மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்., 17ல் நடக்கிறது. இதை நேரில் காண, 7 வண்ணங்களில் ‘பாஸ்’ வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தன்று ‘பாஸ்’ உள்ளவர்கள் எந்தெந்த வழிகளில் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோல்டன் நிற ‘பேட்ஜ்’ உள்ளவர்கள் கிழக்கு சித்திரை வீதியில் வடக்கு பகுதியில் இருந்து அஷ்டசக்தி மண்டபம் வழியாக அம்மன் தங்க விமானம் செல்ல வேண்டும். பிரவுன் நிற ‘பாஸ்’ உள்ளவர்கள் வடக்கு சித்திரை வீதியில் கிழக்கு பகுதியில் இருந்து வடக்கு கோபுரம் வழியாக சுவாமி சன்னிதி கிழக்குப் பகுதி மேல்தளம் செல்ல வேண்டும். ‘பிங்க்’ நிற ‘பாஸ்’ உள்ளவர்கள் கீழச்சித்திரை வீதியில் தெற்கு பகுதியில் இருந்து அஷ்டசக்தி மண்டபம் வழியாக மீனாட்சி நாயக்கர் மண்டபம் மேல்தளம் செல்ல வேண்டும்.
ப்ளூ நிற ‘பாஸ்’ உள்ளவர்கள் தெற்கு சித்திரை வீதியில் மேற்கு பகுதியில் இருந்து தெற்கு கோபுரம் வழியாக பொற்றாமரைக்குளம் பகுதி மேல்தளம் செல்ல வேண்டும். கருநீலம் கொண்ட ‘பாஸ்’ உள்ளவர்கள் கீழச்சித்திரை வீதியில் வடக்கு பகுதியில் இருந்து கிழக்க ராஜகோபுரம் வழியாக ஆயிரங்கால் மண்டபம் மேல்தளம் செல்ல வேண்டும். பச்சை நிற ‘பாஸ்’ உள்ளவர்கள் கீழச்சித்திரை வீதியில் வடக்கு பகுதியில் இருந்து அஷ்டசக்தி மண்டபம் வழியாக அம்மன் தங்க விமானம் செல்ல வேண்டும்.
மஞ்சள் நிற ‘பாஸ்’ உள்ளவர்கள் வடக்கு சித்திரை வீதியில் மேற்கு பகுதியில் இருந்து வடக்கு கோபுரம் வழியாக சுவாமி தங்க விமானம் செல்ல வேண்டும். சிவப்பு நிற ‘பாஸ்’ உள்ளவர்கள் மேற்கு சித்திரை வீதியில் வடக்கு பகுதியில் இருந்து மேற்கு கோபுரம் வழியாக சுவாமி சன்னிதி மேற்கு பகுதி மேல்தளம் செல்ல வேண்டும்.
ஆயிரம் பஸ்கள் இயக்கம் கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து நேற்று அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு செய்தபின் கூறியதாவது: கும்பாபிஷேகத்திற்காக 56 இடங்களில் 8,000 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2,000 பொதுமக்களுக்கு பாஸ் வழங்கப்பட உள்ளது. மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். செப்., 15ம் தேதியிலிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். மாவட்ட நிர்வாகம் சார்பில் 16ம் தேதி கோயிலைச் சுற்றியுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்தும், 17ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
மின்சாரத் துறையிலிருந்து, 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 53 இடங்களில் எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீதிபதிகள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்ந்தவர்களுக்கு நிர்வாகத்தில் இருந்து, 5,000 பேருக்கு ‘பாஸ்’ வழங்கப்பட உள்ளது. இதில் யார் தலையீடும் இருக்காது.
இவ்வாறு கூறினார்.