பரமக்குடி; பரமக்குடியில் விவேகானந்தர் வீர உரை ஆற்றிய இடத்தில் தேசிய இளைஞர் தினத்தை ஒட்டி பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
விவேகானந்தர் பிறந்த தினம் ஜன. 12 அன்று கொண்டாடப்படுகிறது. இதன்படி 1985 முதல் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. நேற்று 163 வது பிறந்தநாள் விழாவையொட்டி பரமக்குடியில் விவேகானந்தர் உரையாற்றிய இடத்தில் ராமகிருஷ்ண மடம் மொழிக்கு அமைப்பினர் மாலை அணிவித்து விளக்கேற்றி வழிபட்டனர். சிகாகோ சென்று வீர உரை ஆற்றி திரும்பிய விவேகானந்தர் 1897 பிப்., 1 அன்று பரமக்குடிக்கு வருகை புரிந்தார். அப்போதைய வைகை ஆறு குமரன் படித்துறையில் மக்கள் மத்தியில் எழுச்சி உரை நிகழ்த்தியுள்ளார். இதனை நினைவு கூறும் வகையில், 150வது ஜெயந்தி நாளில் நகராட்சி முன்பு நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டது. தொடர்ந்து இளைஞர்களின் எழுச்சி நாயகனாக இருந்த விவேகானந்தருக்கு சிலை எழுப்பி உரிய மரியாதை செய்ய வேண்டும். மேலும் வருங்கால இளைஞர்கள் விவேகானந்தரின் புகழை அறிந்து கொள்ள அரசு செய்ய வேண்டுமென, பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.