புரட்சித்துறவி ராமானுஜர் ஜெயந்தி கோலாகலம் | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்

புரட்சித்துறவி ராமானுஜர் ஜெயந்தி கோலாகலம்

ஏப்ரல் 29,2017



புரட்சித்துறவி என்று போற்றப்படும் ராமானுஜர் கி.பி. 1017-ல் சக ஆண்டு 939, கலி ஆண்டு 4118, வியாழக்கிழமை, சித்திரை மாதம் 12-ஆம் தேதி சுக்லபட்ச பஞ்சமி திதியில், கடக ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். இவரது பெற்றோர் அசூரிகேசவசோமாயாஜுலு - காந்திமதி. குழந்தையைப் பார்க்க திருப்பதியிலிருந்து வந்த தாய்மாமன் திருமலைநம்பி, லட்சுமணன் அம்சமாக குழந்தை இருந்ததால் அதற்கு இளையப்பெருமாள் என்று பெயர் சூட்டினார். இளைய நம்பிக்கு எட்டு வயதானபோது உபநயனம் செய்து வைக்கப்பட்டது. அவரது தந்தையே முதலில் கல்வி கற்பித்தார். அவரது பதினாறாவது வயதில் குஞ்சம்மாள் எனும் பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். அதன்பின் கொஞ்சநாட்களிலேயே அவரின் தந்தை காலமானார். தந்தையின் மறைவுக்குப்பின் குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்தார் இளையபெருமாள்.

இந்த நிலையில், இளையபெருமாளை ஸ்ரீரங்கம் அழைத்துச்செல்ல வந்துகொண்டிருந்தார் பெரிய நம்பி. அதேசமயம் பெரிய நம்பியிடம் கல்வி பயில திருவரங்கம் சென்று கொண்டிருந்தார் இளையபெருமாள். இருவரும் மதுராந்தகம் பெருமாள் கோயிலில் சந்தித்துக்கொண்டார்கள். பெரிய நம்பி, இளையபெருமாளை அங்கேயே மாணவனாக ஏற்று பஞ்ச சமஸ்காரம் செய்து வைத்தார். அப்போது அடியோடு திருப்பெயராக ராமானுஜர் என்று பெயரிட்டார். அன்று முதல் இன்றுவரை அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், ராமானுஜர் துறவறம் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. அவரது துறவிக் கோலத்தைப் பார்த்த திருக்கச்சிநம்பி, யதிராஜா என்றழைத்தார். அதாவது துறவிகளின் அரசன் என்று பொருள். துறவிக்கோலத்தில் காஞ்சி கோயிலுக்குச் சென்றார் யதிராஜர். அவரைப் பார்த்த கோயில் அர்ச்சகர் ராமானுஜமுனி என்றழைத்தார்.

ராமானுஜர் பிட்சைக்குப் போகும்போது ஆண்டாளின் பாசுரங்களைப் பாடிச் செல்வது வழக்கம். இதனால் அவர் திருப்பாவை ஜீயர் என்று திருவரங்கத்து மக்களால் அழைக்கப்பட்டார். வில்லிப்புத்தூர் கோயிலுக்கு ராமானுஜர் சென்றபோது நம் கோயிலில் அண்ணார் என்று பக்தர்கள் அழைத்தார்கள். ஆளவந்தாரின் ஆதீனத்தை ஏற்றுக் கொண்டபின் ஸ்ரீரங்கம் சென்ற ராமானுஜரை உடையவர் என்று போற்றினார்கள். ஐந்து ஆசிரியர்களின் பாதங்களில் அமர்ந்து பாடம் கேட்டதால் பஞ்சாசார்ய சீடர் என்று சொல்லப்பட்டார். பிரம்ம சூத்திரத்திற்கு வியாக்கியானங்களை எழுதி பாஷ்யம் அருளியதால் பாஸ்யக்காரர் ஆனார். ராமானுஜரை பெருமாளாகவே மக்கள் பார்த்தார்கள். அதனால் பயபக்தியுடன் எம்பெருமானார் என்றழைத்தார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு சங்கு, சக்கரம் வழங்கியதால் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த பெருமான் என்று ராமானுஜர் பெயர் பெற்றார்.

