தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் 6ம் ஆண்டு துவக்க விழா புன்னை நல்லுாரில் பிரார்த்தனை மண்டபம், கிராம மேம்பாட்டு மையம் திறப்பு விழா நடந்தது. விழாவின் 2ம் நாள் நிகழ்வில் அகில உலக ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கவுதமானந்த மகராஜ் அருளாசி வழங்கி பேசியதாவது:
எதைச்செய்தாலும் அமைதியும், ஆனந்தமும் கிடைக்கும் என்பதை உணரச் செய்வதே ஆன்மிகம். பகவான் ராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை நுால்களை படித்தால் எப்படி வாழ வேண்டும் என்பதை அவை உணர்த்தும்.
பகவான் நாமமே நம்மை வழிநடத்தும். குருவின் அருள், வழிகாட்டுதலில் எந்தச் செயலும் உரிய பலனைத் தரும். எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்ந்து நம் செயல்பாடு அமைய வேண்டும். பிறருக்காக வாழ்வதே சிறப்பு என்றார்.
நிகழ்ச்சியில் கேரள ஹரிபாட் ராம கிருஷ்ணமடம் சுவாமி வீரபத்திரானந்தர் வழிகாட்டுதல் தியானம், தெய்வ திருமோவர்களின் அருமையான போதனைகள் என்ற தலைப்பில் சென்னை சுவாமி ஆத்மகனானந்தர், கான்பூர் சுவாமி ஆத்மசிராத்தானந்தர் பேசினர்.
11 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சுவாமி விவேகானந்தர் வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர். பேராசிரியர் இந்திரா தலைமையில் குங்கும அர்ச்சனை, பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
மாற்றுத்திறனளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, எளியோருக்கு தொழில் மேம்பாட்டுக்கான உதவி என ரூ.2 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சத்யஞானானந்தர், தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனர் கண்ணன் உதவிகளை வழங்கினர்.
விஜயவாடா சுவாமி வினிஷ்சலானந்தர், காஞ்சிபுரம் சுவாமி தியாகராஜானந்தர், சென்னை சுவாமி சத்தியபிரபானந்தர் பேசினர். விசாகா ஹரியின் இசை உபன்யாசம் நடந்தது. முன்னதாக தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமுர்த்தானந்தா வரவேற்றார். சுவாமி வேதபிரியானந்தா நன்றி கூறினார்.