டிசம்பர் 31,2024
திருச்சி; 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுந்தம் என அழைக்கப்படுகின்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று, நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, கஸ்தூரி திலகம் நவரத்தினக்காதுக் காப்புகள் வைரமணிக் கடிகையுடன் கூடிய அபயஹஸ்தம், மார்பிலே மகாலட்சுமி பதக்கம் தங்கக்காசு, முத்து மணி மாலைகள், காலிலே தண்டைக்கொலுசுக் காப்புகள் உள்ளிட்ட சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து அரையர்கள் அபிநயத்தோடு இசைக்கும் திவ்ய பிரபந்தத்தின் தீந்தமிழ் பாசுரங்களை கேட்கும் ஆர்வத்தோடு கருவறையிலிருந்து சிம்ம கதியில் புறப்பட்டு, அடியார் திருக்கூட்டம் புடை சூழ அர்ஜுனமண்டபத்தில் சேவை சாதித்தார்.
இன்று (31ம் தேதி) தொடங்கி ஜன. 9ம் தேதி வரை பகல்பத்து எனப்படும் திருமொழித்திருநாள் உற்ஸவம் நடைபெறும். அன்றைய தினம் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுவார். ஜன. 10ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். அன்று முதல் ஜன. 20ம் தேதி வரை ராப்பத்து உற்ஸவம் நடைபெற உள்ளது. ஜன. 16ம் தேதி திருக்கைத்தல சேவையும், 17 ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபரி உற்ஸவமும் நடைபெறும். ஏகாதசி விழாவையொட்டி, இன்று முதல் ஜன. 19ம் தேதி வரை மூலவர் பெரிய பெருமாள் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார்.
பாதுகாப்பு ஏற்பாடு; வைகுண்ட ஏகாதசி விழா பாதுகாப்புக்கு, உள்ளுர் போலீசார் 2500 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த ஆண்டு, கோவிலுக்கு வரும் பக்தர்கள், பஞ்சக்கரை பார்க்கிங், மேல வாசல் பார்க்கிங் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களின் நான்கு சக்கர வாகனங்களை, சித்திரை வீதி மற்றும் உத்திர வீதியில் நிறுத்த அனுமதியில்லை. பக்தர்கள் பாதுகாப்பிற்காக கோவிலின் உட்புறம் முக்கிய இடங்களில் 110 சி.சி.டி.வி., கேமராக்களும், கோவிலை சுற்றி வெளிபுறம் 100 கேமராக்களும், யாத்ரி நிவாஸில் 18 கேமராக்களும் பொருத்தப்பட்டு, புறக்காவல் நிலையத்தில் இருந்தே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய வீதிகளின் சந்திப்புகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், கோவிலின் உட்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள 110 கேமராக்களிலும் 70,000 பதிவேடு குற்றாவாளிகளின் படங்களை வைத்து, அவர்களை அடையாளம் காணும் மென்பொருள் இணைக்கப்பட்டுள்ளது, என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.