மே 02,2017
ஸ்ரீபெரும்புதுார்: ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவின், 10ம் நாளான நேற்று, சாத்துமுறை விழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு விழா, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், 22ம் தேதி துவங்கியது. விழாவின், 10ம் நாளான நேற்று காலை, மஞ்சத்திலிருந்து சுவாமி புறப்பாடும், தங்க மண்டபம் ஊஞ்சல், ஸ்ரீ தாயார் சன்னதி ஸ்ரீராமர் சன்னதி கண்டருளுதல் நடந்தது. இதை தொடர்ந்து ஒய்யார நடையில் ராமானுஜர், வாகன மண்டபத்திற்கு வந்தடைந்தார். பின், வாகன மண்டபத்தில் இருந்து தங்க பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடந்தது. ராமானுஜர் அவதார மண்டபத்தில் தொட்டில் சேவை, சங்கு பால் அமுது செய்தலும், திருமஞ்சனம் ஈரவாடை தீர்த்தம் வழங்குதல், திருப்பாவை சேவையும் நடந்தது. இரவு, திருமேனி சேவையுடன் கண்ணாடி அறை சேருதலும், கண்ணாடி அறையிலிருந்து சுவாமி புறப்பாடும் நடந்தது. இரவு, 10:00 மணிக்கு, நாலு கால் மண்டபத்தில் சுவாமி நித்திய விபூதி மங்களா சாஸனம் நடந்தது. இரவு, 11:00 மணிக்கு வாகன மண்டபம் சேருதலும், நள்ளிரவு, 12:00 மணி முதல் அதிகாலை வரை சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.