சென்னை; வடபழனி முருகன் கோவிலில், ஆவின் நெய் விற்பனை பார்லர் அமைக்க அனுமதி கோரி, கோவில் துணை ஆணையர் வனிதாவிடம், ஆவின் நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.
விண்ணப்பத்தில் உள்ளதாவது: ஆவின் நிர்வாகம், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக நுகர்வோருக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த கூட்டுறவு அமைப்பு, 17 லட்சம் விவசாயிகளையும் உறுப்பினர்களாக கொண்டுள்ளது. கிராமங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் உபரி பாலை, லாபகரமான விலையில் கொள்முதல் செய்து, பால், நெய், வெண்ணெய், தயிர், லஸ்ஸி, சாக்லெட், ஐஸ்கிரீம் மட்டுமின்றி இனிப்பு வகைகள் என, 215 பால் பொருட்களை விற்பனை செய்கிறது. இவற்றை விற்கும் வகையில், ரயில் நிலையங்கள், கல்லுாரிகள், நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் உட்பட அதிக மக்கள் கூடும் இடங்களில், பார்லர்களைத் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வடபழனி முருகன் கோவில் வளாகத்தில், ஆவின் பார்லர் அமைக்க, 100 சதுர அடி இடம் ஒதுக்க வேண்டும். இதன் வாயிலாக, பக்தர்களுக்கு ஆவின் நெய் விற்க முடியும். இது பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் பயனளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.