திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பூத்தட்டு, பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.
இக்கோயிலில் சித்திரையில் பூச்சொரிதல் விழா பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. மூலவராக எழுந்தருளியுள்ள சப்தமாதர்களில் நடுவில் அருள்பாலிக்கும் வைஷ்ணவியை பூமாயி அம்மனாக பக்தர்கள் வழிபடுகின்றனார். இன்று காலையில் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 7:30 மணி முதல் தென்மாப்பட்டு கீழத்தெரு, வாணியன் கோயில் தெருக்களிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். தொடர்ந்து நகரின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இதனால் அம்மனுக்கு 6 மணி நேரம் தொடர்ந்து பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் மாலை 3:00 மணிக்கு அம்மன் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. நகரின் பல பகுதிகளிலிருந்தும் அம்மனுக்கு பக்தர்கள் பூத்தட்டு எடுத்தனர். பூத்தட்டுடன் முளைப்பாரி, மதுக்குடம் எடுத்து அம்மனுக்கு சமர்ப்பித்தனர். அலங்கார சப்பரத்தில் அம்மன் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து விடிய விடிய அம்மனுக்கு பக்தர்கள் பூத்தட்டு எடுத்தனர். அதிகாலை 5:30 மணிக்கு பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடக்கிறது. நாளை இரவு காப்புக் கட்டி வசந்தப் பெருவிழா துவங்குகிறது.