கேரளாவில் உள்ள அய்யப்பனுக்கு ஒரு மண்டலம் விரதம் இருந்து மாலை அணிவது போன்று, கர்நாடகாவிலும் வேண்டுதல் நிறைவேற, சிமி நாகநாத் கோவிலுக்கு பக்தர்கள், 41 நாட்கள் நாக மாலை அணிந்து விரதம் இருந்து வழிபடுகின்றனர்.
பீதர் மாவட்டம், ஹும்நாபாத்தின் ஹள்ளிகேடாவில் சிமி நாகநாத் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஹிந்து அறநிலைய துறைக்கு உட்பட்டதாகும். இக்கோவில் 8ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. கடுமையான நாகதோஷம் உள்ளவர்கள் பயபக்தியுடன் மனமுருகி வேண்டினால், தோஷம் நீங்குவதாக நம்பப்படுகிறது. மறந்த தம்பதி முன்னொரு காலத்தில், மஹாராஷ்டிராவை சேர்ந்த தம்பதிக்கு 20 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. இக்கோவிலை பற்றி கேள்விப்பட்டு இங்கு வந்து, தனக்கு குழந்தை பிறந்தால் நேர்த்திக்கடன் செலுத்துவதாக அப்பெண் வேண்டிக் கொண்டார்.
அடுத்த ஆண்டே அத்தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், சுவாமியிடம் நேர்த்திக்கடன் செலுத்துவதாக கூறியதை மறந்துவிட்டனர். இதனால் அக்குழந்தை சிறிது காலத்தில் உயிரிழந்தது. அப்போது, அவர்களுக்கு நேர்த்திக்கடன் நினைவுக்கு வந்தது. இறந்த குழந்தையை கோவிலுக்கு துாக்கி வந்து வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். இதையடுத்து கோவில் அருகில் குழந்தைக்கு பிருந்தாவன் கட்டப்பட்டு உள்ளது. இங்கு வரும் பக்தர்கள், இந்த பிருந்தாவனத்தையும் வணங்கிச் செல்கின்றனர். இது தவிர, ஒரு சமயம் கோவிலில் பூசாரி ஒருவர், பக்தர் நேர்த்திக்கடனாக வழங்கிய வெள்ளிக் கட்டியை, பாதி வெட்டி எடுத்து, விற்க எடுத்துச் சென்றார். எடை கல்லில் வெள்ளிக் கட்டியை வைத்தபோது, அவருக்கு நாகராஜர் தென்பட்டார். பயந்து போன அவர், வெள்ளிக்கட்டியை மீண்டும் கோவிலில் ஒப்படைத்தார் என்றும் கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் பயபக்தியுடன் வேண்டியது நிறைவேறினால், மறக்காமல் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
41 நாள் விரதம்; மேலும், கடுமையான நாகதோஷம் உள்ளவர்கள் ஷ்ரவண மாதத்தில் இருந்து, 41 நாட்கள் நாக மாலை அணிந்து கடும் விரதம் இருப்பர். இதன் மூலம் அவர்களின் வேண்டுதலை நாகராஜர் நிறைவேற்றுகிறார். இது தவிர, நேர்த்தி கடனாக சிமி நாகநாத்துக்கு, நாகராஜர் சிலை, தேங்காய் வழங்கி வருகின்றனர். நேர்த்திக் கடனை செலுத்தாதவர்களை தண்டித்தும் வருகிறார் என்று நம்புகின்றனர். கோவில் முன் பெரிய கொடிமரம் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ராஜ கோபுரம் இல்லை. சாதாரண சதுர வடிவில் நுழைவு வாயில் அமைந்துள்ளது. இதை கடந்து சென்றால், கருவறை முன்புள்ள மண்டபத்தில் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் சிவனும் அருள்பாலிக்கின்றனர். நடுநாயகனாக, 5 அடி உயரத்தில் கருப்பு நிறத்தில் சிமி நாகநாத் அருள்பாலிக்கிறார். நாகபஞ்சமி அன்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். அன்று மாலை பல்லக்கு ஊர்வலம் நடக்கும்.
எப்படி செல்வது?; ரயிலில் செல்வோர், பீதர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 35 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு செல்லலாம்.
பஸ்சில் செல்வோர், பீதர் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து 33 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.
சேவை நேரம்: காலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை.
விழாக்கள்: நாகபஞ்சமி, தீபாவளி அன்று நாகநாத் ரத உத்சவம்.
– நமது நிருபர் –