திருக்கோஷ்டியூர் தங்க விமான கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவக்கம்



திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் தங்க விமான கும்பாபிஷேகம் பணிகள் நேற்று யாகசாலை பூஜைகளுடன் துவங்கின. தொடர்ந்து 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பிப்.,6ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் அஷ்டாங்க விமானத்தின் முதல் நிலைக்கு தங்க கவசம் பொருத்தும் திருப்பணி நடந்தது. தங்கத் தகடு வேயப்பட்ட விமானத்தின் முதல்நிலையில் உச்சியில் தங்கத்திலான கலசம், பத்மம், மகா பத்மம், கண்ணாடி சட்டம், பண்டியல் தகடு, கந்தர்வ கன்னிகள், நாசித் தலைகள், படிச்சட்டம் ஆகியவை வேயப்பட்டுள்ளன.


கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலையில் பட்டாச்சார்யார்களால் திருவீதி சகஸ்ர நாம பாராயணம், யோகநரசிம்மர் சன்னதியில் உலக நன்மைக்காக திரு அஷ்டாட்சர சுதர்சன ஹோமம் நடந்தது. நேற்று காலை அனுக்ஞை, வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடந்தன. திவ்ய பிரபந்தம்,வேதபாராயணம் பாடப்பட்டன.


நேற்று மாலை 6:00 மணிக்கு மேல் யாகசாலையில் அங்குரார்ப்பணம், கும்ப பூஜை, கலசங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டு முதற்கால யாக சாலை பூஜை தொடங்கின. 24 குண்டங்களில் பட்டாச்சார்யார்கள் வைகாணஸ ஆகம முறை, தென்னாச்சர்ய சம்பிரதாயப்படி பூஜைகள் செய்தனர். யாகசாலை பூஜையில் சிவகங்கை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் முன்னிலை வகித்தார்.


இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் காலம், மாலை 4:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், நாளை நான்கு, ஐந்தாம் கால யாக சாலை, பிப்.,5ல் ஆறு,ஏழாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கும்.


பிப்., 6 வெள்ளியன்று அதிகாலை 5:00 மணிக்கு புன்யாக வாசனம், சிறப்பு ேஹாமம், காலை 8:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு, அதை தொடர்ந்து காலை 9:26 முதல் 10:18 மணிக்குள் தங்க விமானத்தில் கலச நீரை ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர்.


சிவகங்கை தேவஸ்தானம், ஸ்ரீசவுமியநாராயணன் ஸ்ரீஎம்பெருமானார் சாரிடபிள் டிரஸ்ட், திருப்பணிக்குழு நிர்வாகிகள், கோயில் அனைத்து நிர்வாக கைங்கர்யஸ்தர்கள், பட்டமங்கலம், மயில்ராயன் கோட்டை நாட்டார்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்