நரசிங்கபுரம்; கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் மரகதவல்லி சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இங்கு மாதந்தோறும், பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினத்தில் நெய் தீபம் ஏற்றி, கோவிலை 32 முறை வலம் வந்தால் திருமண தடை நீங்கும், நினைத்த காரியம் கைகூடும் என்பதால், திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர். நேற்று சுவாதி திருமஞ்சனம் மற்றும் நரசிம்ம ஜெயந்தியும் இணைந்து வந்ததால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவர் நரசிம்மரை தரிசனம் செய்ய அதிகாலை முதலே குவிந்தனர். அதிகாலை 5:00 மணிக்கு கோ பூஜையும், காலை 9:30 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு யாக பூஜையும் நடந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.