திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து 6ம் நாள் விழாவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் முதல் பத்து நாட்கள் கொண்டாடப்படும் பகல்பத்து உற்சவம் கடந்த 15ம் தேதி துவங்கியது. விழாவின் 6ம் நாளான நேற்று அதிகாலை நாச்சியார் திருப்பாவை, பெரிய திருமொழி திருக்கோவிலூர் பாசுரம் சாற்றுமுறை நடந்தது. மாலை 4:00 மணிக்கு தேகளீசபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ஆலய பிரதட்சிணமாக வலம் வந்து, பெருமாள் சன்னதியை அடைந்தார். பகல் பத்து உற்சவத்தின் நிறைவாக 24ம் தேதி இரவு பெருமாள் மோகன அவதாரத்தில் சாத்தப்படியும், திருமங்கை ஆழ்வார் மோட்ச வைபவம் நடக்கிறது. மறுநாள் 25ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சொர்க்கவாசல் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் அன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.