மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில் திருப்பணிகள் நடைபெறுவதால், இந்த ஆண்டு ஆடிக் குண்டம் திருவிழா நடைபெறாது என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலாகும். இங்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடிக் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறாது என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து கோவில் உதவி கமிஷனர் (பொறுப்பு) சரவணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுமான பணிகள், கருவறை, மகா மண்டபம், வசந்த மண்டபம் ஆகிய திருப்பணிகள் நடைபெறுகின்றன. அதனால் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆடிக் குண்டம் திருவிழா, இந்த ஆண்டு நடைபெறாது. ஆடி அமாவாசை, ஆடி பெருக்கு ஆகிய நாட்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். எனவே திருப்பணிகள் நடைபெற உள்ளதால், பக்தர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.