ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குரிய மாதம். அம்மன் கோயிலுக்கு செல்ல முடியாதவர்களுக்காக தினமும் ஒரு அம்மன் இடம் பெற்றுள்ளாள். அவளை பற்றி தெரிந்து கொள்வோமா...
ஆசை நிறைவேற காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசிப்போம். இந்தியா முழுவதும் 51 சக்தி பீடங்கள் உள்ளன. அதில் இதை ‘காமகோடி பீடம்’ என அழைக்கின்றனர்.
சிவபெருமானை திருமணம் புரிவதற்காக கிளி வடிவம் எடுத்தாள் பார்வதி. அவள் செண்பக மரத்தடியில் அமர்ந்து தவம் செய்த தலம் காஞ்சிபுரம். காமக்கோட்டம் என அழைக்கப்படும் இத்தலத்தின் கருவறையில் காமாட்சியம்மன் நான்கு கைகளுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். கரும்பு வில், பாசம், அங்குசம், மலர் அம்புகளை கையில் வைத்திருக்கிறாள்.
கருவறையின் நான்கு சுவர்களே நான்கு வேதங்கள். இங்குள்ள 24 துாண்களும் காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்கள்.
ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் அம்பிகையின் எதிரில் உள்ளது. ஆதிசங்கரரின் மறுவடிவமான காஞ்சி மஹாபெரியவருக்கும், அவருடைய பக்தர்களுக்கும் கண்கண்ட தெய்வமே காமாட்சி. இங்கு காமாட்சி அம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்கின்றனர்.
எப்படி செல்வது: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ,
நேரம்: அதிகாலை 5:30 – 12:30 மணி; மாலை 4:00 – 8:30 மணி
தொடர்புக்கு: 044 – 2722 2609