ராமேஸ்வரம் கோவிலில் பணியிடங்கள் காலி; அபிஷேக ஆராதனைகள் பாதிப்பு



சென்னை: பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், அர்ச்சகர் மற்றும் கைங்கர்ய பணியிடங்களை நிரப்புவதில், அறநிலையத்துறை அதிகாரிகள் தொடர்ந்து காலதாமதம் செய்வது, பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், புகழ்பெற்ற ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. ராவண வதத்திற்கு பின், ஸ்ரீ ராமர் சிவபெருமானை வழிபட்டு, தன் பாவங்களை போக்கிக் கொண்ட இடம். இக்கோவிலில் கடந்த 15 ஆண்டுகளாக, போதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்படாததால், அபிஷேக ஆராதனைகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. போதிய அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டி தொடரப்பட்ட வழக்கில், ‘அர்ச்சகர்களை நியமிக்கலாம்’ என, கடந்த ஆண்டு மே மாதம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கோவில் நிர்வாகம், அர்ச்சகர் பணியிடங்களை நிரப்பாமல், கைங்கர்யம் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேருக்கு, குருக்களாக பதவி உயர்வு கொடுத்து, உத்தரவை திசை திருப்பியுள்ளது. அதன் பின் அர்ச்சகர்களை நியமிக்க, எந்த முன்னெடுப்பும் எடுக்காமல், தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதாகவும், இதனால், அன்றாட பூஜைகள் செய்ய முடியாத நிலை உள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.


இது குறித்து பக்தர்கள் சிலர் கூறியதாவது: ரமேஸ்வரம் கோவிலில், போதிய அர்ச்சகர்கள் இல்லாததால், காசி விஸ்வநாதர், விசாலாட்சி சன்னிதிகள் மற்றும் பல உப சன்னிதிகள் பூட்டி கிடக்கின்றன. சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதிகளில், ஓரிரு அர்ச்சகர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். சாதாரண நாட்களில், 5,000 பக்தர்களும், சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்கள், அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற நாட்களில், 50 ஆயிரம் பக்தர்களும் வருகின்றனர். அப்போது, ஆள் பற்றாக்குறையால் கடும் சிரமம் ஏற்படுகிறது. அறநிலையத்துறை இணை ஆணையர் நேரடியாக பணி நியமனம் செய்ய அதிகாரம் இருந்தும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், துறை அதிகாரிகள் இதை கண்டு கொள்ளவில்லை. எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல், அர்ச்சகர் மற்றும் கைங்கரிய பணியிடங்களை, உடனே நேரடி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்