு ஹநூஹன் என்னும் அரசன் பிரமதத்தன் என்னும் தன் புதல்வனுக்குத் தன் அரச உரிமையை வழங்கிவிட்டு வனத்தையடைந்து பெருந்தவஞ் செய்து உயர் பதவியை அடைய விரும்பிக் காலம் கழித்து வந்தான். அவ்வரசன் அவ்வாறு வனத்திற்குச் செல்லும்போது, பஞ்சாலனும் சுத்தனும் அவனுடன் தவவனத்தை அடைந்து தவஞ்செய்து சிறந்த பதவிகளை அடைந்தார்கள்; ஏனைய நால்வரும் அந்தக் காம்பலிய தேசத்திலேயே ஒரு ஏழைப்பிராமணனுக்குப் புத்திரர்களாகப் பிறந்து, திருதிமான், சுமஹாத்மா தத்துவதரிசி, நிருத்தகன் என்ற பெயர்களுடன் சாஸ்திரங்களையெல்லாம் கற்றுத் தேர்ந்து, யோக மார்க்கத்திலிருந்து முக்தியை அடைந்தார்கள்.

பீஷ்மரே! கோவதையான பெரும் பாவத்தை செய்தவர்களாயினும் பிதுர் திருப்தி செய்வித்த சிறப்பினால் பல பிறவிகளைக் கழித்த பிறகும் முற்பிறவி உணர்ச்சியோடும் முக்தியை அடைந்தார்கள் ஆகையால் ஒவ்வொருவரும் பிதுர்காரியத்தைப் பக்தி சிரத்தையுடன் அவசியம் செய்யவேண்டும் என்று மார்க்கண்டேய முனிவர் எனக்குச் சொல்லியிருக்கிறார் என்று பீஷ்மர் தர்மராஜனை நோக்கிக் கூறினார் என்று சூத முனிவர் நைமிசாரணிய வாசிகளுக்கு எடுத்து கூறினார், மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைந்து சிவபெருமானுடைய திருவடி நீழலையடைய வேண்டும் என்று விரும்புவோர் யாவரும் இந்தச் சிவமஹா புராணத்தைப் படித்தும் கேட்டும் பிறருக்குச் சொல்லியும், சிவபெருமானின் திருவடியில் மனதைச் செலுத்தியும் நல்வழியில் நிற்பார்களாக மஹாதேவா என்று ஒருமுறை சொன்னவுடனேயே பிரமஹத்தி முதலான பாவங்களெல்லாம் ஒழிந்து போமாயின் அந்தப் பெருமானுடைய மஹாபுராணத்தைப் பக்தியோடு வாசிப்பவரும் கேட்பவரும் நீங்காத சிவலோகத்தில் வாழ்வார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?

இந்தச் சிவமஹா புராணத்தைச் சொல்லிய அந்தண உத்தமரை ஆடையணிகளால் அலங்கரித்து சிவபெருமானாகப் பாவித்து விஷ்ணுமூர்த்தியின் அபராவதாரமாகிய வியாஸரூபியே! தேவரீருக்கு நமஸ்காரம் செய்கிறோம்! என்று பூஜித்தால் அனைத்துலக நாயனாகிய சிவபெருமான் பெருமகிழ்ச்சியடைந்து தம் பதவியைத்தருவார். இந்தப் புராணத்தைச் சொல்லிவந்த புராணிருக்குக்கன்றும் பசுவுமாகத்தக்கதக்ஷிணை வைத்துத் தானம்செய்ய வேண்டும். பொன்னால் செய்த சிவலிங்கமூர்த்தத்தை அவருக்குக் கொடுத்து, சாஷ்டாங்கமாகக் கும்பிட்டு, தாங்கள் சொல்லிய புராணத்தைச் சிரவணஞ் செய்த பயன் எமக்குத் கைகூடுமாக! என்று சொல்ல வேண்டும். அவ்வாறு செய்தவர்களே, புராணம் கேட்ட பயனை அடைவார்கள். ஆகையால் இப்புராணஞ் சொன்னவரைச் சிவமாகவே பாவிக்க வேண்டியது அவசியமாகும்.

தர்மசம்ஹிதை முடிந்தது.

 
மேலும் சிவமகா புராணம் »
temple news
காப்பு: ஜகதஹ் பிதாம் சம்பும், ஜகதோ மாதரம் சிவம், தத்புத்ரம்ச கணாதீஸம்,  நக்வைத த்வர்ண யாம் யஹம் -  ... மேலும்
 
temple news
41. அந்தகாசுரன் போராட்டமும் அந்தகேஸ்வர மகிமையும் நைமிசாரண்ய முனிவர்கள் சூத புராணிகரை வணங்கி சிவஞான ... மேலும்
 
temple news
2. தர்ம ஸம்ஹிதை காப்பு: நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ ரோத்தமம், தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத் ... மேலும்
 
temple news
16. சிவலிங்க பூஜையின் பயன் சவுனகாதி முனிவர்கள் சூதபுராணிகரை நமஸ்கரித்து ஸ்வாமி! சிவபெருமானுடைய ... மேலும்
 
temple news
3. கைலாய ஸம்ஹிதை: காப்பு: நமஸ் ஸிவாய ஸாம்பாய ஸகணாயஸ ஸூநவே, ப்ரதாந புருஷே ஸாய ஸர்கஸ்தித் யந்தஹேதவே! ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar