சிங்கம்புணரி; சிங்கம்புணரி பகுதியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு படையல் போட்டு வழிபாடு செய்யப்பட்டது. ஆண்டு முழுவதும் விவசாயிகளின் உற்ற நண்பனாகவும், விவசாயப் பணிகளில் தோழனாகவும் விளங்கும் கால்நடைகளுக்கு, நன்றிக் கடன் செலுத்தும் விதமாகவும், இயற்கையின் ஆசானாக விளங்கும் சூரியனுக்கு வழிபாடு செய்யும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. சிங்கம்புணரி பகுதியில் பட்டகோவில்களம் உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் நேற்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அனைத்து மாடுகளையும் குளிப்பாட்டி அலங்கரித்தனர். அந்தந்த கிராமங்களில் பங்காளிகள் அடிப்படையில் கூடி கோடி மாட்டுப் பொங்கலை கொண்டாடினர். பெண்கள் வரிசையாக பொங்கல் வைத்ததை தொடர்ந்து அனைத்து பானைகளில் இருந்தும் ஒரு கரண்டி பொங்கல் எடுக்கப்பட்டு அதைக் கொண்டு படையல் போடப்பட்டது. சாமியாடிகள் குலதெய்வம் ஆடி அருள்வாக்கு கூறினர். படையல் போட்ட பொங்கலை மாடுகளுக்கு ஊட்டி விட்டு தாங்களும் சாப்பிட்டனர்.