ஆடி பதினெட்டாம் பெருக்கு; என்ன செய்யலாம்.. மறந்தும் கூட செய்யக்கூடாதது எது?



தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பி காணப்படும். பயிர்  செழிக்க வளம் அருளும் அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி 18-ல் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும்  ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள காவிரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும் ஆடிப்  பதினெட்டு கொண்டாடுவதை, மூவாறு பதினெட்டு எனக் குறிப்பிடுவார்கள்.


தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல்  மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் துவங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு செழிக்கத்  தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர்.  அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடினர். இந்த விழா  இப்போதும் காவிரிக்கரை மாவட்டங்களில் சிறப்பாக நடக்கிறது. இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம்.  ஆடி18ல் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத்தம்பதிகள்  புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். ஆடிப்பெருக்கன்று, வீட்டில் கொடிவகைகளான அவரை, பீர்க்கு, புடலை போன்ற பயிர்க்குழி  போடுவதும் உண்டு. நகை, பொருட்கள் வாங்கவும் நல்லநாள்.


அட்சய திரிதியையை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது.  இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ,  அதுபோல் இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் துவங்குவதில்லை  என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்காகும்.


இந்த நாளில், ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்வதும், புத்தாடைகள் வழங்குவதும் புண்ணியத்தைத் தரும். ஆடிப் பெருக்கு அன்று, சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு போன்ற மங்களப் பொருட்களை வழங்குவது நல்லது. ஆடிப் பெருக்கன்று, மறந்தும் கூட பிறருக்கு தீங்கு விளைவிக்கும் எந்த செயல்களை இன்றும், எப்போதும் தவிர்ப்பது நல்லது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்