சின்னாளபட்டி; திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
சின்னாளபட்டியில் நான்கு முகங்களைக் கொண்ட சதுர்முக முருகன் கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியருக்கு, சிறப்பு ஆராதனைகள் நடந்தது. தட்சிணாமூர்த்திக்கு யாகசாலை பூஜைகள், திரவிய அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், கணபதி, லட்சுமி, மிருத்யுஞ்சய ஹோமங்களுடன் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில் குட்டத்துப்பட்டி விலக்கு பிச்சை சித்தர் கோயிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடந்தது.
நத்தம்- : கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் நேற்று குருப்பெயர்ச்சி விழாவில் குருபகவான் தட்சிணாமூர்த்திக்கும், கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மனுக்கும் விசேஷ பூஜைகளும், சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகசால பூஜைகளும் நடந்தது. கோயில் உள்பிரகார வளாகத்தில் உற்ஸவர் குருபகவானுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஹோம பூஜைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இது தவிர பக்தர்கள் தங்களது பெயர், ராசிகளுக்கு பரிகாரம் செய்து ஹோமத்தில் எள்ளு பொட்டலங்களை போட்டு வணங்கினர். இதேபோல் குட்டூர் அண்ணாமலையார் கோயிலும் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.
ஒட்டன்சத்திரம்: காமாட்சி அம்மன் கோயில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தங்களுடைய பெயருக்கு அர்ச்சனை செய்து குரு பகவானை வழிபட்டனர். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். குழந்தை வேலப்பர் கோயிலில் உள்ள குரு பகவானுக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
பழநி: குரு பெயர்ச்சி முன்னிட்டு மதியம் 1:19 மணி அளவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருஆவினன்குடி, பட்டத்து விநாயகர் கோயில், மதனபுரம் அண்ணாமலை உண்ணாமலை நாயகி அம்மன் கோயில்களில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.