மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் சைவ ஆதீனங்களில் முதன்மையான திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தின் 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மார்கழி (தனுர்) மாதத்தில் தினந்தோறும் பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம். அதேபோல் தனுர்மாத வழிபாட்டைஒட்டி திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் மயிலாடுதுறை அருகே மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயில், அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் கோயில், அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில், மன்னம்பந்தல் அஞ்சல்நாயகி சமேத ஆலந்துறையப்பர் கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். மன்னம்பந்தல் ஆலந்துறையப்பர் கோயிலுக்கு வந்த குருமகா சந்நிதானத்திற்கு கிராம மக்கள் சார்பில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து சுவாமி, அம்பாள், விநாயகர் உள்பட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு கோபூஜை செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் மாயூரநாதர் கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, ஸ்ரீராம், பாலாஜி, மன்னம்பந்தல் ஊராட்சி தலைவர் பிரியாபெரியசாமி, செயலர் ரஜினி உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.