மே 05,2017
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது அவதார தின விழா, இன்றுடன் நிறைவடைகிறது. ஸ்ரீபெரும்புதுாரில் நடந்து வரும், ’அற்புத ராமானுஜர்’ கண்காட்சி, பக்தர்களை பரவசப்படுத்தி வருகிறது. ஸ்ரீராமானுஜரின்,ஆயிரமாவது அவதார தின விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதுாரில் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நிகழ்வை மேலும் சிறப்பாக்கும் வகையில், ’லிப்கோ’ நிறுவனம்சார்பில், ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் சிறப்பு கண்காட்சி, ’அற்புத ராமானுஜர்’ என்ற தலைப்பில் நடந்தது. அந்த கண்காட்சி, பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்று வருகிறது.
50 அரங்குகள்: ஸ்ரீபெரும்புதுார் ஹயக்ரீவா வித்யாஷ்ரமம் பள்ளியில், 30 ஆயிரம் சதுரடியில் கோவில் போன்ற அமைப்பில், 50 அரங்குகளில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ராமானுஜர் பிறந்தது முதல், அமரத்துவம் அடைந்தது வரையிலான காட்சிகள் சிற்ப வடிவில் இடம்பெற்றுள்ளன.ஒவ்வொரு அரங்கத்தின் முன் நின்றால் போதும், அந்த அரங்கத்தின் காட்சிகள், ஒளி மற்றும் ஒலியாக பார்வையாளர்களை வந்தடைகின்றன. உதாரணமாக, ராமானுஜர் பிறந்த குழந்தையாக தொட்டிலில் இருக்கிறார். அப்போது என்ன நடந்தது என்பதையும், அவர் ஒரு மகான் என்பதைஎப்படி கணித்தனர் என்பதையும் பதிவு செய்யப்பட்ட, கணீர் குரல் விவரிக்கிறது; இது,பார்வையாளர்களுக்கு, ராமானுஜர் குறித்த சித்திரத்தை துல்லியமாகதருகிறது.
விற்பனை: இந்த கண்காட்சி தவிர, பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. மேலும், ராமானுஜர் தொடர்பான புத்தகங்கள், ’சிடி’க்கள், சிற்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து, லிப்கோ அறக்கட்டளை தலைவர் டி.என்.சி.விஜயசாரதி, துணைத்தலைவர் ராதா விஜய சாரதி ஆகியோர் கூறியதாவது: ராமானுஜர், 120 ஆண்டுகள் வாழ்ந்த அற்புத மகான். அவரது அவதார நோக்கம், அவர் இறைவன் மீது கொண்டிருந்த நம்பிக்கை, மக்களுக்கு ஆற்றிய பணிகள், அவர் செய்த சீர்திருத்தங்கள் ஆகியவற்றை எங்களால் முடிந்தளவு எடுத்து சொல்லும் வகையில், இந்த கண்காட்சியை அமைத்துள்ளோம். இன்றுடன் முடியும் இக்கண்காட்சியை, அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.