கீழக்கரை: கீழக்கரை தட்டான்தோப்பு தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 74ம் ஆண்டு முளைக்கொட்டு உற்ஸவம் நடந்தது.
ஜூலை 21ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று மாலை விளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை நாராயணசுவாமி கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் பக்தர்கள் முத்துமாரியம்மன் கோயிலுக்கு வந்தடைந்தனர். மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை மாலை அம்மன் சக்தி கரகம் வீதி உலா புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கீழக்கரை தட்டான் தோப்பு தெரு, மேலக்கொடிக்கால் நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.
*திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கி முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் இரவில் ஆண்களின் ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்டம் நடந்தது. நேற்று காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவில் அம்மன் கரகம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இன்று மாலை முளைப்பாரி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு பாரி கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை பஞ்சந்தாங்கி நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர். திருப்புல்லாணி, ரெகுநாதபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் முளைப்பாரி உற்ஸவம் கிராமங்களில் கோலாகலமாக நடக்கிறது.