வால்பாறை; வால்பாறை, சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி கோவில் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை நகர், சிறுவர் பூங்கா ஆதிபராசக்தி கோவில், 19ம் ஆண்டு திருவிழா இன்று காலை, 9:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், 8:00 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. வரும், மே 1ம் தேதி மாலை, 4:00 மணிக்கு பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தை சுப்ரமணிய சுவாமி கோவிலிருந்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து, 2ம் தேதி காலை, அம்மனுக்கு புனித தீர்த்தங்களால் அபிஷேக பூஜையும், அதன்பின், அலங்கார பூஜையும் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும், 3ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து பக்தர்கள் அலகு பூட்டியும், பூவோடு எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வருகின்றனர். 4ம் தேதி காலை, 10:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.