பொள்ளாச்சி: ‘கிராம கோவில் பூஜாரிகளுக்கு மாத தொகை, ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்,’ என, தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கொங்கு மண்டல பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொள்ளாச்சியில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கொங்கு மண்டல பொதுக்குழு கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில இணை பொதுச் செயலாளர் வக்கீல் விஜயகுமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம், மாநில இணை அமைப்புச் செயலாளர் பெருமாள், பூஜாரி பேரவை கோவை கோட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் பேசினர். ஆனைமலை ஆர்ஷ வித்யா பீடம் பூஜ்யஸ்ரீ ததேவானந்தா சரஸ்வதி சுவாமிகள், கோவை இந்திரேஸ்வர மடாலயம் தேவேந்திர மடாதிபதி ராஜதேவேந்திர சுவாமிகள் பேசினர். தெற்கு மாவட்ட தலைவர் மோகனசுந்தரம் நன்றி கூறினார். மாநில மண்டல பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கோவை, பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க, தேங்காய் எண்ணெய்யை அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் வழக்கில், ‘தீபம் ஏற்றலாம்’ என தீர்ப்பு வழங்கிய மதுரை உயர்நீதிமன்றத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் தீபமேற்று வழக்கில், மேல்முறையீடு செய்வதை தமிழக அரசு கைவிட்டு, தீபமேற்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். சட்ட அமைச்சர் ரகுபதி, அமைச்சராவதற்கு எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக ஹிந்து மத கடவுள் முருகனை, கேவலப்படுத்தி பேசியதற்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், அமைச்சரை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். ஹிந்து கோவில்களில் வழிபாட்டு முறையையும், பூஜை முறைகளையும் பாதுகாக்க அமைக்கப்பட்ட அறநிலையத்துறை, திருப்பரங்குன்றம் உள்பட பல்வேறு கோவில்களில் பாரம்பரிய பூஜை முறைகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருவதால், கவர்னர் தலையிட்டு ஹிந்து சமய அறநிலையத்துறையை உடனடியாக கலைக்க வேண்டும். தமிழர்களின் முக்கிய பண்டிகையான, பொங்கல் விழாவை, தமிழக அரசு, திராவிட பொங்கலாக கொண்டாட வேண்டும் என்றும், தமிழர் பண்பாட்டை அழிக்கும் நோக்கில் கூறியதை திரும்ப பெற்று, சூரிய வழிபாட்டுடன் கூடிய பொங்கல் விழாவாக கொண்டாட வேண்டும் என அறிவிக்க வேண்டும். கிராம கோவில் பூஜாரிகளுக்கு மாத தொகை, ஓய்வூதியம் தொகைகளை, தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில் கூறியது போன்று உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.