வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாள் முழுவதும் அன்னதானம் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
முருகனின் ஏழாம் படைவீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. கோவிலுக்கு பல்வேறு பகுதியிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலில், ஒரு நேர அன்னதானம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், மதுரை கள்ளழகர் கோவிலில், நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் மற்றும் பழனி முருகன் கோவில் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று துவக்கி வைத்தார்.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் துவக்க நாளான இன்று அன்னதானத்தில், லட்டு, சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், அப்பளம், வடை, பாயாசம் ஆகியவைகள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், நாள்தோறும், 1,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.