உத்திரமேரூர்: பெருநகர் செய்யாற்றில், தைப்பூச ஆற்று திருவிழா நேற்று அதிகாலை விமரிசையாக நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகரில் பட்டவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நடப்பாண்டிற்கான தைப்பூசம் திருவிழா, ஜன., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஐந்தாம் நாளான ஜன., 27ல், திருக்கல்யாண உத்சவமும், 29ல் தேரோட்டம் விழாவும், ஒன்பதாம் நாள் உத்சவமான 31ம் தேதி, 63 நாயன்மார்கள் உத்சவமும் நடந்தது. 10ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம், பெருநகர் சுற்றி உள்ள 22 கிராம சுவாமிகள் நள்ளிரவில் அப்பகுதி செய்யாற்றில் வந்தடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பெருநகர், மானாம்பதி, இளநகர், மேல்பாக்கம், விசூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆக்கூர், வெங்கடாவரம், மடிப்பாக்கம், தேத்துறை, கீழ்நீர்குன்றம், இளநீர்குன்றம், உக்கல், சேத்துப்பட்டு, கூழமந்தல், அத்தி, மகாஜனம்பாக்கம் உள்ளிட்ட 22 கிராம கோவில் சுவாமிகள், செய்யாற்றில் ஒன்றாக சங்கமித்தனர்.
அதை தொடர்ந்து, அதிகாலை 5:00 மணிக்கு, சுவாமிகள் ஆற்றுக்குள் இறங்கி, பக்தர்களுக்கு தைப்பூச தரிசனம் அளித்தனர். பின், அந்தந்த ஊர் கோவில்களுக்கு, சுவாமி புறப்பாடு நடந்தது.