நாகர்கோவில்; கன்னியாகுமரியில் காந்தி ஜெயந்தியான நேற்று காந்தி மண்டபத்தில் சூரிய ஒளி, பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி பரிவேட்டை பவனி போன்ற நிகழ்வுகளால் களைகட்டியது.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகாத்மா காந்தியின் சாம்பல் கரைக்க கொண்டு வரப்பட்ட போது கடற்கரையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அந்த இடத்தில் 1956ல் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. இம்மண்டபத்தின் மையக்கூண்டு மகாத்மாகாந்தியின் வயதை குறிக்கும் வகையில் 79 மீட்டர் உயரம் கொண்டது. மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இதன் கட்டடக்கலை அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி சூரிய கதிர்கள் காந்தியின் சாம்பல் வைக்கப்பட்டிருந்த அஸ்தி பீடத்தில் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். நேற்று மதியம் 12:00 மணிக்கு சூரிய ஒளி அஸ்தி பீடத்தில் விழுந்த போது அங்கு கூடியிருந்தவர்கள் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை பாடி காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். ராட்டையில் நூல் நூற்கப்பட்டது. கலெக்டர் அழகு மீனா, நாகர்கோவில் மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், பேரூராட்சி தலைவர் ஸ்டீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நவராத்திரி விழா நிறைவு பகவதி அம்மன் கோயிலில் நடந்த நவராத்திரி விழாவின் நிறைவாக நேற்று பரிவேட்டை நடந்தது. இதற்காக யானை, குதிரை முன்செல்ல வெள்ளிக் குதிரை மீது அம்மன் பஞ்சலிங்கபுரத்துக்கு எழுந்தருளினார். முன்னதாக அம்மன் போருக்கு பயன்படுத்தும் மன்னர் வழங்கிய வீரவாளை பாரம்பரிய முறைப்படி தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., கோயில் மேல் சாந்தியிடம் இருந்து வாங்கி மேலாளர் ஆனந்திடம் வழங்கினார். கோயிலில் இருந்து இந்த பவனி வெளியே வந்ததும் போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மேளதாளம் முழங்க பஞ்சலிங்கபுரம் சென்ற பவனி அங்கு பரிவேட்டையை முடித்து நள்ளிரவில் திரும்பியதும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு தேவிக்கு ஆராட்டு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கன்னியாகுமரியில் கூடியதால் நகரே களைகட்டியது. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.