கூடலுார்; மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் பகுதியில் இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
தேனி மாவட்டம் கூடலுார் அருகே தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். தமிழக கேரள பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு மே 12ல் நடைபெற உள்ள விழாவிற்கு தேனி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. விழாவிற்கு முன்பு கோயில் அடிவாரப்பகுதியில் உள்ள பளியன்குடியில் அறக்கட்டளையினர் கொடியேற்ற விழா நிகழ்ச்சி நடத்தி விரதத்தை துவக்குவார்கள். இந்த ஆண்டு ஏப்.29ல் பளியன்குடியில் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, விழாவிற்கான கொடியேற்றம் இன்று பளியன்குடி அடிவாரப்பகுதியில் கூடலுார் கண்ணகி தேவி அறக்கட்டளை சார்பில் நடந்தது. பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தி அம்மன் கொடியை ஏற்றினர். பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை துவக்கினர். அறக்கட்டளை தலைவர் மகேந்திரன், செயலாளர் லலிதா, பொருளாளர் குமரன், நிர்வாகிகள் நேரு, ஸ்டாலின், பாண்டி, சாமியப்பன், முத்துப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.