ஸ்ரீபெரும்புதூரில் வாழும் வைணவர்கள் சுவாமி என்றே இவரை அழைத்தனர். ராமானுஜர் சில ஆண்டுகள் கர்நாடக மாநிலம் திருநாராயணபுரத்தில் வசித்தார். பின்னர் அங்கிருந்து ஸ்ரீரங்கம் புறப்படும்போது அங்கு வாழ்ந்த மக்கள் அவரைப் பிரிய மனமின்றித் தவித்தார்கள். அவர்கள் விருப்பப்படி தன்னைப்போல ஒரு விக்ரகத்தை உருவாக்கச் சொன்னார். கைகூப்பி விடைபெறும் கோலத்தில் சிலை வடிக்கப்பட்டது. அந்தச் சிலையைக் கட்டித் தழுவி தன் ஆற்றலை அதில் செலுத்திய ராமானுஜர், நான் இந்த விக்ரக உருவில் உங்களுடன் இருப்பேன். இந்தச் சிலையை என்னைப்போல் பாவித்து வருவீர்களாக என்று அருளாசி வழங்கினார். இத்திருமேனியை தாம் உகந்த திருமேனி என்று போற்றுவார்கள்.

இதேபோல், அவர் அவதரித்த திருப்பெரும்புதூரில் அந்த ஊர்மக்கள் ராமானுஜருக்கு சிலைவைக்க விரும்பினார்கள். சிலை உருவானது .அந்தச் சிலையை அரவணைத்து தன் தெய்வீக ஆற்றலை சிலைக்குள் செலுத்தினார். அந்த விக்ரகத்தை தமர் உகந்த திருமேனி என்று போற்றுவர். ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் கோயில் வழிபாட்டு முறைகளை ஒழுங்குப்படுத்தி, அங்கு பூஜை முறைகள் செவ்வனே நடைபெறுவதைக் கண்ட வண்ணம் அங்கேயே தங்கியிருந்தார் ராமானுஜர். அப்போது, சீடர்கள் அவரது உருவச் சிலை இருந்தால் வழிபடலாமே என்ற எண்ணத்தில் அவரிடம் அனுமதி வேண்டினார்கள்.

நூற்றிருபது வயதை எட்டியிருந்த ராமானுஜரின் உடல்நிலை சற்று மோசமாக இருந்தது. கல்லில் சிலை வடிக்குமளவு அவகாசம் இல்லை. எனவே, சுண்ணாம்பு மற்றும் அரிய மூலிகைச்சாறுகள் கலந்த சுதை உருவம் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டது. பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் அமைந்த சிலைமீது ஸ்ரீராமானுஜரின் காவி உடையைப் போர்த்தினார்கள். இதனால் ஸ்ரீராமானுஜர் உயிருடன் அமர்ந்திருப்பதுபோல் காட்சித்தந்தது. ஸ்ரீராமானுஜர், பிரம்ம மந்திரத்தின் வாயிலாக மூச்சைப் பிடித்துக்கொண்டு, தமது சக்திகளை அந்தச் சிலையில் நிலை நிறுத்தினார். அருகிலிருந்த சீடர்களைப் பார்த்து, இது என் இரண்டாவது ஆத்மா. எனக்கும் இந்த வடிவத்திற்கும் வேறுபாடு எதுவுமில்லை. இந்த பூதவுடலைவிட்டு இந்தப் புதிய திருமேனியில் நான் குடிகொள்ளப்போகிறேன் என்று சொல்லி, அருகிலிருந்த எம்பாரின் மடியில் திருமுடியையும், வடுகநம்பியின் மடியில்  தம் இரண்டு திருவடிகளையும் வைத்துக்கொண்டு, எதிரில் வீற்றிருந்த தம் பரமாச்சாரியாரான ஆளவந்தாரின் இரண்டு பாதுகைகளையும் தியானித்துக்கொண்டு பரமபதத்திற்குச் சென்றார் என்று கூறப்படுகிறது. அன்று சனிக்கிழமை, சக ஆண்டு 1059 (கிபி 1137), மாக மாதம், சுக்லபட்ச தசமி என்று வரலாறு கூறுகிறது. இதனை திருநாட்டுக்கு எழுந்தருளல் என்று வைணவர்கள் கூறுவர். அவரது பூதவுடலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த மண்டபம் அருகே தென்கிழக்கு மூலையில் அமர்ந்த நிலையில் பதப்படுத்தி தனிச்சந்நிதியில் எழுந்தருளச் செய்து வழிபடலாயினர். இத்திருமேனியை தாமான திருமேனி என்பர்.

பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, மற்றும்  அரிய மூலிகைகளினால் அன்று அவரது திருமேனி பதப்படுத்தப்பட்டதால், இன்றும் அவர் உயிருடன் அமர்ந்திருப்பதுபோல் காட்சிதருகிறார். இது குறித்து பல கருத்துக்கள் நிலவினாலும், இன்று தனிச்சந்நிதியில் ஸ்ரீராமானுஜரின் திருமேனியை தரிசிக்கும் போது நிஜ உருவத்தைக் காண்பதுபோல் தெரிகிறது. தற்பொழுதும் வருடத்திற்கு இரண்டு முறை சித்திரை திருவாதிரை மற்றும் ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று பச்சைக்கற்பூரம், குங்கமப்பூ, ஆகியவற்றின் தைலம் கொண்டு அத்திருமேனிக்கு காப்பிடுகிறார்கள். ஸ்ரீராமானுஜருக்கு பெரும்பாலான வைணவத் திருத்தலங்களில் தனிச்சந்நிதி இருப்பதைக் காணலாம். பெரும்பாலும் கைகளைக் கூப்பிய நிலையிலேயே அவரது வடிவம் இருக்கும். ஆனால், ஓரிடத்தில் மட்டும் சின்முத்திரையுடன் காணப்படுகிறார். அந்த இடம்தான் திருவேங்கடம். இங்கு திரிதண்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சின்முத்திரை என்றால் அத்வைதிகள் சொல்லும் பொருள் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பது. சுட்டுவிரல் பரமாத்மா; கட்டைவிரல் ஜீவாத்மா. ஆனால் அத்வைதக் கொள்கையை ஒப்புக்கொள்ளாத ஜீவாத்மா வேறு; பரமாத்மா வேறு என்று சொல்லும் ராமானுஜர் எப்படி சின்முத்திரை காட்டியிருக்கமுடியும்? இதற்கு அவரே ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். என்ன முயற்சி செய்தாலும் சுட்டு விரல் நிமிர்ந்திருக்கும்போது கட்டை விரலால் சுட்டுவிரலின் நுனியைத் தொட முடியாது. சுட்டு விரல் வளைந்து கொடுத்தால் தான் முடியும். அதாவது, பகவான் நம்மீது அருள்பாலித்தால் நாம் அவரை அடைய முடியும் என்று கூறியுள்ளார்.

வைணவத்தில் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற இன வேறுபாடில்லை. வைணவன் என்றாலே பெருமாள் பக்தன். பெருமாளுக்கு அடியார்கள் அனைவரும் ஒன்றுதான் என்ற புரட்சிக் கருத்தினைக் கூறிய ஸ்ரீராமானுஜர்தான் இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலை நிர்வாகித்துவருவதாக நம்புகிறார்கள். கோவில் வரவு - செலவு கணக்குகள் இப்பொழுதும் அவர் சன்னிதியில் வாசிக்கப்படுகிறது. இன்றும் அனைத்து பூஜைகளும் ஸ்ரீராமானுஜருக்கு நடத்திய பிறகுதான் பெருமாளுக்கு நடைபெறுகிறது.

ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்!

மேலும்