திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவில் தெப்போற்சவம் கோலாகலமாக நடந்தது.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், தைப்பூசத்தையொட்டி, ஆதிசேஷ தீர்த்த குளத்தில் தெப்போற்சவம் நடைபெறும்.
அந்த வகையில் இந்தாண்டு தெப்போற்சவம், நேற்று மாலை மங்கல வாத்தியங்கள் முழங்க, உற்சவர் சந்திரசேகர் இளஞ்சிவப்பு பட்டுடுத்தியும், திரிபுர சுந்தரி தாயார் பச்சை பட்டுடுத்தியும், சிறப்பு மலர் அலங்காரத்தில், தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின், மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு தெப்போற்சவம் துவங்கியது.
வேதபாராயணத்துடன் முதல் சுற்று; ஆகம பாராயணத்துடன் இரண்டாம் சுற்று; திருமுறை பாராயணத்துடன் மூன்றாம் சுற்று; நாதஸ்வர வாத்தியத்துடன் நான்காம் சுற்று; சிவ வாத்தியத்துடன் ஐந்தாம் சுற்று என, நீராழி மண்டபத்தை, ஐந்து முறை சுற்றி, தெப்பம் வலம் வந்தது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று ‘ஒற்றீசா – நமச்சிவாயா – தியாகேசா...’ என விண்ணதிர முழங்கியபடி சுவாமி தரிசனம் செய்தனர்.