மானாமதுரையில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கிய வீர அழகர்



மானாமதுரை; மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் இன்று வீர அழகர் வெள்ளை குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 


சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழா நாட்களின்போது தினந்தோறும் வீர அழகர் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதி உலா சென்றார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான எதிர்சேவை நேற்று இரவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து வீர அழகர் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அப்பன் பெருமாள் கோயிலுக்கு சென்றார். இன்று அதிகாலை வீர அழகருக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தனம், திரவியம், உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு சர்வ அலங்காரங்களுடன் வெள்ளை குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி எழுந்தருளிய வீர அழகர் நகரின் முக்கிய வீதிகளின் வழியே வீதியுலா வந்து மண்டகப்படிகளில் காட்சி கொடுத்த பின்னர் காலை 6:35 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே வைகை ஆற்றில் இறங்கினார்.


அப்போது கள்ளழகர் வேடம் பூண்டு வந்த ஏராளமான பக்தர்கள் வீர அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும் கள்ளழகர் வேடம் போன்ற பக்தர்கள் திரி எடுத்து ஆடி அரிவாள் மீது நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினர்.பின்னர் வீர அழகர் ஆற்றுக்குள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த பின்பு ஆற்றுக்குள் இருந்த ஆயிரம் பொன் சப்பரத்திற்கு எழுந்தருளினர். அதனை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்த பிறகு வீர அழகர் தல்லாகுளம் முனியாண்டி கோயில் அருகே அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிக்கு எழுந்தருளினார். விழாவில் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், கமிஷனர் ஆறுமுகம்,பொறியாளர் பட்டுராஜன், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் குதிரை வாகன உபயதாரர்கள் நாகலிங்க கொத்தனார் வாரிசுதாரர்கள் முருகானந்தம், கணேசன், ஆறுமுகம், நமச்சிவாயம்,சீனியப்பா அன் கோ உரிமையாளர்கள் சுப்ரமணியன், ஜான்தினகரன்,ஆனந்தகிருஷ்ணன் அன் கோ உரிமையாளர்கள் ஆனந்த கிருஷ்ணன், குணா(எ)குணசீலன்,வேதா பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ்,பீனாஸ் எண்டர்பிரைசஸ் உரிமையாளர்கள் வேல்முருகன்,பாலாஜி பிரபாகர்,அண்ணாமலை,பி.ஜி., சேம்பர் உரிமையாளர் துபாய் காந்தி குடும்பத்தினர், அருணாச்சி அம்மன் சேம்பர் உரிமையாளர்கள் நாகராஜன்,ராஜேந்திரன்,மல்லல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மூர்த்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு வைகை ஆற்றுக்குள் பௌர்ணமி நிலவொளியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் நிலாச்சோறு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்