திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தில் அமைந்துள்ள வரதராஜபெருமாள் கோவிலின் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, அழகர் வேடமணிந்த வரதராஜபெருமாள் பச்சை பட்டு உடுத்தி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி அய்யம்பாளைம் மருதாநதி ஆற்றில் இறங்கினார்.
இந்த கண்கொள்ளாக் காட்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். "கோவிந்தா", "கோவிந்தா" என்ற பக்தர்களின் விண்ணை முட்டும் கோஷம் மருதாநதி கரையெங்கும் எதிரொலித்தது. முன்னதாக, வரதராஜபெருமாள் சித்தரேவு கிராமத்தில் இருந்து நெல்லூர், கதிர்நாயக்கன்பட்டி வழியாக குதிரை வாகனத்தில் ஊர்வலமாக வந்தார். பெருமாள் வரும் வழியெங்கும் பக்தர்கள் தீவட்டி ஏந்தி ஆடி வந்தனர். காளை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றது. மேலும், பக்தர்கள் சர்க்கரை குடம் ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அழகர் வேடத்தில் பச்சை பட்டுடுத்தி மருதாநதி ஆற்றில் வரதராஜபெருமாள் இறங்கியபோது, பக்தர்கள் "கோவிந்தா", "நாராயணா" என சரண கோஷங்கள் எழுப்பியவாறு பெருமாள் மீது புனித நீர் தெளித்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை அர்ச்சகர் சேசன் மற்றும் விழாக்குழுவைச் சேர்ந்த ரமேஷ்பாபு, முருகன், மூர்த்தி, புகழேந்தி, சுதாகர், சந்திரசேகர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் மேற்கொண்டனர்.