சாயல்குடி: சாயல்குடி அருகே உள்ள எஸ். தரைக்குடியில் உள்ள பழமை வாய்ந்த உமையநாயகி அம்மன் கோயில் ஆடி மாதம் முழுவதும் கோயில் நடை அடைக்கப்படுகிறது.
எஸ்.தரைக்குடி அம்மன் கோயிலில் மூலவர் உமையநாயகி அம்மன் கூரையின்றி வெயிலிலும், மழையிலும் திருமேனிபடும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். நேற்று மாலை மூலவர் அம்மனுக்கு 16 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் இரவு கோயில் கதவுகள் அடைக்கப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி முழுவதும் மூலஸ்தானம் மற்றும் பிரகார மண்டபம் அடைக்கப்படுவது வழக்கம். ஆவணி முதல் நாளன்று நடக்கும் அம்மனின் முதல் பார்வை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். கோயில் நிர்வாகிகள் கூறியதாவது: பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்நிகழ்வு கோயிலில் நிகழ்த்தப்படுகிறது. ஆடி என்றாலே அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், கூழ் காய்ச்சி ஊற்றுதல், முளைப்பாரி திருவிழா உள்ளிட்ட விசேஷங்கள் நடக்கும். ஆனால் அதற்கு விதிவிலக்காக இங்குள்ள மூலவருக்கு நடை சாத்தப்படுகிறது. இங்கிருந்து ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடுவதற்காக அம்மன் செல்வதாக ஐதீகம் (சம்பிரதாயம்) உள்ளது என்றனர்.