மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா ஏழாம் நாளில் நந்திகேஸ்வரர் வாகனத்தில் வலம் வந்த சுந்தரேஸ்வரர்



மதுரை; சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் நந்திகேஸ்வரர், யாளி வாகனத்தில் பவனி வந்து அருள்பாலித்தனர்.


உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை பெருவிழாவில், நேற்று ஏழாம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் நந்திகேஸ்வரர் மற்றும் யாளி  வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாசி வீதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டு மீனாட்சி அம்மனை வழிபட்டனர். இசை வாத்தியங்கள் முழங்க சுவாமி ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.


ஸ்ரீசைலத்தில் வாழ்ந்த சிலாத முனிவர் சிவனருளால் புத்திரபேறு பெற்றார். பிள்ளைக்கு நந்தி என பெயரிட்டு வளர்த்தார். சகல கலைகளிலும் கற்றுத் தேர்ந்த நந்திக்கு, விதிப்படி அற்பாயுளே இருந்தது. இதை அறிந்த சிலாதர் வருந்தினார். தந்தையின் வருத்தம் தீர, நந்தி சிவனை நோக்கி தவமிருந்தார். சிவனருளால் சிவகணங்களுக்கு தலைவராகி ஈஸ்வர பட்டமும் பெற்றார். அதனால் நந்திகேஸ்வரர் எனப்பட்டார். கடவுளை நம்பினால் விதி கூட மாறும் என்பதை உணர்த்த நந்திகேஸ்வரர் மீது சிவன் பவனி வருகிறார். யானையும், சிங்கமும் இணைந்த உருவம் யாளி. மதம் பிடித்து அடங்காமல் திரியும் யானையும், தற்பெருமையால் கோபம் கொண்டு அலையும் சிங்கமும் அம்பிகையின் முன் அடங்கிக் கிடப்பது போல, ஆணவம், தற்பெருமை போன்ற கீழான குணம் நீங்கி மனிதனும் கடவுளுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை யாளி வாகனம் உணர்த்துகிறது. இந்த தத்துவத்தை உணர்ந்து அம்மையப்பரை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்