நத்தம்; நத்தம் அருகே நடுவனூர் கருப்பசாமி கோவிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட திருவிழாவில் 50 கிடாய்கள் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
இக்கோவிலில் வருடந்தோறும் ஆடி படையல் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ஆடி படையல் திருவிழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு சுவாமிக்கு படையல் போடப்பட்டது.பின்னர் 30-க்கும் மேற்பட்ட சிப்பம் அரிசியில் சாதம் தயார் செய்யப்பட்டு கறி குழம்புடன் அன்னதானம் நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நடுவனூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.