பாலக்காடு; கேரள மாநிலத்தில் உலகப் புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில் 30 யானைகள் அணிவகுத்து நின்று "வண்ணக்குடை மாற்றும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதை பல்லாயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் தரிசித்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். நடபாண்டு பூரம் திருவிழா நேற்று துவங்கின. இவ்விழாவில் 70-க்கும் மேற்பட்ட கோவில் யானைகள் கலந்து கொண்டன. வடக்குநாதரை வணங்கி நெய்தலைக்காவு பகவதி அம்மன் எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை மீது எழுந்தருளி, தெற்கு கோபுர நடை திறந்து பக்தர்களுக்கு அருள் பாலித்ததோடு விழா ஆரம்பித்தன. விழாவில் இன்று அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. காலை 7:30 மணிக்கு கணிமங்கலம் சாஸ்தா கோவில் உற்சவர் எழுந்தருளி 9 யானைகளின் அணிவகுப்புடன் தெற்கு கோபுரம் நடை வழியாக நுழைந்து, வடக்குநாதரை வணங்கி, மேற்கு கோபுர நடை வழியாக வெளியில் வந்தார். இதேபோல், விழா கொண்டாடும் உபகோவில்களான லாலூர் பகவதி அம்மன் கோவில், அய்யந்தோள் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், நெய்தலைக்காவு பகவதி அம்மன், செம்பூக்காவு பகவதி அம்மன், பனமுக்கும்பிள்ளி சாஸ்தா கோவில், சூரக்கோட்டுக்காவு பகவதி அம்மன், காரமொக்கு பகவதி அம்மன், கணிமங்கலம் சாஸ்தா உற்சவர்களும் யானைகளின் மீது எழுந்தருளி வடக்குநாதரை வணங்கி சென்றனர்.
இதில் செம்பூக்காவு பகவதி அம்மன் எழுந்தருளிய யானை, பெரும் ரசிகர்கள் உள்ள ஆசியாவின் மிக உயரமான யானையான தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின் காலை வடக்குநாதர் சன்னிதியில் வந்த பிரஹ்மசுவம் மடத்தில் இருந்துள்ள யானைகளின் அணிவகுப்பிற்கு, கோங்காடு முதுவின் தலைமையிலான பஞ்சவாத்தியம் முழங்கின. இதைக் காண திரை உலக நட்சத்திரங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் மைதானத்தில் திரண்டு வந்தனர். இதையடுத்து 12:00 பாரமேக்காவு பகவதி அம்மன் செண்டை மேளம் முழங்க 15 யானைகள் அணிவகுப்புடன் எழுந்தருளி வடக்குநாதர் சன்னிதிக்கு வரும் வைபவம் நடந்தன.
இதன்பின் "இலஞ்சித்தறைமேளம் என அழைக்கப்படும் செண்டை மேளம் இசைக்கப்பட்டன. 250க்கு மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு பிரபல செண்டை மேள வித்வான் கிழக்கூட்டு அனியன் மாரார் தலைமை வகித்தார். மூன்று மணி நேரத்திற்கும் இடைவிடாமல் நடந்த இந்த "இசை மழை நிகழ்ச்சியை அங்கு கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களை பரவசப்படுத்தியது. மாலை 4:30 மணி அளவில் திருவம்பாடி கோவிலுக்கு சொந்தமான 15 யானைகள் ராஜ அலங்காரத்துடன் வடக்குநாதர் கோவில் முன் வந்து நின்றன. அப்போது, வடக்குநாதர் கோவில் தெற்கு கோபுர நடை வழியாக பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் யானைகள் வெளியே வந்து சக்தன் தம்புரான் மன்னரின் உருவச் சிலையை வலம் வந்து வடக்கும்நாதர் கோவில் தெற்கு கோபுர நடை வாயிலை நோக்கி நின்றன. பூரம் விழாவையொட்டி நான்காயிரம் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி போலீஸ் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.