பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதிகாலை, 4:00 மணிக்கு நிர்மல்ய தரிசனம், 4:15 மணிக்கு அபிஷேகங்கள், 4:30 மணிக்கு கணபதி ஹோமம், 5:30 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 6:00 சோபனா சங்கீதம், 7:00 மணிக்கு உஷ பூஜை, 7:30க்கு காவடி எழுந்தருளும் வைபவம் ஆகியவை நடந்தது.
8:00 மணிக்கு காவடி பூஜை, அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, 9:30 மணிக்கு குனிச்சேரி சந்திரன் மாரார் தலைமையிலான, 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட பஞ்சவாத்தியம் முழங்க, ஆடை ஆபரணங்கள் அணிந்து முத்துமணி குடைகள் சூடிய, ஐந்து யானைகளின் அணிவகுப்பில், கோன்னி சைத்ரம் அச்சு என்ற யானை மீது உற்சவமூர்த்தி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ‘காழ்ச்சீவேலி’ என்ற நிகழ்வு நடந்தது.
இதை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். தொடர்ந்து 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மூலவருக்கு மகாதீபாராதனை நடந்தது.
பஞ்சவாத்தியம் முழங்க, ஐந்து யானைகளின் அணிவகுப்பில் உற்சவர் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து இரவு, 8:00 மணிக்கு அத்தாழ பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்ததோடு உற்சவம் நிறைவடைந்தது.