கோத்தகிரி; கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், கடந்த, 20ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த விழாவை ஒட்டி, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வருகிறது. ஒவ்வொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களின் உபயமாக நடந்து வரும் இந்த மண்டல பூஜையில், அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம், மலர் வழிபாடு நடந்து வருகிறது. விழாவின், 18 வது நாளான நேற்று, கோத்தகிரி வட்டார நாடார் சமூக சங்கத்தினரின் உபயமாக மண்டல பூஜை நடந்தது. அதிகாலை முதல், அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக மலர் வழிபாடு நடந்தது. பகல், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஆன்மிக சொற்பொழிவு இடம்பெற்றது. கோவை மாவட்டம், காரமடை மகளிர் அமைப்பின் சார்பில் நடந்த கண் கவர் கும்மியாட்டம், பக்தர்களை கவர்ந்தது. கோத்தகிரி வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.