உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, கோவில் திருக்கம்பத்துக்கு, பக்தர்கள் தீர்த்தம் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.
உடுமலை நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திரு விழாவுக்கு, மார்ச் 24ல், நோன்பு சாட்டப்பட்டது. இதையடுத்து பக் தர்கள் விரதம் துவக்கினர். கடந்த 3ம் தேதி கொடியேற்றம் நடைபெற்ற பிறகு, பக்தர்கள் பூவோடு எடுக்கத் துவங்கினர். கோவிலில், திருக்கம்பம் மார்ச் 31ல் நடப்பட்டது. திருக்கம்பத்துக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து செலுத்தி, வழிபாடு செய்து வருகின்றனர். தீர்த்த குடங்களில் வேப்பிலை சொருகி, மஞ்சளிட்டு கொண்டு வந்து திருக்கம்பத்துக்கு ஊற்றி வருகின்றனர். நகரின் ஒவ்வொரு குடியிருப்பில் இருந்தும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வருவதால், நகரே திருவிழா கோலம் பூண்டுள்ளது. நாள்தோறும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்று வருகிறது.
இன்று, இரவு, 7:00 மணிக்கு, அன்னவாகனத்திலும், நாளை (7ம் தேதி) சிம்ம வாகனத்திலும், அம்மன் திருவீதி உலா நடக்கிறது. வரும் 8ம் தேதி அதிகாலை மாவிளக்கு எடுத்தலும், மாலை, 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு, 8:00 மணிக்கு மயில் வாகனத்தில், சுவாமி, அம்பாள் புஷ்ப அலங்காரத்துடன் திருவீதி உலா வருகின்றனர். வரும் 9ம் தேதி மாலை, 4:15 மணிக்கு தேரோட்டம் நடக் கிறது. 10ம் தேதி காலை ஊஞ்சல் உற்சவம், இரவு, 7:00 மணிக்கு, அம்மன் பரிவேட்டையும், இரவு, 10:00 மணிக்கு வாண வேடிக்கையும் நடக்கிறது. திருவிழாவையொட்டி குட்டை திடலில் அமைக்கப்பட்டுள்ள ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டுகளை ஆடி மகிழ்ந்து வருகின்றனர்.