தஞ்சாவூர்: மகாமகத்திற்கு, அனைத்து துறைகளையும் சேர்த்து, சுமார் 600 கோடி ரூபாய் செலவினங்கள் ஏற்படும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், 2028ம் ஆண்டு மகாமக விழா, முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடந்தது. வேளாண்துறை அமைச்சர் வினோத், எம்.பி சுதா, தஞ்சாவூர் எம்.எல்.ஏ., சரவணன், கலெக்டர் ரேவதி, எஸ்.பி சுந்தரவதனம், அறநிலையத்துறை கமிஷனர் வினய் கலந்துக்கொண்டனர். பிறகு, அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: கும்பகோணத்திற்கு மட்டுமல்ல தமிழக்திற்கே பெருமை சேர்க்கக்கூடியது மகாமக திருவிழா. அதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு விரைவில் மகாமக பணிகள் தொடங்க உள்ளது. இதற்காக உயர் அதிகாரிகள் அளவிலான குழு அமைக்கப்பட்டு, கூட்டம் நடத்தப்பட்டுள்ளன. பிறகு, முதல்வரின் உத்தரவின் பேரில், கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் துரிதப்படுத்தப்படும். மத்திய அரசிடம் இருந்து என்னென்ன தேவைகள் என்பதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். முதல்வர் விஜய் மகாமகத்தை பொறுத்தவரை மிக சிறப்பாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மகாமக பணிகள் அனைத்தும் குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் முடிவடையும். கடந்த முறை மகாமகத்தின் போது, சுமார் 50 லட்சம் பேர் கலந்துக்கொண்டனர். இம்முறை 90 லட்சம் பேர் வரை கலந்துக்கொள்ளுவார்கள் என எதிர்பார்க்கிறோம். முதற்கட்டமாக அனைத்து துறைகளையும் சேர்த்து, சுமார் 600 கோடி ரூபாய் செலவினங்கள் ஏற்படும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையும் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும், அந்தந்த துறைகளுக்கான தேவைகள் குறித்து கேட்டறிந்துள்ளோம்.
கும்பேஸ்வரர் கோவில் ராஜகோபுர கட்டுமான பணிகள் குறித்து அறநிலையத்துறையின் பாரம்பரிய குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். அவர்களது ஆய்வு அறிக்கையின்படி பணிகள் தொடங்கும். 17 கோவில்கள் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் வெகு விரைவில் நடைபெறும் என்றார். மகாமக தொடர்புடைய காவிரி படித்துறைகள், குளங்கள், கோவில்களை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார்.