திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் செப்பு தேரில் எழுந்தருள, திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் காந்திமதி அம்பாள் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் செப்பு தேரில் எழுந்தருள, திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கம்பா நதியில் தவமிருக்கும் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் வரும் 5ஆம் தேதி மதியம் நடைபெறுகிறது. கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் வரும் 6ஆம் தேதி அதிகாலை நடைபெறுகிறது.