தேனி; போடிநாயக்கனூரில் புரட்டாசி மூன்றாவது வார சனிக்கிழமை முன்னிட்டு 250ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் பூலோகநாதர் அலங்காரத்தில் காட்சி அளிக்கும் சீனிவாச பெருமாள் தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கோவில். சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்டு தற்போது இந்து அறநிலையத்துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இன்று புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஆதிசேஷன் குடை கீழ் அமர்ந்திருக்கும் பூலோகநாதர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையில் இந்த சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தரிசனத்திற்கான பாதைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.