செங்கல்பட்டு; ஆத்துார் தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவிலில், திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில், புகழ்பெற்ற தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவில் உள்ளது.
ஈசனின் கருணை வேண்டி இங்கு வீற்றிருக்கும் அம்பாள், இத்திருத்தலத்தில் பல காலம் தங்கி, அனைவருடைய பசியை போக்க அன்னக்கூடம் அமைத்து பசியாற்றியதால், இவ்வூருக்கு பசி ஆற்றுார் என பெயர் வந்துள்ளது. அதுவே மறுவி, ஆத்துார் என தற்போது அழைக்கப்படுகிறது. பல முனிவர்கள், சித்தர்கள், அருளாளர்கள், ஆதிசங்கரர் உள்ளிட்டோர் இத்திருத்தலத்தில் தங்கி, தொண்டுகள் புரிந்துள்ளனர். இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த ஆண்டு முக்தீஸ்வரருக்கும், தர்மசம்வர்தனி அம்பிகாவுக்கும், நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 63 நாயன்மார்களுடன், பஞ்சமூர்த்திகள் கயிலாய காட்சி மற்றும் விதியுலா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ முக்தீஸ்வரர் சேவா டிரஸ்ட் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.