அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருத்தாண்டக வேந்தர் திருநாவுக்கரசு சுவாமிகள் குருபூஜை பெருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 63வர் சன்னதியில், நாயன்மார்களுக்கு அபிேஷகம் நடந்து சிறப்பு தீபாராதனை வழிபாடு நடைபெற்றது.
அதில், சுந்தரமூர்த்தி நாயனார் உட்பட நால்வர் பெருமக்களை, சிவனடியார்கள் திருவாசகம், தேவாரம் முற்றோதி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, அம்மையப்பருடன், திருநாவுக்கரசு நாயனார் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பாலிக்கப்பட்டது. முன்னதாக, கருணாம்பிகை கலையரங்கில், பன்னிரு திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி, கரூர் குமார சாமிநாத தேசிகர் தலைமையில் நடைபெற்றது. இதில், பண்ணிசையோடு திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவார திருப்பதிகங்கள் முற்றோதுதல் மேற்கொள்ளப்பட்டது. அவிநாசி, திருப்பூர் வட்டாரத்தை சேர்ந்த சிவனடியார்கள் பங்கேற்றனர்.
அர்த்தஜாமபூஜை அடியார் திருக்கூட்டம், திருப்பூர் மாணிக்கவாசகர் மன்றம் சார்பில், சித்திரை மாத சதயம் நட்சத்திரமான நேற்று, திருநாவுக்கரசர் குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 63 நாயன்மார் மண்டபத்தில் உள்ள நாவுக்கரசர் திருமேனிக்கு, அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகருக்கு மகா அபிேஷக அலங்கார பூஜைகள் நடந்தது. திருநாவுக்கரசர் உற்சவ மூர்த்தி, சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தை வலம் வந்து அருள்பாலித்தார்; தொடர்ந்து, கனகசபையில் வீற்றிருக்கும், ஸ்ரீநடராஜருடன் தீப ஜோதியாய் ஐக்கியமாகும் பூஜைகளும் நடந்தன. சிவனடியார்களும் சிவாச்சாரியார்களும், திருமுறை பதிகங்களை விண்ணப்பம் செய்து, மகா தீபாராதனை செய்து வழிபட்டனர்.