கோத்தகிரி; கோத்தகிரி ஒன்னதலை கிராமத்தில், உப்பு ஹட்டுவ பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை, வீடுகளில் இருந்து, உப்பு மற்றும் புல்வகைகளை கொண்டு வந்து, கிராமத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கல் குழியில், மூங்கில் கூடையில் கொண்டு வந்த உப்புகளை மொத்தமாக கொட்டி, கரைத்து, வளர்ப்பு எருமை மற்றும் கன்றுகளுக்கு பருக வைத்தனர். இவ்வாறு, உப்பு தண்ணீரை பருகும் வளர்ப்பு எருமை மற்றும் கால்நடைகள் நோய் நொடி இல்லாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதுடன், வறட்சி நீங்கி, புல் மற்றும் பயிர்கள் செழித்து வளரும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்த நிகழ்வை அடுத்து, ஹெத்தையம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு, தினை பிரசாதம் வழங்கப்பட்டது. அனைத்து வீடுகளின் முற்றங்களில் தவிட்டை உள்ளிட்ட செடிகளை மாலையாக கட்டி பூஜை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சகோதரத்துவம் மற்றும் உறவுமுறைகள் மேம்பட, அனைத்து வீடுகளுக்கும் சென்று உணவு அருந்தி மகிழ்ந்தனர். இதே போல, சுற்றுவட்டார படுக மக்கள் வசிக்கும் கிராமங்களிலும், உப்பு ஹட்டுவ பண்டிகை கொண்டாடப்பட்டது.