திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் வைணவ அடிகளான ராமானுஜரின் 1009 வது அவதார நட்சத்திர விழா நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஆளவந்தாரின் ஐந்து சீடர்களில் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பியிடம் 18 முறை சென்று எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாயஎன்னும் மந்திரத்தை வைணவ அடிகளான ராமானுஜர் உபதேசம் பெற்றார். இம்மந்திரம் பரம ரகசியம் என்றும், இதை ‛எவருக்கும் வெளியிடக்கூடாது’ என்ற நிபந்தனையின் பேரிலேயே உபதேசத்தருளினார். இருப்பினும் உபதேசம் பெற்றவுடன் திருக்கோஷ்டியூர் கோயில் அஷ்டாங்க விமானத்தில் ஏறிய ராமானுஜர் மக்கள் அனைவரும் சாதி சமய பேதமற்று எல்லோருக்கும் மந்திரத்தை உபதேசம் செய்தார். இதற்காக தான் ராமானுஜருக்கு இக்கோயிலில் தனி சன்னதி உண்டு. அவர் அவதரித்த சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று 1009 வது அவதரித்த நட்சத்திரத்தை முன்னிட்டு ராமானுஜர் சுவாமி மூலஸ்தானம் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்தது. ராமானுஜருக்கு மங்களாசாசனம் செய்து பரிவட்டம் கட்டினர். நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் பாடப்பட்டது. பின்னர் பெருமாள், ராமானுஜர் திருவீதி உலா நடந்தது.