மயிலாடுதுறை; கருவாழக்கரை மகா சதாசிவ பீடத்தில் சண்டீ ஹோமம் நடைபெற்றது.
கொடிய அரக்கர்கள் தீயசக்திகளிடமிருந்து இவ்வுலகமக்களை காத்து இன்பமாய் வாழ்விக்க வேண்டி துர்க்கா தேவி சிவபெருமானை நோக்கி தவமிருந்த நாட்கள் நவராத்திரி. இறுதியில் அவ்வரக்கர்களை அழித்து எல்லோருக்கும் வரமருளியது விஜயதசமியாகும். இந்தநாட்களில் சண்டீஹோமம் செய்து அன்னையை வழிபட்டால் மக்கள் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். கல்வியறிவு திருமணம்கைகூடுதல் புத்திரபாக்கியம் வியாபார அபிவிருத்தி செல்வவளம் ஆரோக்கியமான நீண்ட ஆயுள் முதலிய சகல நன்மைகளும் பெறலாம் என மார்க்கண்டேயபுராணம் கூறுகிறது. அதன்படி மயிலாடுதுறை கருவாழக்கரையில் உள்ள மகா சதாசிவ பீட வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ அஷ்டா தசபுஜ மகாலட்சுமி துர்க்காதேவிக்கு நவராத்திரியை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த சிறப்பு வழிபாடுகளின் நிறைவாக சரஸ்வதி பூஜையன்று சர்வமங்கள மகாசண்டீ ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. மகா சதாசிவ பீடாதிபதி சிவஶ்ரீ ஏ.வி. சுவாமிநாத சிவாசாரியார் முன்னிலையில் சிவபுரம் கல்வி அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி சிவஶ்ரீ ஶ்ரீ கண்ட குருக்கள் வேள்வியை நடத்தினார். 9 சிவாசாரியார்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தேவிமகாத்மிய பாராயணம் செய்தனர். முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி சம்பந்தமூர்த்தி, கனடா சிவஶ்ரீ கண்ணப்பா குருக்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசித்தனர்.